Saturday, January 18, 2020

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம்

குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

அஞ்சி - அஞ்சுதல் - பயப்படுதல்.

நீத்தாருள் - நீத்தார் - முனிவர்; துறவியர்.

எல்லாம் - முழுதும்

கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.

அஞ்சிக்அஞ்சுதல் - பயப்படுதல்.

கொல்லாமை -  உயிர்க்கொலைசெய்யாமை

சூழ் - ஆலோசனை; ஆராய்ச்சி; சுற்று; தலைமாலை; கடலைப்பருப்பு.

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

சூழ்வான் - தேர்ந்தெடுத்தவன் ;

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
இங்கே மெய்யினை உணர இல்வாழ்க்கையை துறக்கும் துறவிகளை இங்கு திருவள்ளுவர் கூறவில்லை என்று எனக்கு படுகிறது. வாழ்வின் நிலையை (நிலையாமையை) கண்டு பயந்து இல்வாழ்க்கையை துறந்து துறவுவாழ்க்கையை கொண்ட துறவிகள் எல்லோரையும் விட (கருணையினால்) பிற உயிர்களை கொல்ல அஞ்சி கொல்லாமையை தேர்ந்தெடுபவர் உயர்ந்தவர் ஆவார்.

அறநெறிச்சாரப் பாடல் (61) ஒன்று, கொன்று தின்னாமையே துறவினாலாகும் பயனைக் கொடுக்கவல்லது என்னும் கருத்தில் கீழ்கண்ட பாடலைச் சொல்லுகிறது.பிற  கொள்வது

கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாந் தன்னைத் தவம்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

சாலமன் பாப்பையா உரை
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
எல்லாம் துறந்தவனினும் எதையும் கொல்லாதவன் சிறந்தவன்.

Friday, January 17, 2020

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத

குறள் 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்
செய்யாமல் - இதற்கு முன் நாம் ஒருவருக்கு இன்னலை செய்யவில்லை

செற்றார்க்கும் - பகைவர்

இன்னாது - தீது; துன்பு
இன்னாத  - இன்னாதா-தல் - துன்புறுதல்

செய்தபின் - செய்த பின்பு

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

உய்யா - நீங்காத ; தப்ப முடியாத

விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்.

தரும் - தரும் ; கிடைக்கும்

முழுப்பொருள்
நாம் பகைவர்க்கு கூட தீமை செய்யாத பொழுது (அதாவது பகைவர் என்றாலும் அவருக்கு தீமை செய்யாதே) அந்த பகைவர் நாம் துன்பப்படும் அளவிற்கு நமக்கு தீமை செய்தால் அப்பொழுது சினம் வரக்கூடும். அதன் விளைவாக அந்த பகைவர்க்கு நாம் பதிலடியாக ஒரு தீதை செய்தால் அது நமக்கு தப்பவேமுடியாத துன்பதை தரும். ஏனெனில் பழிக்கு பழி என்று எல்லோரும் புறப்பட்டால் இந்த ஊரே சுடுகாடாக மாறிவிடும். நாம் செய்த தீமைக்கு அந்த பகைவர் பதிலடி கொடுப்பார். அதற்கு நாம் பதிலடி கொடுப்போம். இது தொடர்சங்கிலியாக உருவெடுத்துவிடும். அதில் இருந்து தப்பவே முடியாது. அதனால் நமது காலம் ஆக்கபூர்வமான செயல்களில் செல்லாது அழிவின் பக்கம் திசைதிரும்பி நமக்கு இழப்பையும் துன்பத்தையும் பெற்றுத்தரும்.

அதனால் அஹிம்சை முறையை அன்றே எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.

“நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று” என்ற நாலடியார் பாடல் சொல்வதற்கு மேலான கருத்தைச் சொல்கிறது இக்குறள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.).

மணக்குடவர் உரை
தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
காரணமின்றிக் கெடுதல் செய்வோனையும் கண்டுகொள்ளாதிரு.

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்
செல் போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான்.

செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லா  - செல்லாத 

இடத்துச் - இடம் தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

சினம் கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

தீது தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு

செல்போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான்.

இடத்தும்இடம் தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி


இல்இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

அதனின்அதனை விட

தீய தீமையான; போலியான.

பிறமற்றவை; ஓர்அசைச்சொல். 

முழுப்பொருள்
பயனில்லாத (அல்லது சினம்)செல்லுபடியாகாத இடத்தில் நமது சினத்திற்கு அர்த்தம் இல்லை. அப்படிப்பட்ட சினம் நமக்கு தீதே. ஏனெனில் அந்த சினம் நமக்குள் எரிந்துகொண்டு நம்மையே அழித்துவிடும். இந்த சினத்தின் பின்விளைவாக தேவையில்லாத மனவருத்தங்கள், பூசல்கள், உடல் உபாதைகள், உறவு இழப்புகள் போன்றவை ஏற்படும். ஆக்கபூர்வமாக எதுவும் நடக்காது.

அதேபோல நம்முடைய சினத்தை கண்டுக்கொள்ளக்கூடிய இடத்திலும் அல்லது ஆக்கபூர்வமான ஒரு செயல்/உறவு நடக்கும் இடத்திலும்  அதனைவிட தீது அளிக்கக்கூடிய ஒன்று வேறு இருக்க முடியாது. ஏனெனில் முன்பே சொன்னது போன்று தேவையில்லாத மனவருத்தங்கள், உறவு விரிசல்கள் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். அதுமட்டும் அல்லாது ஆக்கத்திற்கான வழிகளை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்துவிடும். பல சமயங்களில் பிரச்சனையின் அடிநாதத்தில் இருந்து பிரச்சனை சினத்தினால் வந்த உட்பகைக்கு திசைமாறிவிடும் (பிறருக்கும் அது ஏதுவாக இருக்கும்). ஆதலால் சினத்தை விட தீயது வேறு இல்லை.  

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”...... சுருக்குக, செல்லா இடத்துச் சினம்” (நான்மணி 87)

பரிமேலழகர் உரை
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.

மு.வரதராசனார் உரை
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தீமையும் பாவமும் கோபத்தின் பலன்கள்.

‘கோபம்’ மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள் நடைபெற்றதாகச் சரித்திரம் கூறுகிறது. கட்டுக்கடங்காத கோபங்களால் வன்முறைகளும், கொலைவெறிகளும் தாண்டவமாடுகின்றன. பெற்றோர் கோபங்களில் பிள்ளைகள் நலம் கெடுகிறது; உறவு சிதைகிறது. ஆசிரியர்களின் கோபங்களில் மாணவ நெஞ்சங்கள் கருகிப் போகின்றன. அர்த்தமற்ற அநாகரீகமான காட்டுமிராண்டித்தனமான கோபத்தின் உக்கிரமும் உஷ்ணமும் தாங்காமல் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்! பிரிந்த உயிர்கள் ஏராளம்!


10 வயது மாணவன் சென்னையில் ஆசிரியர் கோபத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டான். அவன் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில், “நான் மறுபிறவியில் இதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். ஆனால் இதே பள்ளியில் படிக்க விரும்பவில்லை” என்ற செய்தி சிந்திக்கத்தக்கது.

2007 ஜனவரி மாதம் ஒரு நாளில் திருநெல்வேலியில் ‘சுடலி’ என்ற 9 வயது சிறுமி வகுப்பில் கவனமாக இல்லை என்று ‘மிஸ்’ அவளை நோக்கி சினங்கொண்டு எறிந்த டம்ளர் ‘மிஸ்’ ஆகாமல் சிறுமியின் கண்களைப் பதம் பார்த்தது. பார்வை நிரந்தரமாகப் பறிபோனது. 2007 அக்டோபரில் அகமதாபாத்தில் 10 நிமிடம் தாமதமாக வந்தான் 11 வயது மாணவன் மிலான் தாணா. அவனுக்கு ஐந்து முறை பள்ளி மைதானத்தைச் சுற்றி வருமாறு அவமானகரமான தண்டனை வழங்கப்பட்டது. இரண்டாவது சுற்றிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.

2009 மார்ச் 24ஆம் தேதி மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் பள்ளி அருகிலுள்ள குளத்தில் 5 வயது மாணவி ஸ்ரீரோகிணி உடல் மிதந்தது. காவல்துறை புலனாய்வு செய்தது. வகுப்பறையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்ரீரோகிணி தலையில் பிரம்பால் ஓங்கி வன்மத்துடன் ஆசிரியை அடித்திருக்கிறார். அடித்ததும் சிறுமி அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறாள். ஆசிரியைக்கு அச்சம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்த சிறுமியை பீரோவில் திணித்து வைத்துப் பூட்டி வைத்திருக்கிறார். அதன் பின் ஊழியர்கள் உதவியுடன் இறந்துவிட்ட குழந்தையைக் கொண்டுபோய் குளத்தில் போட்டுவிட்டு ஒன்றும் நடக்காதது போல் இருந்திருக்கிறார்.

2009 ஏப்ரல் 17ல் டில்லி மாநகராட்சியில் பள்ளி ஒன்றில் 11 வயதுச் சிறுமி ஷானுகான் ஆங்கில வார்த்தை ஒன்றைச் சரியாக வாசிக்கவில்லை என்பதற்காக ஆசிரியையால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறாள். அவளது முதுகில் செங்கற்களைச் சுமக்க வைத்து கடும் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். சில நிமிடங்களில் ஷானு மயங்கிச் சரிந்துவிட்டாள். அதன்பின் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவளது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டத் துவங்கியுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த மறுநாளில் ஷானுவின் உயிர் பிரிந்துவிட்டது.


சமீபத்தில் 13 வயது கிராமப்புற மாணவனை அவனது தந்தை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். “வகுப்பு நேரங்களில் அடிக்கடி இவனுக்கு வலிப்பு வந்துவிடுகிறது” என்றும் அதன்பிறகு ஓரிருநாள் உடல் வலியும், கடும் தலைவலியும் நீடிப்பதாகக் கூறினார். ஆங்கில மருத்துவ நரம்பியல் நிபுணரின் ஆலோசனைப்படி மூளையை ஸ்கேன் செய்து பார்த்து, தொடர்ச்சியாக அவரது பரிந்துரைப்படி மருந்து மாத்திரைகள் கொடுத்து வருவதாகவும் கூறினார். ஆயினும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்…. மீண்டும் மீண்டும் வகுப்பறையில் வலிப்பு வந்துவிடுகிறது என்று வருத்தத்துடன் கூறினார்.

அப்பாவை சிறிது நேரம் வரவேற்பறையில் அமரச் சொல்லிவிட்டு, பையனிடம் நட்போடும் கனிவோடும் வகுப்புச் சூழ்நிலைகள் குறித்து விசாரித்து அறிந்தோம். முதன் முறையாக வலிப்பு வந்த நாளை நினைவு படுத்துமாறு கேட்டோம். அன்று கிராமத்திலிருந்து நகர்நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து இடைவழியில் ஒரு பிரச்சனை காரணமாக 15 நிமிடம் நிற்க நேர்ந்துவிட்டது. அதனால் அவன் சற்று தாமதமாக பள்ளியை அடைந்தான். வாசலில் உடற்கல்வி ஆசிரியர் கோபம் கொப்பளிக்க கையில் பிரம்போடு அவனைக் கடுமையாக உபசரித்திருக்கிறார். 


மனதிலும் உடம்பிலும் பட்ட காயங்களின் ரணத்தோடு வகுப்பறையில் இருந்த போது மற்றொரு தாக்குதலை அவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மாதாந்திர தேர்வுத்தாள் திருத்தப்பட்டு அவற்றை வழங்கிய ஓர் ஆசிரியர் மதிப்பெண் குறைவுக்காக அவனை விசேஷமாகக் கவனித்திருக்கிறார். அந்தப் பாடவேளையில் அடுத்த சில நிமிடங்களில் உடல் நடுங்கி, கண்கள் இருண்டுபோய், தன்னிலை இழந்து முதன் முறையாக வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவன் பள்ளியில் கண்டிக்கப்படும் போதும் தண்டிக்கப்படும் போதும் வலிப்பு வருவது வாடிக்கையாகி விட்டது. அந்தச் சிறுவனுக்கு உரிய மனநல ஆலோசனையும் மலர் மருந்துகள் மற்றும் ஹோமியோபதி சிகிச்சையும் அளிக்கப்பட்டபின் சில மாத காலத்தில் வலிப்பிலிருந்து நலமடைந்தான்.

ஐ.நா. சபையின் குழந்தை உரிமை உடன்படிக்கையில் இந்திய அரசும் கையொப்பம் இட்டுள்ளது. குழந்தைகளைக் கடும் சொற்களாலும் உடல் ரீதியிலும் தண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது. இத்தகைய குழந்தை உரிமை மீறல் அனுமதிக்க முடியாத வன்முறை. 1989 ஐ.நா, குழந்தை உரிமை உடன்படிக்கையின் முக்கிய அம்சம், “குழந்தைகளை முறைப்படுத்துவதில் உடல்ரீதியான தண்டனை உபயோகிக்கக்கூடாது…” என்பதுதான். ஆனால் பெரும்பாலான வகுப்பறைகளைக் கோபமும் எரிச்சலும் கோலோச்சுகிறது.

வாழ்க்கையை வாழும் கலையை, வாழ்வியல் பண்புகளைக் கற்றுத்தர வேண்டிய வகுப்பறைகள் சித்ரவதை முகாம்களாய் மாறிவிட்டன. அன்பையும் பண்பையும் அறிவையும் ஊட்ட வேண்டிய ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்களிடம் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் காவல் துறையினர் போல மாறிவிட்டனர்.

விவேகானந்தர் மனிதனை உருவாக்கும் கல்வியை வலியுறுத்தினார் (Man Making Education). மகாத்மா காந்தி அவர்கள் உடல், உள்ளம், ஆன்மா மலர்ச்சிக்கு உறுதுணையாகக் கல்வி அமைய வேண்டும் என்று விரும்பினார். மாற்றுக் கல்விக்கான குரல்கள் வலிமையடைந்துவரும் நேரம் இது. மனப்பாட முறை தேர்வுகளை மையப்படுத்திய, வாழ்க்கைக்கு உதவாத கல்வித்திட்டம் இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்குமில்லை. ‘மதிப்பெண்களை’ வைத்து மாணவனை மதிப்பிடுகிற அபத்தமான, ஆபத்தான கல்வித் திட்டத்தால் கோடிக்கணக்கான இளம் உள்ளங்களின் இயற்கையான பரிணாம மலர்ச்சியும், சுயதிறன்களின் வளர்ச்சியும் மறுக்கப்படுகிறது.



ஒரு பக்கம் பாடத்திட்டமும் மறுபக்கம் பெற்றோர் ஆசிரியரின் அணுகுமுறையும் நம் குழந்தைகளின் நிகழ்காலத்தை பேரச்சம்மிக்கதாய் மாற்றியுள்ளது. பள்ளிப் பிள்ளைகள் இயல்பான மனநிலையோடும் உற்சாகத்தோடும் கல்விகற்க இயலவில்லை. மாறாக எண்ணற்ற பயந்தாங்கொள்ளிகளும், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களுமாக மாறுகிறார்கள்; அல்லது வன்முறையாளர்களாய், அராஜகப் பேர்வழிகளாய் பரிணமிக்கின்றனர். இது இன்றைய நமது குடும்ப, சமூக, கல்விச் சூழலின் எதிர்மறை விளைவு.

கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கொட்டித் தீர்க்கும் இயல்புக்கு ‘CHERRY PLUM’, மாணவர்களை எப்போதும் கடுமையாக விமர்சித்துக்கொண்டும், குறை கூறிக் கொண்டும் வகுப்பறைறை வசையறையாக மாற்றும் இயல்புக்கு ‘HOLLY’ ‘WILLOW’, பொறுமையற்ற தன்மையும், பரபரப்பும், மாணவர்களை வேகப்படுத்தும் மனநிலைக்கு ‘IMPATIENCE’ , நல்லதோ கெட்டதோ தான் சொல்வதைக் கேட்டுத்தான் தீரவேண்டும் என்று வகுப்பறையை தனது அதிகாரக்கூடமாக மாற்றும் ஹிட்லர் மனநிலைக்கு ‘VINE’ போன்ற பாச் மலர் மருந்துகள் பயன்படும். இத்தகைய குணங்கள் ஆசிரியப் பணிபுரிவோரின் ஆளுமையில் படிந்த கறைகள்.


இன்றைய காலத்தில் மிகைச் செயல்பாடு (Hyperactive) கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது கவலைக்குரியது. இவர்களால் மனம் ஒன்றிக் கல்வியில் ஈடுபடமுடியாது. இப் பிரச்சனையை Attention Deficit Hyperactive Disorder (ADHD) என்று மருத்துவத் துறையில் குறிப்பிடுகிறார்கள்.

சில குழந்தைகளுக்கு Dyslexia என்ற கற்றல் குறைபாடு பிரச்சனை உள்ளது. இவர்களுக்கு கரும்பலகையில் வரையப்படும் நேர்கோடுகள் வளைந்து நெளிந்து தெரியும். எழுத்துக்களும், எண்களும் தலைகீழாகத் தெரியும். கண்ணாடியில் பார்ப்பது போல் எழுத்தின் அமைப்பு மாறுபட்டுத் தெரியும். சமீபத்தில் மும்பையில் ஒரு டிஸ்லெக்ஷியா குழந்தையை ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் மரணமடைந்து விட்டதாக செய்தி வெளிவந்தது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் இத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம். 

ஆங்கில மருத்துவத்தில் மன வளர்ச்சிக் குறைபாடுகளுக்கோ (Mental Retardation) ADHD, AUTISM, DYSLEXIA போன்ற நவீனகால குழந்தை உளவியல் சிக்கல்களுக்கோ சிறப்பான சிகிச்சைகள் உருவாகவில்லை. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்சனைக் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளன. மாற்று மருத்துவங்களில் குறிப்பாக ஹோமியோபதி மற்றும் மலர் மருத்துவத்தில் இப்பிரச்சனைகளுக்கு சிறப்பான பலனளிக்கும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. இத்தகைய குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும், சமூகமும் ஆதரவோடும் அரவணைப்போடும் கையாள்வது அவசியம். இத்தகைய குழந்தைகளிடம்கூட ஆசிரியர் கோபத்துடன் வழக்கமான அணுகுமுறைகளுடன் நடந்து கொள்வது ஆபத்தில் முடியும்.

இன்றைய கல்வித் திட்டத்தில் உடனடியாக பெரும் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்றாலும் கற்பிக்கும் அணுகுமுறையில் வகுப்பறைச் சூழ்நிலையில் அன்பும் நட்பும் கலந்த நேரிய (Positive) அணுகுமுறையை ஆசிரியப் பெருமக்கள் கடைப்பிடித்தால் மாணவர்களின் மனநலமும் உடல் நலமும் சிதையாமல் ஆரோக்கியமாக அமையும்.

Wednesday, January 15, 2020

உள்ளத்தாற் பொய்யா தொழுகின்

குறள் 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]

பொருள்
உள்ளத்தால் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கை யானது; சிறுசிறாய்.

பொய்யாது  - போலியாக இல்லாமல்; செயற்கையாக இல்லாமல்;

ஒழுகின் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

உலகத்தார் - உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார்.

உள்ளத்துள் - உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே

எல்லாம் - முழுதும்

உளன்  - அவர் நினைக்கும்படியாக வாழ்வார்

முழுப்பொருள்
உள்ளத்தினால் தன்னுடைய எண்ணங்களில் சொற்களில் முயற்சிகளில் செயல்களில் என்று எல்லாவற்றிலும் உண்மையாக பொய்யாக இல்லாமல் போலியாக இல்லாமல் நடந்துகொண்டால் (செயல்புரிந்தால்) அவர் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் நினைக்கப்படுவார் / போற்றப்படுவார்.

உலகில் பலர் உண்மையாக இருப்பார்கள். ஆனால் எல்லோரும் உயர்ந்தோரால் நினைக்கப்படுவதில்லை. ஆனால் அவர்களை பற்றிய நல்ல அபிப்ராயம் பிறர் மத்தியில் இருக்கும்.  இங்கே திருவள்ளுவர் ஒழுகின் என்று கூறுகிறார். ஒழுகுதல் என்றாலே வளர்தல் என்று பொருளும் உண்டு. ஆதலால் எவர் ஒருவர் உள்ளதினால் உண்மையாக இருந்து போலியாக இல்லாமல் தன் செயலினால் வளர்கிறாரோ (தானும் பயன்பெற்று பிறரும் பயன் பெறக்கூடியவகையில் வாழ்கிறாரோ) அவரை உயர்ந்தோர் (சான்றோர்) தங்களின் மனதால் நினைத்துப் போற்றுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான் இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

சாலமன் பாப்பையா உரை
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மாசற்ற மனத்தாரை மக்கள் மறவார்.

களவின்கண் கன்றிய காதல்

குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
கள்ளாமை - களவுசெய்யாமை.

களவின் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி. 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கன்று - விலங்கின்கன்று; மரக்கன்று, இளமரம்; சிறுமை; கைவளையல்.

இயஇயைவு - iyaivu   n. இயை¹-. Union, joining together; சேர்க்கை

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்

விளைவு - நிகழ்ச்சி; விளைகை; முதுமை; விளைபொருள்; பழம்; பயன்; கைகூடுகை; ஆக்கம்; விளையுமிடம்; வயல்; மேகம்; நாடகச்சந்திஐந்தனுள்ஒன்று.

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

கண் விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வீ-தல் - vī-   4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).

வீயா - அழியாத 

விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்

தரும் தரும்  

முழுப்பொருள் 
கன்றிய காதல் என்றால் முதிராத காதல் /வேட்கை /விழைவு. ஆதலால் பிறர்பொருளை வஞ்சித்து திருடும்(களவு செய்யும்) முதிராத வேட்கையும் விழைவும் கொண்டு சேர்க்கப்படும் பொருளானதின் விளைவு அழியாத (சிறப்புப்போல் தோன்றும்) துன்பத்தையே தரும்.   பிறர் பொருளை வஞ்சிக்க நினைக்கும் எண்ணமானது மிக மிக அற்பமான கீழமையான சிறுமையான வேட்கை/விழைவு என்றென்கிறார் திருவள்ளுவர். 

ஒப்புமை
கீ.வா.ஜகன்னாதன் ஆராய்ச்சித் தொகுப்பில், வினைப்பயன் விளைவைப்பற்றி மணிமேகலையிலிருந்து இவ்வாறு கூறுகிறார். “வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும்” (மணி:30:62-3). முற்றுக் கருத்தையும் எதிரொலிக்கும் பாடல் வரிகளையும் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற காவியங்களிலிருந்து எடுத்துக்காட்டியிருப்பார். கள்ளாமை என்பது சமணக்கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றானதால், சமணகாவியங்களே இவற்றைப் பற்றி வெகுவாகப் பேசியுள்ளன.

”முளரிமுக நாகமுளை யெயிறுழுது கீற
அளவில்துயர் செய்வரிவண் மன்னரத னாலும்
விளைவரிய மாதுயரம் வீழ்கதியுள் உய்க்கும்
களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே” (சீவக.2870)

“களவின் ஆகிய காரறி வுள்ளன்மின்
விளைவில் வெவ்வினை வீவில் கதிகளுள்
உளைய வுள்ளழித் தொன்றல வேதனை
வளைய வாங்கி வருத்தம் உறுக்குமே” (குளா)

”பீடில் செய்திக ளாற்கள வில்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயன்எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்
தோட லின்றி உலையக் குறைக்குமே” (வளையாபதி)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.

மு.வரதராசனார் உரை
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
திருட்டு இன்பம், தீராத துன்பம்.

தவமறைந்து அல்லவை செய்தல்

குறள் 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தவ - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

மறைந்து - மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

அல்லவை - தீயவை; பயனின்மை.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

புதல் - தூறு; ஒருபுல்வகை; மருந்துப்பூண்டு; அரும்பு; புருவம்.

மறைந்து மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

வேட்டுவன் - பாலைநிலத்திற்குரியவன்; வேட்டைக்குச்செல்வோன்; குறிஞ்சிநிலத்தலைவன்; குளவி; மகநாள்.

புள் - பறவைப்பொது:வண்டு; கணந்துட்பறவை; பறவைநிமித்தம்; அவிட்டநாள்; கைவளை; மதுபானம்; கிட்டிப்புள்.

சிமிழ்த் - செப்பு; திமில்; cimiẕ   VI. v. t. tie, fasten, கட்டு; 2. entrap, catch, பிடி.

அற்று  - அதுப்போல ; ஆகும் ; அத்தன்மையது

முழுப்பொருள்
ஒருவர் தவத்தில் இருக்கும் பொழுது (தவத்தின் துவக்கத்தில் எடுத்த சங்கல்பத்தில் இருந்து விலகி) மறைவாக தவத்திற்கு ஒவ்வாத / தீய / பயனற்ற செயல்களை செய்வது தவத்திற்கு எதிரானது ஆகும். அப்படி செய்வோர் தவத்தின் பலனை அடையமாட்டார்கள். இது ஒரு வேடன் புதரில் மறைந்து பறவையை பிடிப்பதை போல ஆகும். அதாவது வேடன் என்பவன் பறவையை சரியாக குறிவைக்க வேண்டுமென்றால் அவனுக்கு நல்ல காட்சியும் தன்னை சுற்றி இடர்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். முழுக்கவனமும் பறவையின் மீது இருத்தல் வேண்டும். ஆனால் புதருக்குள் சென்றால் பறவையை பற்றிய காட்சியும் தெரியாது புதர் தரும் இடர்களான அரிப்பு வெம்மை பூச்சிக்கடி ஆகியவை கவனத்தை திசை திருப்பும்.  மனதை ஒருமுக படுத்தமுடியாது. அதனால் பறவையை குறிவைத்துப் பிடிக்கமுடியாது.

அதுப்போல தவத்தில் இருந்து மறைவாக தீய செயல்களையும் பயனற்ற செயல்களையும் செய்தல் தவத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பி தவத்தின் இலக்கை அடையமுடியாதபடி செய்துவிடும்.

ஆதலால் தவத்தில் ஈடுபடும் பொழுது தவத்தை தவிர வேறு எதிலும் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இது துறவறத்தில் தவம் என்றிலை, வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பாக தவமாக எண்ணிச் செய்யும் பெருஞ்செயல்களுக்கு பொருந்தும். பெருஞ்செயல்களை செய்யும் பொழுது அவற்றை தவம் போன்று சலனங்கள் இல்லாமல் மிக கவனமாக (ஒரு razor focusஉடன்) செய்ய வேண்டும். தேவையில்லாத சலனங்களை வைத்துக்கொள்ள கூடாது. உதாரணமாக சினிமா பார்ப்பது, சமையல் செய்வது, ஊர் சுற்றுவது, கோயில்களுக்கு போவது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, அல்மாரியை ஒழுங்கு செய்வது, போனில் பேசிக்கொண்டு இருப்பது. இவை முற்றிலும் தவறு அல்ல. ஆனால் ஓய்வுக்காக ஒரு நாளைக்கு 10-15 நிமிடம் இளைப்பாருவது வேறு. ஆனால் 1-2 மணிநேரம் பார்ப்பது (binge eating, binge watching etc.,) என்பது வேறு. ஒருவன் 95% சதவிகிதம் எடுப்பதற்கும் 98% சதவிகிதம் எடுப்பதற்கும் வித்தியாசம் கவனம் தான். 

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் GMAT exam-க்கு படிக்கும் பொழுது முதல் தடவை கணிதத்தில் 51இற்கு 48 எடுத்தேன் (அது உலக அளவில் 84 percentile). நான் முதல் தடவை பரிட்சை எழுதிய பொழுது அவ்வளவு கவனமாக எழுதவில்லை. என் செயல்கள் அலைப்பாய்ந்துக்கொண்டு இருந்தது. அதுவே இரண்டாவது முறை நான் எழுதியபொழுது சுமார் 50 நாட்கள் ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்று தொலைக்காட்சி, சினிமா போன்று எவ்வித சலனமும் இன்றி இருந்தேன். என் கவனம் முழுவதும் பரிட்சைக்கு ஆயுத்தமாவதில் தான் இருந்தது. அவ்வாறு தயார் செய்து இரண்டாவது முறை எழுதியதில் நான் 51இற்கு 50 மதிப்பெண்கள் எடுத்தேன் (அது உலக அளவில் 96 percentile). இதற்கு முக்கிய காரணம் கவனம் சிதறாமை.

அதேப்போல் என்னுடைய நண்பரின் அண்ணன் ஒரு பெரிய நரம்பியல் நிபுணர். அவரை சுமார் 2008ஆம் ஆண்டில் சந்தித்தேன் என்று நினைக்கிறேன். அப்பொழுது பேச்சு போன்-இற்கு ஆகும் செலவைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். அவர் சொன்னார் நான் இந்த ஆண்டு ஒரு 3000 ரூபாய்க்கு கட்டணம் செலுத்தினேன். ஆனால் ஒரு 100 ரூபாய்க்கு தான் பேசினேன். அப்படியா? எனக்கெல்லாம் மாதம் 300 ரூபாய்க்கு கட்டணம் செலுத்தினாலும் பத்தாது. தீர்ந்துவிடும் என்று. அவர் சொன்னார், போன் இருப்பதற்காக பேசிக்கொண்டே இருப்பதா? அவ்வளவு பேச வேண்டாம். அவர் சொன்னது எனக்கு அப்பொழுது புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து தான் புரிந்தது. அவர் நேரத்தை கவனமாக சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தி இருக்கிறார். நண்பர்களுடன் பேசுவது அரட்டை அடிப்பது என்று நேரத்தை விரயம் செய்யவில்லை. அதனால் தான் அவர் தொடர்ந்து மேற்படிப்புகள் படித்து பெரிய ஒரு மருத்துவராக இருந்தார். அந்த excellence-ஐ தன் வாழ்வில் பெற்றதற்கு காரணம் எவ்வித கவனச் சிதறலும் இல்லாமல்  தன் தொழிலையும் படிப்பையும் தவம் போல் செய்தார் அவர். 

சரி, அதெப்படி கவனம் சிதறாமல் இருப்பது? திருவள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா? 
சொல்லியிருக்கிறார். குறள் 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை  வஞ்சிப்ப தோரும் அவா”. உனது ஆசைகளும் சலனங்களும் உன்னை வஞ்சிக்கும் என்பதை அறிக. ”குறள் 34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்  ஆகுல நீர பிற”. அவ்வாசைகளும் சலனங்களும் வெறும் சத்தங்கள் என்று அறிக. அவற்றிக்கு பொருள் இல்லை. ”குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” அச்சலனங்களும் ஆசைகளும் வேண்டாம் வேண்டாம் என்று அவற்றை துறந்தால் உங்களுக்கு இன்பமே என்று உணர்க. இவ்வாறு செய்தால் தவத்தை சிறப்பாய் செய்யலாம்.

சரி, (தவம் அல்லவற்றை, அதாவது) இச்சைகளை எப்படி அழிப்பது?
மேற்சொன்ன மூன்று குறள்களுமே உதவும். ஆனால் இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ”ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்” பற்றி அறிந்துக்கொள்க. எழுத்தாளர் ஜெயமோகனின் ”ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்” என்ற கட்டுரையில் இருந்து அப்புராணம் பற்றிய சிறு குறிப்பு இங்கே
ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்:
அந்த அசுரனின் ஒவ்வொரு துளி குருதியும் ஒரு தனி ரத்த பீஜாசுரனாக முளைக்கும். அவனிடம் அம்பிகை போர்புரிய புகுந்தபோது அவள் ஆயுதத்தால் அவன் தாக்கப்பட்டபோதெல்லாம் பலவாக வளர்ந்தான். ஆகவே அம்பிகை இரண்டாக பிரிந்தாள். ஒரு அம்பிகை ரத்த தாகம் மிக்க ஒரு பூதமாக ஆனாள். அவள் இன்னொரு தெய்வீக அம்பிகை விட்ட அம்புகளால் ரத்த பீஜாசுரன் கொட்டிய குருதியை தன்  நாவால் நக்கிக் குடித்தாள். அசுரன் அழிந்தான்.

நம் தாய்தெய்வ உருவகத்தில் இருந்து அம்பிகை என்ற பெருந்தெய்வம் உருவாகி வந்தது அதன் வரலாற்றுப்பின்னணி. ஆனால் இக்கதை ஆழமான ஒரு தத்துவக் குறியீடு. தியான மரபில் மிக முக்கியமானது. அடிப்படை இச்சைகளுடன் நேருக்குநேராக நின்று போர் புரிய முடியாது என்று சொல்கிறது இது. போர்புரியும்தோறும் அது பெருகும். ஆகவே நம் போதமே இரண்டாக பிரியவேண்டியிருக்கிறது, அம்பிகையாகவும் பூதமாகவும். தியானம் பழகியவார்களுக்கு மேலும் புரியும்.

இப்படித்தான் நாம் புராணங்களைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் புராணங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நமக்கு பௌராணிக மரபு அழிந்தது. புராணத்தை தத்துவத்துடன் இணைத்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் பெரும் புராணிக சொற்பொழிவாளர்கள் இல்லாமல் ஆனார்கள்.

விளைவாக புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது. இன்று எந்தக்கோயிலில் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர் அவருக்கு தோன்றிய ஓர் அற்புதக் கதையை சொல்வார். பல கதைகள் மக்குத்தனமாகவே இருக்கும்.

ஒப்புமை
”தவம்மறைந் தல்ல செய்வார்” (பெரிய.திருஞான 697)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.).

மணக்குடவர் உரை
தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.

மு.வரதராசனார் உரை
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தவத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தீச்செயல் புரியாதே

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தியானத்துக்கு உவமை
தியானத்துக்கு முண்டக உபநிடத்திலே ஒரு சிறந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. ‘தியானம் செயபவன் வில்லாளி. குருவிடத்திலே அடைந்த வேதாந்த ஞானமேவில். தியானம் செய்பவனுடைய ஆத்மாவே அம்பு. அம்பாகிய ஆத்மாவை - அதாவது, தன் உள்ளத்தை வில்லில் வைத்து நாணை இழுக்க வேண்டும். நாணை இழுப்பதென்றால் ஏகாக்கிரசித்தத்துடன் தான் அடைந்த ஞானத்தை உபயோகித்துத் தியானிப்பது. நாணை நன்றாக இழுத்துக் குறிபார்க்க வேண்டும். பரமாத்பாவே குறியாகும். நல்ல வில்லாளி வில்லை வளைக்கும் போது குறியும் அம்பும் ஒரு நேரில் அமையச் செய்கிறான். அந்த நிலையில் அம்பு குறியில் மறைந்து போகிறடு. பரம்பொருளைத் தியானம் செய்பவன் அவ்வாறே தன் ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றாகவே காண வேண்டும். தியானம் செய்யும் காலத்தில் பரமாத்மாவில் மன் ஆத்மா முற்றிலும் அத்துவிதீயமாகப் போகல் வேண்டும். 

English Meaning - As I taught a kid - Rajesh
While you are doing a penance (work) if you are discreetly or directly indulging in non-penance actions then it will not yield you any result. Because, it is similar to a hunter trying to aim a bird by hiding inside a hay. Hitting a bird needs skill, focus, complete view and also no distractions. Haywires distracts a person and doesn't give complete view. Similarly when doing a penance (work), discreetly or directly indulging in non-penance actions will distract. For e.g., the difference between a person getting 99% and 95% (or 80%) lies in these small small things. 

Questions that I ask to the kid
What if I do discreetly or directly indulge in non-penance things when I do a penance work? How would you relate to?

Can I do non-penance stuffs when I am in penance? If not why?

What does a hunter hiding inside a hay and aiming a bird signify?

Tuesday, January 14, 2020

தவமும் தவமுடையார்க்கு ஆகும்

குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தவமும் - தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

உடையார்க்கு - உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

ஆகும் - நடக்கும்

அவம் – வீண்; பயனின்மை; கேடு ஆணை அழைப்பு வேள்வி ஆகாயத்தாமரை

அதனை - அந்த செயலை

அஃதிலார் - அப்படி இல்லாதவர்கள்

மேற்கொள் வது - மேற்கொள்ளுதல் -மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

முழுப்பொருள்
இக்குறளை பற்றி பல உரைகள் உள்ளன. அவை கூறும் பொருள் முற்பிறவியில் ஈன்ற பலனாக தவம் செய்ய அமைந்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் தவம் செய்ய முடியம். இல்லையென்றால் இப்பிறவியில் தவம் இருக்க முடியாது. ஆனால் எனக்கு அக்கருத்து ஏற்புடையதாக இல்லை.

"தவமும்" என்றால் தவத்தினால் வரும் பயன், வீடுபேறு என்பதையே நாம் இங்கு எடுத்துக்கொள்ளவேண்டும். தவம் உடையார்க்கு என்றால் காட்டுத்தீப் போன்ற உக்கிரத்துடன் கூடிய பற்று நீங்கிய தவத்தை மேற்கொள்வோர் என்றுப் பொருள். அவ்வாறு தவத்தை மேற்கொள்வோர்க்கு தவத்தின் பலனாக புண்ணியம் / வீடுபேறு  கிட்டும்.

ஆனால் பற்றுடனோ அல்லது உக்கிரம் இல்லாமல் தவம் இருந்தால் அந்த தவம் பயனின்மையே ஆகும். அத்தகைய தவத்தை மேற்கொள்வோர்க்கு நேரம் வீண் ஆகும்.

இத்தகைய தவத்தை நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொருத்தலாம். எந்த ஒரு காரியத்தையும் காட்டுத்தீ போன்ற உக்கிரத்துடன் கவனம் சிதறாது வேறு செயல்களில் பற்றுஅற்று செய்தால் அந்த செயலின் (தவத்தின்) பயனாக நற்பயன் கிட்டும். இல்லையென்றால் கிட்டாது.

மேலும் 
பெரியபுராணத்தில் சேக்கிழார் கண்ணப்ப நாயனாரின் தந்தை நாகனைப் பற்றிக் கூறும்போது, அவன் முற்பிறப்பில் தவம் செய்ததனால் கண்ணப்பனை மகனாகப் பெற்றானாயினும் அவன் பிறந்த பிறப்பால் மிருகங்களைக் கொலைசெய்யும் குற்றத்தையே தன்னுடைய குல ஆசாரமாகக் கொண்டு வாழ்ந்து, கொலையாகிய கொடுமையை தன்னுடைய குணமாகக் கொண்டு வாழ்கிறான் என்கிறார்.

“பெற்றியாற் றவமுன் செய்தா னாயினும் பிறப்பின் சார்பாற்
குற்றமே குணமா வாழ்வான்; கொடுமையே தலைநின்றுள்ளான்;”


முற்பிறப்பில் செய்த தவம் நல்ல மகவை மட்டுமே ஈந்தது என்றும், இப்பிறப்பில் குலம் சார்ந்தே தொழிலும் வாழ்வும் அமைந்தது என்கிறார்.

பரிபாடல் 11:138 வரியும் இக்குறளின் கருத்தையொட்டி இவ்வாறு கூறுகின்றது. “முன்முறை செய்தவத்தின் இம்முறை இயைந்தேம்”.

”மேலைத் தவத்தால் தவம் செய்யா தார்” (நாலடி 31)

மேலும்: அஷோக் உரை


“நதியின் விசையை கிளைகளாக, கால்களாக பிரித்து நிறுத்துகிறோம். பசுமையெனப் பொலிகிறது. பொன் என விளைகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். அவரை வெற்றுவிழிகளால் நோக்கினார் விதுரர். “அனைத்து தொல்விசைகளும் அழகென்றும் அறமென்றும் மெய்மையென்றும் உருமாற்றத் தக்கவையே” என்றார் இளைய யாதவர். விதுரர் தலையசைத்தார்.

சற்று நேரம் கழித்து “ஆனால் அதனினும் மறைவானது என் ஆணவம்” என்றார் விதுரர். “ஆம், நான் அஸ்தினபுரியின்மேல் விழைவுகொண்டிருந்தேன். நானே தகுதியானவன் என்று எண்ணினேன். அந்நகருக்கு நிகராக நான் கொண்டிருந்தது அந்த அருமணி. அதை விழியருகே வைத்து உள்ளே நோக்குகையில் நான் கண்டது அடுக்கடுக்கென ஒளிகொண்டு விரியும் எனக்கான நுண்நகரத்தை. என் கோல்நிற்கும் கோட்டை, என் சொல் ஆளும் நிலம்.” சொற்களுக்காகக் கொந்தளித்து பின் மெல்ல அடங்கி “நீங்கள் சொன்னதுதான் யாதவரே, அளிக்கப்படும் உரிமை உரிமையே அல்ல. கொள்ளப்படுவதும் வெல்லப்படுவதுமே மெய்யான உரிமைகள். நான் அன்பாலும் அளியாலும் பேணப்பட்டவன். இன்சொல்லின் நஞ்சுண்டு வளர்ந்தவன். அன்பெனும் சிறுமையில் திளைத்துக்கொண்டிருப்பவன்” என்றார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-மாமலர் -49 இல் ஒரு வரி இப்படி வருகிறது
 “தவம் செய்க… தவத்தால் அடைவதே அரிதென்றாகும்.”

பரிமேலழகர் உரை
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.

மு.வரதராசனார் உரை
தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

சாலமன் பாப்பையா உரை
முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
ஒழுக்கம் இல்லையேல் தவமில்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
People who do the penance, without any attachment to the result, without any distraction and with single minded focus would attain the moksha/result. Whereas people who do not do penance or who are distracted during the penance would only end up wasting the time and effort during the penance

Questions that I ask to the kid
When does Tapas yield result?
Why some Tapas done doesn't yield desired result?

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...