தவமறைந்து அல்லவை செய்தல்
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
முழுப்பொருள்
ஒருவர் தவத்தில் இருக்கும் பொழுது (தவத்தின் துவக்கத்தில் எடுத்த சங்கல்பத்தில் இருந்து விலகி) மறைவாக தவத்திற்கு ஒவ்வாத / தீய / பயனற்ற செயல்களை செய்வது தவத்திற்கு எதிரானது ஆகும். அப்படி செய்வோர் தவத்தின் பலனை அடையமாட்டார்கள். இது ஒரு வேடன் புதரில் மறைந்து பறவையை பிடிப்பதை போல ஆகும். அதாவது வேடன் என்பவன் பறவையை சரியாக குறிவைக்க வேண்டுமென்றால் அவனுக்கு நல்ல காட்சியும் தன்னை சுற்றி இடர்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். முழுக்கவனமும் பறவையின் மீது இருத்தல் வேண்டும். ஆனால் புதருக்குள் சென்றால் பறவையை பற்றிய காட்சியும் தெரியாது புதர் தரும் இடர்களான அரிப்பு வெம்மை பூச்சிக்கடி ஆகியவை கவனத்தை திசை திருப்பும். மனதை ஒருமுக படுத்தமுடியாது. அதனால் பறவையை குறிவைத்துப் பிடிக்கமுடியாது.
அதுப்போல தவத்தில் இருந்து மறைவாக தீய செயல்களையும் பயனற்ற செயல்களையும் செய்தல் தவத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பி தவத்தின் இலக்கை அடையமுடியாதபடி செய்துவிடும்.
ஆதலால் தவத்தில் ஈடுபடும் பொழுது தவத்தை தவிர வேறு எதிலும் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
சரி, அதெப்படி கவனம் சிதறாமல் இருப்பது? திருவள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா?
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.).
மணக்குடவர் உரை
தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.
மு.வரதராசனார் உரை
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
காந்தியின் வாழ்வும் குறளும் (நன்றி பா ல சு ந் த ரி)
பலவேறு இன்னல்களுக்கு இடையே பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து செல்ல விரும்புகிறார் காந்தி. உறவுகள் எதிர்க்க ஊரார் “சாதி பிரஷ்ட்” எச்சரிக்கை விடுக்க அன்னை செய்வது அறியாது திகைக்க, இந்தப் பயணம். அத்தனைப் பேருடைய ஒட்டு மொத்த எதிர்ப்புக்குக் காரணம் மேலை நாட்டில் மது, மாமிசம், இன்றி வாழ முடியாது. இது நமது கலாச்சாரத்திற்குப் புறம்பானது என்பதே முக்கியச் குற்றச்சாட்டு. இதை அன்னையிடமும் ஊதி ஊதிப் பற்ற வைக்கிறார்கள். இருதலைக் கொள்ளி எறுமாய் ஆகிறார் தாய்.
மது-மங்கை-மாமிசம் இவற்றைத் தீண்டாமலே நான் வாழ்ந்து காட்டுவேன் என்று அன்னைக்கு சத்தியம் செய்து புறப்படுகிறார் காந்தி. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பதினாறு வயதினிலே பிறந்த முதல் குழந்தை இறக்க, பதினெட்டு வயதில் இரண்டாவது குழந்தை பிறக்க.... மனைவியையும் மகனையும் விட்டுப் பிரிந்து அயல் நாடு புறப்படுகிறார்.
காரணம்: இங்கேயே பட்டப் படிப்பு படித்தாலோ அல்லது வக்கீலுக்குப் படித்தாலோ அதிக சம்பளம் கிடைக்காது. பாரிஸ்டர் பட்டம் பெற்றால் ஏதாவது ஒரு சமஸ்தானத்தில் திவானாக வேலை பார்க்கலாம் அதிக வருமானம் வரும். நொடித்துப் போன குடும்பத்தை சீக்கிரமே நிமிர்த்தலாம். தந்தை படிக்காத மேதையாக திவானாகப் பணிபுரிந்தது அந்தக் காலம். இந்தக் காலத்திற்கு அது பொருந்தாது. எனவே பாரிஸ்டர் பட்டமே சிறந்தது என்று குடும்ப நண்பர்கள் எடுத்துரைக்க அரைகுறையாய் சம்மதித்தார் தாய்.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
அண்ணன் அங்கே இங்கே கடன்பட்டு வீட்டுப் பெண்களின் நகைகளை விற்றுப் பணம் புரட்ட பம்பாய் பயணித்தார் காந்தி. பருவநிலை சரியில்லாததால் கப்பல் புறப்படத் தாமதம். ஏற்கனவே ஒரு கப்பல் மூழ்கி விட்டதாகத் தகவல். அது காரணமாகத் தன் பயணம் தடைப்படுமோ என்ற பயம். இவருடைய பயணத்திற்கு யாரும் உதவினாலோ, அல்லது அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டாலோ 1 ரூபாய் நான்கு அணா அபராதம் என சாதிச் சங்கம் அறிவிப்பு செய்ய ஏகப்பட்ட நெருக்கடி.
அத்தனையும் கடந்து இங்கிலாந்தில் காலடி பதிக்கிறார் காந்தி. பிற்காலத்தில் தனது காலனி ஆதிக்கமே அவரால் ஆட்டம் காணப் போகிறது என்று அறியாத இங்கிலாந்து அவரை எதிர்கொண்டது. அங்கு சட்டம் பயின்ற அவர் பின்னாளில் சட்ட மறுப்பு இயக்கம் கண்டது தனிக்கதை!
அடுத்து, உணவு பெரிய பிரச்சனையாக அமைந்தது. திக்கு தெரியாத நாட்டினிலே சைவ உணவகத்தை தேடித் தேடி அலைகிறார் . எப்படியோ கண்டுபிடித்துவிட்டார் ஒரு சைவ உணவகத்தை. அதுவரை தான் கொண்டுவந்த பலகாரங்களையும் தானே தயாரித்த ஓட்ஸ் கஞ்சி மற்றும் கோக்கோ தயவால் வயிற்றை நிரப்புகிறார். உணவகம் சென்றால் இது சைவமா? அசைவமா? என்று கேட்டு கேட்டு அலுத்துவிட்டார். இவரது அரைகுறை ஆங்கிலம் அவர்களுக்கும் புரியவில்லை. அவர்களின் நுனிநாக்கு ஆங்கிலம் இவருக்கு சட்டென புரிபடுவதில்லை. அடுத்து வேறு ஒரு பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தது!
இவரை வலை வீசிப் பிடிக்க இவர் தங்கி இருந்த வீட்டினர் முயற்சித்தனர். தனக்கு திருமணமாகிவிட்டது என்பதை யாரிடமும் காந்தி கூறவில்லை. அத்தனை இந்தியர்களும் இதையே கடைபிடித்தனர். திருமணமானது தெரிந்தால் தங்களது ‘இமேஜ்’ குறைந்துவிடும் என்ற தவறான நம்பிக்கை.
அந்த தவறான நம்பிக்கையே பல தவறுகளுக்கு ஊற்றாக அமைவது பின்னர் வாடிக்கை. இதையே காந்தியும் பின்பற்றினார். பின்னர் தன் தவறு உணர்ந்து தனக்கு மணமாகிவிட்டதையும், மேலும் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் அவர் தெரிவிக்க அவர்களுக்கு ஆச்சரியம். இவருடைய மணம் பற்றியும், குழந்தை பற்றியும் அவர்கள் ஆர்வத்துடன் வினவ ஒருவாறு தப்பித்தார். வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தார். இருப்பினும் விதி விடவில்லை.
சைவ உணவு சம்பந்தமான ஆர்வத்தால் சைவ உணவு சங்கத்தில் இணைந்தார். அதன் கருத்தரங்கு ஒன்று 1890ல் ‘போர்ஸ்மத்’ என்னும் நகரில் நடந்தது. அது ஒரு துறைமுக நகரம். அங்குள்ளவர்கள் கற்பு நெறி பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட மனநிலை கொண்ட மகளிர் வசிக்கும் வீட்டில் தங்கவேண்டியது ஏற்பட்டது. கூடவே நண்பரும் தங்கினார்.
அன்று இரவு உணவுக்குப்பின் ‘நம்பர்பிரிட்ஜ்’ என்னும் ஒரு வகை சீட்டு ஆட்டம் ஆட ஆரம்பித்தனர். விருந்தினருடன் சீட்டு ஆடுவதென்பது அந்த நாட்டின் கலாச்சாரம். கேலியும் கிண்டலுமாக ஆட்டம் நடைபெற்றது. நண்பர் அந்த வீட்டுப் பெண்மணியுடன் ஆபாசமாகப் பேச அந்தப் பெண்மணியும் அதைத் தொடர, காந்தியும் அதை வழிமொழிய ஆரம்பித்தார். சீட்டாட்டம் எல்லை மீறி களியாட்டமாக உருவெடுக்கும் நிலை.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
அந்த நல்ல நண்பர் காந்தியை கண்டித்து எச்சரித்தார். உனக்குள் இந்த பிசாசு எப்படி புகுந்தது? எழுந்து போய்விடு. உனக்கு தகாது இந்த நிலை என்று எடுத்துரைக்க.. தன்னிலை உணர்கிறார் காந்தி. வேடன் துரத்திய மானாக விரைந்து ஓடி தன்னறைக்கு அடைகிறார். தன் தவறு உணர்கிறார். தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறாத வண்ணம் தன்னை எச்சரித்த அந்த நண்பருக்கு நன்றி கூறி, அவரை தன் நண்பனாக அருளிய இறைவனுக்கும் நன்றி கூறிகிறார்.
திருமணத்திற்கு முன் தான் படித்த ஒரு புத்தகம் நினைவுக்கு வருகிறது. கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கு ஒருவர் விசுவாசமாக நடக்க வேண்டும். நம்பிக்கை துரோகம் கூடாது என்ற வாசகம் நினைகுக்கு வர தனது செயலுக்கு மிகவும் வருந்துகிறார்.
நாம் மனம் ஒன்றி செய்யும் பிரார்த்தனையை இறைவன் செவி மடுப்பான். நம்மை இக்கட்டிலிருந்து காக்க எதையோ, அல்லது யாரையோ அனுப்பி வைப்பார் என்று உணர்கிறார். நாம் கேட்பது அனைத்தையும் தர பிரபஞ்சம் காத்திருக்கிறது. எதை கேட்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கேட்பது நமது பொறுப்பு என்று தெளிகிறார். இப்படி ஒரு நண்பர் தந்த இறைவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறிகிறார்.
எனவே தான் வள்ளுவர் கூறிகிறார், நட்புக்கான இலக்கணத்தை
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
Join the conversation