பேராண்மை என்ப தறுகண்ஒன்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், படையில், படைச்செருக்கு, குறள் 773 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு
குறள் 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் 
ஊராண்மை மற்றதன் எஃகு
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
ஆண்மை  - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை
பேராண்மை - அரியவீரச்செயல்; மிக்கவீரம்; மானம்
என்ப - என்பது
தறுகண் - பகைவற்கு அஞ்சாமையாகிய வீரம் 
ஒன்று உற்றக்கால் - அதே பகைவற்கு
ஊராண்மை  - ஊரைஆளும்தன்மை; உபகாரியாந்தன்மை, ஒப்புரவு; மிக்கசெயல்; ஊரின்கண்மேம்பாடுடைமை; பகைமேற்செல்லுகை
மற்று அதன் - பேராண்மையெனப்படும் வீரத்தினும்
எஃகு - மிக்க கூர்மை உடையதாம் (பகைவருக்கருளும் நன்னெஞ்சைப் பற்றி பாரதியும் கூறுவர்)

முழுப்பொருள்
பேராண்மை எனப்படுவது பகைக்கு அஞ்சாத வீரமாகும். ஆனால் அதே பகைவர்க்கு ஒரு துன்பமான நேரத்தில் பகை என்று பாராமல் அவருக்கு உதவுவதே நல்ல பண்பாகும், நல்ல ஆளும் தண்மையாகும். வீரத்தினும் பகைவர்க்கு துன்ப நேரத்தில் உதவுவதே அந்த வீரத்தின் சிறப்பு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தெற்றப் பகைவர இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் சான்றோர்
அவைப்படிற் சாவாது பாம்பு” (பழமொழி 313)

“படைது றந்து மயங்கிய பண்பினான்
இடைதெ றும்படி பார்த்திகல் நீதியின்
நடைது றுந்துயிர் கோடலும் நன்மையோ
கடைது றுந்தது போரென் கருத்தென்றான்” (கம்ப.இராவணன்வதை.175)



பரிமேலழகர் உரை
தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர். ('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3)

மணக்குடவர் உரை
ஒன்று உற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்: உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர்.

உலகியலறிவது- தான் உலகியலை வெளியார் சொல்லாமையறிதல்.

மு.வ உரை
பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்

சாலமன் பாப்பையா உரை
பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain