குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
பொருள்
அமிழ்தினும் - அமிர்தம், தேவருணவு, லஷ்மி, முத்தி
ஆற்ற - அதைவிட
இனிதே - இனிதானது
தம் மக்கள் - தன்னுடைய மக்கள்
சிறு கை - சிறு கையினால்
அளாவிய - கையால்அளைதல்; துழாவுதல் கலத்தல் சென்றுபொறுந்துதல்; கலந்துபேசுதல்.
கூழ் - மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை
முழுப்பொருள்
வாழ்வில் கடவுளை விட, முத்தியை விட, தேவர்கள் பருகும் அமுதத்தை விட இனிதான ஒன்று உள்ளது. அது தன்னுடைய குழந்தைகள் தங்களில் பிஞ்சு கைகளினால் துழாவி சமைத்த கூழ்/உணவு என்கிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கப் பூநாறும் செய்யவாய்
மக்களை” (நளவெண்பா)
”வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்
வாரி வாய்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன்” (பெருமாள் 7:6)
‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்’
என்ற பெரும்புகழ்பெற்ற வரி ஒரு நீதியோ கருத்தோ எண்ணமோ ஏதுமல்ல. ஓர் அனுபவத்தின் உச்சகட்ட அகஎழுச்சி மட்டுமே. எண்ணப்புகுந்தால் பாற்கடலை தேவரும் அசுரரும் அளாவித் திரட்டிய அமுதத்துடன் சின்னஞ்சிறு கை அளாவும் அமுதம் ஒப்புமைப்படுத்தப்பட்டிருப்பதன் நுட்பம் நம் கண்ணுக்கு வரக்கூடும்.
அதேபோல் அமுதம் என்றால் அ+மிருதம் என்று பிரிவுபட்டு இறவாமை என்றே பொருள்படும். சிறுகை தொட்ட கூழ் உண்ணும் தந்தையும் அக்கணத்தில் உணர்வது மூதாதை மரபில் இருந்து தன் வரை வந்து தன்னையும் கடந்துசெல்லும் இறவாமையை அல்லவா? ஆனால் இச்சிந்தனைகள் அச்சொற்கள் மேல் ஒழுகிச்செல்வன மட்டுமே. அத்தகைய சிந்தனைகளின் முடிவிலாப் பெருக்கின் ஊற்றுமுகமாக இருக்கிறது அக்கவிதை வரி.
பரிமேலழகர் உரை
அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188).
மணக்குடவர் உரை
இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் - தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப் பட்ட சோறு; அமிழ்தினும் ஆற்ற இனிதே - பெற்றோர்க்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவருணவினும் மிக இனிமையுடையதாம்.
தம் என்னும் சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவருண வென்றது மக்களின் குருட்டு நம்பிக்கையான உலக வழக்கைத் தழுவியது.
"படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே." (புறம். 188)
"பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ்செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்".(நள. கலித்தொடர்.)
என்னும் பாக்கள் இங்குக் கவனிக்கத் தக்கன.
மு.வ உரை
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
குழந்தையின் கைபட்டால் கூழும் அமுதம்
வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தமது மக்கள் சிறிய கை களால் துழாவிய கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிது - அமிழ்தினும் மிக இனிது.
அகலம்: சிறு கை என்றமையால் குழந்தைக ளெனவும், தவழ்தல் முதலியவற்றால் அவர் கை மண்,தூசு, முதலியன படிந்திருக்குமெனவும் கொள்க. அக் கூழ் அமிழ்தினும் இனிதாதல் தம்முடைய சொந்த மக்களது சிறுகை அளாவிய போழ்தே என்பதை உணர்த்த வேண்டித் ‘தம் மக்கள்’ என்றார். கை என்பது சாதி ஒருமைப்பெயர். தருமர் பாடம் ‘அமுதினும்’. ஏகாரம் தேற்றம்.
கருத்து: தம் மக்கள் தம்முடன் உண்ணுதல் தமக்கு இன்பம் பயக்கும்.
பொருள்: தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தமது மக்கள் சிறிய கை களால் துழாவிய கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிது - அமிழ்தினும் மிக இனிது.
அகலம்: சிறு கை என்றமையால் குழந்தைக ளெனவும், தவழ்தல் முதலியவற்றால் அவர் கை மண்,தூசு, முதலியன படிந்திருக்குமெனவும் கொள்க. அக் கூழ் அமிழ்தினும் இனிதாதல் தம்முடைய சொந்த மக்களது சிறுகை அளாவிய போழ்தே என்பதை உணர்த்த வேண்டித் ‘தம் மக்கள்’ என்றார். கை என்பது சாதி ஒருமைப்பெயர். தருமர் பாடம் ‘அமுதினும்’. ஏகாரம் தேற்றம்.
கருத்து: தம் மக்கள் தம்முடன் உண்ணுதல் தமக்கு இன்பம் பயக்கும்.
No comments:
Post a Comment