உள்ளத்தாற் பொய்யா தொழுகின்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், துறவறவியல், வாய்மை குறள் 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்
குறள் 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]

பொருள்
உள்ளத்தால் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கை யானது; சிறுசிறாய்.

பொய்யாது  - போலியாக இல்லாமல்; செயற்கையாக இல்லாமல்;

ஒழுகின் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

உலகத்தார் - உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார்.

உள்ளத்துள் - உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே

எல்லாம் - முழுதும்

உளன்  - அவர் நினைக்கும்படியாக வாழ்வார்

முழுப்பொருள்
உள்ளத்தினால் தன்னுடைய எண்ணங்களில் சொற்களில் முயற்சிகளில் செயல்களில் என்று எல்லாவற்றிலும் உண்மையாக பொய்யாக இல்லாமல் போலியாக இல்லாமல் நடந்துகொண்டால் (செயல்புரிந்தால்) அவர் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் நினைக்கப்படுவார் / போற்றப்படுவார்.

உலகில் பலர் உண்மையாக இருப்பார்கள். ஆனால் எல்லோரும் உயர்ந்தோரால் நினைக்கப்படுவதில்லை. ஆனால் அவர்களை பற்றிய நல்ல அபிப்ராயம் பிறர் மத்தியில் இருக்கும்.  இங்கே திருவள்ளுவர் ஒழுகின் என்று கூறுகிறார். ஒழுகுதல் என்றாலே வளர்தல் என்று பொருளும் உண்டு. ஆதலால் எவர் ஒருவர் உள்ளதினால் உண்மையாக இருந்து போலியாக இல்லாமல் தன் செயலினால் வளர்கிறாரோ (தானும் பயன்பெற்று பிறரும் பயன் பெறக்கூடியவகையில் வாழ்கிறாரோ) அவரை உயர்ந்தோர் (சான்றோர்) தங்களின் மனதால் நினைத்துப் போற்றுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான் இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

சாலமன் பாப்பையா உரை
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மாசற்ற மனத்தாரை மக்கள் மறவார்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain