வெருவந்த செய்தொழுகும் வெங்கோல

thirukkural meaning விளக்கம்குறள் 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை
குறள் 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ]

பொருள்
வெருவந்தம் - அச்சம்.
வெருவந்தசெய்யாமை - வெருவந்த செய்யாமை அதிகாரம், ஆள்வோர் தாமும், தம்முடைய அமைச்சர்களும், குடிமக்களும் அஞ்சும்படியான எண்ணங்கள் கொள்ளாமையும், செயல்கள் செய்யாமையும்பற்றி கூறுகிறது

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வெ - ve   adj. Hot, warm, harsh, hard, severe, cruel, used in combination. It is the ra dical of many words, as வெங்களம், a battle field; வெந்நீர், hot water; வெயில், the heat of the sun, &c.

வெங்கோலன் - கொடுமையான அரசன் 

ஆயின் - ஆனால்; ஆராயின்.

ஒருவந்தம் - உறுதி; ஒருதலை; நிலைபேறு; சம்பந்தம்; ஒற்றுமை; தனியிடம்.

ஒல்லைக் - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு.

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
எல்லோரும் அச்சப்படும் அளவிற்கு ஒரு ஆட்சியை ஒரு அரசன் நடத்துவான் என்றால் அவனுடைய நாட்டின் நிலைத்தன்மை உறுதித்தன்மை ஒற்றுமை ஆகியவை மிக விரைவாக அழியும். அந்த ஆட்சியும் அழியும்/மாறும்.  அத்தகைய அரசன் ஒரு கொடுமையான அரசனாகவே கருதப்படுவான்.

சொந்தநாட்டு மக்களை சீரும் சிறப்புமாக வாழவைத்து பிற நாட்டுமக்களுக்கு அச்சத்தை தருவான் என்றால் அந்த அரசன் கொடிய அரசனாகவே கருதப்படுவான்.

அதேப்போல் சொந்த நாட்டுமக்களே அந்த அரசனின் நடவடிக்கைகளை கண்டு அச்சப்படுவார்கள் என்றால் அந்த அரசனும் கொடிய அசனாகவே கருதப்படுவான். 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
(வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.).

மணக்குடவர் உரை
அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.

மு.வரதராசனார் உரை
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain