இலனென்னும் எவ்வம் உரையாமை

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், இல்லறவியல், ஈகை குறள் 223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.
குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
'இலன்' -  இல்லை என்று

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

எவ்வம் - துன்பம்; தீராநோய்; குற்றம்; இகழ்ச்சி, இழிவு; இளிவரவு; இழிவானசொல்; மானம்; கவடம்; வெறுப்பு.

உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை

உரையாமை - விவரிக்காமல்; மொழியாமல்

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

குலன் - குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்

உடையான் - உடையவர் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

உள - உள்ளது

முழுப்பொருள்
என்னிடம் செல்வம் இல்லை என்றும் தன் வறுமையினையும் துன்பத்தையும் பிறரிடம் பறைசாற்றும் முன்பு அவ்வறுமையை குறிப்பு அறிந்து அவர்களுக்கு உதவி செய்தல் நல்ல சான்றோர் குடியில் பிறந்தவரிடத்தில் இருக்கும் பண்பாகும்.

எவ்வம் என்றால் துன்பம் என்று மட்டும் பொருள் அல்ல இகழ்ச்சி இழிவு என்றும் பொருள். ஆதலால் இகழ்ச்சிக்கும் இழிவுக்கும் அஞ்சியே ஒருவர் பிறரிடம் தன்னுடைய வறுமையை பற்றி கூறாமல் இருப்பார். ஆதலால் நாம் உதவி செய்யும் பொழுது (உதவி செய்யாத பொழுதும் கூட) பிறருடைய வறுமையை ஏளனமாக பார்க்காமலும் இகழ்ந்து நடத்தாமல் இருத்தலும் மிக மிக அவசியம்.

புறநானூற்று உரையில் (204:3) , “இரப்பதன் முன்னே அவன் குறிப்பை முகத்தான் உணர்ந்து இதனைக் கொள்வாயாக என்று சொல்லித்தான் இரந்து கொடுத்தல்” என்று சொல்லப்படுகிறது. புறவெண்பா (194), “இரவாமல் ஈந்த இறைவர்போல்” என்கிறது. பரிபாடல் (10:87.8), “இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் நல்லது வெஃகி விநைசெய்வார்” என்னும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
'இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் - அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே. (மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்' எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் 'எனக் கரப்பார்' சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.).

மணக்குடவர் உரை
இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம். இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நற்குலத்தில் பிறந்தவன் இல்லையென்று சொல்லமாட்டான்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain