குறள் 1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து
[பொருட்பால், குடியியல், இரவு]
பொருள்
இகழ்ந்து - இகழ்-தல் - ikaḻ- 4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).
இகழ்ந்து - மறந்தும்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளாது - இழிவாக பேசாது
ஈவாரைக் - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்
காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்
மகிழ்ந்து - மகிழ்தல் - அகங்களித்தல்; உணர்வழியஉவகைஎய்துதல்; குமிழியிடுதல்; விரும்புதல்; உண்ணுதல்.
உள்ளம் - ஊக்கம், மனத்திடம்; அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை, ஊக்கம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு.
உள்ளுள் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.
உவப்பது - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்
உடைத்து - உடைதல், உடையது, இருக்கும்
முழுப்பொருள்
எக்கணத்திலும் மறந்தும் (அல்லது) அசாக்கிரதையாலும் (தான் புரிகிற உதவிக்காகவும், பிறரின் வறுமையை வைத்தும் ) பிறரை இழிவாகப் பேசாத ஒரு கொடையாளனை கண்டால் யாசிக்கும் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் அவர் மனமும் உவகை கொள்ளும்.
ஆதலால் பிறருக்கு உதவுகின்றவர் கொடை அளிக்கின்றவர் பிறர் மனம் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால் அவர் மற்றவரை மறந்தும் இகழக்கூடாது.
ஒரு வேலை இகழ்ந்தால் என்னவாகும்? அவ்வுதவியை பெற்றவர் அதனை மறுபடியும் அவ்வுதவியை திருப்பி கொடுத்து கடனை முடிக்க முற்படுவார். அது அவர்களுக்கு ஒருவித சுமை. ஆதலால் நாம் செய்த உதவி சுமையாக முடிகிறது. ஒரு கசப்பான அனுபவமாக மாறிவிடுகிறது. சில சமயம் பெற்ற பணத்தை திரும்ப கொடுப்பார். அதனால் உதாரணமாக ஒருவரின் கல்வியோ மருத்துவ சிகிழ்ச்சையோ கல்யாணமோ தடைப்படக்கூட வாய்ப்பு உண்டு
வறுமையில் இருந்தால் ஒருவர் தன்மானத்தை இழந்து உயிர் வாழவேண்டும் என்றில்லை. ஆதலால் ஒருவரின் தன்மானத்தை தாக்கும் விதமாக பேசவோ இகழவோ கூடாது. மேலும் நாம் ஒருவருக்கு உதவி விட்டதால் நாம் அவர்களுக்கோ அல்லது அவர்களின் வாழ்விற்கோ எஜமான் ஆகிவிட முடியாது.
இனியவை நாற்பது (30), இக்கருத்தையொட்டியே,
“எளியர் இவர் என்றிகழ்ந்து உரையாராகி
ஒளிபட வாழ்தல் இனிது” என்கிறது.
“மகிழ்ந்துள்ளம்”, “உள்ளம் உவப்பது உடைத்து” என்பதும் ஒன்றையே கூறுவனபோல் தோன்றினாலும், ஒருவரது நல்ல இயல்பைக் காணும்போது உள்ளம் மகிழ்வது எல்லோருக்கும் இயல்பே. அதையும் தாண்டி, அதனால் உறுபயனை ஐம்புலன்களும் அனுபவித்தாலும், அவற்றையொட்டிய உள்ளத்தில் ஏற்படும் நிறைவே, உவகையே முதன்மையானது என்பதால், அதை வலியிறுத்துவதாகக் கொள்ளலாம்,
”நம்மாலே ஆவர்இந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று தம்மை
மருண்ட மனத்தார்” (நாலடி 301)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.
மு.வரதராசனார் உரை
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.
No comments:
Post a Comment