Tuesday, March 7, 2017

தகுதி எனவொன்று நன்றே

குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தகுதி - பொறுமை; பொருத்தம்; தகுதிவழக்கு; மேன்மை; நல்லொழுக்கம்; நடுவுநிலைமை; ஆற்றல்; அறிவு; கூட்டம்; தடவை; குணம்; நிலைமை.
என ஒன்றும்  - என்ற ஒரு நிலைப்பாடு
நன்றே - நன்மை பயக்கும்
பகுதியான் -  நட்பு, பகை, நெருங்கியவர், அயலவர், அக்கறையின்மையை ஆகிய சார்பு காரணிகள்
பாற்பட்டு  - இவையாதும் இல்லாமல் இருந்தால்
ஒழுகப்பெறின் - ஒழுக்கமாக இருந்தார் ஆனால்

முழுப்பொருள்
வாழ்வில் நாம் பல சந்தர்ப்பங்களை சந்திக்கிறோம். அதில் நாம் நண்பர்களையும், பகைவர்களையும், நம் நாட்டினவர்களையும், அயல்நாட்டினவர்களையும் ஓவ்வொரு நாளும் காண்கிறோம். ஒரு வழக்கிற்காகவோ, ஒரு விவாதத்திற்காகவோ, ஒரு பிரச்சினைக்காகவோ ஒரு முடிவு எடுக்கும் பொழுது எந்த ஒரு பக்கமும் சார்பு இல்லாமல் நடுவுநிலைமையோடு இருப்பதே சாலச்சிறந்தது ஆகும். அதுவே அறம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பகை ,நொதுமல்,நட்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை .இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின்கண் வைக்கப்பட்டது.)

தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்-பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; தகுதி என ஒன்றே நன்று-நேர்மை என்று சொல்லப்படும் ஒர் அறமே நல்லதாம்.

தகுதி என்ற சொல்லால் இங்குக் குறிக்கப்பட்டது நடுவுநிலை. தமிழரின் ஏமாளித்தனத்தினால் 'யோக்கியதை' என்னும் வடசொல் வழக்கூன்றவே தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 'பகுதியான்' என்பது பகுதிதொறும் என்று பொருள் படுதலால், ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்தின் அருமை தோன்ற நின்றது.

மணக்குடவர் உரை
நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

மு.வ உரை
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சார்பெடுக்காமல் நடுநிலை காப்பது  நல்லறமே.

பொருள்: தகுதி என ஒன்று நன்றே - நடுவு நிலைமை என்று சொல்லப்பட்ட (ஒழுக்கம்) ஒன்று அறனே யாம்; பகுதியார்பால் பட்டு ஒழுக பெறின் - (மேற்கூறிய நான்கு) திறத்தினர்கண்ணும் பொருந்தி ஒழுகப் பெற்றால்.

அகலம்: அவ்வப் பகுதியினர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்த வழி நடுவு நிலைமை அறமாம் என்ற வாறு. தகுதியானது பகுதியின்பாற் பட்டொழுகப் பெறின் அறமாம் என்றமையால், ‘தகுதி என ஒன்று’ என்பதற்கு ‘நடுவு நிலைமை என்று சொல்லப்பட்ட ஒழுக்கம் ஒன்று’ என்று பொருள் உரைக்கப்பட்டது. நொதுமலர் - அயலார். நான்கு பகுதியார் இன்னின்னார் என்று மேற் கூறப்பட்டுள்ளனர். அப் பகுதியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களைப் பற்றிக் கூறும் அதிகாரங்களில் கண்டு கொள்க. ஏகாரம் தேற்றத் தின்கண் வந்தது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பகுதியாற்’. ‘பகுதி’ என்பதற்கு ஈண்டுப் பொருத்தமான பொருள் காணுதல் அரிதாகலானும், வேண்டுவதாய ‘ஆர்’ விகுதியை விடுத்து, வேண்டாததாய ‘ஆல் உருபை அல்லது அசையை ஆசிரியர் சேர்க்க மாட்டா ராகலானும் ‘பகுதியாற்’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை யயனக் கொள்க.

கருத்து: பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை நடுவாக நின்று செய்யின், அந் நடுவு நிலைமை ஓர் அறமாம்.

Thirukkural - Management - Thoughts
To lead a virtuous life is very difficult, as that demands a person to keep himself away from hatred, jealous, anger, blame, and revenge. Kural 111 fairly says that being fair and firm is always fair.

Great is impartiality,  not swayed 
By hate, apathy or love.

However, being fair is a challenge too. When a person practices the practices of keeping himself balanced and impartial, he will obtain the qualities of a virtuous person.


English Meaning - As I taught a kid - Rajesh
If a person needs one virtue then it is neutrality because one has to practice neutrality / impartiality unfailingly towards all sections (foes, friends, strangers).  And this neutrality is a discipline too.

Questions that I ask to the kid
What is one great virtue a person should have?

செய்யாமல் செய்த உதவிக்கு

குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
செய்யாமல் செய்த -  இதற்கு முன் நாம் ஒருவருக்கு செய்யாத ஒரு செயலை நமக்கு அவரால் செய்யப்படுதல்
உதவிக்கு - உதவி, உபகாரம், சகாயம்
வையகமும் -  உலகம்,  பூமி
வானகமும் - கட்டற்ற தேவ லோகம்
ஆற்றல் - மிகுதி, வலிமை
அரிது - குறைவு

முழுப்பொருள்
பெரும்பாண்மையாக ஒருவர் மற்ற ஒருவருக்கு உதவி செய்தால் ப்ரதிபலனை எதிர்ப்பார்த்துத்தான் செய்வார்கள். அல்லது தனக்கு இவர் முன்பு செய்த உதவிக்கு கைமாறு செய்ய வேண்டும் என்று எண்ணி உதவுவார்கள். 

ஆனால் தனக்கு ஒருவர் எந்த ஒரு உதவியும் முன்பு செய்ய நேராத போதும் அல்லது செய்யாத போதும் அவருடைய கடின நிலையை அறிந்து அவருக்கு உதவி செய்வது மிகுந்த போற்றுதலுக்கு உரிய செயலாகும். அத்தகைய உதவி இந்த பூமியை விடவும் கட்டற்ற வானை விடவும் பெரிதாகும் என்கிறார் திருவள்ளுவர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
'விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே” (குறுந் 101:1-3)

“பொன்னணி மார்பன் முன்னர் ஆற்றிய
நன்னர்க் குதவும் பின் உப காரம்
அலைதிரைப் பௌவம் ஆடை யாகிய
நிலமுழுது கொடுப்பினும் நேரோ என்மரும்” (பெருங் 3:20:186-9)

“சீறுவா யல்லை யைய.............
......................உதவிமா றுதவி யுண்டோ” (கம்ப.கிட்கிந்தை 55)


“உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மா றாக
மதயானை அனைய மைந்த மற்றுமுண் டாக வற்றோ” (கம்ப.கிட்கிந்தை 66)

“உலக மூன்று முதவற் கொருதனி
விலையி லாமையும் உன்னினென் மேலவை
நிலையி லாமை நினைந்தனன்” (மீட்சிப் 28)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. )

செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செய்யாமல் செய்த உதவிக்கு -- தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த வுதவிக்கு ; வையகமும் வானகமும் வானகமும் ஆற்றல் அரிது - ' மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அலை ஈடு செய்தல் அரிது .

கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும் , முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து .

செய்யாமைச் செய்தவுதவி யென்று பாடமோதி, மறுத்துதவ மாட்டாமை யுள்ள விடத்துச் செய்த வுதவி யென்று பொருளுரைக்கத் தேவையில்லை. அப்பொருள்,

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு"

(211)
என்னுங் குறளாற் பெறப்படுதலால்.

மு.வ உரை
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

சாலமன் பாப்பையா உரை
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
எதையும் கருதாமல் உதவுவோருக்கு உயிரையே தரலாம்.

பொருள்: செய்யாமல் செய்த உதவிக்கு ‡ (பிறர்க்குத் தாம் ஓர் உதவியும்) செய்யாமலிருக்க த் தமக்குப் பிறர்) செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - பூவுலகமும் வானுலகமும் சமமாதல் இன்று.

கருத்து: தமது உதவியை முன் பெறாதார் தமக்குச் செய்த உதவி ஒப்பற்றது.

Thirukkural - Management - Helping Others
'Help yourself by helping others’ is an age old advice to make the purpose of our creation meaningful. “Help,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 556), “is to be useful to somebody; to make it easier for somebody to do something; to assist somebody.”  Anyone who helps others unconditionally will get back the benefits equivalent to that or more than that, though getting benefits in turn may not be the intention. 

Everyone needs help. Helping others can happen because of three reasons. One is in response to someone's request to be helped, two is in anticipation of someone's needs, and three is to get help in turn in future. Kurals give the views of Valluvar on helping. 

Kural 101 impresses us that if a person helps or assists someone even before the other person seeks  help the help rendered cannot be paid back even by presenting the helper anything equivalent to heaven and earth. The value of an unsolicited help is multifold.

Neither earth nor heaven can truly repay
Spontaneous aid

We must be sensitive to others' needs. People do not express their needs for reasons known and unknown. Communication  is to understand what is not said. Understand the needs of people and act accordingly.

Sunday, March 5, 2017

கான முயலெய்த அம்பினில்

குறள் 772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள் -
கான - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

முயல் - போர்; சிறுவிலங்குவகை.
முயல் - வேகமாக ஓடும் முயல் ( வலிமையில் சிறிய விலங்கு) 

எய்த - எய்தல் -  அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

அம்பினில் - அம்பு - நீர்; கடல் மேகம் விண் உலகம் மூங்கில் கணை எலுமிச்சை பாதிரி திப்பிலி வெட்டிவேர் வளையல் சரகாண்டபாடாணம்.


யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம்.

பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.

ஏந்தல் - உயர்ச்சி; மலை; மேடு; பெருமையிற்சிறந்தோன்; தேக்கம்; அரசன்; ஆழமின்மை; முதல்; இளமை; எளிதில்செய்துமுடிக்கும்தன்மை, ஏந்துதல், தாங்குதல், கையேந்துதல்.
ஏந்து-தல் - ēntu-   5 v. [M. ēndu.] tr. 1.To stretch out the hands; கைநீட்டுதல் நீ தர நான்ஏந்தி வாங்கினேன். 2. To receive in the hands;கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 3. To holdin the hands; தாங்குதல் அடிமை படிக்கத்தைஏந்தி நின்றான். 4. To hold up, as an umbrella;to carry in the hand, as a weapon; தரித்தல் அங்குசபாசமேந்தி (சூடா.) 5. To support, as abeam; சுமத்தல் உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது.--intr. 1. To rise high; to be elevated; ஓங்குதல் நில னேந்திய விசும்பும் (புறநா. 2, 2). 2. To beeminent, excellent, exalted, of fine quality;சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 3.To be abundant; மிகுதல் (தொல். பொ 543, உரை )  

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
தப்பி ஓடும் ஒரு சிறிய முயலினை குறி தவறாமல் எய்வது வீரம் அல்ல. ஓடும் முயலை குறி பார்ப்பது அவ்வளவு எளிதும் அல்ல. ஆனால் முயலின் வலிமை சிறியது. அதனால் ஒரு பயனும் இல்லை. ஓடிச்செல்லும் ஒரு விலங்கை வீழ்த்துவது வீரமும் இல்லை.  அத்தகைய வீரம் நம்மிடம் ஒரு தேக்க நிலையை உருவாக்கும். 

ஆனால் நம் முன்னே தைரியமாக வந்து நின்று நம்மை எதிர்த்து நிற்கின்ற யானை தனை குறி வைத்து வேல் எய்தி அது தவறினாலும் அது தோல்வி அல்ல. அது வெற்றியே ஆகும். ஆதலால் வெற்றி என்பது முடிவினால் அல்ல அது எதிரியின் வலிமையாலும் நமது உழைப்பாலும் நமது ஆற்றலாலும் நிறுவப்படுவது என்கிறார் திருவள்ளுவர்.  ஆதலால் ஷாத்ர குணத்தால் முயன்று தோற்பதும் வெற்றியே.

ஒரு முயலினை அம்பினால் எய்த ஒருவித திறமை (skill) வேண்டும் தான். ஆனால் திறமையை விட ஒரு யானையை கண்டு பயப்படாமல் போரிட மனதில் தைரியமும் அச்சமின்மையும் (courage / fearlessness), வெற்றியோ தோல்வியோ கடைசிவரைப்போராட விடாமுயற்சியும் ஊக்கமும் (perseverance) தேவை. 

எதற்கு தேவையின்றி யானையுடன் போராட வேண்டும், கிடைக்கும் முயலுடன் சந்தோஷமாக வாழலாமே என நினைப்போருக்கு உச்ச கட்ட வலியும் இல்லை. உச்சகட்ட அனுபவங்களும் இல்லை

ஒப்புமை
”நரிமா உளம்கிழித்த அம்பினில் தீதோ
அரிமாப் பிழைப்பெய்த கோல்” (நாலடி. 152)

மேலும்: அஷோக் உரை

 “இங்குள்ள நெறிகளை புரிந்துகொள்க! அரசுடன் பணிகொள்பவர்கள் யானையுடன் உறவாடுபவர்கள்போல என்று அஜிதநீதி சொல்கிறது. எக்கணமும் எவரையும் கொல்லக்கூடுமென்ற வாய்ப்பை எப்போதும் யானை தன் உடலில் கொண்டிருக்கிறது என்று உணர்க!”

எழுத்தாளர் ஜெயமோகனின்’ வெண்முரசு-இருட்கனி-32 இல் கீழ்க்காணும் வரி வருகிறது.
சிறிய எதிரியை யானை கொல்வதுண்டா? 

எழுத்தாளர் ஜெயமோகன் உரை (பதுங்குதல்)
இரண்டு விஷயங்கள். உலகியல்வாழ்க்கையில் அவசியமான ஒன்று ஷாத்ரம் என்னும் குணம். அதாவது தூய ரஜோகுணம். வென்றெடுக்க, கடந்துசெல்ல எப்போதும் உள்ள அக ஊக்கம் என அதைச் சொல்லலாம். அதை பேராசை என்று சொல்லக்கூடாது.

இருப்பது போதும் என்பது தமோகுணம். அதற்கு உலகியலில் இடமில்லை. அது தேக்கநிலை. துயரையே அளிக்கும். ஷாத்ர குணத்தால் முயன்று தோற்பதும் வெற்றியே. அதையே ‘யானைபிழைத்தவேல்’ என்றார் முனிவர்

தன்னறம் என்பது கூடவே இணைத்துப்பார்க்கவேண்டியது. ஒருவன் தன் செயல் மூலம் முழுமை பெறக்கூடிய துறையைத் தெரிவுசெய்யவேண்டும். தன் முழு ஆற்றலையும் அதில் செலுத்தவேண்டும். அதுவே அவனை விடுதலைசெய்யவைக்கும்

இவ்விரண்டிலும் உள்ள சோர்வே நீங்கள் சொல்லும் நிலைக்குக் காரணம். அது அச்சத்தால் சுயநலத்தால் வருவது. நம் நடுத்தரவர்க்க சமூகம் நம்மிடம் தேங்கி நிற்கவே சொல்லித்தந்து வளர்க்கிறது. அதைப்பாதுகாப்பாக இருத்தல் என நினைக்கிறது

‘பத்திரமா இருந்துக்க’ என்ற சொல்லைப்போல கேவலமான சொல் வேறு இல்லை. நான் எப்போதுமே பத்திரமாக இருந்ததில்லை. என் பையனிடமும் அதைச் சொன்னதில்லை

வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல.

முழுப்பொருள்2 (by நண்பர் நாகமணி):
வலிமை குறைந்த முயலை குறி வைத்து எய்வதற்கு ஏந்தி நிற்கும் அம்பினை விட, யானைக்கு பெரிய தீங்கு ஏற்பட்டுத்தாவிட்டாலும் அதன் மேல் எறிவதற்கு வேலை ஏந்தி நிற்பதே சிறந்தது எனக் கூறுகிறார் வள்ளுவர் .

இக்குறளின் மூலம் வள்ளுவர் நாம் எதிர்த்து போராடும் எதிரி கூட பலம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்றும், எளியவனிடம் போரிட்டு/மோதி வெல்வதை காட்டிலும்,வலியவனிடம் போரிட்டு/மோதி சிறிது தீங்கு ஏற்படுத்தினாலும் சிறந்தது  என உரைக்கிறார்.
இதை சிறிது மாற்றி, அடைய முடியா விட்டாலும் நமது இலக்கு உயரமானதாக இருக்க வேண்டும் எனவும் கொள்ளலாம். 

இது "Aim for the sky and you will reach the treetop" என்னும் ஆங்கில மொழியையும் நியாபகப் படுத்துகிறது .

ஏனோ இக்குறள் எழுதும் நேரத்தில் , 2014 தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடியுடன் மோதும் கேஜ்ரிவாலும் நினைவுக்கு வருகிறார் .


பரிமேலழகர் உரை
கான முயல் எய்த அம்பினில் - கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று. ('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்¢றதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக்குத்தக எறிதலும் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் செல்லலுற்றானது கூற்று).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கான முயல் எய்த அம்பினில்-காட்டிலோடும் முயலின்மேல் தப்பாது எய்த அம்பை ஏந்துவதிலும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-திறந்த வெளியில் நின்ற யானைமே லெறிந்து தப்பிய வேலைப் பிடித்திருத்தல் பெருமை தருவதாம்.

இது, பகைவருள் ஒரு காலாட்படை மறவனைக் கொல்வதினும், ஓர் அரசனை அல்லது படைத்தலைவனை வெல்ல முயலும் முயற்சி சிறந்ததென்று கருதும் மறவன் கூற்று. மரஞ்செடி கொடியடர்ந்த கானம் என்றதனால் திறந்தவெளி யென்பதும், 'பிழைத்த' என்றதனால் தப்பாது என்பதும், சிறு விலங்கிற்கேற்ப 'எய்த' என்றதனால் பெருவிலங்கிற்கேற்ப எறிதல் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன.

மணக்குடவர் உரை
வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது. இதுமேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது

சாலமன் பாப்பையா உரை
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது

Thirukkural - Management - Perseverance
Motivation is to aim high and think of big dreams. Courageously throwing a spear at an elephant is far greater an achievement than shooting an arrow at a rabbit. Your spear may miss the elephant and your arrow may hit the rabbit. But your courage to attack a powerful elephant is laudable one, lauds Kural 772.

Better the spear that missed an elephant
Than the arrow that killed a hare.

Similarly aiming for a big achievement, even if you fail to accomplish, is greater than aiming for small acts and achieving them. Therefore, big aim and perseverance make big things happen. 

Saturday, January 7, 2017

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம்

குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பொருள்
அமிழ்தினும் -  அமிர்தம், தேவருணவு, லஷ்மி, முத்தி
ஆற்ற - அதைவிட
இனிதே - இனிதானது
தம் மக்கள் - தன்னுடைய மக்கள்
சிறு கை - சிறு கையினால்
அளாவிய - கையால்அளைதல்; துழாவுதல் கலத்தல் சென்றுபொறுந்துதல்; கலந்துபேசுதல்.
கூழ் - மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை

முழுப்பொருள்
வாழ்வில் கடவுளை விட, முத்தியை விட, தேவர்கள் பருகும் அமுதத்தை விட இனிதான ஒன்று உள்ளது. அது தன்னுடைய குழந்தைகள் தங்களில் பிஞ்சு கைகளினால் துழாவி சமைத்த கூழ்/உணவு என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கப் பூநாறும் செய்யவாய்
மக்களை” (நளவெண்பா)

”வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்
வாரி வாய்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன்” (பெருமாள் 7:6)

‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்’

என்ற பெரும்புகழ்பெற்ற வரி ஒரு நீதியோ கருத்தோ எண்ணமோ ஏதுமல்ல. ஓர் அனுபவத்தின் உச்சகட்ட அகஎழுச்சி மட்டுமே. எண்ணப்புகுந்தால்  பாற்கடலை தேவரும் அசுரரும் அளாவித் திரட்டிய அமுதத்துடன் சின்னஞ்சிறு கை அளாவும் அமுதம் ஒப்புமைப்படுத்தப்பட்டிருப்பதன் நுட்பம் நம்  கண்ணுக்கு வரக்கூடும்.

அதேபோல் அமுதம் என்றால் அ+மிருதம் என்று பிரிவுபட்டு இறவாமை என்றே பொருள்படும். சிறுகை தொட்ட கூழ் உண்ணும் தந்தையும் அக்கணத்தில் உணர்வது மூதாதை மரபில் இருந்து தன் வரை வந்து தன்னையும் கடந்துசெல்லும் இறவாமையை அல்லவா? ஆனால் இச்சிந்தனைகள் அச்சொற்கள் மேல் ஒழுகிச்செல்வன மட்டுமே. அத்தகைய சிந்தனைகளின் முடிவிலாப் பெருக்கின் ஊற்றுமுகமாக இருக்கிறது அக்கவிதை வரி.

பரிமேலழகர் உரை
அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188).

மணக்குடவர் உரை
இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் - தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப் பட்ட சோறு; அமிழ்தினும் ஆற்ற இனிதே - பெற்றோர்க்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவருணவினும் மிக இனிமையுடையதாம்.

தம் என்னும் சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவருண வென்றது மக்களின் குருட்டு நம்பிக்கையான உலக வழக்கைத் தழுவியது.

"படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே." (புறம். 188)

"பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ்செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்".(நள. கலித்தொடர்.)

என்னும் பாக்கள் இங்குக் கவனிக்கத் தக்கன.

மு.வ உரை
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
குழந்தையின் கைபட்டால் கூழும் அமுதம்

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தமது மக்கள் சிறிய கை களால் துழாவிய கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிது - அமிழ்தினும் மிக இனிது.

அகலம்: சிறு கை என்றமையால் குழந்தைக ளெனவும், தவழ்தல் முதலியவற்றால் அவர் கை மண்,தூசு, முதலியன படிந்திருக்குமெனவும் கொள்க. அக் கூழ் அமிழ்தினும் இனிதாதல் தம்முடைய சொந்த மக்களது சிறுகை அளாவிய போழ்தே என்பதை உணர்த்த வேண்டித் ‘தம் மக்கள்’ என்றார். கை என்பது சாதி ஒருமைப்பெயர். தருமர் பாடம் ‘அமுதினும்’. ஏகாரம் தேற்றம்.

கருத்து: தம் மக்கள் தம்முடன் உண்ணுதல் தமக்கு இன்பம் பயக்கும்.

பேராண்மை என்ப தறுகண்ஒன்

குறள் 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் 
ஊராண்மை மற்றதன் எஃகு
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
ஆண்மை  - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை
பேராண்மை - அரியவீரச்செயல்; மிக்கவீரம்; மானம்
என்ப - என்பது
தறுகண் - பகைவற்கு அஞ்சாமையாகிய வீரம் 
ஒன்று உற்றக்கால் - அதே பகைவற்கு
ஊராண்மை  - ஊரைஆளும்தன்மை; உபகாரியாந்தன்மை, ஒப்புரவு; மிக்கசெயல்; ஊரின்கண்மேம்பாடுடைமை; பகைமேற்செல்லுகை
மற்று அதன் - பேராண்மையெனப்படும் வீரத்தினும்
எஃகு - மிக்க கூர்மை உடையதாம் (பகைவருக்கருளும் நன்னெஞ்சைப் பற்றி பாரதியும் கூறுவர்)

முழுப்பொருள்
பேராண்மை எனப்படுவது பகைக்கு அஞ்சாத வீரமாகும். ஆனால் அதே பகைவர்க்கு ஒரு துன்பமான நேரத்தில் பகை என்று பாராமல் அவருக்கு உதவுவதே நல்ல பண்பாகும், நல்ல ஆளும் தண்மையாகும். வீரத்தினும் பகைவர்க்கு துன்ப நேரத்தில் உதவுவதே அந்த வீரத்தின் சிறப்பு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தெற்றப் பகைவர இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் சான்றோர்
அவைப்படிற் சாவாது பாம்பு” (பழமொழி 313)

“படைது றந்து மயங்கிய பண்பினான்
இடைதெ றும்படி பார்த்திகல் நீதியின்
நடைது றுந்துயிர் கோடலும் நன்மையோ
கடைது றுந்தது போரென் கருத்தென்றான்” (கம்ப.இராவணன்வதை.175)



பரிமேலழகர் உரை
தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர். ('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3)

மணக்குடவர் உரை
ஒன்று உற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்: உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர்.

உலகியலறிவது- தான் உலகியலை வெளியார் சொல்லாமையறிதல்.

மு.வ உரை
பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்

சாலமன் பாப்பையா உரை
பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.

விழையார் விழையப் படுப

குறள் 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
விழையார் - பகைவராலும்
விழைவு - விருப்பம், ஆசி
விழையப்படுப - விருப்படுவார்கள்
பழையார்கண் - பழகிய பழம் நட்பில் உள்ளவரிடம்
பண்பின்  - தம்முடைய பண்பின் காரணமாக
தலைப்பிரியாதார் - எப்போதும் பிரியாதார் (அவர்கள் குற்றம் செய்தாலும்)

முழுப்பொருள்
நல்ல நட்பு என்பது யாதெனில் பல ஆண்டுகளாக நல்ல நட்பில் இருப்பார்கள். அவர்களின் பயணத்தில் எத்தகைய நிலையிலும் ஒருவர் தவறே செய்தாலும், தவறான வழியில் சென்றாலும் அதற்காக கூசி அவர்களிடம் இருந்து பிரியாமல் இருப்பது. 

உதாரணமாக பால்யக்காலங்களில் நல்ல நட்பில் இருப்பர். பின்பு வேலைக்கு சென்று அந்தஸ்து, பதவி வந்ததும் பிரிந்து விடுவர்.  நண்பருக்கு வேலையிலோ அல்லது தொழிலிலோ நட்டம் ஏற்ப்பட்டால் அவர் எங்கு நம்மை கேட்ப்பாரோ என்று பயந்து பிரிந்துவிடுவர். நண்பர் ஒரு அவசரத்தில் செய்த தவறிர்க்காக அவரிடம் இருப்பது இழிவு கூடாநட்பு என்று பிரிந்து விடுவர். இத்தகையது நட்பல்ல.

எல்லா நேங்களில் நண்பருடன் உடன் இருந்து நட்பு பாராட்டுவதே நட்பாகும் அத்தகைய நட்பை எதிரியானாலும் போற்றுவர்.

இதற்கும் மகாபாரதத் கதையில் கர்ணன், நட்பின் பழைமையால், துரியோதனின் பிழைகளையும் பொறுத்து, நட்போடு இருந்ததை, அவர்களுடைய பகைவர்களும் போற்றியதைக் கூறலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். (தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார்,விரும்பாதாராலும் விரும்பப்படுவர்.
இது பகைவரும் விரும்புவாரென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைமையான நண்பர் தவறு செய்தாராயினும் அவரிடத்துத் தம் நட்புத் தன்மையினின்றும் மாறுபடாதவர்; விழையார் விழையப்படுப - பகைவராலும் விரும்பப்படுவர்.

பண்பாவது நட்பிற் பிழைபொறுத்தல். மூன்றாம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன

மு.வ உரை
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்.

வையத்துள் -  பூமி, உலகத்தில்

வாழ் - முறைமை
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை.
வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம்

வாழ்வாங்கு  - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது

வாழ்பவன் - வாழ்கின்றவன்

வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி

உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

உறையும் - பெருமை, உயரம், நீளம்

தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

தெய்வத்துள்  - கடவுள்

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

வைக்கப்படும் - வணங்கப்படும்
வைக்கப் படும்- கருதப் படும்

முழுப்பொருள்
ஒருவன் இல்லறத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் பொழுது அவனால் தெய்வீக நிலையை அடைய முடியுமா? முடியும் என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் இல்வாழ்கையில் வாழ்வதற்கான நெறிகளை கடைப்பற்றி நெறி தவறாது வாழ்ந்தால் அதுவே சிறப்பான வாழ்வு. அத்தகையவர்களை வான் உயரத்தில் இருக்கும் தெய்வங்களாக வைத்து வணங்க படுவர். தெய்வத்திற்கு நிகரான பெருமை அவர்களுக்கு கிடைக்கும்.

உதாரணமாக ஒரு குடும்பத்தில் ஒருவர் அக்குடும்பம் சிறக்க காரணம் பெற்றார் என்றால் அவர் அக்குடும்பத்தினால் பல ஆண்டுகாலம், பல வம்சங்களாக போற்றப்படுவார்.

அதுமட்டும் இன்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது இந்திய மரபு. ஆகவே மூதாதையரும் முனிவரும் வீரரும் தெய்வங்களாவது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. ராமன் விவேகமும் புகழும் மிகுந்த மன்னன் என்றவகையில் தெய்வமாக ஆனது இயல்பானதே.

இதையே முன்பு குறளிலும் அழுத்தமாக கூறி இருப்பார் குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ”மகிழ்ச்சிக் கணக்கு” என்ற கட்டுரையில் வாழ்வது பற்றி இப்படி கூறுகிறார்.

கடமைகள் செய்யப்படவேண்டியவையே. ஆனால் மனிதன் வாழ்வது கடமைகளுக்காக அல்ல.  மகிழ்ச்சிகளுக்காக.


பிறவிப்பெருங்கடல் நீந்துவது பற்றி வள்ளுவர் சொல்வதன் பொருள் என்ன? சமண , இந்து மரபுகளின்படி இந்தப் பிறவியில் அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை அடைந்து நிறைவுறுபவர் வீடுபேறு அடைகிறார். வீடுபேறு என்பது மறுபிறவி என்னும் சுழலில் இருந்து விடுபடுவது. அதையே பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடத்தல் என்கிறார்.

அதாவது இங்கே அறம் நிறைந்து, அவ்வறம் செய்வதற்கான பொருள் அடைந்து, இன்பமும் நிறைந்து வாழ்ந்து செல்வதையே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுவே வீடுபேறு.

ஒருவர் வாழ்வின் இறுதியில் இவ்வாழ்வில் நிறைவுற்றேன் என அகத்தே உண்மையாக உணர்வார் என்றால் அவர் வீடுபேறு அடைகிறார். குறையுடன் உணர்கிறார் என்றால் அவர் விடுதலை அடையவில்லை.

அதற்கு வாழ்ந்து நிறைவது முக்கியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று அதையே வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவர் வாழ்வைத் துறக்கச் சொல்லவில்லை. சிறக்க வாழும்படிச் சொல்கிறார். வாழாது செல்லச் சொல்லவில்லை. வாழ்ந்து நிறையவே அறிவுறுத்துகிறார்.

ஜெ


புராணமயமாதல் (எழுத்தாளர் ஜெயமோகன்)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது இந்திய மரபு. ஆகவே மூதாதையரும் முனிவரும் வீரரும் தெய்வங்களாவது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. ராமன் விவேகமும் புகழும் மிகுந்த மன்னன் என்றவகையில் தெய்வமாக ஆனது இயல்பானதே.

மனிதர்களைக் கடவுள் போல ஆக்குவது ஒரு இந்திய மன அமைப்பு. அதற்கு ஆதாரமாக இருப்பவை மூன்று விழுமியங்கள். 1. மூத்தார் வழிபாடு 2. நீத்தார் வழிபாடு 3. குருவழிபாடு. ’வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தார் வானுறையும் தெய்வத்துள் வைக்கபப்டும் ‘ என்ற மரபுசார்ந்த நம்பிக்கை இந்த மன அமைப்புக்கு வழியமைக்கிறது.

ஒருவர் வயதுக்கு மூத்தவராகும்போது அவரை உயர்ந்த இடத்தில் நிறுவி நாம் வழிபட ஆரம்பிக்கிறோம். கணிசமானவர்கள் வயதானவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மதிக்கப்படுவதை, வழிபடப்படுவதை நம் சமூகத்தில் காணலாம். தாய் தந்தையரைக் கடவுளின் இடம் நோக்கி நகர்த்திக்கொண்டே இருப்பதும் நம் வழக்கம்.

நம்முடைய பழங்குடிப் பண்பாட்டுக்காலம் முதலே நீத்தார் கடவுள்களாக ஆவது உள்ளது. ஒருவர் இறந்துவிட்டால் அவர் தூய இருப்பாக ஆகிவிடுகிறார். பிரபஞ்ச பேரிருப்புடன் கலந்து அதன் பகுதியாக ஆகிவிடுகிறார். அதன்பின் அவரும் கடவுளே என்று நம் தொல்மரபு நம்புகிறது. ஆகவே நாம் இறந்தவர்களைத் தெய்வமாக்கிக்கொண்டே இருக்கிறோம். வீரத்தால் இறந்தவர்கள், தியாகத்தால் இறந்தவர்கள் தெய்வங்களாகிறார்கள். பேற்றில் இறந்த பெண்கள் தெய்வங்களாகிறார்கள். ஒருவருக்கு சமூகம் ஓர் அநீதி இழைத்துவிட்டால் அந்தக் குற்றவுணர்ச்சியால் அவர்கள் தெய்வமாக்கப்படுவதும் உண்டு

கடைசியாக, குரு தெய்வமாகிறார். வாழும்போதே அவரை வழிபட ஆரம்பிக்கிறோம். இறந்தபின் கடவுள் ஆக்குகிறோம். நம் மரபில் காவி உடுத்தி மறைந்த அனைவரையும் புதைத்துச் சமாதிகட்டி அதைக் கோயிலாக்கி குருபூஜை செய்து வழிபடுகிறோம்.

இந்த மூன்று விழுமியங்களும் இந்து,சமண, பௌத்த,சீக்கிய மதங்களில் ஆழமாக வேரூன்றி அடிக்கட்டுமானமாகவே ஆகிவிட்டவை. இந்த ஆதார மனநிலைக்குப் பல்லாயிரம் வருடத்துப் பழக்கம் இருக்கிறது. இம்மனநிலை நம் சமூகம் அடைந்த ஆன்மீகவல்லமையை, அறிவுத்தொகையை, கலைகளைச் சிதறாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுவர உதவியிருக்கிறது. எத்தனை எதிர்மறைச்சூழலிலும் எதுவும் மறக்கப்படாமல் அடுத்த தலைமுறையைச் சென்றடைய தேவையாக இருந்திருக்கிறது இது
ஆகவே இன்று இதை மூடநம்பிக்கை என்றோ, அசட்டு உணர்ச்சி வெளிப்பாடு என்றோ புறந்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப்பொறுத்தவரை நான் என் குருநாதர்களாக அமைந்தவர்கள் மீது பெரும்பக்தி கொண்டவனே. அது என் எளிமையையும் என் தகுதியையும் ஒரே சமயம் எனக்குக் காட்டுகிறது.

ஆனால் நவீன அறிவுத்தளத்தில் செயல்படும் ஒருவர் கூடவே பாகுபடுத்திப்பார்க்கும் தன்மையும் ஆராய்ச்சிமனநிலையும் கொண்டிருக்கவேண்டும். அது முன்னோடிகளையும் குருநாதர்களையும் அவமதிப்பதோ சிறுமைசெய்வதோ அல்ல. அவர்களிடமிருந்து மிகச்சிறந்ததைப் பெற்றுக்கொள்ளவே அவர்களை நாம் ஆராய்கிறோம். அவர்களின் வெற்றிகள் மட்டும் முக்கியமல்ல, தோல்விகளும் நமக்கு முக்கியமே. அவர்களின் தெளிவு மட்டுமல்ல, கலக்கமும் நமக்கு முக்கியமே. அவர்களின் பலம் மட்டுமல்ல பலவீனமும் முக்கியமே. அவையெல்லாமே நமக்குப் பாடங்கள்.

ஆனால் மரபான மனநிலை நம் சமூகத்தில் ஆழ வேரூன்றிருப்பதனால் நம்மால் முன்னோடிகளையும் வழிகாட்டிகளையும் அப்படி ஆராய முடிவதில்லை. ஆராதகர்களும் பக்தர்களும் மனம் புண்படுகிறார்கள். நாம் இழிவுசெய்துவிட்டதாக எண்ணி கொந்தளிக்கிறார்கள். எனக்கு மீண்டும் மீண்டும் இந்த அனுபவம் உண்டு. ஏனென்றால் நான் யாரை என் ஆசிரியராக நினைக்கிறேனோ அவரையே மிக கூர்ந்து ஆராயவும் செய்கிறேன்.

இன்று புகழ்வேண்டாதவர் என்றால் உலகியலில் பற்றற்றவர் என்று பொருள் வருகிறது.அது ஓர் உயர்ந்த பண்பாக கருதப்படுகிறது. ஒரு நற்செயலைச் செய்தபின் அதன் புகழை ஒருவர் நாடுவாரென்றால் அது செய்த நற்செயலுக்கு உலகியல் பிரதிபலனை தேடிச்செல்வதாகப் பொருள்படுகிறது.

ஆனால் சென்ற நிலவுடைமைச் சமூகத்தில் அப்படி அல்ல. புகழ் என்பது உருவாக்கப்படுவது அல்ல, தேடிவருவது. அன்றைய சூழலில் ஆன்றோரிடமும் மூதாதையரிடமும் சுற்றத்தோரிடமும் எளியோரிடமும் விண்ணுலகிலுள்ள தேவர்களிடமும் பெறப்படும் நற்பெயர்தான் புகழ். புகழால் எவருக்கும் உலகியல்நன்மை ஏதுமில்லை. அது முழுக்கமுழுக்க ஒரு ஆன்மிகச்செல்வம்தான். இன்று புண்ணியம் என்கிறோமே அதைப்போல.

அன்றைய விழுமியங்களின்படி இவ்வுலகில் ஈட்டவேண்டியது புகழ். மறுவுலகில் வீடுபேறு. இங்கு புகழை ஈட்டியவன் அங்கே வீடுபேறை அடைவான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான். உலகியல்புகழ் என்பது வீரம், கொடை, நோன்பு, கடமை, நெறிநிற்றல் ஆகியவற்றால் அடையப்படுவது.

புகழ் விரும்பப்பட்டதுபோலவே இழிபெயர் நரகத்திற்கு இணையாக அஞ்சப்பட்டது. வஞ்சினம் உரைப்பவர்கள் ‘என்னை புலவர் பாடாது ஒழிக’ என்று சொல்வதையும் நாம் பழைய பாடல்களில் பார்க்கிறோம். பெண்கொலைபுரிந்த நன்னன் என்பவனை புலவர் இழிபெயராக வரலாற்றில் நிறுத்திவிட்டதையும் காண்கிறோம்.

ஜெ

பரிமேலழகர் உரை
வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்).

மணக்குடவர் உரை
இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - இவ்வுலகத்தானேயாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

இல்லறவாழ்க்கையில் தூய்மையாக வாழ்பவன் மக்களுட் சிறந்தவனாக இருப்பனாதலாலும், இம்மையிற் செய்த நல்வினைப் பயனை மறுமையில் தேவனாகித் தேவருலகத்தில் நுகர்வான் என்னும் நம்பிக்கையினாலும், 'வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். தெய்வம் என்றது வகுப்பொருமை.

மு.வ உரை
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

பொருள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்-பூவுலகத்துள் (இல் வாழ்வான்) வாழ வேண்டிய படி வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ‡ வானுலகத்தில் வாழும் தேவருள் (ஒருவனாக) மதிக்கப்படுவான்.

அகலம்: அவ்வாறு வாழ்பவன் இறந்த பின்னர் வானுலகத்தில் தேவனாய் வாழ்வன் என்று உரைப்பினும் அமையும், கொழுநனைப் பேணிய பெண்டிர் இறந்த பின்னர் வானுலகத்தில் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்று ஆசிரியர் அடுத்த அதிகாரத்திற் கூறுகின்றமையால்.

கருத்து: இல் வாழ்க்கையை ஒழுங்காக நடாத்துகின்றவன் தேவனாவான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நெறி தவறாது வாழ்பவன் கடவுளருள் ஒருவனாகக் கருதப்படுவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar says that a person can live in this world and still attain'a Godly state. I.e he would be workshipped. How? When a person feels he has lived a fulfiled life.  To feel that one should do his dharma, earn money required for running the life/family and lead a happy life. If one is able to strike a good balance among dharma, money and happiness, he would feel fulfiled. Such a person can attain moksha. Hence, it is important to live the life and feel fulfiled. Such a person would be kept in the lines of God.

And if one sees our lives, we can see our ancestors, sages, warriors, kings are placed among Gods. 
For e.g., Lord Rama is the central character in epic Ramayana. He is worshipped as God because the character lives like that in that novel

Questions that I ask to the kid
Who would be kept among Gods? Why?
How to lead a fulfilled life? What the benefits? (major benefit is moksha)

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...