Tuesday, January 28, 2020

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

குறள் 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]

பொருள்
வெள்ளத்து - வெள்ளம்  - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை.

அனைய - அத்தன்மையான; ஒத்த.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையான் - உடையவன் ; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

உள்ளத்தின் - உள்ளம் -  மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ள - உண்டாயிருக்கிற; உண்மையான; uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது 

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

கெடும் - கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
கடல் போன்ற நீர்பெருக்கு அளவு மிக பெரிய துன்பம்/சோதனை அல்லது தீமை வந்தாலும் உண்மையான அறிவு ஞானம் உடையவர்கள் அதனை அழித்துவிடுவார். எப்படி? அத்தகையவர்கள் எத்தனை துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொள்ளலாம் என்று தங்கள் உள்ளத்துக்குள்ளே திடமாக நம்புவர். அதற்கு தேவை மனம் கலங்காமை, உறுதி, ஊக்கம், விடாமுயற்சி போன்ற குணங்கள் என்று அறிவர். சோர்வுற்றாது தொடர்ந்து ஒவ்வொரு அடியாக (படிப்படியாக) செயலாற்றுவதே எவ்வளவு பெரிய தடையையும் துன்பத்தையும் கடக்க ஒரே வழி என்று அறிவர். அதன்படி தன்னுடைய உள்ளத்திற்கு ஆணையிட்டு துன்பத்தை அழிப்பார்.

அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.

தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெரு நாய்களைப் போல் நாமாகிவிடகூடாது. இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்க கூடாது. 

“வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்ற குறளில் நீரின் அளவு என்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல், இங்கு பேரழிவை தரக்கூடிய என்னும் பொருளில் வருவது கவனிக்கத்தக்கது. இரண்டு குறள்களிலும் “உள்ளம்” என்பதற்கு “ஊக்கம்” என்ற பொருளிலேயே செய்யப்பட்டிருக்கிறது.

மேலும்: அஷோக் உரை

வரி: 
துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான்
கதை:
 ‘நான் கடவுள்’ படத்தின் படப்பிடிப்பின்போது அதில் நடிக்க ஏராளமான துறவிகள் தேவைப்பட்டனர். துணை நடிகர்களை துறவிகளாகவோ அல்லது அதைப் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவோ நடிக்க வைக்க முடியாது. எத்தனை வேடம் போட்டாலும் அவர்களுடைய கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சினிமா ஒரு காட்சிக் கலை. ஒரு ஏழையை பணக்காரனாக சினிமாவில் நடிக்க வைப்பது மிகவும் கடினம். தோரணைக்கு அப்பால், கண்களுக்கு அப்பால், பாவனைக்கு அப்பால் நமது மனம் உணரக்கூடிய ஏதோ ஒன்று இவர் பணக்காரனல்ல என்று சொல்லிவிடும்.
......
......
......
‘நான் கடவுள்’ படத்தில் பெரும்பாலான துறவிகள் உண்மையிலேயே துறவு வாழ்க்கை கொண்டவர்கள். அவர்களுக்கு நடிப்பில் எந்த ஆர்வமும் இல்லை. பெரும்பாலான நேரம் சும்மாதான் இருந்தார்கள். பணமும் அவர்களுக்குப் பெரிதாக ஈர்ப்பை அளிக்கவில்லை. அவர்களை நடிக்கக் கொண்டு வரும் பொறுப்பை அன்றைய உதவி இயக்குநராக இருந்த தியாகராஜன் எடுத்துக்கொண்டார். தியாகராஜன் அவர்களைச் சந்தித்து பலவிதமாகப் பேசி அவர்களில் ஒருசிலரை நடிக்க கூட்டிக்கொண்டு வந்தார்.

அவர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்கள் பிறரை நடிக்க அழைத்துக்கொண்டு வந்தனர். பிச்சை எடுப்பதுதான் அவர்களுடைய தொழில். காசியின் பெரும்பாலான படித்துறைகளில் அவர்கள் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவர்களுக்கு உணவுக்கு பணம் தேவையில்லை. ஏனென்றால் காசி முழுக்க பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உணவு அளிக்கப்படும். அவர்கள் பிச்சை எடுப்பது பெரும்பாலும் கஞ்சா தேவைக்காக மட்டுமே.

மற்றபடி மருத்துவத் தேவையோ உடைத் தேவையோ உறைவிடத் தேவையோ அவர்களுக்குக் கிடையாது. அவர்களுடைய தேவைக்கு மேலேயே எப்போதும் பணம் கைக்கு வருவது வழக்கம். சினிமா என்ற துறையின் ஆர்வம் காரணமாகத்தான் பெரும்பாலும் அவர்கள் வந்தார்கள். அங்கென்ன நிகழ்கிறது என்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசி சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

படத்தில் அவர்களுடைய நடிப்பு என்பது ஆங்காங்கு அமர்ந்திருப்பதும் கஞ்சா குடிப்பதும் மட்டும்தான். படப்பிடிப்பு இடைவேளையிலே அவர்கள் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தமிழர். சைவ மடாதிபதிகளுக்கு உரிய முறையில் மிகப்பெரிய பாணியில் மிகப்பெரிய சடைமகுடம் ஒன்று வைத்திருந்தார். அந்தச் சடையை அவிழ்த்துவிடும்படி கோரியபோது எழுந்து அவிழ்த்துவிட்டார். அதன் நுனி தரையைத் தொட்டது. தடித்த புகையிலை சுருள்கள் போன்ற சடைமுடி. பாலா அவரை இடுப்பளவு நீரில் இறங்கி நிற்கச்செய்து குளிக்க வைத்தார்.

அவர் அந்த சடையை நீட்டி நீராடிக்கொண்டிருக்கும்போது கேமிரா அவரில் இருந்து தொடங்கி அந்தப் படிக்கட்டைக் காட்டி மேலெழுந்து சென்று படிக்கட்டில் ஏறிச்செல்லும் ருத்ரனைக் காட்டும் அந்தக் காட்சியை பலரும் அந்தப் படத்தில் நினைவு கூரலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் நீராடுவதே இல்லை. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் குளித்ததோடு சரி. அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அருகே இருந்த இன்னொரு துறவியிடம் எங்களுடன் இருந்த நடிகர் சிங்கம்புலி, ‘‘சாமி உங்க கதையை சொல்லுங்க’’ என்று கேட்டார்.

அவர் சாதாரணமாக “சொல்றதுக்கென்ன இருக்கிறது? எல்லாரையும் போலத்தான் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன்’’ என்றார். ‘‘இல்லை சாமி, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. சொல்லுங்கள்’’ என்று கேட்டபோது மிக உணர்ச்சியற்ற, ஆனால் புனைவுத்தன்மை மிகுந்த மொழியில் தன் கதையைச் சொன்னார். அவருக்குத் தென்னிந்தியாவின் ஐந்து மொழிகள் தெரியும். வட இந்தியாவின் இந்தியும் மராத்தியும் போஜ்புரியும் தெரியும். இந்தியா முழுக்க ஐம்பது முறைக்கு மேல் சுற்றி வந்திருக்கிறார்.

வயது எழுபதை ஒட்டி. சாமியாராக ஆகி நாற்பதாண்டு காலமாகிறது. சொந்த ஊர் கடப்பா அருகே ஒரு சின்ன இடம். அங்கே அவருக்கு நிறைய நிலம் இருந்தது. மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். குண்டூர் அருகே கிருஷ்ணா நதிப்பாசனத்தில் மிகவும் வளமான நிலம் அது. விவசாயம் செய்வது அவருடைய பரம்பரைத் தொழில் என்பதால் அதை மிகச்சிறப்பாகவே செய்து வந்திருந்தார். ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண். மனைவியிடம் இனிமையான உறவு இருந்தது. விவசாய வேலைகளைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.

இரண்டு முறை சிவசைலத்துக்குச் சென்று வந்திருக்கிறார். திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசை இருந்தது. ஆனால், விவசாய வேலைகளை விட்டு அதைச் செய்ய முடியாது என்பதனால் அது தட்டிப்போய்க் கொண்டே இருந்தது. மத விஷயங்களில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியலில் எதுவும் தெரிந்து கொள்வதில்லை. நன்றாக வயலில் காலை முதல் மாலை வரை வேலை செய்வதும், வயிறு புடைக்கும்படி சாப்பிடுவதும், தூங்குவதும்தான் அவருடைய வாழ்க்கை.

அதுதான் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமான விஷயம் என்று அவர் சொன்னார். வயிறு புடைக்கும்படி சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு வேலை செய்பவர்கள்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியானவர்கள் என்றார். அவருடைய நிலத்தில் பொன் விளையும் என்று சொன்னார். இன்றைக்கும் அந்த நிலத்தை கண்ணால் பார்க்க முடிகிறது என்றார். அந்த நிலத்தை அவர் நெய்க்கரிசல் என்று சொன்னார்.

‘‘மண்வெட்டியால வெண்ணையை வெட்டுவது போல புரட்டிப்போடலாம். உழுது போட்ட நிலம் ஆயுர்வேத வைத்தியர்கள் வைத்திருக்கும் லேகியம் போல இருக்கும். கால் புதைந்த இடமெல்லாம் வெண்ணையில் பதிந்தது போல். உழுது புரட்டும்போது ஒவ்வொரு அடிக்கும் மண்புழுக்கள் கத்தைகத்தையாக நெளியும். நீரூற்றி உழுது மண் மரமடித்துவிட்டு கரையில் ஏறி நின்று பார்த்தால் பளிங்கால் ஆனது போல் இருக்கும் வயல்’’ என்றார்.

அதன் மேல் சிறிய பறவைகள் வந்து அமர்ந்தால் கூட உடம்பு உலுக்கிக்கொள்ளும். வயலைப் பார்ப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வயல் அருகே சென்று பார்த்துக் கொண்டிருப்பார். வேலை இல்லை என்றாலும் கூட வரப்பிலேதான் அமர்ந்திருப்பார். பாயை அங்கேயே விரித்து படுத்து தூங்கிக்கொள்வதும் உண்டு. வயலை விரும்புகிறவன் அதில் விழுந்துவிடுவான். பெண்ணாசையைவிட பொன்னாசையைவிட மண்ணாசை மிகப்பெரியது என்றார் அவர். பசுமை தழைத்து மேலே வரும் பயிர் வேறு எதையுமே நினைக்கவிடாது.

இரவில் கனவில் கூட அதுதான் வந்து கொண்டிருக்கும். காலை எழுந்ததுமே தண்ணீர் கூட குடிக்காமல் வயலை நோக்கித்தான் ஓடத்தோன்றும். ஒருமுறை அவர் வயல் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. பொன்நிற மணிகள். ஒரு சாண் அளவுக்கு நீளமானவை அவை. மாலையில் காற்று கடந்து செல்லும்போது ஆயிரம் கொலுசுகள் குலுங்கும் ஒலி கேட்டது. அறுவடைக்குத் தயாரான வயல் என்பது பொன்னேதான். கரையில் இருந்து பார்க்கும்போது அந்தி வெயிலில் அது பொன்னைவிட அதிகமான வெளிச்சத்தை, பிரகாசத்தைக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

அறுவடைக்கு ஆட்கள் ராயலசீமாவில் இருந்துதான் வரவேண்டும். அவர்கள் ஒரு பகுதியிலிருந்து அறுவடை செய்துகொண்டே வருவார்கள் அவர்களுக்காக அவர் காத்திருந்தார். அந்த முறை அறுவடை செய்து முடித்த பிறகு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு திருப்பதி சென்று வரவேண்டுமென்று எண்ணியிருந்தார். ஆனால் யாரும் நினைத்திருக்காதபடி வானம் கறுத்து மழை வந்தது. அந்த வருடத்தின் மிகப்பெரிய புயல் அது. மழை வருவதை தெரிந்துகொண்டதும் அவர் மடைகளைத் திறந்துவிடுவதற்காக வயலுக்குச் சென்றார்.

வயலில் அனைத்து மடைகளையும் திறந்து விட்டபிறகு கூட அங்கிருந்து வர மனமில்லாமல் குடையுடன் வரப்பிலேயே நின்று கொண்டிருந்தார். வானமே கிழிந்து தலைமேல் விழுவது போல மழை பொழிந்தது. மிகப்பெரிய அருவிக்கு அடியில் நின்று கொண்டிருப்பது போல. கை நீட்டிப்பார்த்தால் அந்தக் கையைப் பார்க்க முடியாத அளவுக்கு மழைத்திரை. ஆனாலும், வீட்டுக்கு போகத் தோன்றவில்லை. இரவில் நெடுநேரம் வரை அங்கிருந்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்குச் சென்றார்.

பிள்ளைகளை வீட்டுக்குள் செல்லும்படி சொல்லிவிட்டு ஏரியைத் திறப்பதைப் பற்றி பேசுவதற்காக அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றார். கோயிலிலேயே பேச்சு முடிந்து விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏதோ ஓசை கேட்டது. பலர் அலறுவது போன்ற சத்தம். நல்ல இருள். ஓடிச் சென்று ஒரு மண்டபத்தின் மேலேறி பார்த்தபோது அருகிலிருந்த கல்மண்டபங்கள் அனைத்தும் மூழ்கும்வரை வெள்ளம் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தார். கிருஷ்ணா பெருகிக் கரைக்கு வந்துவிட்டது.

தன்னுடைய குடும்பம் என்ன ஆகும் என்று பயம் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. எந்த திசை என்பது கூடத் தெரியவில்லை. ஒவ்வொரு மின்னலுக்கும் தண்ணீர் கூடிக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அங்கேயே நின்று அலறித் துடித்தார். தண்ணீரில் பாய்ந்து நீந்திச் சென்றாலும் கூட தண்ணீரின் ஒழுக்கு அவரை அடித்துச் சென்றது. எங்கோ ஒரு பனைமரத்தில் தொற்றி ஏறி அமர்ந்து கொண்டார். காலையில் பார்த்தபோது பனைமரத்தின் முக்கால் பங்கு அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

சுற்றிலும் தண்ணீர் அன்றி எதுவுமே இல்லை. இரண்டு நாட்கள் பனைமரத்தின் உச்சியிலேயே தொற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார். மூன்றாவது நாள் அவரை படகில் வந்து மீட்டுக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தனர். தன்னுடைய பிள்ளைகள் என்ன ஆயினர் மனைவி குடும்பம் என்ன ஆயினர் என்று தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கூடங்கள் தோறும் கதறியபடி அலைந்தார். அவர்கள் தென்படவே இல்லை. ஏழு நாட்களுக்குப்பிறகு வெள்ளம் முழுமையாக வடிந்து நிலம் முழுக்க சேற்றுப்பரப்பாக மாறியது.

அவர் இறங்கி தன் வீடிருந்த இடத்திற்கு சென்றார். மண்ணில் கட்டப்பட்டிருந்த வீடு இருந்த தடமே தெரியாமல் கலைந்து அழிந்து சென்றுவிட்டிருந்தது. கன்றுகள் இல்லை. அவரது வயலும் சேறால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு ஊர் வயல் வாழ்க்கை இருந்ததற்கான ஒரு சான்றும் இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக சேறு இருப்பது போலிருந்தது அந்தப் பகுதி. அவர் அங்கே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். மனதுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று.

திரும்பி தன் இடுப்பில் கட்டியிருந்த ஆடையை எடுத்து கிழித்து அரை ஆடை மாதிரி கட்டிக் கொண்டார். வடக்கு நோக்கி நடந்தார். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு காசிக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை துறவிதான். திரும்பி ஊருக்குச் செல்லவோ அந்த வயலையோ மண்ணையோ பார்க்கவோ இல்லை.  இயல்பான குரலில் ‘‘இதுதான் தம்பி கதை’’ என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு மின்னல் அடித்தது. அவரை நான் முன்பு பார்த்திருக்கிறேன்.

‘‘நான் உங்களை முன்பு பார்த்திருக்கிறேன். இதே கதையை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ என்று சொன்னேன். ‘‘எப்போது?’’ என்றார். ‘‘நான் இளைஞனாக இருந்தபோது இதே போல வீட்டைவிட்டு வந்து காசியிலே ஒரு துறவி மாதிரி இருந்தேன். படிக்கட்டில் வாழ்ந்திருந்தபோது ஒருமுறை உங்களைப் பார்த்தேன். இதே கதையை சொன்னீர்கள்’’ என்றேன். ‘‘சொல்லியிருப்பேன்’’ என்று அவர் சொன்னார்.

அப்போது சொன்ன அதே உணர்வுகளும் அதே வார்த்தைகளுமாக அதைச் சொன்னார் என்று தோன்றியது. ஒரு தேர்ந்த புனைகதையாளனுக்குரிய கதை நுட்பத்துடன், விவரணைகளுடன் அந்தக் கதை இருந்தது. அதைச் சொல்லிச் சொல்லி அவர் பெரிது பண்ணிக் கொண்டாரா அல்லது அவருக்கு மனதில் வார்த்தை வார்த்தையாக அந்தக் கதை அப்படியே பதிந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது யோசிக்கும்போது அப்படி ஒரு கதையைத் துல்லியமாகச் சொல்ல ஆரம்பிக்கும்போதே அந்தக் கதையிலிருந்து அவர் விலகிவிட்டார் என்று தோன்றியது. அந்தக் கதையை சொல்லும்போது, அது ஒரு மனிதனுடைய கதையாகும்போது அது அவருடைய கதையாக அல்லாமல் ஆகிவிட்டது. துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான். அதைத்தான் இலக்கியம் இன்றுவரைக்கும் செய்து வருகிறது.

 சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. அப்துல் ஷுக்கூர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய ‘நூறு நாற்காலிகள்’ என்னும் நீள்கதை மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப் பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார்.

நான் அமைப்பு சார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப் போல வீண் வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. காரணம், அவர் நடத்தும் டீக்கடையிலேயே அந்தக் கூட்டம் நடக்கும் என்றார். சென்ற சில மாதங்களாக மாதம் ஒருமுறை அந்த டீக்கடையிலேயே ஷுக்கூர் இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்தி வருகிறார். கேரளத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் தலைச்சேரி - கண்ணூர் சாலையில் உள்ள பெடயங்கோடு என்னும் கிராமம் அது.

‘ஜனவரி மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறும். பயணச் செலவு ஏதும் தரமுடியாது. விற்கும் நூல்களின் பணத்தைக்கூட நோயுற்றிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு அளிக்கவிருக்கிறேன்’’ என்றார். அந்த லட்சியவாதம் எனக்குப் பிடித்திருந்தது. ‘‘வருகிறேன்’’ என்றேன். ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது.

என் வழக்கமான பயணத் தோழர்கள் கிருஷ்ணன், ராஜமாணிக்கம் இருவரையும் அழைத்தேன். திருப்பூர் நண்பர் கதிரின் காரிலேயே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதை ஒரு விரிவான பயணமாக ஆக்கிக்கொண்டோம். 2016 ஜனவரி இரண்டாம் தேதி கோவையிலிருந்து  கிளம்பி, மானந்தவாடி அருகே உள்ள இடைக்கல் என்னும் கற்கால பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்துவிட்டு மாலையில் கண்ணனூரில் தங்கினோம். காலையில் கண்ணனூர் கோட்டையைப் பார்த்துவிட்டு ஷுக்கூர் வாழும் பெடயங்கோடு என்னும் ஊரை விசாரித்து வழிதேடிச் சென்றோம்.

பெடயங்கோட்டை அணுகியபின் ஷுக்கூரைப் பற்றி கேட்கவேண்டுமே என நினைத்து பார்த்துக்கொண்டே வந்தோம். பெடயங்கோடு மிகச்சிறிய ஊர். ஆகவே கடந்து சென்றுவிட்டோம். மீண்டும் வழி விசாரித்துத் திரும்பி வந்தோம். அங்கே சாலையோரத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஷுக்கூர் பற்றி கேட்டோம். ஆச்சரியமாக, கடைக்காரர் முகம் மலர்ந்து ‘‘ஷுக்கூர் இக்காவா? தெரியாம இருக்குமா?’’ என்றார். அவர் பெயர் லத்தீஃப். அவரும் ஒரு கவிஞர், மூன்று தொகுதிகள் பிரசுரித்திருக்கிறார். ‘‘அதோ அந்தக்கடைதான். நானும் வருவேன்’’ என்றார்.

நாங்கள் மெல்லச் சென்றபோது சாலையோரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றிருந்த  ஷுக்கூர், எங்களை மறித்து கை காட்டி அழைத்தார். நாங்கள் கடந்து செல்லும்போதே அவர் பார்த்துவிட்டிருந்தார். என் பெயர் எழுதப்பட்ட தட்டி சாலையோரமாக இருந்தது. ‘‘இதுதான் என் கடை’’ என்றார் ஷுக்கூர். சின்னஞ்சிறிய டீக்கடை. நான் இன்னும் சற்று பெரிய கடையை எதிர்பார்த்தேன். அங்கே எப்படி கூட்டம் நடத்துவது என்று தெரியவில்லை. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை.

ஷுக்கூர் சைக்கிளில் மீன் வாங்கிக்கொண்டுவந்து தெருத்தெருவாகக் கூவி விற்கும் தொழிலைத்தான் இருபதாண்டுகளாகச் செய்துவந்தார். அதற்குமுன் மண்வெட்டும் கூலித்தொழிலை பத்தாண்டு காலம் செய்தார். அவரது மகன் துபாயில் வேலைக்குப் போனபின் ஓராண்டாகத்தான் டீக்கடை நடத்துகிறார். பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனால் எளிய வாழ்க்கைக்கு அது போதும் என்றார்.



ஷுக்கூருக்கு ஐந்தாம் வகுப்புதான் படிப்பு. சுயமாக வாசிக்கக் கற்று, அவரே இலக்கியத்தை வந்தடைந்தார். இலக்கியத்தின் அடிப்படைகளை அவருக்கு எவரும் சொல்லித் தரவில்லை, அவரே வாழ்க்கையைக் கொண்டு இலக்கியத்தை அடையாளம் கண்டார். வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.

‘‘நான் மீன் அளவுக்கே புத்தகங்களையும் விற்றிருக்கிறேன்’’ என்றார் ஷுக்கூர். ‘‘ஆரம்பத்தில் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள். ஆனால் என் ஆர்வத்தைப் பார்த்தபின் கம்யூனிஸ்ட்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்’’ என்றார். தான் விற்கும் எந்த நூலையும் முதலில் தானே வாசித்துவிடவேண்டும் என்பது ஷுக்கூரின் நெறி. அந்நூலைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்வார். நூலைப் பற்றி அவரே விரிவாக அறிமுகமும் செய்வார். அவருக்கென ஒரு சிறிய இலக்கிய வாசகர் கூட்டம் உருவாகி வந்தது. அதன்பின்னரே ஷுக்கூர் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.

அடித்தளத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தவர்கள், வழக்கமாக தங்கள் போராட்டங்களைப் பற்றிய கவிதைகளையும் அரசியல் கருத்துக்களையும்தான் எழுதுவது வழக்கம். ஷுக்கூர் எழுதியவை அவரது வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய ஆழமான தத்துவநோக்குள்ள கவிதைகள். நவீனகவிதைகள் அவை. டீக்கடை வைத்தபின் கூடவே பெடயங்கோட்டில் வீடு வீடாக இலக்கியத்தை அறிமுகம் செய்து வருகிறார் ஷுக்கூர்.  என் ‘நூறு சிம்ஹாசனங்ஙள்’ நூலை மட்டும் 450 பிரதிகள் அச்சிட்டு அந்த ஊரில் வெளியிட்டிருக்கிறார். இந்த டீக்கடை இலக்கியம் அவரது கனவுகளில் ஒன்று. இதை ஒரு வகை தனிப்பட்ட தவமாகவே அவர் நினைக்கிறார்.

ஷுக்கூர் இக்காவின் வீட்டுக்குச் சென்றோம். எங்களில் இருவர் சைவர்கள். ‘‘இங்கே அந்த மாதிரி நல்ல சாப்பாடு கிடைக்காதே’’ என்றார் ஷுக்குர். நான் சிரித்துவிட்டேன். நானும் நண்பர்களும் அவர் இல்லத்தில் நெய்ச்சோறும் சிக்கனும் சாப்பிட்டோம். அவரது மனைவியும் திருமணமான மகளும் வீட்டில் இருந்தனர். அவர்களின் சமையல் வடக்கு மலபாருக்கே உரிய மிதமான காரமுள்ள சுவை கொண்டது.
 
ஷுக்கூர் எங்களை அருகில் உள்ள வளைபட்டணம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். நதிக்கரையில் கோயில் கொண்டுள்ள பகவதியின் காவலாளிகளாகக் கருதப்படும் மிகப்பெரிய மீன்கள் நிறைந்த நீர்ப்பெருக்கைப் பார்த்தோம். ‘‘பாதுகாக்கப்பட்ட மீன்கள் இவை. இலக்கியமும் இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும்’’ என்றார் ஷுக்கூர் சிரித்தபடி.

அந்த நதிக்கரையில்தான் படகுகள் வந்து சேரும் படித்துறை இருந்தது. கடலில் இருந்து மீன், படகுகள் வழியாக அங்கே வந்துசேரும். அங்கே அதிகாலையிலேயே சென்று ஏலத்தில் மீனை எடுத்து சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விற்பதுதான் ஷுக்கூரின் வழக்கம். மழைக்காலத்தில் மீன் விற்பது மிகக்கடினம். முழுநேரமும் நனைந்தாகவேண்டும். ஆனால் மீன் சீக்கிரம் அழுகாது. வெயிலில் மீன் அழுகி நஷ்டம் ஏற்படும்.


‘அன்றைக்கெல்லாம் நல்ல மீன் சாப்பிட்டதே இல்லை. மிஞ்சிப் போன அழுகிய மீன்தான் எப்போதும் உணவு’’ என்று ஷுக்கூர் சிரித்தபடி சொன்னார். தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார். ஆகவே அவை எளிய கதைகளாக மாறிவிட்டன. கடந்து வருவதற்கு இலக்கியம் உதவியிருக்கிறது மதியம் இரண்டரை மணிக்குக் கூட்டம். வழக்கமாக முப்பது பேர்தான் வருவார்கள்.

ஆனால் அக்கூட்டம் பற்றி ‘மாத்ருபூமி’, ‘மலையாள மனோரமா’ நாளிதழ்களில் என் நண்பர்களான இதழியலாளர்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தமையால் அன்று நூறு பேர் வந்திருந்தனர். இரு சக்கர வண்டிகளிலும் கார்களிலும் வந்துகொண்டே இருந்தனர். கணிசமானவர்கள் கண்ணனூர், தலைச்சேரி முதலிய நகரங்களிலிருந்து வந்திருந்தனர். கடைக்குள் இடமில்லாமல் பாதிப் பேர் சாலையில் அமர்ந்திருக்க நேரிட்டது.

வாசகர்களுடன் பரவலாக அறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் பலர் கலந்துகொண்டனர். நால்வர் நூலைப் பற்றிப் பேசியபின், நான் சிற்றுரையாற்றி  கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அத்தனை பேரும் அந்நாவலை வாசித்திருந்தனர். அதற்குச் சமானமான பிற நாவல்களுடன் ஒப்பிட்டும் பேசினர். உற்சாகமான உரையாடல். கூரிய மதிப்பீடுகள். மாலை ஆறு மணிக்கு சந்திப்பு முடிந்த பின்னரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இல்லாமல் கேரளத்தில் இலக்கியக்கூட்டங்கள் முடிவடைவதில்லை.

‘‘நவீன இலக்கியத்தை நாங்கள் டீக்கடைகளில்தான் பேசிப் பேசி உருவாக்கினோம்’’ என்றேன். ‘‘முன்பு கேரளத்தில் கம்யூனிசமும் டீக்கடைகளில் உருவானதுதான்’’ என்றார் தாஹா மாடாயி என்னும் விமர்சகர். ‘சிங்கிள் டீ இலக்கியம்’ என்றுதான் நவீன இலக்கியத்தை பழைய இலக்கியவாதிகள் சொல்வார்கள்.

ஏழு மணி வரை அங்கே நின்றபடியே இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு விடைபெற்றுக் கிளம்பினேன். ஷுக்கூர் இக்கா என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘‘முதல் கூட்டத்தை கன்னட எழுத்தாளர் சிவராம காரந்தின் ‘சோமனதுடி’ பற்றி நடத்தினோம். அந்த அளவுக்கு தார்மீக வேகம் உள்ள நாவல் இது. எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என்றார். நான் சம்பிரதாயமாக ஏதும் சொல்ல விரும்பவில்லை. ‘‘இக்கா... மறுபடியும் சந்திப்போம்’’ என்று மட்டும் சொன்னேன்.‘

‘மாத்ருபூமி’ நாளிதழ் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் நிருபரையும் புகைப்படக்காரரையும் அனுப்பியிருந்தது. அவர்களின் காரிலேயே நான் கோழிக்கோடு கிளம்பினேன். அங்கிருந்து எர்ணாகுளம் வழியாக நாகர்கோவில் வந்தேன். திரும்பும் வழி முழுக்க ஒரே விஷயத்தைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இலக்கியமென்பது உணவும் உறைவிடமும் பிற வசதிகளும் அமைந்துவிட்டவர்களுக்கான ஒருவகை கேளிக்கை என்னும் எண்ணம் உள்ளது. மேலும் மேலும் உலகியல் லாபங்களைச் சம்பாதிப்பதற்கு இலக்கியம் எதிரானது என்னும் எண்ணம் உள்ளது.

ஆனால் ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது. இத்தனை வயதில் ஷுக்கூர் இக்கா எதற்காக இப்பணியைச் செய்கிறார்? அடையாளமோ, புகழோ தேடி அல்ல. அது அவர் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை அளிக்கிறது. வெற்றியோ, பணமோ, புகழோ அல்ல... லட்சியவாதமே வாழ்க்கைக்கு இலக்கையும் நிறைவையும் அளிக்கமுடியும். இலக்கியத்தின் சாராம்சமாக இருப்பது லட்சியவாதமே. அதைத்தான் ஷுக்கூர் இக்காவின் கனிந்த முகம் எனக்குக் காட்டியது.

வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.

தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார்.

ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது.

ஒப்புமை
”சொற்றார்கள் சொற்றதொகை யல்லதுணை யொன்றோ
முற்றா முடிந்தநெடு வானினிடை முந்நீர்
இற்றாவி எற்றெனினும் யான்இனி இலங்கை
உற்றால் விலங்கும்இடை யூறென உணர்ந்தான்” (கம்ப.கடல்தாவு.88)

“ஊறுகடி தூறுவன வூறிலறம் முன்னாத்
தேறிலி அரக்கர்புரி தீமையவை தீர
ஏறுவகை யாண்டைய இராமனென வெல்லாம்
மாறுமதின் மாறுபிறி தில்லென வலித்தான்” (கம்ப.கடல்தாவு.89)

பரிமேலழகர் உரை
வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும். இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.


மு.வரதராசனார் உரை
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

தாளாண்மை என்னும் தகைமைக்கண்

குறள் 613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
தாளாண்மை - ஊக்கம்; விடாமுயற்சி

என்னும்  - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

தகைமைக் - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தங்கிற்றே - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்

வேளாண்மைபயிர்த்தொழில்; உதவிபுரிதல்; கொடை; உண்மை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

செருக்கு - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்.

முழுப்பொருள்
தாளாண்மை எனப்படுகின்ற விடாமுயற்சி மிகுந்த உயரிய குணம். அத்தகையவரிடம் செருக்கு எனப்படுகின்ற வளம், செல்வம் ஆகியவை வந்து சேரும். முக்கியமாக பிறருக்கு உதவிட வேண்டும் என்னும் வேளாண்மை எனப்படுகிற கொடைத்தன்மை அவரிடம் நிலைத்துநிற்கும். அது அவருக்கு மகிழ்ச்சியை தரும். ஆக்கம் கொண்டவர்க்கே அடுத்தார்க்கு உதவுவது சாத்தியமாகும் என்பதினால் வேளாண்மைக்குத் தாளாண்மை அவசியமாகிறது.

சம்பந்தரும் ஆக்கூர் தாந்தோன்றி மாடத்தேவாரத்தில் (3), “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர்” என்பர்.

"தாளாண்மை யில்லாதான் வேளாண்மை” (குறள் 614)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.


மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை

குறள் 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து
[பொருட்பால், அரசியல், மடியின்மை]

பொருள்
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

மடிக் - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பிறந்த - பிறவி; பிறப்பு; பாவம்; துன்பம்; பிறந்தகம்; இயல்பு.

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

மடியும் - மடிதல் - மடங்குதல்; நுனிமழுங்குதல்; தலைசாய்தல்; வீழ்தல்; வாடுதல்; சுருளுதல்; முயற்சிஅறுதல்; தூங்குதல்; சுருங்குதல்; ஊக்கங்குறைதல்; அழிதல்; சாதல்; தானியங்கேடுறுதல்; திரண்டுசெல்லுதல்; கொப்புளம்உடைதல்; மறத்தல்.

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.
இனும் - இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும்

முந்து - முற்காலம்; ஆதி; முன்பு; வெண்ணாரை.

முழுப்பொருள்
சோம்பல் எனப்படுவது ஒரு நோய். அது அழிவையே தரும். அத்தகைய சோம்பலை தன்னுள்ளே வைத்துக்கொண்டு வாழ்க்கையை கடக்கும் ஒருவன் பேதை. அறிவில்லாதவன். பொறுப்பற்றவன். இந்த சோம்பலினால் அனைத்தையும் (தன்நம்பிக்கை, செல்வம், உறவுகள், உடல் ஆரோக்கியம்,  உற்சாகம், சான்றோர் உறவுகள், நண்பர்கள்) இழப்பான். இவனுடைய சோம்பலினால்/இவனால் இவன் பிறந்த குடும்பமானது இவனுக்கு முன்பே அழிந்துவிடும். அதவாது இவனால் தன் குடும்பம் அழிந்துக்கொண்டு இருக்கிறது என்று கூட உணர்ந்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவன் சோம்பித்திரிகிறான். சோம்பல் அவ்வளவு கொடியது. ஆதலால் சோம்பலை விட்டுவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

செயல்கள் உடலால் மட்டும் ஆற்றப்படுவதில்லை. மூடிய பேழைக்குள் வைரம் ஒளிவிளையாடிக்கொண்டிருக்கிறது. உடற்குடத்திற்குள் இதயம் புரவியெனப் பாய்ந்து செல்கிறது. செயலை அஞ்சி செயலின்மையை விரும்பி ஐம்புலன்களை அடக்கி உள்ளத்தால் அனைத்தையும் இயற்றுபவனை பொய்யொழுக்கம் கொண்டவன் என்றே சொல்லவேண்டும். நிழல்கண்டு காமம் கொள்ளினும் உவகையும் துயரும் நிகரே.

கவிஞர் விக்ரமாதித்யன் - இன் ஒரு கவிதை
##வியாழக்கிழமையைத் தொலைத்தவன் 
இந்த வாரத்தில் 
வியாழக்கிழமையை தொலைத்துவிட்டான் அமர் போன வாரத்தில் 
இப்படித்தான் 
செவ்வாய்க்கிழமையைக் கெட்டுப்போக்கிவிட்டான் 
அதற்கு(ம்) முந்தைய வாரம் 
ஏதோ ஒரு நாள் (ஞாபகமில்லை)
எத்தனையோ நாள்களை 
இதுபோலத் தொலைத்திருக்கிறான்தான்

வியாழக்கிழமையைத் தொலைத்துவிட்டு
வெள்ளிக்கிழமையில் ஈடுகட்டமுடியாது
வேறு எந்த நாளிலும்கூட 
சரிசெய்ய இயலாது 
அன்று எவ்வளவு வேலைகள் 
நின்றுவிட்டன 
நித்ய பூஜை 
தவறிப்போயிற்று 
தென்முகக் கடவுளுக்கு மந்திரம் சொல்வது விடுபட்டுப்போயிற்று 
ஸ்ரீசோட்டாணிக்கரை பகவதித்தாயை பட்டினிபோடும்படி ஆயிற்று 
பல் தேய்க்கவில்லை 
குளிக்கவில்லை 
சாப்பிடவில்லை
தபால் பார்க்கவில்லை 
நல்லதண்ணீர் பிடித்துக் கொடுக்கவில்லை 
அடித்துப்போட்ட மாதிரி தூங்கியிருக்கிறான் 
அந்திப் பொழுதை 
அதிகாலையென மயங்கியிருக்கிறான் 

வியாழக்கிழமை நிச்சயம்
வருத்தப்பட்டிருக்கும் 
இன்றைக்காவது தெளிந்துவந்துவிட்டானே
என்று வெள்ளிக்கிழமை சந்தோஷப்பட்டிருக்கும் 
வரும் வாரம் 
என்ன கிழமையைத் தொலைக்கப்போகிறானோ 
தொலைத்தநாள்களிடம் மன்னிப்புக்கேட்டும் 
தீரவில்லை அமர்க்கு
நாள்களைத் தொலைப்பவனை 
யார்தான் காப்பாற்றுவது
--விக்ரமாதித்யன் 


பரிமேலழகர் உரை
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும்.
(அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும'¢ என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும்.

சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

Monday, January 27, 2020

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார்

குறள் 584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

செய்வார் - செயலை செய்பவர் / நடத்துபவர்

தம் - தன்னுடைய

சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

வேண்டாதார் - விரும்பாதவராய்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

அனைவரையும் - எல்லாரும்

ஆராய்வது - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்

ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.

முழுப்பொருள்
ஒரு அரசன் எவற்றையெல்லாம் ஒற்றரைக்கொண்டு ஒற்றாட வேண்டும் ?

1. வினைசெய்வார் - செயல்களை செய்கின்ற அமைச்சர் (மற்றும் அமைச்சரின் கீழ் உள்ளவர்கள். அவர்களின் நடவடிக்கைகள்). இது அமைச்சர்கள் அரசருக்கு எதிராக செய்கிறாரா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள உதவும். அதுபோல அமைச்சர்கள் அவர்களுடைய வேலைகளை செவ்வென செய்கிறார்களா என்பதை தெரிந்துக்கொள்ளவும் உதவும்.

2. தம்சுற்றம்  - அரசரின் சுற்றத்தில் உள்ளவர்கள்.

3. தம்சுற்றம் - நாட்டின் சுற்றத்தில் உள்ள நாடுகள் (அந்நாட்டின் அரசர், அமைச்சர்கள், நடவடிக்கைகள்)

4. வேண்டாதார் - அரசரையும் நாட்டையும் விரும்பாத பகைவர்கள்

மேற்சொன்ன நால்வர் என்று அவ்விடம் அனைவரையும் ஆராய்வதே ஒற்றர்கள் வேலை. ஆராய்வது என்றால் ஒரு குழுவாக மற்றவர்களைத் தேடி  சூழ்ந்து அவர்களையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் சோதிப்பது என்றுப்பொருள்.

மேலும் ஒற்றுத் தொழிலில் ஈடுபடுபவர்கள், சிலரைத் தமக்கு உற்ற சுற்றம் போன்றும், மற்றவர்களை நமக்கு வேண்டாதவர்கள் என்றுமில்லாமல் அனைவரையும் ஒன்றுபோல ஆராய்ந்து தகவல்களைப் பெறுவதே அவர்கள் செய்யும் ஒற்றுத் தொழிலுக்கு அழகாகும். அத்தகையவர்களே ஒற்றர்களாவார்கள் என்பதையும் நாம் இங்கு அறியலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது - தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே; ஒற்று - ஒற்றனாவான்.
('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.).

மணக்குடவர் உரை
தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன். இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.

மு.வரதராசனார் உரை
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை
அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

English Meaning - As I taught a kid - Rajesh
A king should spy on the following people without any confirmation bias and gather information 1) வினைசெய்வார்  - People who do the work especially ministers, other key in charges etc. 2) தம்சுற்றம்  - People close to him, friends, relatives, confidants etc. 3) தம்சுற்றம் - neighboring countries 4) வேண்டாதார்  - enemies, opponent countries . This spying is essential for efficiency of the systems and to prevent any major disaster, war, bribe, corruption, betrayal etc. 

Questions that I ask to the kid
On whom or How should espionage be implemented? Why is espionage important to a country/kingdom?

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்

குறள் 573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
[பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்]

பொருள்
பண் - இசை; இசைப்பாட்டு; ஏழுசுரமுள்ளஇசை; யாழ்முதலியநரம்புக்கருவிகள்; பருவம்; குதிரைக்கலணை; அலங்காரம்; கூத்துவகை; ஓசை; யானைகுதிரைகளுக்குச்செய்யும்அலங்காரம்; தேருக்குச்செய்யும்அலங்காரம்; தகுதி; அமைவு; மரக்கலத்தின்இடப்புறம்; வயல்; தொண்டு; நீர்நிலை; தோணியின்இடப்பக்கப்பாய்மரக்கயிறு.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

பாடற்கு - பாடுவதற்கு

இயைபு - சேர்க்கை; பொருத்தம் தொடர்ச்சி 'இதுகேட்டபின்இதுகேட்கத்தக்கது'என்னும்யாப்பு; இயைபுத்தொடை நூல்வனப்புள்ஒன்று.

இன்றேல்? - இல்லை என்றால்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

கண்ணோட்டம் - கண்பார்வை; இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல்.

இல்லாத - இல்லாத்தனம் - illā-t-taṉam   * n. இல்² +.Poverty, destitution; தரித்திரம் Colloq.
இல்லாததும்பொல்லாததும் illāta-tum-pollātatum, n. id. +. Falsehood andslander; பொய்யும் தீங்குவிளைப்பதும். Colloq.  ; வறுமை

கண்? - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
ஒரு பாடலுக்கு பண்/ஸ்ருதி/ராகம் சேரவில்லையென்றால் அந்த பாடலால்/பாட்டினால் பிறருக்கு என்ன பயன்?  அந்த பாட்டை தான் மட்டுமே தன்னுடைய வீட்டிற்குள்ளே தனக்குமட்டுமே பாடிக்கொள்ள வேண்டும். பிறருக்கு பயன் பெறாது ஏனெனில் அது வெறும் ஓசை இசை அல்ல. பண் சேராத பாடல் பிறருக்கு நாராசமாகவே ஒலிக்கும் அவ்விடத்தைவிட்டு விலகுவர்.  

அதுப்போல பிறர்மேல் கண்ணோட்டம் (எனப்படும் அன்பு, பரிவு, அருள், கருணை, இரக்கம் ஆகியவை) இல்லை என்றால் அந்த கண் இருந்து என்ன பயன்? அது கண்ணே அல்ல என்று கூறுகிறார் திருவள்ளுவர். அவர்களைவிட்டும் மக்கள் விலகுவர்.  

கல்வி கற்கவில்லை என்றால் கண்ணிரண்டும் புண் என்று முன்பு கல்லாமை அதிகாரத்தில் கூறியிருந்தார் திருவள்ளுவர். இப்பொழுது கண்ணோட்டம் இல்லை என்றால் அது கண்ணே அல்ல என்கிறார். ஆதலால் ஒருவருக்கு கண் இருந்தால் அவர் கற்றுணர்ந்து அறிவும் மட்டும் பெற்றால் போதாது பிறர் மேல் கண்ணோட்டத்துடனும் இருக்க வேண்டும் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். 

மேலும்
இக்குறளில் “இராகம்” என்று இன்னாளில் வழங்கிவருகிற “பண்” என்பதற்கு முறையான சுரச்சேர்க்கை வேண்டுமென்கிற நுட்பமான செய்தியைச் சொல்லி, இசையிலே தன் நுண்ணறிவையும் வெளிப்படுத்துகிறார். சுரங்கள் அளவையில் பன்னிரண்டு, இருபத்திரண்டு என்று பல வேறு ஆய்வாளர்களின் கருத்துபடி இருந்தாலும், ஏழு சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற சுரங்கள் (இவை தமிழிசையில், முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும்) முறையாக சேரவில்லையானால், இசையென்ற நிலை மாறி ஓசையென்றாகி விடும்.

இதையே எடுத்துக்காட்டாகச் சொல்லி அருட்பார்வையில்லாத கண்ணினைக் கொண்ட ஆள்வோனின் ஆட்சியென்பது ஓசையைப் போன்று ஒழுங்குமுறையற்றது என்பதை நுணுக்கமாகக் கூறுகிறார். 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் - பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.
('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறுபோலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.).

மணக்குடவர் உரை
பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின். அதுபோலக் கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்ட மில்லாத காலத்து. இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.

மு.வரதராசனார் உரை
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல

குறள் 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ]

பொருள்
வெருவந்தம் - அச்சம்.
வெருவந்தசெய்யாமை - வெருவந்த செய்யாமை அதிகாரம், ஆள்வோர் தாமும், தம்முடைய அமைச்சர்களும், குடிமக்களும் அஞ்சும்படியான எண்ணங்கள் கொள்ளாமையும், செயல்கள் செய்யாமையும்பற்றி கூறுகிறது

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வெ - ve   adj. Hot, warm, harsh, hard, severe, cruel, used in combination. It is the ra dical of many words, as வெங்களம், a battle field; வெந்நீர், hot water; வெயில், the heat of the sun, &c.

வெங்கோலன் - கொடுமையான அரசன் 

ஆயின் - ஆனால்; ஆராயின்.

ஒருவந்தம் - உறுதி; ஒருதலை; நிலைபேறு; சம்பந்தம்; ஒற்றுமை; தனியிடம்.

ஒல்லைக் - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு.

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
எல்லோரும் அச்சப்படும் அளவிற்கு ஒரு ஆட்சியை ஒரு அரசன் நடத்துவான் என்றால் அவனுடைய நாட்டின் நிலைத்தன்மை உறுதித்தன்மை ஒற்றுமை ஆகியவை மிக விரைவாக அழியும். அந்த ஆட்சியும் அழியும்/மாறும்.  அத்தகைய அரசன் ஒரு கொடுமையான அரசனாகவே கருதப்படுவான்.

சொந்தநாட்டு மக்களை சீரும் சிறப்புமாக வாழவைத்து பிற நாட்டுமக்களுக்கு அச்சத்தை தருவான் என்றால் அந்த அரசன் கொடிய அரசனாகவே கருதப்படுவான்.

அதேப்போல் சொந்த நாட்டுமக்களே அந்த அரசனின் நடவடிக்கைகளை கண்டு அச்சப்படுவார்கள் என்றால் அந்த அரசனும் கொடிய அசனாகவே கருதப்படுவான். 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
(வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.).

மணக்குடவர் உரை
அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.

மு.வரதராசனார் உரை
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில

குறள் 544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]

பொருள்
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

தழீ - ஓர்ஒலிக்குறிப்பு

தழுவு - அணைப்பு; இருகையிலும்அணைக்கும்அளவு.

இக்கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

செங்கோல் - அரசச்சின்னமாகியநேர்கோல்; நல்லரசாட்சி; நெருப்புச்சலாகை

ஓச்சு-தல் - எறிதல்; பாய்ச்சுதல்; செலுத்துதல்; வீசுதல்; உயர்த்துதல்; ஓட்டுதல்:தூண்டிவிடுதல்.

ஓச்சும் - உயரும்

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.

நில - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.
மன்னன்

அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை, சூழ்

தழீஇ - ஓர்ஒலிக்குறிப்பு

தழுவு - அணைப்பு; இருகையிலும்அணைக்கும்அளவு.

நிற்கும் - நிலைக்கும்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
குடிமக்களின் நலனை கருதியும் அவர்களை அரவணைத்து நாட்டின் நலனை கருதியும் நல்லாட்சிச் செய்கின்ற அரசன் அந்த நிலத்திருக்கு பெருமை தேடித்தருகிறான். அந்த மக்களின் நலனையும் அந்த நாட்டின் நலனையும் நாட்டின் வளங்களின் நலன்களையும் உயர்த்துகிறான்.  அப்படிப்பட்ட மன்னனை சூழ்ந்து அரவணைத்து இவ்வுலக மக்கள் என்றும் இருப்பார்கள். இங்கே உலகு என்று கூறுவதால் தன்னாட்டு மக்கள் மட்டும் அல்ல பிறநாட்டு மக்களும் இந்த அரசனின் மேல் அன்புடனும் மதிப்புடனும் இருப்பர் என்பதை அறியலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“நாயகன் அல்லன் நம்மை நனிபயந் தெடுத்து நல்கும்
தாயென இனிது பேணத் தாங்குதி” (கம்ப.அரசியல்.34)

“முறையறிந் தவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறையறிந் துயிர்க்கு நல்லும் இசைகெழு வேந்தன் காக்கப்
பொறைதவிர்ந் துயிர்க்கும் தெய்வப் பூதலம்” (கம்ப.நாட்டுப்.20)

பரிமேலழகர் உரை
குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார்.
(அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு. இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.

மு.வ உரை
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

சாலமன் பாப்பையா உரை
குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...