நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம்

thirukkural meaning விளக்கம் குறள் 325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை
குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

அஞ்சி - அஞ்சுதல் - பயப்படுதல்.

நீத்தாருள் - நீத்தார் - முனிவர்; துறவியர்.

எல்லாம் - முழுதும்

கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.

அஞ்சிக்அஞ்சுதல் - பயப்படுதல்.

கொல்லாமை -  உயிர்க்கொலைசெய்யாமை

சூழ் - ஆலோசனை; ஆராய்ச்சி; சுற்று; தலைமாலை; கடலைப்பருப்பு.

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

சூழ்வான் - தேர்ந்தெடுத்தவன் ;

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
இங்கே மெய்யினை உணர இல்வாழ்க்கையை துறக்கும் துறவிகளை இங்கு திருவள்ளுவர் கூறவில்லை என்று எனக்கு படுகிறது. வாழ்வின் நிலையை (நிலையாமையை) கண்டு பயந்து இல்வாழ்க்கையை துறந்து துறவுவாழ்க்கையை கொண்ட துறவிகள் எல்லோரையும் விட (கருணையினால்) பிற உயிர்களை கொல்ல அஞ்சி கொல்லாமையை தேர்ந்தெடுபவர் உயர்ந்தவர் ஆவார்.

அறநெறிச்சாரப் பாடல் (61) ஒன்று, கொன்று தின்னாமையே துறவினாலாகும் பயனைக் கொடுக்கவல்லது என்னும் கருத்தில் கீழ்கண்ட பாடலைச் சொல்லுகிறது.பிற  கொள்வது

கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாந் தன்னைத் தவம்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

சாலமன் பாப்பையா உரை
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
எல்லாம் துறந்தவனினும் எதையும் கொல்லாதவன் சிறந்தவன்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain