செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை குறள் 313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்
குறள் 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்
செய்யாமல் - இதற்கு முன் நாம் ஒருவருக்கு இன்னலை செய்யவில்லை

செற்றார்க்கும் - பகைவர்

இன்னாது - தீது; துன்பு
இன்னாத  - இன்னாதா-தல் - துன்புறுதல்

செய்தபின் - செய்த பின்பு

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

உய்யா - நீங்காத ; தப்ப முடியாத

விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்.

தரும் - தரும் ; கிடைக்கும்

முழுப்பொருள்
நாம் பகைவர்க்கு கூட தீமை செய்யாத பொழுது (அதாவது பகைவர் என்றாலும் அவருக்கு தீமை செய்யாதே) அந்த பகைவர் நாம் துன்பப்படும் அளவிற்கு நமக்கு தீமை செய்தால் அப்பொழுது சினம் வரக்கூடும். அதன் விளைவாக அந்த பகைவர்க்கு நாம் பதிலடியாக ஒரு தீதை செய்தால் அது நமக்கு தப்பவேமுடியாத துன்பதை தரும். ஏனெனில் பழிக்கு பழி என்று எல்லோரும் புறப்பட்டால் இந்த ஊரே சுடுகாடாக மாறிவிடும். நாம் செய்த தீமைக்கு அந்த பகைவர் பதிலடி கொடுப்பார். அதற்கு நாம் பதிலடி கொடுப்போம். இது தொடர்சங்கிலியாக உருவெடுத்துவிடும். அதில் இருந்து தப்பவே முடியாது. அதனால் நமது காலம் ஆக்கபூர்வமான செயல்களில் செல்லாது அழிவின் பக்கம் திசைதிரும்பி நமக்கு இழப்பையும் துன்பத்தையும் பெற்றுத்தரும்.

அதனால் அஹிம்சை முறையை அன்றே எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.

“நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று” என்ற நாலடியார் பாடல் சொல்வதற்கு மேலான கருத்தைச் சொல்கிறது இக்குறள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.).

மணக்குடவர் உரை
தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
காரணமின்றிக் கெடுதல் செய்வோனையும் கண்டுகொள்ளாதிரு.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain