மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]
பொருள்
மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா.
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்
உயிர்களுக்கு நிலைபேறா என்னும் கேள்விக்கு, உலகில், உயிர்கள் என்பது ஒரு நிலையான தத்துவம் என்பதையே “மன்னுயிர்” என்ற சொல் காட்டுகிறது
மேலும்: அஷோக் உரை
காந்தியின் வாழ்வும் குறளும் (நன்றி: பா ல சு ந் த ரி)
சென்ற கட்டுரையில் (குறள் 319) கருப்பருக்கு முடிவெட்ட மறுத்த ஒரு வெள்ளையர் பற்றி கண்டோம்.
வெள்ளையருக்கும், வெள்ளை அரசுப் பணியாளர்களுக்கும் முடிவெட்ட மறுத்த நம்மவர் பற்றிப் பார்ப்போமா?
வேதாரண்யம்!
இது நாகை மாவட்டத்தின் கடைக் கோடி ஊர். வேதங்கள் கதவடைத்த ஊர். அகஸ்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டிய ஊர். சப்தவிடங்கத் தலம் என்று ஆன்மீகம் தழைத்த ஊர்.
ராஜாஜியின் தலைமையில் உப்பு சத்யாக்கிரகம் நடைபெற்ற ஊர். சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவதரித்த ஊர். அன்னை கஸ்தூரிபா கன்யாகுருகுலம் அமைந்த ஊர்.
இவ்வளவு சிறப்பு மிகுந்த ஊரில் ஒரு முடி திருத்தும் தொழிலாளி. மிகவும் ஏழ்மைநிலை. அன்றாடம் முடி திருத்தினால்தான் வீட்டில் அடுப்பு எரியும். மனசுக்குள் சுதந்திரத் தீ!
அவருக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு. உப்பு சத்யாக்கிரகம் கண்டவுடன் அவருள் உத்வேகம் பிறந்தது. தன்னால் அவர்கள் அளவு ஈடுபட படிப்போ, வசதியோ இல்லை இருந்தாலும், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி.
எனவே வெள்ளையருக்கோ, அல்லது வெள்ளை அரசின் ஊழியருக்கோ முடி வெட்டுவதில்லை என்று வைராக்கியம் கொள்கிறார்.
அவருடைய பெயரும் ‘வைரப்பன்’ என்றே நினைக்கிறேன்.
முதுமை காரணமாக சற்றே மறதி. பெயரில் மறதி. ஆனாலும் அவர் செயலில் மறதி இல்லை!
அவருடைய வைராக்கியம் தொடர்ந்தது. உள்ளூரில் அனைவரும் அவருக்கு அத்துபடி. இவருடைய கொள்கையும் மற்றவர்க்கு அத்துப்படி.
ஒருநாள் புதியவர் ஒருவர் முடி திருத்த அவரிடம் வந்தார். யார் வீட்டுக்கோ வந்த விருந்தினர் என்று எண்ணி ஒரு பக்கம் திருத்திவிட்டார்.
அப்போது அங்கு வந்த அவரது நண்பர் என்னாச்சு உன் கொள்கை என்று கேட்க அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூற, அப்படியானால் இவருக்கு எப்படி வேலை செய்தாய் இவர் புதிதாக வந்த போலீஸ்காரர் என்று கூற இவருக்கு அதிர்ச்சி.
உள்ளூர் போலீஸார் அனைவரும் அவருக்கு அத்துப்படி. இவர் நேற்றுதான் ஊருக்கு வந்து இன்று பணியில் சேர இருக்கிறார் எனவே அவருக்குத் தெரியவில்லை.
நான் உங்களுக்கு வேலை செய்யமாட்டேன் என்று கூறி வீட்டுக்கு சென்று விட்டார். அவர் எவ்வளவோ கெஞ்சியும் இவர் மறுத்துவிட்டார். அந்தக் காலத்தில் “செல்ப் ஷேவிங்” நடைமுறையில் இல்லை. எனவே சலூனில்தான் ஷேவ் செய்ய வேண்டும். எனவே போலீஸ்காரருக்கு தர்ம சங்கடம், கூடவே கோபம், அவமானம்.
ஒரு போலீஸ்காரரையே அவமதித்த அவருப்புக் பாடம் புகட்ட எண்ணி அவர் மேல் கேஸ் பதிவு செய்தார். கேஸ் விசாரணைக்கு வருகிறது. அவர் செய்தது தவறு அவரே ஷேவ் செய்துவிட வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்த என்னால் முடியாது, வேண்டுமானால் அந்த வேலையைத் தாங்களே செய்யலாம்! நான் கருவிகள் தருகிறேன்! என்ற இவர் கூற கோர்ட்டில் ஒரே சிரிப்பு.
நீதிபதி அவருக்கு சில மாதங்கள் தண்டனை அளிக்கிறார். சிறை சென்று வந்தும் தனது கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.
அடுத்து, இந்தியா சுதந்திரம் அடைந்தது. வைரப்பனையும் அவரது செயலையும் மக்கள் மறந்தே போயினர். இவர் வறுமையிலேயே வாழ்ந்தார்.
சுதந்திர பொன் விழா ஆண்டின் போது இவரது நினைவு மக்களுக்கு வந்தது. பொன்விழா நிகழ்வில் இவரை அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று விழா கமிட்டி முடிவு செய்கிறது. அப்போது வைரப்பன் முதுமையாலும் நோயாலும் தாக்கப்பட்டு நலிந்து மெலிந்து இருந்தார்.
தாரை தப்பட்டை மேளதாளத்துடன் இவரை அழைக்க மக்கள் புறப்பட்டு இவரது தெருவை நெருங்குகின்றனர்.
என்ன சத்தம் என்று இவர் கேட்க உங்களை அழைக்க வருகிறார்கள் என்று கூற, அதற்குள் கூட்டம் இவரது வீட்டை நெருங்குகிறது. ‘வந்தே மாதரம்’ என்று கூறியபடியே இவரது ஆவி பிரிகிறது. அனைவரும் நெகிழ்கிறார்கள்.
அவருக்குப் பின்னர் வேதாரண்யத்தில் சிலை அமைத்து இருப்பதாக ஊடகம் மூலம் அறிந்தேன்.
சும்மா வரவில்லை சுதந்திரம் என்று இன்றைய தலைமுறைக்கு விளக்கவே இந்த இடைச்செறுகல்!
அவருடைய சூழலில் அவர் செய்த சத்யாக்கிரகம் மிகப் பெரிய தலைவர்களின் போராட்டத்திற்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை!
மீண்டும் காந்தியின் அடிச் சுவட்டில் பயணிப்போமா? போயர் யுத்தம் நடந்தது. அதில் காயமடைந்தவர்களைப் பாதுகாக்க ஒரு மீட்புப் படையை அமைத்தார் காந்தி. இதில் சாதிமத பேதமின்றி அனைத்து இந்தியரும் இணைந்தனர்.
அத்துடன், வெள்ளையரும் இணைந்தனர். இந்தப் படையில் தொண்டர்கள் 11,000 ஆயிரம் பேர்கள். தலைவர்கள் 40 பேர் இவர்களில் 300 பேர்கள் சுயேச்சை இந்தியர். மற்றவர் ஒப்பந்த தொழிலாளர்க.
டாக்டர் “பூத்” இந்தப் படையில் இருந்தார். காயம் பட்டவர்களை டோலியில் வைத்துத் தூக்கிச் செல்லும் அனுபவம். தினமும் இருபது மைல் தூரத்துக்கு மேல் நடக்கும் அனுபவம் எனப் புதிய அனுபவங்கள் ஏற்பட்டன காந்திக்கு.
காயம் பட்டவர்களைக் கனிவுடன் கவனித்து அவர்களை ஆற்றுப்படுத்தி வேண்டிய மருத்துவ உதவி செய்வதில் காந்தி மிகவும் ஈடுபாடு கொண்டார். இது வெள்ளையரை பெரிதும் மனமாற்றம் செய்யும் மந்திரமாக அமைந்தது.
“லார்டு ராபர்ட்ஸின்” மகன் “லெட்டினெண்டு ராபர்ட்ஸ்” போரில் இறந்துவிட்டார். அவர் சடலத்தைத் தொலைதூரம் அவரகள் சுமந்து வரவேண்டிய நிலை. அப்போது வெயிலின் தாக்கம் அதிகம். எனவே தாகத்தில் தவித்தனர் அனைவரும்.
வழியில் ஒரு சிற்றோடை.
அதில் வெள்ளையர் முதலில் தண்ணீர் அருந்தட்டும் என்று இந்தியர் ஒதுங்க, இந்தியர் முதலில் நீர் அருந்தட்டும் என்று வெள்ளையர் விரும்ப ஒரு ஆரோக்கியமான போட்டா போட்டி! போர்முரையில் இருபாலாரிடம் பரஸ்பர இணக்கம் ஏற்பட்டது!
காயம் பட்டவரக்ளைக் கவனித்துப் பணிவிடை செய்த ஜீவகாருண்ய செயலால் பரஸ்பரம் இருவரிடையும் புரிதல் ஏற்பட்டது. நட்பு வேர் விட்டது.
ஆறு வாரங்களே இந்தப் பணி நடைபெற்றது. அதன் பிறகு போரின் கடுமை குறைந்ததால் இந்தப் படை கலைக்கப்பட்டது. இந்தப் படையில் பணி புரிந்தவர்களுக்குப் பரிசும், பட்டமும், பாராட்டும் கிடைத்தது.
இந்த கட்டுப்பாடும் ஒழுங்கும், மீட்புப் பணியும் பின்னாளில் நடந்த இந்திய விடுதலைப் போராட்டங்கள் அனைத்தையும் சந்திரிக்கவும், சிறப்புற நடத்தவும் பயிற்சிக் களமாக அமைந்தது எனலாம்.
யுத்தக் களத்தில் குண்டுமாரி பொழியும் இடத்திலும் அச்சமின்றி படையின் சேவை நடந்தது.
அகிம்சை வழியிலேயே போராட்டங்கள் நடந்த போதும் பின்னர் வெள்ளையனே வெளியேறு என்று முழங்கவும் செய் அல்லது செத்துமடி! என்று சூளுரைக்கவும் வழிவகுத்தது இந்த போர்க்களப் பயிற்சிகளே எனலாம்.
காந்தியை மிகப் பெரிய போராளியாக பட்டை தீட்டவே இறைவன் தந்த வாய்ப்புகள் இவை என்பதே உண்மை!
எனவே தான் வள்ளுவர் கூறுகிறார்.
குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
Join the conversation