ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், இல்லறவியல், புகழ் குறள் 233 ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்
குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
ஒன்றுதல் - பொருந்துதல், நெருங்குதல், ஒன்றாதல்; மனங்கலத்தல்; சம்மதித்தல்; உவமையாதல்; ஒருமுகப்படுதல்.

ஒன்றாதல் - ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்; முதலாதல்; இணையின்றாதல்.

ஒன்றா - ஒன்றாத ; ஒற்றுமையில்லாத ; உவமைப்படுத்தமுடியாத

உலகத்து - உலகத்தினுடைய.

உயரம் - அடியிலிருந்துமேல்நோக்கிஎழுந்தஅளவு; மிகுதி மேல் உயர்ச்சி உச்சம்

உயர்ந்தோர் -உயர்ந்தவர்; அறிஞர்; சான்றோர் வானோர் முனிவர்

உயர்ந்த - மேன்மையான

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

அல்லால் - மற்றபட்டி, அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம்; Except, besides; தவிர

பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வைமுதலியனகுறைதல்.

பொன்றாது - அழியாது

நிற்பது - நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
இவ்வுலகத்தில் இணையில்லாத உயர்ந்த புகழை தவிர அழியாது நிற்பது ஒன்றும் (வேறேதும்) இல்லை. இக்குறளில் வெறுமென புகழ் என்று கூறி இருக்கலாம் வள்ளுவர். ஆனால் அப்படி கூறி இருந்தால் அவர் வள்ளுவராய் இன்று புகழ்பெற்றிருக்கமாட்டார். உயர்ந்த புகழ் என்ற புகழை வரையறை செய்கிறார் திருவள்ளுவர். உயர்ந்தோர் என்றால் அறிஞர்; சான்றோர் வானோர் முனிவர் என்று அர்த்தம். ஆதலால் உயர்ந்த புகழ் என்றால் சான்றோன்மை, உயர் அறிவு, வானோர் கொண்ட உயர் குணம், எல்லாம் துறந்த முனிவர்கள் கொண்ட புகழ். இப்படிப்பட்ட புகழுக்கு இவ்வுலகில் ஈடு இணையே இல்லை. அப்படிப்பட்ட புகழ் இவ்வுலகில் என்றும் அழியாது என்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட புகழை அடைவதே வீடுபேறு என்றும் நாம் கொள்ளலாம்.

நிலையாமையை பற்றி பேசும் திருவள்ளுவர் எப்படி புகழ் நிலைத்து நிற்கும் என்று கூறுகிறார் என்ற கேள்வி என்னிடம் உள்ளது. எனக்கு தோன்றும் பதில் என்னவென்றால் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும் அல்லது குன்றிவிடும். ஆனால் நாம் இறந்தபின்பும் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிறக்கக்கூடிய ஒன்றாக நம் புகழ் (சான்றாண்மை என்னும் பொருள் கொண்ட புகழ். பொருளில்லாத புகழ் அல்ல) மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் இங்கு உணர்கிறேன்.

அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில், “இனி ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு  இன்பத்தைத் தந்து பூமி உள்ளளவும் நிற்பது புகழ் என்னலுமாம்” என்று இக்குறளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். பொன்றாமல் என்பதை தனி மனிதனுக்கு என்று கொள்ளாமல், இந்த பூமி இருந்து இயங்கும்வரை என்று பொருள் செய்துள்ளார்.

புகழைப் பற்றி பேசும் பொருநராற்றுப்படை (176) பாடல் “நில்லா உலகத்து நிலைமை தூக்கி” என்னும்.  புறநானூற்றுப் பாடல் (165:1-2), “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ நிறீஇத் தாம் மாய்ந்தனரே” என்ற ஒப்புமையைக் காட்டுகிறது. பெருங்கதை,(2:8-10) “பொன்றா இயற்கைப் புகழது பெருமையும்” என்கிறது.  பல இலக்கியங்களிலும் “புகழ் என்பது இறவாது, நிலைத்திருக்கக்கூடியது என்று காட்டப்படுகிறது.

“பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சில்” (குறுந் 143:2-4)

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே” (புறநா 165:1-2)

“பொன்றா இயற்கைப் புகழது பெருமையும்” (பெருங் 2:8:10)
“நிலையிலா வுலகில் நின்றவண் புகழை
வேட்டவன் நிதியமே போன்றும்” (சீவக 2107)

“ஒருவன திரண்டி யாக்கை ஊன்பயில் நரம்பு போர்த்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்றை யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் நிற்கு மன்றே” (சூளா.சீயவதை 204)

“பொன்று மிவ்வுட லின்பொருட்
டென்று நிற்கும் இரும்புகழ்
இன்று நீர்கழிந் தீர்களாற்
குன்றின் மேற்குடை வேந்திர்காள்” (சூளா.அரசியல் 226)

“பேதைமை யுரைத்தாய் மைந்த வுலகெலாம் பெயரப் பேராக்
காதையென் புகழினோடும் நிலைபெற” (கம்ப.இந்திரசித்து 9)

“வென்றில னென்ற போதும் வேதமுள் ளளவும் யானும்
நின்றுள னன்றோ மற்றவ விராமன்பேர் நிற்கு மாயின்
பொன்றுத லொருகா லத்தும் தவிருமோ பொதுமைத் தன்றோ
இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கு மிறுதி யுண்டோ” (கம்ப.இந்திரசித்து.10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கொடை குணத்தால் சேரும் புகழ் அழிவற்றது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain