Tuesday, January 14, 2020

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை

குறள் 254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

அல்லது - தீவினை; தவிர

யாது? - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

கொல்லாமை - உயிர்க் கொலை செய்யாமை

கோறல் - கொல்லுதல்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அல்லது - தீவினை; தவிர

அவ் - அந்த ; சுட்டுச்சொல்; அவை

ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு.

தினல் - தின்னுதல் - உண்ணுதல்; கடித்தல்; மெல்லுதல்; அரித்தல்; அழித்தல்; வருத்துதல்; வெட்டுதல்; அராவுதல்; பெறுதல்.

முழுப்பொருள்
நல்வினை அல்லாதது எது என்றால்? அது பிறர் உயிர்களை (மனிதர்கள், விலங்குகள்) கொல்லல் ஆகாது என்னும் கொள்கையை கொள்வது. அதாவது பிறர் உயிர்களை கொள்வது நல்வினை ஆகாது.  மதிக்கத்தக்கது அல்ல வீடுபேறு பெறக்கூடியது அல்ல அறிவானது (சான்றோன் செய்வது) அல்ல அந்த ஊனை தின்பது. அதாவது "கொன்றால் பாவம் தின்னா போச்சு" என்று கூறுவோர்க்கு மறுப்பாக திருவள்ளுவர் அன்றே கூறிய பதில்.

கொள்ளாமை கோறல் என்று ஏன் சொல்கிறார் ? கொல்லாமை எனப்படுவது அடிப்படையாக கடைபிடிக்கவேண்டிய கொள்கை என்பதை கூறவே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல். இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.

மு.வரதராசனார் உரை
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

சாலமன் பாப்பையா உரை
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை 
கொல்லாதே. கொன்றதைத் தின்னாதே.


Monday, January 13, 2020

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு

குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா.

ஓம்பி - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

ஆள்வாற்கு  - āḷvār   n. ஆள்-. The Deity,as supreme ruler; ஸ்வாமி திருத்தீக்காலி ஆள்வார்கூத்தப் பெருமா னடிகளுக்கு (S.I.I. iii, 103).  ; அரசர்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

என்ப - என்று சொல்லப் படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

அஞ்சும் - அஞ்சுதல் -பயப்படுதல்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
இந்த உலகத்தில் உள்ள நிலைபெற்ற உயிர்களை (மனிதர்கள், விலங்குகள்) போற்றி பாதுகாத்து பேணுவோர்க்கு அருள் எனப்படும் நல்வினை ஆளும். ஆதலால் அத்தகையவர்க்கு தன்னுடைய உயிரை பற்றியோ தீயவினைகள் பற்றியோ அஞ்சவேண்டிய அவசியம் இல்லை/இராது. 

இக்குறளில் எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவடைகின்றன. முதலாவது, பிறரை பேணுவதே மானிடரின் கடமை. அப்படி பேணினால்தான் அவருக்கு அருள்/நல்வினை. இரண்டாவது, அப்படிப் பிறரை பேணுவோர் தீவினைகளைப்பற்றி (அதாவது யாராவது நம்மை பற்றி கண்ணுப்போட்டுவிடுவார்களோ, சூனியம் வைத்து விடுவார்களோ, கெடுதல் செய்வார்களோ) அஞ்சவே வேண்டாம். 

நாம் நல்வினைகளை செய்தால் தீவினைகளை பற்றி அஞ்சவோ நினைக்கவோ வேண்டவே வேண்டாம்.

உயிர்களுக்கு நிலைபேறா என்னும் கேள்விக்கு, உலகில், உயிர்கள் என்பது ஒரு நிலையான தத்துவம் என்பதையே “மன்னுயிர்” என்ற சொல் காட்டுகிறது

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.).

மணக்குடவர் உரை
நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.

மு.வரதராசனார் உரை
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
ஊருக்கு உதவுபவன் உயிருக்கு அஞ்சத் தேவையில்லை.


Sunday, January 12, 2020

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
ஒன்றுதல் - பொருந்துதல், நெருங்குதல், ஒன்றாதல்; மனங்கலத்தல்; சம்மதித்தல்; உவமையாதல்; ஒருமுகப்படுதல்.

ஒன்றாதல் - ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்; முதலாதல்; இணையின்றாதல்.

ஒன்றா - ஒன்றாத ; ஒற்றுமையில்லாத ; உவமைப்படுத்தமுடியாத

உலகத்து - உலகத்தினுடைய.

உயரம் - அடியிலிருந்துமேல்நோக்கிஎழுந்தஅளவு; மிகுதி மேல் உயர்ச்சி உச்சம்

உயர்ந்தோர் -உயர்ந்தவர்; அறிஞர்; சான்றோர் வானோர் முனிவர்

உயர்ந்த - மேன்மையான

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

அல்லால் - மற்றபட்டி, அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம்; Except, besides; தவிர

பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வைமுதலியனகுறைதல்.

பொன்றாது - அழியாது

நிற்பது - நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
இவ்வுலகத்தில் இணையில்லாத உயர்ந்த புகழை தவிர அழியாது நிற்பது ஒன்றும் (வேறேதும்) இல்லை. இக்குறளில் வெறுமென புகழ் என்று கூறி இருக்கலாம் வள்ளுவர். ஆனால் அப்படி கூறி இருந்தால் அவர் வள்ளுவராய் இன்று புகழ்பெற்றிருக்கமாட்டார். உயர்ந்த புகழ் என்ற புகழை வரையறை செய்கிறார் திருவள்ளுவர். உயர்ந்தோர் என்றால் அறிஞர்; சான்றோர் வானோர் முனிவர் என்று அர்த்தம். ஆதலால் உயர்ந்த புகழ் என்றால் சான்றோன்மை, உயர் அறிவு, வானோர் கொண்ட உயர் குணம், எல்லாம் துறந்த முனிவர்கள் கொண்ட புகழ். இப்படிப்பட்ட புகழுக்கு இவ்வுலகில் ஈடு இணையே இல்லை. அப்படிப்பட்ட புகழ் இவ்வுலகில் என்றும் அழியாது என்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட புகழை அடைவதே வீடுபேறு என்றும் நாம் கொள்ளலாம்.

நிலையாமையை பற்றி பேசும் திருவள்ளுவர் எப்படி புகழ் நிலைத்து நிற்கும் என்று கூறுகிறார் என்ற கேள்வி என்னிடம் உள்ளது. எனக்கு தோன்றும் பதில் என்னவென்றால் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும் அல்லது குன்றிவிடும். ஆனால் நாம் இறந்தபின்பும் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிறக்கக்கூடிய ஒன்றாக நம் புகழ் (சான்றாண்மை என்னும் பொருள் கொண்ட புகழ். பொருளில்லாத புகழ் அல்ல) மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் இங்கு உணர்கிறேன்.

அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில், “இனி ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு  இன்பத்தைத் தந்து பூமி உள்ளளவும் நிற்பது புகழ் என்னலுமாம்” என்று இக்குறளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். பொன்றாமல் என்பதை தனி மனிதனுக்கு என்று கொள்ளாமல், இந்த பூமி இருந்து இயங்கும்வரை என்று பொருள் செய்துள்ளார்.

புகழைப் பற்றி பேசும் பொருநராற்றுப்படை (176) பாடல் “நில்லா உலகத்து நிலைமை தூக்கி” என்னும்.  புறநானூற்றுப் பாடல் (165:1-2), “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ நிறீஇத் தாம் மாய்ந்தனரே” என்ற ஒப்புமையைக் காட்டுகிறது. பெருங்கதை,(2:8-10) “பொன்றா இயற்கைப் புகழது பெருமையும்” என்கிறது.  பல இலக்கியங்களிலும் “புகழ் என்பது இறவாது, நிலைத்திருக்கக்கூடியது என்று காட்டப்படுகிறது.

“பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சில்” (குறுந் 143:2-4)

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே” (புறநா 165:1-2)

“பொன்றா இயற்கைப் புகழது பெருமையும்” (பெருங் 2:8:10)
“நிலையிலா வுலகில் நின்றவண் புகழை
வேட்டவன் நிதியமே போன்றும்” (சீவக 2107)

“ஒருவன திரண்டி யாக்கை ஊன்பயில் நரம்பு போர்த்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்றை யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் நிற்கு மன்றே” (சூளா.சீயவதை 204)

“பொன்று மிவ்வுட லின்பொருட்
டென்று நிற்கும் இரும்புகழ்
இன்று நீர்கழிந் தீர்களாற்
குன்றின் மேற்குடை வேந்திர்காள்” (சூளா.அரசியல் 226)

“பேதைமை யுரைத்தாய் மைந்த வுலகெலாம் பெயரப் பேராக்
காதையென் புகழினோடும் நிலைபெற” (கம்ப.இந்திரசித்து 9)

“வென்றில னென்ற போதும் வேதமுள் ளளவும் யானும்
நின்றுள னன்றோ மற்றவ விராமன்பேர் நிற்கு மாயின்
பொன்றுத லொருகா லத்தும் தவிருமோ பொதுமைத் தன்றோ
இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கு மிறுதி யுண்டோ” (கம்ப.இந்திரசித்து.10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கொடை குணத்தால் சேரும் புகழ் அழிவற்றது.

இலனென்னும் எவ்வம் உரையாமை

குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
'இலன்' -  இல்லை என்று

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

எவ்வம் - துன்பம்; தீராநோய்; குற்றம்; இகழ்ச்சி, இழிவு; இளிவரவு; இழிவானசொல்; மானம்; கவடம்; வெறுப்பு.

உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை

உரையாமை - விவரிக்காமல்; மொழியாமல்

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

குலன் - குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்

உடையான் - உடையவர் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

உள - உள்ளது

முழுப்பொருள்
என்னிடம் செல்வம் இல்லை என்றும் தன் வறுமையினையும் துன்பத்தையும் பிறரிடம் பறைசாற்றும் முன்பு அவ்வறுமையை குறிப்பு அறிந்து அவர்களுக்கு உதவி செய்தல் நல்ல சான்றோர் குடியில் பிறந்தவரிடத்தில் இருக்கும் பண்பாகும்.

எவ்வம் என்றால் துன்பம் என்று மட்டும் பொருள் அல்ல இகழ்ச்சி இழிவு என்றும் பொருள். ஆதலால் இகழ்ச்சிக்கும் இழிவுக்கும் அஞ்சியே ஒருவர் பிறரிடம் தன்னுடைய வறுமையை பற்றி கூறாமல் இருப்பார். ஆதலால் நாம் உதவி செய்யும் பொழுது (உதவி செய்யாத பொழுதும் கூட) பிறருடைய வறுமையை ஏளனமாக பார்க்காமலும் இகழ்ந்து நடத்தாமல் இருத்தலும் மிக மிக அவசியம்.

புறநானூற்று உரையில் (204:3) , “இரப்பதன் முன்னே அவன் குறிப்பை முகத்தான் உணர்ந்து இதனைக் கொள்வாயாக என்று சொல்லித்தான் இரந்து கொடுத்தல்” என்று சொல்லப்படுகிறது. புறவெண்பா (194), “இரவாமல் ஈந்த இறைவர்போல்” என்கிறது. பரிபாடல் (10:87.8), “இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் நல்லது வெஃகி விநைசெய்வார்” என்னும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
'இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் - அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே. (மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்' எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் 'எனக் கரப்பார்' சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.).

மணக்குடவர் உரை
இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம். இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நற்குலத்தில் பிறந்தவன் இல்லையென்று சொல்லமாட்டான்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம்

குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.

ஆற்றித் - ஆற்று-தல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To  ; āṟṟu-   v. tr. அகற்று-. Toremove, put away; நீக்குதல் மையலாற்றிய குணத்து மாதவர் (அரிச். பு விவாக. 42).  ; āṟṟu-   5 v. tr. caus. of ஆறு-.1. To assuáge, appease, alleviate, mitigate; பசிமுதலியன தணித்தல் அரும்பசி களையவாற்றுவது காணான் (மணி. 11, 86). 2. To comfort,console, soothe; துக்கமுதலியன தணித்தல் அவன்விசனத்தை யாற்றினான். 3. To cool; உ்ணந்தணித்தல். வெந்நீரை ஆற்றிக்கொடு. 4. To dry, asthe hair; ஈரமுலர்த்துதல். குஞ்சியை ஆற்றின பின்பு(சீவக. 2422, உரை ) 5. To smooth out a twistedthread in order to keep it from untwisting orknotting; நூல்முறுக்காற்றுதல். Colloq. 

தந்த - தருதல் - trutl   v. noun. Giving, &c. See தா, v.; கொடை

பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

எல்லாம் - முழுதும்

தக்கார்க்கு - மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்.

வேளாண்மை - பயிர்த்தொழில்; உதவிபுரிதல்; கொடை; உண்மை.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக.

முழுப்பொருள்
தன்னுடைய முயற்சியிலும் உழைப்பிலும் ஈன்ற பொருள்கள் எல்லாம் எதற்கு? அதுபோல அவை இவ்வுலகில் யார்க்கு சேரும்? என்பதற்கு விடையாகவே இக்குறள் அமைகிறது. ஒருவர் தன் உழைப்பால் ஈன்ற செல்வம் எல்லாம் பிறருக்கு உதவி செய்வதற்காகவே. யார்க்கு உதவி செய்வது ? தக்கார்க்கு. அப்படி என்றால் உண்மையாக பிறர் உதவியினை தேவைப்படும் எளியோர், வயதானோர்/முதியோர், வறியோர்,  உடலால்லோ அல்லது வேறு சில நியாயமான காரணத்திற்காக உழைக்க முடியாதவர்கள், துறந்தோர் ஆகியோர்க்கு உதவ வேண்டும். நாம் உழைத்து சம்பாதிப்பது நாம் சுகமாக இருப்பதற்கு இல்லை பிறர்க்கு உதவி செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர். 

இந்த உதவியை கொடையை வேளாண்மையுடன் ஒப்பிட்டு சொல்வதால் உழவர் பயிர்த்தொழில் செய்து உணவு படைப்பது இவ்வுலகிற்கு அவர்கள் அளிக்கும் கொடை என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

மேலும்:
அறவழி நின்ற துறந்தோர்க்கும், அறிவு வழி நிற்கும் மாணாக்கருக்கும், அயர்ந்த வயதினரான முதியோருக்கும், அன்றாடம் உணவுக்கு வழியில்லாது, உழைத்துப் பிழைக்கவும் இயலாது அல்லாடும் வறியவர்களுக்கும் கொடுப்பதே தகுதியுடையோருக்குக் கொடுப்பதாகும்.

“நோன்றாள் நசைவளன்” (புறநா 148:2)
“தாள்படு செல்வம்” (புறநா 161:15)
“தாளாற்றலால் செய்த பொருளை யாவர்க்கும் அளித்து”  (125:7-8)

தாளாற்றலால் உதவுவதலை, “தாளாற்றலால் செய்த பொருளை யாவர்க்கும் அளித்து” என்று புறநானூற்றுப் பாடல் வரிகள் (125:7-8) தெரிவிக்கின்றன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உதவி செய்ய உழை.

அறிவினுள் எல்லாந் தலையென்ப

குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
அறிவினுள் - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

எல்லாம் - முழுதும்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

என்ப - என்று சொல்லப்படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

தீய - தீமையான; போலியான.

செறுதல் -  அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்.

செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்

செறுதொழில் - தீச்செயல்.
செறுவார்க்கும் - தீச்செயலை செய்வார்க்கும்

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்யா  -  இயற்றாமல் இருத்தல்

விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள்
நாம் பெறக்கூடிய அறிவென்பது இவ்வுலகில் பல. ஆனால் அவற்றினுள் எல்லாம் சிறந்தது எது தெரியுமா? நமக்கு தீயவற்றை செய்யும் பகைவர்க்குக்கூட தீயவற்றை கெடுதலை செய்யாது இருத்தல்.

ஏன் பகைவர்க்குக்கூட என்று சொல்ல வேண்டும் ? பகைவரிடம் தான் நமக்கு உச்சகட்ட கோவம் வரும். ஆனால் அவருக்கு கூட நாம் கெடுதல் செய்யக்கூடாது என்றால் நமது நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது நமக்கு தீயது செய்தால் நாம் அதை மறந்து கடந்து செல்வதே சிறந்தது என்பதை சொல்லாமல் சொல்கிறார். நண்பரும் உறவினரும் பகைவராய் மாறினால்க்கூட இக்குறள் பொருந்தும் யார்க்கும் தீது செய்யாதே என்று.

ஏன் அறிவினுள் எல்லாம் சிறந்தது இது? ஏனெனில் பிறருக்கு தீயவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டால் அது நமது நிம்மதியை சிதைத்துவிடும். அதுப்போல தீது நமக்கு வேறேதும் இல்லை. ஆதலால் பிறருக்கு (அவர் நமக்கு தீது செய்யும் பகைவரானாலும்க்கூட) தீது செய்யக்கூடாது என்பதே நாம் பெறக்கூடிய அறிவினுள் எல்லாம் சிறந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.

மு.வரதராசனார் உரை
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மன்னிக்கத் தெரிவதே மேலான அறிவு.

Thursday, January 9, 2020

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

குறள் 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

சாரா - பொருந்தாத

நன்மையின் - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்.

நீக்கும் - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

சாராப் - பொருந்தாத

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பல்லார்  - பலர்

அகத்து - உள்ளம் - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
நயன் சாரா சொற்கள் என்றால் நீதி இல்லாத சொற்கள், நயம்  (மேன்மை) இல்லாத மலிவான சொற்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.  பயன் சாரா சொற்கள் என்றால் நற்பலன் இல்லாத சொற்கள் என்று பொருள். பண்பில்லா சொற்கள் என்றால் அழகில்லாத முறையில்லாத இயல்பில்லாத சொற்கள் என்று பொருள்.

நீதி இல்லாத, நயம் இல்லாத, பயன் தராத, அழகில்லா முறையில்லா பண்பில்லா சொற்களை பலர் கூடி இருக்கும் அவையில் பேசினால் அது அவருடைய புகழை கெடுக்கும். அது வரையில் அவர் ஈன்ற நன்மைகளை அகற்றிவிடும்.

பொதுவாக வீட்டில் சொல்லுவார்கள் நல்ல பெயர் வாங்குவது மிக கடினம் பல நாட்கள் ஆகும். ஆனால் கெட்டப் பெயர் வாங்க ஒரு நொடி ஒரு கணம் ஒரு நிகழ்வு போதும். ஒரு தடவை கெட்டப் பெயர் வாங்கினால் அதற்கு முன் வாங்கிய நற்பெயர் எல்லாம் நீங்கி விடும். இது நயன் சாராமால் பயன் சாராமல் பண்பில்லாமல் பேசுவதற்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

மு.வரதராசனார் உரை
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பண்பற்ற பேச்சு துன்பத்தில் தள்ளும்

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...