Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Monday, July 25, 2016

வான்நின்று உலகம் வழங்கி

குறள் 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகு

நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி; நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு; மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர்; உயர்குணம்; வானம்

வழங்கி - III. v. i. pass current (as money or words), be in use; 2. proceed in a suit, advance, செல்லு; v. t. distribute, give, ஈ; 2. use, கையாடு; 3. speak; 4. direct, நடத்து.
வழங்கு-தல்- To last; to endure; to stand established; நிலைபெறுதல்.

வருதலால் தான்  - கொடையாக வருவதனால் தான்
அமிழ்தம் - அமிர்தம், தேவருணவு, உணவு, s. Ambrosia, nectar, the elixir of life,
என்று உணரல்  - உணரு, II. v. i. feel, perceive, understand, அறி; 2. realize, conceive, imagine, பாவி; v. i. recover from langour, அயர்வு நீங்கு; 2. wake from sleep, துயிலெழு; 3. become reconciled after a love quarrel, பிணக்கு (ஊடல்) நீங்கு.
பாற்று - உரியது

முழுப்பொருள்
எல்லோரும் மழையினை அமிழ்தம் என்று கருதுகிறார்கள் என்பதை தாண்டி உணருகிறார்கள் என்பதற்கு காரணம் உண்டு.  மழை என்பது இவ்வுலகிற்கு மிக முக்கியமானது. எல்லா ஜீவ ராசிகளுக்கும் மழை இன்றியமையாதது.

அப்பேர்பட்ட மழை ஒரு பருவம் நின்றால் கூட முதலாவதாக விவசாயம் பாதிக்கும். விவசாயம் பாதித்தால் உண்ண உணவு கிடைக்காது.

இரண்டாவதாக காட்டில் மழை பெய்யவில்லை என்றால் ஆறுகளில் தண்ணீர் வரத்து பாதிக்கும். ஏனெனில் காடுகளில் உள்ள மரங்களே மழை நீரை வேர்களில் தேக்கி பிடித்து பின்பு ஆறாக கொடுக்கும். (குறள் 742: மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்) . ஆற்றில் நீர் வரத்து பாதித்தால் அதனால் பல இன்னல்கள் வரும் 1) ஆற்றை நம்பிய விவசாயம் பாதிக்கும், உணவு உற்பத்தி பாதிக்கும் 2) ஆற்றையும் மழையும் மட்டும் நம்பிய ஏரி குளங்கள் வற்றிப்போகும். ஆதலால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

பருவம் தவறாமல் பெய்யும் மழையால் இவ்வுலகம் இயங்குகிறது. நிலைபெற்று இருக்கிறது. இல்லையேல் இவ்வுலகம் இந்த நிலையில் செழிப்பாக இருக்காது. ஆகவே மழை இவ்வுலகிற்கு ஒரு மிக பெரிய கொடை என்கிறார் திருவள்ளுவர்.

சம்பந்தர் தேவாரத்தில் “பெய்தவன் பெருமழை உலகம் உய்யச்செய்தவன்” என்று கூறப்பட்டுளதையும் கவனிக்கவேண்டும். “அமிழ்துதிகழ் கருவிய கணமழை” என்று வரும் பதிற்றுப்பத்து பாடலும் மழையினை அமிழ்தென கூறியதும் கவனிக்கத்தக்கது.  "இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" (புறம் 70).

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.).

மணக்குடவர் உரை
மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை உலகிற்குச் சாவாமருந்து என்று கருதப்பெறுந்தன்மையது.

உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறித்தலால் இங்கு இடவாகுபெயர். அமிழ்தம் என்றது சாவா மருந்தாகிய இருவகையுணவை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசிதகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இருமருந்து எனப்பெறும்.

"இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" (புறம் 70). நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. ஆயினும், உயிர்கட்கெல்லாம் பிணிமூப்புச் சாக்காடிருத்தலால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கினவனைச் சாவினின்று தப்பினான் என்று கூறும் வழக்கைக் காண்க.

அமிழ்தம் என்னும் சொல் சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும்.

அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம் "(மணி. 28: 116). அவிழ்து -
அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர்.

நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு, நீர்.

மருமம் - (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு.

பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம் அமுது என்னும் சொற்களின் ஒருபுடையொப்புமையினாலும், அமுது என்னும் சொல்லும் பாலைக் குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால்.

அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ்வடிவை அ+ம்ருத என்று பிரித்து, சாவை (மரணத்தை)த் தவிர்ப்பது என்று பொருளுறுத்தி, அதற்கேற்பத் தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங் கட்டிவிட்டனர் வடமொழியாளர்.

இங்ஙனங்கட்டினும், மீண்டும் அது தென்சொல் திரிபேயாதல் காண்க.

அல் (எதிர்மறை முன்னெட்டு) - அ. ஒ. நோ : நல் - ந. மடி - மரி - ம்ரு (வ.) - ம்ருத, ம்ருதி, ம்ருத்யு (சாவு).

தேவர் அமுதமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவரமுதம் என்னும் இல்பொருளை உவமையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென உணர்க.

மு.வ உரை
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மரணமிலாப் பெருவாழ்வை மழையே தரும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்) 
வானத்தில்  அமுதம்  அது  இருக்குதென்று
           வழிவழியாய்  முன்னோர்கள்  சொல்லித் தந்தார்
போனால்த்தான்  கிடைக்கும்  என்றும் அவரே  சொன்னார்
           பொய்யென்று  சிலர்  அதனை  எதிர்த்தும் நின்றார்
ஆனால்  நம்  வள்ளுவரோ  தெளிவு தந்தார்
           அறிவு  தந்தார  நந்தமையே  உணர வைத்தார
வான்  தானாய்  தீங்கின்றி  வழங்குகின்ற
           வளர் மழை தான்  உயிர்க்கெல்லாம்  அமுதமென்றார்

நீர்வள மேலாண்மை (நன்றி: கீற்று - மு.நாகேந்திர பிரபு)
விவரங்கள்
    எழுத்தாளர்: மு.நாகேந்திர பிரபு
    தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
    பிரிவு: புவி அறிவியல்
    வெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2014

நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம் - 18
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; - 20
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே!
…………… இவண் தள்ளா தோரே! - 30 - புறநானூறு 18 (18-30)

இறுதிப் பொருள் : அதனால் வேந்தே! சிறிதும் புறம் தள்ளாது; நிலத்தில் பயிர்கள் செழித்து வளர நீர்ப்பெருக்கு இருக்க வேண்டும். எனவே நீர்நிலை பெருகுமாறு குளங்கள் போன்றவற்றை தோண்டி அமைப்பாயாக. இவ்வாறு செய்பவனே புகழ்பெற்ற மன்னனாக விளங்குவார்கள். பாடியவர் : புலவர் குட புலவியனார், பாடப்பெற்றவர் : தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

“வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோன் உயரும்” - ‘வரப்புயர’ - ஒளவையார் - பொருள்

“நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய என ஆளும் வேந்தே” - புறநானூறு 58:10

300மனித உடலானது 55% முதல் 78% வரையில் நீரால் ஆனது. இரத்தத்தில் 90% நீர் தான் உள்ளது. ஆண்கள் நாளொன்றுக்குக் குறைந்தது 2 லிட்டர் நீரும், பெண்கள் 2.7 லிட்டர் நீரும் குடிப்பது அவசியமானது. ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் நேஷனல் ரிஸேர்ச் கவுன்சில்’ 3.7 லிட்டர் நீரைப் பரிந்துரைக்கிறது. ‘ஒரு நாளில் ஒரு மனிதன் குடிக்க, துவைக்க, சமைக்க மற்றும் உடல்நலன் பேண என குறைந்தது 50 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறான்’ என்று ‘ஐக்கிய நாடுகள் சபை’ குறிக்கிறது.

தாவர வேர்த்தூவிகள் வேர் மற்றும் மண்ணிற்கு இடையே அயனிகளின் செறிவு வேறுபாட்டைத் தோற்றுவிக்கின்றன. இச்செறிவு வேறுபாட்டை நீக்க நீரானது மண்ணிலிருந்து வேருக்குள் செல்கிறது. இன்னொரு வகையாக செல்களில் நீர்மூலக் கூறுகள் ஆவியாதலினால் உருவாகும் ஓர் இழுவிசை வேர்களின் சைலத்திலிருந்து நீரை மிக உயரத்திற்கு மேலேற்றுகிறது. நீராவிப் போக்கானது வேரிலிருந்து நீர் மற்றும் கனிமப் பொருட்களை உறிஞ்சுவதற்கும், அவற்றினை இலைகள் வரை மேல்நோக்கிக் கடத்துவதற்கும் உதவுகிறது. வெப்பநிலையைச் சீராக்கிக்கொள்ள, கழிவை வெளியேற்ற, ஆற்றலை உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்ல மனித உயிர்களும், மரம் செடி கொடிகளும் நீரை உட்கொள்ளவும், உறிஞ்சவும் செய்கின்றன. நீர் உடலிலிருந்து மலம், சிறுநீர், வியர்வை, மூச்சுக்காற்று இவற்றின் மூலமாக வெளியேறுகிறது. ஒரு மனிதனால் தண்ணீர் இல்லாமல் 7 நாட்கள் வரை மட்டுமே உயிரோடு இருக்க முடியும். உணவுப் பொருட்களில் பால் 87 சதவீதம், உருளைக்கிழங்கு 75 சதவீதம், முட்டை 73 சதவீதம் என எல்லாமும் ஒரு குறிப்பிட்ட சதவீத நீரைத் தன்னுள்ளாக கொண்டுள்ளன.

‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனம், சரத்து - 25’-ன் படி “ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவனது குடும்பத்தின் சுகாதாரமான வாழ்க்கை மேம்படவும் அடிப்படையான ஒரே தேவை - சுத்தமான தண்ணீர். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும்”. ‘ஆசிய மனித உரிமைகள் சாசனம் - 1998, பிரிவு 7:1’-ன் படி “ஒவ்வொரு தனி மனிதரும் வாழ்க்கைக்கான அடிப்படை தேவையைப் பெறுவதற்கும், சுரண்டல் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு பெறவும் உரிமை உடையவர்கள். கல்வி அறிவு பெறவும், உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் வீடு ஆகியன பெறவும், நலமான இருத்தலுக்கான மருத்துவ உதவி பெறவும் உரிமை உண்டு. தொழில்நுட்பம் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எல்லாத் தனி மனிதர்களுக்கும், மனித குழுக்களுக்கும் உரிமை உண்டு”. ‘இந்திய அரசியலமைப்பின்’படி “தண்ணீர் பொதுச்சொத்து. சாதி, மத, பொருளாதார, இனப் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது”. ‘ஐ.நா சபையின் முன்னால் தலைவர் கோபி அன்னன்’ அளித்த செய்தி ஒன்றில் “தண்ணீரைப் பயன்படுத்துவோர் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படும்போது, காசு இல்லை என்ற காரணத்தால் ஒருவன் தாகத்தால் தவித்துச் சாக வேண்டிய துர்பாக்கியம் நேர்ந்துவிடக் கூடாது. ஆனால், இன்றைய உலகச் சூழ்நிலை அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகக்குறைந்த வருமானமுள்ள மக்கள் தான் தண்ணீருக்கு அதிக விலை தர வேண்டி உள்ளது”.

வனமாக விளங்கும் மலைகளில் சருகுகள் நிறைந்து காணப்படும். சருகுகள் பெய்யும் மழையை உள்வாங்கி சிறிது சிறிதாகக் கசிகிறது. இந்த சொட்டுக்கள் ஒன்று சேர்ந்து நீரோடையாகி அவை இணைந்து அருவியாய் சமவெளியை அடைந்து நதியாகிறது. மேலும் நதிகள் பனி உருகுவதாலும் பிறக்கின்றன. சரிவை ஒட்டி ஓடும் வேகம் இருக்கிறது. நீரில் கார்பன்-டை-ஆக்ஸைடு கரைவதால் ஏற்படும் சிறிய அளவு கார்பானிக் அமிலம் பாறைகளையும் கரைக்கும் திறன் உடையது. ஓடும் பாதையில் இருக்கும் மணலையும், பாறைகளையும் அரித்துவிடுவதால் படுகைகள் பிறக்கின்றன. நீரின் தன்மை மட்டத்தில் பரவி இருப்பது, நிலத்தின் சிறு கீறல் கூட நாளடைவில் ஆற்றின் வழித்தடமாக மாற்றம் பெறலாம்.

நாடாளுமன்ற (2006) செய்திக் குறிப்பில் “இந்தியாவில் நீரியல் சுழ‌ற்சி மூலம் கிடைக்கும் மொத்த மழை அளவு 4 இலட்சம் கோடி கனமீட்டராகும். அதில் 1,12,300 கோடி கனமீட்டர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்கிறது. ‘தமிழக பொதுப்பணித்துறை’ செய்திக் குறிப்பில் “மழை மூலம் பெறப்படும் நீரில் 170 டி.எம்.சி. (1 டி.எம்.சி = ஆயிரம் மில்லியன் கன அடி நீர்) தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது” என்கிறது. தமிழக அரசு 2009- ல் முன்வைத்த ‘வெள்ள நீர் கால்வாய்த் திட்டத்தின்’ செய்திக் குறிப்பில் “மழைக் காலங்களில் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது” என்று குறித்து இருக்கிறது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, ‘சொட்டு சொட்டாக நீர் சிந்துமானால் அதன் அளவு ஒரு நாளைக்கு 60 லிட்டர் என்ற அளவில் இருக்கும்’ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

‘இரண்டு கி.மீட்டர் பரப்பளவில் 6 குளங்கள் வெட்டிவிட்டேன்; இனி அதற்குள்ளாக விழும் அவ்வளவு தண்ணீரையும் சேர்க்கப்போகிறேன்’ என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமானதோ அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். தமிழகத்தைப் பொருத்தவரையில் இனி நதிநீரை நம்பி இருப்பது பயன் தராதது; அதற்கு மாற்றான வளம் தான் மழை வளம்.

நீரில் கொதித்தல் செயல் நீர் முழுமையாக நிகழ்வதாகவும், ஆவியாதல் என்பது நீரின் மேற்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகவும் இருக்கிறது. மழை நீர் ஆங்காங்கு குட்டைகளாகத் தேங்கிவிடுவதால் ஏற்படும் அதிகப்படியான ஆவியாகும் பரப்பைக் குறைக்க வேண்டும். நீர்பரப்பு குறையும்போது வெப்ப ஏற்பின் அளவு குறைந்து ஆவியாதலும் குறைகிறது. குழியான மற்றும் பரந்த பரப்பில் என இருநிலைகளிலும் வைக்கப்பட்ட சம அளவிலான நீரில் முதலில் ஆவியாவது பரந்த பரப்பிலான நீராகவே இருக்கும். இனி மழை நீருக்கு என்று தனியாக ஒரு வழித்தடத்தை உருவாக்க முடியாது. இருக்கும் ஒரே இணைப்பு சாக்கடைகள் தான். சாக்கடைத் தடங்களை மழை நீருக்குப் பயன்படுத்த முடிவு செய்து சாக்கடைகளை சாலையில் விட்டுவிடவும் முடியாது. ஒரு புது முயற்சி ‘இரண்டையும் இணைத்து நிலத்தடி நீராக மாற்றிப் பயன்படுத்தப் பார்ப்போம்’.

இயல்பான தட்ப வெப்ப நிலையில் நீரானது சுவையற்ற, மணமற்றதொரு திரவமாகும். குறைந்த அளவுகளில் நீர் நிறமற்றுத் தோன்றினாலும், நீரும் பனிக்கட்டியும் உள்ளார்ந்த வெளிர் நீல நிறத்தை உடையவை. நீர் பலவிதமான பொருட்களைக் கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது. உப்புக்கள், சர்க்கரைகள், அமிலங்கள், காரங்கள், வாயுக்களில் ஆக்சிஜன் மற்றும் கரியமில வாயு மற்றும் புரதங்கள், டி.என்.ஏ, கூட்டுச்சர்க்கரைகள் (பாலிசேக்கரைடுகள்) என செல்களின் அனைத்து கூறுகளும் நீரில் எளிதில் கரையும் தன்மையுடையனவாக இருக்கின்றன. நீர் ஒரு மிகச்சிறந்த கரைப்பான்; கரைக்கப்படும் பொருள் எதுவாயினும் நீர் முழுமைக்குமாக கரைகிறது. கரைக்கப்படும் பொருளின் அளவுக்கு ஏற்ப கரைக்கும் பொருள் ஆதிக்கத்தை இழக்கிறது. கடலில் கரைத்த பெருங்காயம் என்பது அதன் பரப்பின் வலிமையைப் பறைசாற்றுவதே. சாக்கடைகளை மட்டும் சேர்க்க போவதில்லை, அதோடு மழை நீரை அதிகமாக சேர்க்கப்போகிறோம். கூவம் நதியைக் கரைபுரண்டு ஓடச்செய்தால் அது ‘சாக்கடை’ என்ற பெயரை இழந்துவிடும். சமைத்ததில் உப்பு கொஞ்சம் அதிகமாய் போனால் உணவென்ன குப்பைக்கா போகிற‌து? அளவைக் குறைக்க கூடுதல் தண்ணீர்; அவ்வளவு தான். மழை நீர் சேகரிப்பு அமைப்புகளில் நிரம்பிய நீர் போக உபரி நீரும் சாக்கடைகள் வாயிலாக அருகில் உள்ள நீர்நிலைகளில் சேர்க்கப்பட வேண்டும். குடிநீருக்கு, விவசாயத்திற்கு, பிற தேவைகளுக்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நீர்நிலைகள் பிரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்துள்ளன. அதே போன்றதொரு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீரை உறிஞ்சுவதில் ஒரு காய்ந்த மற்றும் ஈரமான பஞ்சுக்கு இடையேயான வித்தியாசம் உணர்த்திவிடும், இன்று மேற்கொள்ளும் பல முறைகள் நிரந்தரத் தீர்வாகாது என்பதற்கு. இந்த வித்தியாசம் இல்லாமல் இருந்துவிடுமானால், என்றைக்கும் ஏரி குளங்கள் வற்றியே இருக்கும். எந்த ஒரு பருப்பொருளும் தனக்கென தனித்த நீர் ஏற்புத்திறனைக் கொண்டிருக்கும். பூமியிலிருந்து எடுக்கப்படும்போது தான் அதில் நிரப்பப்படுவதற்கு இடம் கிடைக்கும். நிலத்துக்குக் கீழே 250 அடி ஆழத்தில் நீர் கிடைத்தாலும் ஊற்றும் நீரையெல்லாம் பூமி உடனே உறிஞ்சி விடாது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவது என்பது மிகச் சரியான அணுகுமுறை.

பொதுவாகவே பூமியின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் நிரம்பியது. அடிப்படையில் பாதுகாப்பானதும், எளிமையானதும் என்பதால் பள்ளமான பகுதிகள் கண்டறியப்பட்டு அவைகள் நீர்நிலைகளாக மாற்றப்பட வேண்டும்.

“அறையும் பொறையும் மணந்த தலைய
எண்ணான் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர் சிறுகுளம்………” - புறநானூறு 118 : 1-3 வரிகள்
பொருள் : பள்ளமான பகுதிகளே அன்றி அறைகளையும், பொறைகளையும் இடையிடையே கரையாக பிறை வடிவில் குளம் அமைத்துள்ள பாங்கு.

“கான்யாற்(று) அடைகரை ஊர் இனி(து)…......” - இனியவை நாற்பது - 4
பொருள் : ஆற்றுநீர் அடைகரைக்கண் உள்ள ஊர் வாழ்வதற்கு இனிது.

“குளந்தொட்டு வளம்பெருக்கிப்” - 284 - பட்டினப்பாலை
பொருள் : தூர்ந்துபோன குளங்களைத் தூர்வாறி நீர்வளம் பெருக்கி நாட்டின் செல்வ வளத்தைப் பெருக செய்தான். பாடியவர் : கடியலூர் உருத்திரங்கண்ணனார், பாடப்பட்டதன் பொருள் : சோழன் செய்த சிறப்பு.

நீர்நிலைகளின் கரைகளைக் கான்கிரிட் கொண்டு பலப்படுத்துவதை விடவும் வண்டல் மண், மணல் மற்றும் களிமண் (1:3:2) என்ற விகிதத்தில் அமைப்பதும்; அதன் உச்சியை அகலப்படுத்தி மரம், செடிகளை வளர்ப்பதும் கரையைப் பலமுள்ளதாகவும், வேகமாக நிலத்தடி நீராக மாற வாய்ப்புள்ளதுமான முறையாகும்.

முதல் நிலை சுத்திகரிப்பில் சிறியது பெரியதான மூன்றடுக்கு சல்லடைப் பரப்பில் கழிவுநீரை ஓடவிட்டு அதன் கடைசியில் சிறிய அளவிலான வலைப்பின்னலை 450 குறுக்காக அமைத்து அதில் எஞ்சியவை நீர்நிலைக்கு வெளியே சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்த வேண்டும். வண்டல் மண்ணில் 10-40 சதவீதம் வரை நுண்துளைகள் உள்ளன. சராசரியாக 100 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் உள்ள மணல்பரப்பானது தனக்குள் சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் திறன் கொண்டது. களிமண் பரப்பில் நீர் கசிவது மெதுவாக இருக்கும். குப்பைக் கூள‌ங்களோ, பாசிகளோ அல்லது நீர்த் தாவரங்களோ மேற்பரப்பை மூடி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தெளிந்த வண்ணம் இருக்கும்போது நீர்த் தாவரங்கள் சூரிய ஒளியைப் பெற்று நீருக்குள்ளேயே வாழ முடிகிறது. ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் என எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று நிரம்பும்போது அதன் உபரி நீர் மற்றொன்றை அடைய வழி ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைக்கான வழித்தடங்களைச் சென்டிமீட்டர் சென்டிமீட்டராக ஆழப்படுத்திக்கொண்டே போக வேண்டும் என்று அறிவுரையெல்லாம் சொல்லப்போவதில்லை. இயற்கை அதை ஏற்கனவே நேர்த்தியாக செய்துவிட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர்நிலைகளைச் சென்று அடைவதில் செயற்கையாக தடைசெய்த வழிகளைக் களைந்துவிட்டால் போதும்.

நீர்நிலைகளை ஒட்டி ஆழ்துளைக் கிணறு அமைத்து அதிலிருந்து நீர் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். தரிசாக விடப்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயம் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். மரம், செடி, கொடிகள் மண்ணை இலகாக்குகின்றன. அதனால் மேல்மட்ட நீர் எளிதாக உரிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது. ஆறுகளிலிருந்து மணல் அள்ளுவதற்கு மாற்றாக கடலிலிருந்து அள்ளுவதும், ஆற்றின் கழிமுகங்களை ஒட்டி அள்ளுவதும் சரியானதாக இருக்கும். பிரம்மாண்டமான அளவுக்கு ஆழப்படுத்தப்படுவதால் அதனை நீர்வழிப்பாதைகளாகவும் பயன்படுத்த முடியும். நதிகளுக்கு குறுக்காக தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். திடக்கழிவுகளைப் பெருக்கி குவிப்பதற்கு மாற்றாக பொறுக்கி எடுத்து மறுசுழ‌ற்சிக்கு உற்படுத்த வேண்டும். திறந்த முறை சாக்கடை என்பது பாதாள சாக்கடைகளை விட கையாள சரியானது.

பெட்டாஷ் படிகாரமும், சுண்ணாம்பும் சேர்க்கப்படும்போது அவை நீரில் உள்ள மாசுப்பொருட்களைத் திரித்துவிடுகின்றன. இதனால் கசடுகள் ஒன்று சேர்ந்து துகள்களாகி நீர்க்கலனின் அடியில் படிந்துவிடுகின்றன. தேத்தாங்கொட்டை கன உலோகங்களை (காட்மீயம், காரியம்) பிரிக்கிறது மற்றும் அவசியமில்லாத தாதுக்களை நீக்குகிறது. வண்டல் படிமமானது துரு மற்றும் கால்சியம் கார்பனேட் உள்ளிட்ட துகள்களை நீக்குகிறது. கழிவு நீரில் இருக்கும் உப்பை வேலிக்காத்தான் முள் பிரித்தெடுக்கிறது. ரோகுக்கெண்டை, மிர்கால்கெண்டை மற்றும் கட்லாகெண்டை வகையான மீன்கள் கழிவு நீரில் உள்ள கசடுகளை உண்டு வளர்கின்றன. வாழைப்பழ தோல் உலோக நச்சுப் பொருட்களைத் தன்னகத்தே உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதாக்கதிர்கள் பாக்டீரியா, ஈகோலி வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் தன்மை கொண்டது. திலேப்பியா மொசாம்பிகா, கம்பூசியா, சன்னா ஸ்ட்ரையேட்டஸ் வகையான மீன்கள் மனிதர்களுக்கு நோய் பரப்பும் நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன. வாத்துகள் நீர்நிலைகளில் மீன் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் பூச்சி மற்றும் நத்தையினங்களை உட்கொள்கின்றன.

குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன் (PPM) என்ற அளவிலும், மற்ற பயன்பாடுகளில் 1-2 பார்ட் பெர் மில்லியன் (PPM) என்ற அளவிலும் பயன்படுத்தப்படும் குளோரின் நோய் ஏற்படுத்தும் உயிரிகளைக் கொல்கிறது. முருங்கை விதை நீரில் உள்ள தேவையற்ற பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்ற நுண்ணியிர்களையும் மற்றும் வேதிப்பொருட்களை அழிக்கிறது. உமியின் சாம்பல் (Activated Carbon) நோய் உண்டாக்கும் கிரிமிகளை அழித்து நீரைத் தூய்மைப்படுத்துகிறது. அவரை விதை நீரின் கலங்கல் தன்மையை நீக்குகிறது. ஒரு கார்பன் (கரி) வடிகட்டி கரிம வேதிப்பொருட்களை மற்றும் குளோரினை நீக்குகிறது. வெட்டி வேர் நீரில் உள்ள துர்நாற்றத்தை நீக்குகிறது. கரி (குறிப்பாக சவுக்கு) நீரில் உள்ள நச்சு வாயுக்களை மற்றும் துர்நாற்றத்தை உறிஞ்சுவதுடன் மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. பசுவின் சாணம் துர்நாற்றத்தைப் போக்குகிறது. தண்ணீரில் காணப்படும் நோய்பரப்பும் பாக்டீரியா கிருமிகளை தெளிவாக வடிகட்டி தண்ணீரைச் சுத்தப்படுத்தும் திறன் மணலுக்கு உண்டு. ஒரு இடத்தில் தேக்கி வைக்கப்படும் மணலின் அளவுக்கேற்ப அந்த இடத்தில் காணப்படும் தண்ணீர் மிகவும் தெளிவாகவும், நோய் தொற்று கிருமிகள் நீங்கியும் காணப்படும். வேம்பு வயிற்றுப் பூச்சியை நீக்குகிறது மற்றும் மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது.

‘மலம்’ என்பது செரிக்கப்படாத உணவே. ‘கழிவு’ என்று சொல்வதும் கூட ‘எஞ்சியது’ என்ற பொருளையே தரும். செரிமான‌ம் என்பது மூலக்கூறுகளைப் பிரித்து தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளும் உயிரியல் செயலே. ‘அசுத்தம்’ என்று சொல்வதெல்லாம் ‘சுத்தம்’ என்று சொல்லியதிலிருந்து வந்தது. ‘மலம்’ என்பது நேற்று சாப்பிட்டதன் ‘எச்சம்’; அது எப்படி அசுத்தமாகும்? மலமும், அழுகிய உடலும் உணவே என்பதை ஏற்க மனிதர்கள் வேண்டுமானால் மறுக்கலாம். மலத்தில் வாழும் புழுக்களும், வேறு சில உயிர்களும் அதனை அருவறுப்பு என்று ஒதுங்கி நிற்பதில்லை. தன் கழிவைத் தானே உண்பதில் பலனில்லை. காரணம் அந்த குறித்த உயிரைப் பொருத்தவரையில் மட்டும் அது வெறும் சக்கை. அதில் கிரகிக்க வேறு சில சத்துக்களும் இருக்கிறன. அதனால் தான் மற்ற உயிர்கள் அதை எடுத்துக்கொள்கின்றன. கழித்த உயிரினுக்கே அது வாசனையானால்; ஈர்க்கும் என்பதால் தான் ஒதுக்கும் நாற்றம் என்றாகி இருக்கிறது. ஒதுக்கப்படுவதும் ஏற்கப்படுவதும் கூட கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்தது. தான் உணவாக ஏற்றுக்கொண்ட ஒன்று கிடைக்காமல் போனது என்றானபின் வேறு ஏதோ ஒன்றைத் தன் உணவுப்பட்டியலில் எடுத்துக்கொள்கிறது உயிர். கொஞ்சம் தத்துவார்த்தமாக சொல்வதானால் அழகில்லை, அருவருப்பு, அசுத்தம் இப்படிப்பட்ட வார்த்தைகள் படைப்பில் இல்லை. கழிவுகள் எல்லாமே உணவாகிப்போகும் எனும்போது; ஏன் நீரில் கலந்திருக்கும் கழிவுகளை அவற்றை உண்ணும், உறிஞ்சும் உயிரினங்களை வளர்த்து நீக்கக்கூடாது? இயற்கை மிக மிக நேர்த்தியாக தன்னைக் கட்டமைத்து இருக்கிறது. கழிவுகளை இயற்கையின் வசம் விட்டு மறுசுழற்சி செய்வது தான் சரியான அணுகுமுறையே தவிர அதைத் தனிமைப்படுத்தி சேர்த்து வைப்பதெல்லாம் மடத்தனமே.

நடைமுறை கழிவு மேலாண்மை முறைகளில் ‘நிலத்தில் நிரப்புதல்’ (Land Fills) என்பது இராணுவம் தொடர்பான இடர்பாடுகளைத் தரும் கழிவுகளும், கதிர்வீச்சுக் கழிவுகளும் பாதுகாப்பாக பூமிக்கு அடியில் சேமிக்கப்படுவதாகும். நிலத்தடியில் உள்ள மிகவும் ஆழமான குழிகளுக்குள் பல்வேறு வேதிப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து குறுக்கு வினையில் ஈடுபடவிடாமல் மிக அதிக அளவில் கதிர்வீசும் திறன்கொண்ட கழிவுகள் தனித்தனியே சேமிக்கப்படுகின்றன. பின்னர் இக்குழிகள் காற்றும் நீரும் புகமுடியாத படிக்கு களிமண் கொண்டு மூடப்படுகின்றன. குழியினுள் ஏதாவது கசிவு ஏற்பட்டால் அதைச் சீர்செய்வதற்குக் கால்வாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து இக்குழிகள் கண்காணிக்கப்படுகிறது. ‘ஆழ்க்கிணறு பாய்ச்சல்’ (Deep Well Injection) முறையில் துகள்கள், துளைகள் கொண்ட மண்பரப்புடைய பூமியின் மிக ஆழத்துள், நிலத்தடி நீருக்கும் கீழே ஆழக்கிணறுகள் தோண்டப்பட்டு இடர்பாடுகள் தரும் திரவக்கழிவுகள் செலுத்தப்படுகின்றன. இவை மண்ணிலுள்ள துகள்கள் மற்றும் துளைகட்குள் நுழைந்து காலம் காலமாகத் தனிமைப் படுத்தப்பட்டு அப்படியே இருக்கும். ‘மேற்பரப்பில் மூடிவைத்தல்’ (Surface Impoundments) முறையில் தரையில் சிறுகுளங்கள் வெட்டப்பட்டு அவற்றினுள் சிறிதளவே வேதியக் கழிவுகளைக் கொண்ட ஏராளமான திரவக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. குளத்தின் தரைப்பகுதி நீர்க்கசிவு ஏற்படாவண்ணம் நன்கு பூசப்பட்டுவிடுவதால், நீர்க்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படும்போது, நீர் ஆவியாகிவிடும்; திடக்கழிவுகள் தரைப்பரப்பில் தொடர்ந்து படிந்துவிடும்.



‘எரித்து சாம்பலாக்கல்’ (Incineration) முறையில் மனித உடல் கழிவுகள், தூக்கி எறியப்படும் மருந்துகள், நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள், இரத்தம், சீழ், விலங்குகளின் கழிவுகள், நுண்ணுயிரியல் மற்றும் உயிரிய தொழில்நுட்பக் கழிவுகள் போன்ற இடர்ப்பாடு தரும் உயிரிய மருத்துவக் கழிவுகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. ‘உயிரியத் தீர்வு (Bioremediation) முறையில் இயற்கையிலேயே காணப்படும் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள், கன உலோகங்கள் போன்ற கழிவுகளைச் சிதைக்கவோ அல்லது உறிஞ்சிக்கொள்ளவோ அல்லது அதன் நச்சுத்தன்மையைக் குறைக்கவோ செய்கின்றன. தாவரத்தீர்வு முறையாக பல தாவரங்கள் மாசுக்களை ஒற்றி எடுத்துக்கொள்ள/ உறிஞ்சிக்கொள்ள பயன்படுகின்றன. மரபுப் பொறியியல் முறை மூலம் தூண்டப்படும் நுண்ணுயிரிகள் (Genetically Engineered Micro Organism) ஏராளமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு தீங்குதரும் அணுக்கதிர்களையும், பாதரசம், குரோமியம், காட்மியம் போன்ற கன உலோகங்களையும் நீக்க பயன்படுத்தப்படுகின்றன. ஜிப்ரல்லா பியூசேரியம் (Gibberella Fusarium) என்ற தாவரத்தின் மூலம் சயனைடுகள் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன. சூப்பர் பக் (Super Bug) என்று அழைக்கப்படும் சூடோமோனாஸ் (Pseudomonas) பாக்டீரியா பல்வேறு தீங்கு தரும் கூட்டுப்பொருட்களையும், எண்ணெய்க் கழிவுகளையும் சிதைக்கின்றன.

உயிரினங்கள் தனக்குத் தேவையான புரதம், நியூக்ளிக் அமிலத்தைத் தயாரிக்கத் தேவையான முக்கிய தனிமம் நைட்ரஜன். வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் இருந்தாலும் அவை அம்மோனியா, அமினோ அமிலங்கள் அல்லது நைட்ரேட்டுகளாக மாற்றப்படாதவரை உயிர்கள் நேரிடையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ‘நைட்ரஜன் நிலைநிறுத்தப்படுதலில்’ அஸோட்டோபாக்டர், ரைசோபியம் (வேர்முண்டு பாக்டீரியா), நீலப்பச்சைப் பாசிகளான ஆசிலட்டோலரியா, அனபீனா, நாஸ்டாக் வகை உயிரினங்களும்; ‘அம்மோனியாவை நிறுத்துவதில்’ பாசில்லஸ், ரமோஸஸ் வகை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற உயிரினங்களும்; ‘நைட்ரேட்டாதலில்’ நைட்ரோசோமோனாஸ், நைட்ரோபாக்டர் வகையான உயிர்களும்; ‘நைட்ரஜன் வெளியேற்றலில்’ சூடோமோனாஸ் என்ற உயிரினமும் பங்கெடுக்கிறன. மேலும் பாக்டீரியாக்கள் கார்பன், ஆக்சிஜன், மற்றும் சல்பர் போன்ற தனிமங்களின் சுழற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இறந்த தாவர மற்றும் விலங்குகளின் உடலில் உள்ள சிக்கலான புரதங்களை அம்மோனியா, நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகளாக மாற்றுகின்றன. பாக்டீரியாக்கள் உயிரியல் துப்புரவாளர்களாகச் செயல்பட்டு கரிமச் சேர்மங்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கார்பன் மூலக்கூறுகள், கரியமில வாயுவாக மாற்றம் அடைவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. விண்வெளிப் பயணங்களில் வெளியிடப்படும் கரியமில வாயு, பிற கழிவுகளை நீக்கவும் மற்றும் சிறுநீரை சிதைக்கவும் குளோரெல்லா பைரெனோய்டோஸோ எனும் பாசி பயன்படுத்தப்படுகிறது.

ஸ்டெப்ரோமைசிஸ் கிரேசியஸ், பேசில்லஸ் சப்டிலிஸ் பாக்டீரியாக்கள் ‘ஸ்டெப்ரோ மைசின் பாசிட்ராசின்’ என்ற எதிர்மருந்தின் உற்பத்தியிலும்; பெனிசிலியம் நொட்டேட்டம், பெனிசிலியம் கிரைசோஜீனம் பாக்டீரியாக்கள் ‘பெனிசிலின்’ என்ற எதிர்மருந்தின் உற்பத்தியில் பயன்படுகிறது. பாசில்லஸ் மெகாதீரியம் என்ற பாக்டீரியா தேயிலை, புகையிலை, காப்பிக் கொட்டைகள், கோக்கோ ஆகியவற்றிற்கு ‘நொதித்தலின் மூலம் நறுமணத்தைக்’ கொடுக்கிறது. பேசில்லஸ் லேக்டிஸ் என்ற லாக்டிக் அமில பாக்டீரியா ‘பாலைத் தயிராக’ மாற்றுகிறது. ஆசட்டோபாக்டர் அசெட்டி என்ற பாக்டீரியா நொதித்தல் செயலால் ‘சர்க்கரைக் கரைசலிலிருந்து வினிகரைத்’ தயாரிக்கிறது. கிலாஸ்டிரிடியம் அசட்டோ பூட்டிலிக்கம் என்ற பாக்டீரியா ‘சர்க்கரை பாகிலிருந்து ஆல்கஹால் மற்றும் மீத்தைல் ஆல்கஹால்’ உற்பத்தி செய்கிறது. ஆஸ்பெர்ஜில்லஸ் நைகர் என்ற பூஞ்சை ‘நொதித்தலின் மூலம் ஆக்சாலிக் அமிலத்தை’ உற்பத்தி செய்கிறது. சாக்கடலுக்கு அடியில் உப்பை உணவாக உட்கொள்ளும் ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம், ட்யூனாலைலா எனும் நுண்ணுயிர்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளைத் தாமாக உற்பத்தி செய்து உணவைப் பெறுகின்றன. ஈஸ்ட், பாக்டீரியா மற்றும் சில நுண்ணுயிர்கள் ஆக்சிஜன் அற்ற நிலையில் எடுத்துக்கொள்ளும் உணவிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன.

ஒரு உயிரின் வாழ்க்கைச் சூழல் இமயமலையின் உச்சியில் இருக்கிறதா? தார் பாலைவனத்தின் மேற்பரப்பில் இருக்கிறதா? இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் இருக்கிறதா? எங்கு இருந்தாலும்; இயற்கை சூழலுக்கு ஏற்ப உயிர்களை தகவமைத்துக்கொள்ள அனுமதித்து இருக்கிறது. கற்பனைக்கும் எட்டாத அளவிலும், வகையிலும் நுண்ணுயிர்கள் பூமியில் வாழ்கின்றன. படைப்பில் அவசியமற்றது என்று எதுவுமே இல்லை. பரிணாமத்தின் தொடக்க கால உயிரினங்களாக இருப்பதால், அவை தான் பரிணாமத்தின் அடுத்த நிலை உயிர்களுக்கு உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கின்றன.

நீரை மின்னாற்பகுத்தலின் மூலம் 20000 சென்டிகிரேடு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தும்போது தனித்தனி தனிமங்களாக பிரிந்துவிடுகிறது என்கிறது அறிவியல். மரங்களும் சுவாசத்திற்கு ஆக்சிஜனையே எடுத்துக்கொள்கின்றன. மரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதாக இருந்தால் அது காற்று வெளியிலிருந்து பெற முயலாது. ஒன்று தேவையானது என்றான போதே பரிணாம‌ம் நாளடைவில் அதை சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய தகவமைப்பை உருவாக்கியிருக்கும். மரங்கள் தன் உணவு உற்பத்திக்குத் தேவையான ஹைட்ரஜனை நீரிலிருந்து எடுத்துக்கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றிலிருந்து கார்பனை எடுத்துக்கொண்டு எஞ்சிய ஆக்சிஜனை வெளியிட்டு விடுகிறது. மரம் எவ்வளவு வெப்பத்தை செலவிடுகிறது, நீரிலிருந்து ஹைட்ரஜனை, கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றிலிருந்து கார்பனை பிரித்து எடுத்துக்கொள்ள?

நீர்வாழ் உயிரினங்கள் நீரில் உள்ள ஆக்சிஸனை எடுத்துக்கொண்டு எஞ்சிய ஹைட்ரஜனைக் காற்றுக்குமிழ்களாக வெளியிடுகிறன. கடல்வாழ் உயிரினங்கள் எவ்வளவு வெப்பத்தை செலவிடுகின்றன, நீரிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து எடுத்துக்கொள்ள? சிறுவயதில் மீன்தொட்டியில் ஒவ்வொரு முறை தண்ணீர் மாற்றும் போதும் நீர் காய்ந்து போன கண்ணாடியின் ஓரங்களைக் கடுப்புடன் தேய்த்தெடுத்த ஞாபகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. அவ்வளவு வேகத்தில் நீர் புற வெப்பநிலையால் ஆவியாகிப் போய்விடுவதற்கு வாய்ப்பே இல்லை. நீர் மூலக்கூறுகளுக்கிடையேயே சர்க்கரை மூலக்கூறு அளவில் மாற்றமேயில்லாமல் கலக்கக்கூடியதாகும் எனும்போது வாயு நிலையில் அதன் இடைவெளிகளை மேலும் பல மூலக்கூறுகள் நிரப்பவே செய்யும். இயற்கையான ஒரு சூழலில், ஒரு சேர்மத்தின் மூலக்கூறு சமன்பாடு அதை நீர்மமாக செயல்பட வைக்கும்போது; அந்த நீர்மமானது வாயுநிலையை ஏற்கும்போது கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். மாற்றத்தைக் கொண்டிருக்கக் கூடியதான ஒன்று மாற்றமேயில்லாமல் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஒன்றாக மாறி நிற்காது. அது இவ்விதம் மாறாத போது, இது அவ்விதம் ஆகாது. எந்த ஒரு தனிமமும் இன்னொரு தனிமமாக மாறக் கூடியதாக கூட இயற்கை தன்னைக் கட்டமைத்துக்கொண்டு இருக்கலாம். நிரூபிக்கப்படவில்லை என்பதற்காக அது நிஜமாக இருக்காது என்று மறுக்க முடியாது.

வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு உயிரின உலகத்திற்கு அதாவது பசுந்தாவரங்களுக்குள் ஒளிச்சேர்க்கை மூலம் கார்போஹைட்ரேட்டுகள் (உணவு) தயாரிப்பதற்காக நுழைகிறது. தாவர உண்ணிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் சிறிய, பெரிய ஊன் உண்ணிகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு உணவூட்ட நிலையிலும் சுவாசச் செயல்பாடுகள் கரியமில வாயுவை வளிமண்டலத்திற்குத் திருப்பி அனுப்புகின்றன. இறந்த கரிமப்பொருள்களின் சிதைவு, படிம எரிபொருள்கள் எரிதல் மூலமாகவும் கரியமில வாயு வளிமண்டலத்திற்குத் திரும்புகிறது. எல்லா உயிரினங்களும் கார்பன் அணுக்களால் கட்டமைப்பு ஆனவையாக இருக்கிறது. இயற்கையின் எந்த ஒரு கூறும் சுழ‌ற்சிக்கு உட்படாமல் அப்படியே இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. இங்கு எதுவுமே தீர்ந்து போகாது; காரணம் எதுவும் செலவாகாது. ஒரு துளி நீரும் கூட இந்தப் பிரபஞ்சத்தில் புதிதாக வெளியிருந்து வந்து சேர்வதில்லை/ பிறப்பதில்லை. அக்காலத்திலும் நீர் நிலைகள் இருந்தன; மக்கள் தங்களின் தேவைகளுக்கு அவைகளைத் தான் நாடினர். நீரியல் சுழற்சி என்பது பிரபஞ்ச விதிகளுள் ஒன்றானது என்றானபோதே, என்றோ ஒருவர் வாய் கொப்பளித்த நீர் ஒருநாள் குடிநீராகும் என்ற உண்மை விளங்கும். இந்த பூமி உயிர் தோற்றத்திலிருந்து எண்ணிடங்காத கோடி உயிர்களை தன் கருவில் சுமந்து இருக்கிறது. அவைகள் உண்டதில் எஞ்சியதும், உருமாறி மலமானதும் இங்கே தான் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். வீழும் மழைத்துளி தரையில் விழும் முன்னே பிடித்து வைக்கப்படுவதில்லை. கோடான கோடி உயிர்களுக்கு இந்த பூமி வாழ்விடமாக இருக்கிறது. 11 நவம்பர் 2013 அன்று பாண்டிச்சேரியில் அந்த குறித்த மாமரத்தில் காய்த்த மாங்காய் தான் கடைசி; அதோடு தீர்ந்துவிட்டது என்று ஏதும் கணக்கு கிடையாது. பிறந்த எல்லா உயிர்க்கும் இங்கு இடமுண்டு, உணவும் உண்டு.

“ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
…………… வாழ உலகினில் பெய்திடாய்” - திருப்பாவை - 4
பொருள் : கடல் நீர் முழவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம்.

கடல் நீர் முகந்த கமஞ்சூல் எழிலி………” - கார்நாற்பது - 33
பொருள் : கடல்நீரை மேகம் உட்கொள்கிறது.

“கார்என்று பேர்படைத்தாய் ககனத்(து) உறும்போது;
நீர் என்று பேர்படைத்தாய் நீன்நிலத்தில் உற்றதன்பின்;” - காலமேகப் புலவர்
பொருள் : ஆகாயத்தில் இருக்கும்போது இதற்கு மேகம் என்று பெயர். மழையாக பூமியில் விழுந்த பிறகு இதற்கு நீர் என்று பெயர்.

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று”
- திருக்குறள் : வான்சிறப்பு - குறள் - 11
பொருள்:மழையால் உலகம் நிலைபெற்று வருவதால் மழையே அமிழ்தம் என்றுணர வேண்டும்.

பார்க்கும் அளவிற்கே பிரச்சனை பூதாகரமானதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை அப்படியே பூதாகரமானதாக இருந்துவிட்டாலும் அதற்குத் தீர்வும் அதே அளவில் இருக்க வேண்டும் என்று இல்லை. தண்ணீர் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது; தண்ணீர் அரசியலாக்கப்பட்டுவிட்டது; இவையாவும் அதன் உண்மைத் தன்மையை மறைத்துவிட்டன. இந்த தேசம் நீருக்காக அடித்துக்கொண்டு சாகக்கூடாது. தேவையே இயக்கத்தைத் தூண்டி விடுகிறது; ஆதனால் இயக்கம் தேவையை நோக்கியதாக இருக்கிறது. உயிர்த் தோற்றத்தையும், பரிணாமத்தையும் தொடங்கி வைத்தது மற்றவற்றிலிருந்து மாறுபட்டு செயல்பட்ட ஒன்றாகத் தான் இருக்கும். ‘இப்போது புலி புல்லைத் தின்னப்போகிறதா’ இல்லை ‘எனக்கான உணவு இல்லை’ என்று சொல்லி மடியப்போகிறதா? புலி நிச்சயமாகப் புல்லைத் தின்னும்; காரணம் அதைத் தான் இன்று பரிணாமம் என்ற பெயரில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஓர் இடத்தில் உயிர் வாழ்க்கை இருக்கிறது எனும்போதே வாழும் அவ்வுயிர் ஏதோ வளம் ஒன்றைப் பற்றி வாழ்கிறது என்பதையே குறிக்கிறது. இயற்கையை உணரும்போது நடப்பவை எல்லாம் சரியாக நடக்கிறது என்ற நம்பிக்கைப் பிறக்கிறது. இயற்கையை எல்லைக்குள் வைத்து மதிப்பிடாதீர்கள். நியதி என்பதும், எல்லை என்பதும் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது. இயற்கை நியதிக்கு உட்பட்டதாக இருக்கிறது; ஆனால் எல்லைக்குட்பட்டதாக இல்லை. நீ எவ்வளவு பெரிய முட்டாளாகவும் இரு, அதற்கு ஈடாக எந்த முட்டாள்தனத்தையும் கூட செய்துவிட்டுப் போ. இயற்கை தன் நிலையில் அதை சரிசெய்துவிடும். ஒன்றை அதன் இயல்பிலிருந்து மாற்றுவதற்குத் தான் முயற்சி தேவையே தவிர மீண்டும் அது தன் இயல்பிற்குத் திரும்ப முயற்சி தேவையில்லை. இயற்கையின் எந்தவொரு கூறையும் வரையறைக்குள் கொண்டு வந்து விட்டாலும் அதற்கு அடங்காததாக ஒன்றும் அதில் அடங்கி இருக்கிறது.

மேற்கோள் நூல்கள் : சமச்சீர் கல்வி புத்தகங்கள் : 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை மற்றும் 11 & 12.

- மு.நாகேந்திர பிரபு (nagendraprabu@gmail.com) 

வெப்பமயமாகும் பூமி  (நன்றி: ரமேஷ் - இலக்கிய சோலை)
கரியமிலவாயுவின் அளவு அதிகரித்துக்கொண்டே போக, இந்த பூமியானது நாளுக்கு நாள் வெப்பமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், உலகெங்கும் கால நிலைகள் கடுமையாக மாறி வருகின்றன. பருவம் பொய்த்துப் போகிறது என்று நொந்துகொள்வதில் அர்த்தம் இல்லை. எவ்வளவு நல்லவர்கள் இருந்தாலும் மாதம் மும்மாரி பொழியாமல் போகும்.

மழை இல்லாவிட்டால் அதன் கொடுமை என்னவென்பதை 1983-1985 வரை எத்தியோப்பியாவில் தலைவிரித்தாடிய பஞ்சம் பற்றிப் படித்தால் புரியும். இதனால், இறந்த மனித உயிர்களின் எண்ணிக்கை சுமார் 400,000. உணவில்லாமல் சாவு நடப்பது இந்த மனித குலத்திற்கே நேர்ந்த பேரவலம்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

என்று சொன்ன பாரதி பார்த்திருந்தால் என்ன பாடியிருப்பான்?

2011-ல் சோமாலியாவில் நிலவிய பஞ்சத்திற்கு மூலகாரணம் உலக வெப்பமயமாக்கம்தான் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். இனி வரும் காலங்களில் காற்றிலுள்ள கரியமிலவாயுவின் தாக்கத்தை கட்டுப் படுத்தினாலொழிய அங்கு இருக்கும் பஞ்சத்தை தவிர்ப்பது இயலாதது என்றும் கூறுகிறார்கள்.

வானம் பொய்க்காமல் குறித்த காலத்தில் மழை பெய்ய வேண்டுமென்றால், பருவ நிலை அபரிமிதமாக மாறக்கூடாது. அப்படி மாறாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்பமயமாக்கலைத் தடுக்க வேண்டும். புவி வெப்பமயமாக்கலைத் தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். அதுதான் ஒரே வழி.



அப்படி இல்லாத சூழ்நிலை விஞ்ஞானிகள் கண்டறிந்தபடி பஞ்சத்திற்கு அடிகோலும். பட்டினிச்சாவுகளைத் தடுக்கும் ஒரே வழி தேவையான அளவுக்கு உணவுப் பொருள்களை விளைவிப்பதுதான். அதனால், உயிர் வாழ உதவும் உணவுதான் நமக்கு அமிழ்தம்.  அந்த அமிழ்தத்தை தருவது பொய்யா மழை.


புவி வெப்பமயமாக்கலை விஞ்ஞானப் பூர்வமாக விளக்காவிட்டலும், அதன் தன்மையை அன்றே புரிந்து சொன்னவன் நம் செந்நாப்போதன். அவன் சொல்லுகிறான்;

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

வானத்தில் மேகமாய் நின்று, பொய்யாமல் பெய்து, உலகத்துக்கு கொடுத்து வரும் காரணத்தால், மழையை அமிழ்தமாக உணரலாம்.

உலகம் நிலைபெற வேண்டுமென்றால் உணவும், தண்ணீரும் அவசியம். அந்த இரண்டையும் தவறாமல் கொடுப்பது வானத்திலிருந்து பொய்யாமல் பெய்யும் மழை. அந்த மழைதான் நம்மை உணவின்றி சாகாமல் வாழச் செய்யும் அமிழ்தம். அதை உணருவோம் நாம்.

நின்று என்றால் பொய்யாமல் என்று அர்த்தம். இன்றைய சூழ்நிலையில் மரங்கள் இருந்தால்தான் மழை நின்று பெய்யும். அதனால் மரங்களை வளர்ப்போம் மழை பெறுவோம்.

English Meaning - As I taught a kid - Rajesh
The clouds in the sky stop and shower rain upon this world. Thereby, all the living organisms and humans are able to consume water, grew crops and consume food. Hence rain is realized/felt as nectar. Because, If the clouds stop for even one or few seasons and doesn't rain, it will result in drought. once all the food stocks exhaust, no living organism can survive. 

Questions that I ask to the kid
Is rain considered as nectar? Why?

இடும்பைக்கு இடும்பை படுப்பர்

குறள் 623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]

பொருள்
இடுக்கண் - இடுங்கு. + கண் - மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்படவரும்இரக்கம்; துன்பம், வறுமை
அழியாமை - அழிவின்மை; மனம்கலங்காமை.
இடுக்கணழியாமை (அதிகாரம்) - துன்பக்காலத்து மனங்கலங்காமை

பொருள்
இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.
இடும்பைக்கு  - துன்பத்திற்கு
இடும்பை - துன்பம்

படு -
4. paTu (paTa, paTTu) படு (பட, பட்டு) suffer; experience, feel, endure; formative of verbs of feeling from nouns
படுப்பர் - அச்சச்சோ தேவையில்லாமல் துன்பம் கொடுத்துவிட்டோமே என்று கவலை பெறும் அளவிற்கு துன்பம் கொடுப்பார்கள்.  துன்பம் கொடுக்க புதிய வழிகளில் அற்று
இடும்பைக்கு - துன்பம் நேரும் போது
இடும்பை படாஅதவர் – அளபெடை இலக்கணம் கூறினால் மட்டும் போதாது.  சிலர் இடும்பையை அரைவாசி, முக்கால்வாசி எதிர்த்து நிற்பர்.  முழுவதும் கடைசி வரை எதிர்த்து நில்லார்.  இவ்வாறு சிறு இடைவெளி விட்டாலும் இடும்பை வந்து தாக்கி விடும் என்பதற்காக இடும்பை ‘படாஅதவர்’ என்று நீட்டினார் திருவள்ளுவர்.  கடைசி வரை உறுதியுடன் இருப்பவர் என்பது பொருள்.

முழுப்பொருள்
(விதியால்) பல துன்பங்களை எதிர்கொள்கிறான் மனிதன். துன்பத்தின் நோக்கம் நம்மை துன்பத்தில் ஆழ்த்துவதே.  ஆதலால் ஒருவன் தான் கொண்ட குறிக்கொள்ளை அடைய முடியாமல் போய்விடும். நிம்மதி பறிப்போகும். ஒருவன் நினைத்த செயல்களை முடிக்க முடியாது. அதுவும் துன்பமே தரும். அத்துன்பத்தை நாம் அடைந்தால் அதுவே அத்துன்பத்திற்கு வெற்றி. அதற்கு தோல்வி என்பது நாம் துன்பம் படாமல் இருப்பது.

ஆதலால் அதனை வெற்றிப்பெற செய்யாமல் தோல்வி அடைய செய்து துன்ப படுத்துவதே சிறப்பாகும். அதாவது துன்பம் நமக்கு துன்பம் தரும் பொழுது ஐயோ துன்பம் வந்து விட்டதே என்று துன்பம் படாமல் இருக்க வேண்டும். துன்பத்தை எதிர்க்கொண்டு முன்னகர வேண்டும். இருப்பினும் துன்பம் நமக்கு பல்வேறு துன்பங்களை தரும். அதனையும் தாண்டி முன்னகர வேண்டும். அதற்கு நிலை குலையாத அசாத்திய நெஞ்சுரம் வேண்டும். அப்படி நாம் நடந்துக்கொண்டால், ஐயோ நாம் இவருக்கு துன்பம் கொடுக்க முடியவில்லையே என்று துன்பமே வருந்தும். நாம் நமது இலக்கை அடையலாம்.

ஆதலால் துன்பத்தின் தோல்வியே நமது வெற்றி. நமது வெற்றியே நமக்கு இனிமை என்று சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை
கம்பராமாயணத்தில் கையடைப்படலத்தில் (12), விசுவாமத்திரர் இராமனைத் தன் வேள்விக்குத் துணையாக தன்னுடன் அனுப்ப வேண்ட, தயரதன், அது மனதிற்கொப்பாமல், இராமன் பாலகன் என்றும் தாமே வந்து உதவுவதாகவும் கூறும் போது, “இடையூற்றிற் கிடையூறாய் யான்காப்பென்” என்று கூறுவான்.

இரண்டு எதிர்மறைகளைச் சொல்லி, ஒன்றின் உச்சத்தை நிறுத்துவது கவித்துவ வெளிப்பாடு. அதையே வள்ளுவர் இங்கு செய்கிறார். தமக்குத் துன்பம் வந்தபோது நிலை குலையாத நெஞ்சுரம் கொண்டு அதைத் தாங்குகின்றவர், தனக்கு வந்த துன்பத்துக்கே, தம்மால் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்னும் துன்பத்தைத் தருகின்றவர். முதலில் சொல்லப்பட்ட “இடும்பைக்கு” என்ற சொல், அதைச் செய்பவருக்கே ஆகிவந்தது. ஓசை நயத்துக்காகவே சொல்லப்பட்ட குறள். உண்யாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், சொல்லப்பட்ட ஒசை நயமே இடும்பையைப் போக்குகி நெஞ்சுரத்தைத் தருகிறதல்லவா?

பரிமேலழகர் உரை
இடும்பைக்கு இடும்பை படாஅதவர் - வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர் - அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர். (வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)

மணக்குடவர் உரை
துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர்.

இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இடும்பைக்கு இடும்பை படாதவர்-துன்பம் வருங்கால் துன்பப் படாதவர்; இடும்பை படுப்பர் - அத்துன் பத்திற்கே துன்பஞ் செய்வர்.

துன்பத்தின் நோக்கமே வருத்துதலாதலின், அத்துன்பத்திற்கு வருந்தாதவர் அதன் நோக்கத்தைத் தோற்கடித்தலால் அத்துன்பத்தையே வருத்துவர் என்றார். இதனால் துன்பத்தால் தடையுறாது வினை இனிது முடியும் என்பதாம். இதில் வந்துள்ளது சொற்பொருட்பின்வரு நிலையணி. வருகின்ற இரு குறளிலும் துன்பம் துன்பப்படும் என்பதற்கு இவ்வாறே உரைக்க.

மு.வ உரை
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

சாலமன் பாப்பையா உரை
வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
நல்லவரின் வீட்டுக்குள் துன்பம் வந்தால்
       நடக்கின்ற கதையதனை கொஞ்சம் கேட்போம்
வல்லதுவாய்த் துன்பமது கருதிச் சென்றால்
       வதை படுமாம் துன்பம் அவர் வீட்டிற்குள்ளே
நல்லதுவாய் வருவதெல்லாம் கருதுகின்ற
       நாயகரைத் துன்பம் அது என்ன செய்யும்
அல்லல் பட்டு அது அழுமாம் அய்யோ என்று
       அழகாகச் சொல்லுகின்றார் வள்ளுவனார்


குறட் கருத்து 2  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
துன்பம்  ஆடும்  ஆட்டத்திற்  களவேயில்லை
       துடிக்க  வைத்துப்  பார்க்கின்றது  பலரை  இங்கு
இன்பம்  கொண்டு  ஆடுகின்ற  ததுவோ  எங்கும்
       எக்காளம்  பாடி  பலர்  தன்னை  ஒய்த்து
தன் பிடியில்  மனிதர்  படும்  பாட்டில் அது
       தருக்குவதும்   நெருக்குவதும்  அய்யோ  அய்யோ
வன்ம  மது  கொண்டாற் போல்  மனிதர்களை
       வதைப்பதிலே  தன்  பெருமை  காக்கின்றது

என்ன  செய்ய  துன்பமது  துன்பம்  கொண்டு
       இடி பாடு  கொள்ளுகின்ற  இடங்கள் உண்டு
தன்னலமே யில்லாமல்  பிறருக்காகத்
       தான் உழைக்கும்  பெரியோரின்  வீட்டிற்குள்ளே
எந்த வித  ஆசைகளும்  இல்லாராகி
       இருப்பதிலே  நிறைவு கொள்வார்  தம்மிடத்தில்
வந்த துன்பம்  செயலற்று  வதையும் பட்டு
       வாய்  திறந்து  அது  அழுமாம்  துன்பம்  கொண்டு

(நன்றி கவிப்புயல் இனியவன்)

நன்றி: தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன்
இடும்பை படாஅதவர் – அளபெடை இலக்கணம் கூறினால் மட்டும் போதாது.  சிலர் இடும்பையை அரைவாசி, முக்கால்வாசி எதிர்த்து நிற்பர்.  முழுவதும் கடைசி வரை எதிர்த்து நில்லார்.  இவ்வாறு சிறு இடைவெளி விட்டாலும் இடும்பை வந்து தாக்கி விடும் என்பதற்காக இடும்பை ‘படாஅதவர்’ என்று நீட்டினார் திருவள்ளுவர்.  கடைசி வரை உறுதியுடன் இருப்பவர் என்பது பொருள்.

கடைசி வரை துன்பம் கண்டு துவண்டு விடாமல் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் ஆளுமைத் திறனையும் நூலில் நன்கு எடுத்தியம்பி உள்ளார்.
 

பொருள்:
மனித வாழ்வில் ஏற்படுகிற இடையூறுகள் ஒவ்வொன்றுமே துன்பங்களைக் கொடுக்கக்கூடியவைதான். அத்தகைய துன்பங்களைக் கண்டு கலங்காத மனிதர், அந்தத் துன்பத்தை தைரியத்துடன் எதிர்த்து நின்று போராடி முறியடித்து, துன்பத்துக்கே துன்பம் கொடுத்து வெற்றி அடைவார்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கைப் பயணத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு வேக வேகமாக முன்னேற முயற்சிக்கும்போது, நாம் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம். அந்தச் சிக்கலான தருணங்களில் எல்லாம் நம்மை நோக்கி எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், நாம் துணிவாக எதிர்கொண்டு வெற்றி காண வேண்டும்.

விளக்கம்:
1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு திருமணத்துக்குச் செல்வதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து ராமேசுவரத்துக்குச் சென்றேன். அப்பகுதியில் புயல் வரப் போவதாக தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருந்தார்கள். நான் ராமேசுவரத்தை அடைந்த அடுத்த நாள் கடும் புயல் தாக்கியது. அந்தப் புயல் 250 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தததாக ஞாபகம். அந்தப் புயலின் தாக்கத்தில் கடல் அலை ஊருக்குள் வந்துவிட்டது. ராமேசுவரம் ஊர் முழுவதும் கடல் நீர் சூழ்ந்தது.

ஒரு சிறு படகு மூலம் அனைவரையும் மீட்க எனது தந்தை முனைந்தார்கள். அந்தப் புயலில் எங்களுடைய படகுகளும், தோப்பில் இருந்த மரங்களும் கடல் அலையால் அடித்து செல்லப்பட்டன. ஆனாலும் புயலுக்குப் பின்னர் என் தந்தை, கொஞ்சமும் மனம் தளராமல் மீண்டும் படகு கட்டும் பணியை ஆரம்பித்துவிட்டார். அவரது அயராத கடின உழைப்பாலும் தளராத தன்னம்பிக்கையாலும் மீண்டும் எங்களுடைய படகு போக்குவரத்துத் தொழில் முடங்காமல் வளரத் தொடங்கியது.

நன்றி: விகடன் (டாக்டர் அப்துல் கலாம்)
''2030-ல் நிலவில் ஓர் இந்தியரை நடக்கவைப்பதுதான் இஸ்ரோவின் லட்சியம். ஒரு காலத்தில், நிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதே நமது லட்சியமாக இருந்தது'' - கலாம் விவரித்துச் சொல்லும்போது, அவர் முகத்தில் ஆயிரம் சூரியன் பிரகாசம். எளிமையாகத் தன் உரையைத் துவக்கினார் கலாம். ''உங்க எல்லாருக்கும் லட்சியம் இருக்கு... அந்த லட்சியத்தை எப்படி அடைவது? எந்த லட்சியமா இருந்தாலும், அதை அடைய நான்கு வழிகள் இருக்கின்றன. முதலாவது, சரியான இலக்கு இருக்க வேண்டும். இரண்டாவது, அந்த இலக்கை அற வழியில் அடைய வேண்டும். மூன்றாவது, அறிவைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். நான்காவது, விடா முயற்சியுடன் இலக்கை அடைய உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த நான்கையும் நீங்கள் கடைப்பிடித்தால், லட்சியம் நிச்சயம் உங்கள் கைகளில் வரும். திருவள்ளுவரின் மொழியில் சொன்னால், 'தோல்வியைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும்’. அந்தக் குறள் எதுன்னு தெரியுமா?'' என கலாம் கேள்வியுடன் மாணவர்களை எதிர்நோக்க,

'' இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்''

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவரான பி.கே.சரவணன் சொல்லி முடிக்க, கலாம் முகத்தில் சந்தோஷம்.

''2020-ல் நம் நாடு வளர்ந்த நாடாக மாற என்ன வேண்டும்?'' என்று கலாம் கேட்க, 'கடின உழைப்பு, கல்வி, தனி மனித ஒழுக்கம், ஒற்றுமை, நாட்டுப்பற்று’ என ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்ல,

''எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டீர்கள். அது என்ன தெரியுமா?'' என்று கேட்டுவிட்டு, கலாமே பதிலும் தருகிறார். 'I can do it, we can do it, India can do it'' என்றவர், சற்றே குரலை உயர்த்தி, ''எல்லா வளங்களும் நம் நாட்டில் இருக்கிறது; நம்மிடம் எது இல்லை? நம்மால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கைதான் இல்லை. அந்தத் தன்னம்பிக்கைதான் இப்போதைய உடனடித் தேவை'' என்றார்.

''நீங்கள் உங்களுக்காக வாழப்போகிறீர்களா, இல்லை... அனைவருக்காகவும் வாழப்போகிறீர்களா?'' என கலாம் கேள்வி எழுப்ப, ''எல்லோருக்காகவும்!''- கோரஸாகச் சொன்னார்கள் மாணவர்கள்.

''பல்ப் கண்டுபிடித்த எடிசன், டெலிபோன் கண்டுபிடித்த கிரஹாம் பெல், கப்பலில் போய்க்கொண்டு இருக்கும்போது, 'வானம் நீலமாக இருக்கிறது, கடலிலும் அந்த நீலம் பிரதிபலிக்கிறதே, ஏன்?’ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு, ராமன் விளைவை உருவாக்கிய சர்.சி.வி.ராமன் இவர்கள் எல்லாருமே தங்களின் தனித்துவத்தை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்தினார்கள். அதேபோல, நீங்கள் ஒரு தனித்துவத்தைக்கொண்டு இருக்க வேண்டும். யார் முடியாது என்று சொல்கிறார்களோ, அவர்களோடு பழகுவதைத் தவிர்த்துவிடுங்கள். யார் முடியும் என்று சொல்கிறார்களோ... அவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்!'' என்று தன் உரையை நிறைவு செய்தார்.

இடும்பைக்கு இடும்பை படாஅதவர்

நீங்கள் எந்தக் கோவிலுக்கும் சென்று இறைவனை வணங்க வேண்டாம், எந்த கடினமான தத்துவத்தையும் கற்க வேண்டாம், வாழ்வை உணர்வதற்காக எந்த விதமான கடுமையான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். ஏதாவது மூன்றே மூன்று திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதை வாழ்வின் எல்லாப் பொழுதும் கடைபிடித்தாலேயே போதும். வாழ்வின் ரகசியம் விளங்கிவிடும் என்று எனது நண்பர் திரு. மோகன் ரங்கன் அவர்கள் கூறுவார்.

சமீபத்தில் அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இடுக்கண் அழியாமையில் இருந்து 628-வது குறளின் சிறப்பை எனக்கு தெரிவித்தார். இப்படி யாராவது நமக்கு உரைத்துவிட்டால் அதன்மேல் ஆர்வம் வந்துவிடுமே. உடனே திருக்குறள் புத்தகத்தை தேடி அந்த அதிகாரம் முழுவதையும் படித்தேன்.

அதில் கீழ்க்காணும் குறள்கள் வருகின்றது.

628. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

இரண்டு குறள்களும் மேலோட்டமாக காண்கையில் ஒரே பொருளைத் தருவதாக உள்ளது. ஒரே கருத்தை வலியுறுத்துவதற்காக திருவள்ளுவர் இரண்டு குறள்களை வழங்கியிருக்கமாட்டார் என்பது என் எண்ணம்.

மேற்கூறிய எனது நண்பரிடம் இதுப்பற்றி வினவினேன். அவர் அளித்த பொருளை நான் புரிந்துக் கொண்ட அளவில் இதற்கு விளக்கம் அளிக்க முயற்சிக்கிறேன். குற்றம் இருப்பின் திருத்தவும்.

முதல் குறள் சொல்லுவது, துன்பத்தினால் வருந்துதல் இல்லாத ஒருவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்றால் அவன் இன்பம் என்று நினைத்து எதையும் தேடமாட்டான்., ஏற்றமும் சரிவும் ஒரே மலையில் இருப்பது போல் இடர் வருகையில் வாழ்வின் இயல்பாக அதையும் ஏற்றுக் கொள்வான்.

இரண்டாம் குறள் சொல்லுவது, தான் தேடாமலே வருகின்ற இன்பத்துள்ளும் இன்பத்தை அனுபவிக்க விரும்பாதவன், தானாக தேடாது வருகின்ற துன்பத்துள்ளும் துன்பத்தை உணரமாட்டான்.

முதல் குறள் இன்பம் தேடுதல் இலாது இருப்பதையும் அடுத்த குறள் தேடாது வருகின்ற இன்பத்தை நுகராது இருப்பதையும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இன்பத்தின் மறுபக்கமாக துன்பமும், துன்பத்தின் மறுபக்கமாக இன்பமும் இருப்பதை அதை வாழ்வின் இயல்பாகக் கற்றுணர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

இத்தகையவர்கள்தான் துன்பத்திற்கே துன்பத்தை அளிப்பவர்களாக இருக்கிறார்கள். இதோ அந்தக் குறள்:

623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

-ஸ்ரீசக்திப்ரியன் 

நன்றி: தினமலர் (டாக்டர் அப்துல் கலாம்) (முழு பேச்சு. ஆதலால். அடர்த்தப்பட்ட பத்தியை பார்க்கவும் இக்குறளின் மேற்க்கொள்ளுக்கு)
புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க
எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,
என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.

நண்பர்களே, இன்றைக்கு தினமலர் நடத்தும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் வந்து மாணவர்களாகிய உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்பிற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை வருடம் தோரும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். மாணவர்களை பரிச்சைக்கு தயார் படுத்தி, மேல்படிப்புக்கான வாய்ப்புகளை தெளிவு படுத்தி அதன் மூலம் மாணவர்களை தங்களது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்ககூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறீர்கள். மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் தினமலர் நாளிதழுக்கு எனது பாராட்டுக்கள். இந்த பணி ஒரு அரும் பெரும் பணியாகும். எனவே மாணவ நண்பர்களே, "புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க" என்ற தலைப்பில் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


வெற்றிக்கவிதை:
உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, ஒரு எழுச்சியுற்ற இளைய சமுதாயமாக திகழ்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரு உறுதி மொழி எடுத்துள்ளீர்கள் - அதாவது ஜெயித்துக்காட்டுவோம் என்ற உறுதி மொழிதான் அது. இளைஞர்களின் உள்ள உறுதியின் அடுத்த பக்கம் என்னால் முடியும் என்பதாகும். நான் ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த கவிதையை எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கவிதையின் மூலாதாரம் என்னவென்றால், என்னால் முடியும், நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்பதாகும். அந்த வெற்றிக்கு மூலகாரணமானவைகள் எவை. அறிவு, உழைப்பு, தைரியம் மற்றும் விடாமுயற்சி.

அன்பு மாணவச்செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் இந்த கவிதையை பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற உள்ள உறுதியுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக எனது இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்திய மாணவன் உலகத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல

நான் 11வது குடியரசுத்தலைவராக இருந்த பொழுது, ஜனாதிபதி மாளிகையில் தினமும் 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்பொழது ஒரு நாள். ஆந்திரபிரதேசத்தின் மலைவாழ் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன என்று கேட்டேன். வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். மாணவர்கள் ஒவ்வொருவரும் டாக்டராக, இன்ஜினியராக, ஐஅகு/ஐககு அதிகாரிகளாக, தொழில்முனைவோராக, ஆசிரியர்களாக, அரசியல் தலைவர்களாக ஆவோம் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு பையன் கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த், அவன் 9ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இரண்டு கண்களும் தெரியாது. உனக்கு என்ன ஆசை என்று அவனிடம் கேட்டேன். அவன் சொன்னான். கலாம் சார், நான் வாழ்க்கையில், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத்தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னான். எனக்கு அவனது உயர்ந்த எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவனிடம், நீ வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக உனக்கு 4 முக்கிய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன் என்றேன், அதாவது 4 விஷயங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை. அவை என்ன.

1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.
2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.
3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.

இந்த நான்கு குணங்களும் உனக்கு இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம் என்று அவனை வாழ்த்தினேன். ஸ்ரீகாந்த் அதோடு நிற்கவில்லை, அவன் கனவை நனவாக்க தினமும் விடாமுயற்சியுடன் உழைத்தான். அவன் 10ம் வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12ம் வகுப்பில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்றான். என்ன ஒரு விடாமுயற்சி, அவன் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியதாகம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machasssute Institute of Technology) யில் கணிணி தொழில் நுட்பிவியல் படிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தான்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள Lead India 2020 & GE Volunteers சேர்ந்து, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும் போது. பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்பு கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று தெரியவந்தது. உடனே ஸ்ரீகாந்த்MIT USக்கு எழுதினான், நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டி தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்வு பெற்றால் உங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றான். போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள் மத்தியில் பிறந்த பார்வையற்ற ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டான்.

எழுத்து தேர்வில் நான்காவதாக வந்தான். தனது விதிகளை தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு MIT தலைவணங்கியது. அவனுக்கு உடனே கணிணி தொழில்நுட்ப அறிவியல் துறையில் பட்டம் படிக்க அனுமதி வழங்கியது. என்ன ஒரு திடமான, தீர்க்கமான மனது ஸ்ரீகாந்திற்கு. அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பி வைத்த GE கம்பெனியின் மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், நீ படித்து முடித்தவுடன் உனக்கு வேலை ரெடியாக இருக்கிறது என்று. அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பினான். அதில் கடைசியாக எழுதியிருந்தான், ஒருவேளை எனக்கு பார்வையற்ற முதல் குடியரசுத்தலைவர் பதவியடைய முடியாவிட்டால் கண்டிப்பாக உங்களது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்று. இதில் இருந்து மாணவர்களாகிய உங்களுக்கு தெரிந்து கொள்ளும் அனுபவம் என்ன. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும் என்பது தான். மற்றொரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ வெற்றியடைய முடியும்

நான் DRDL, Hyderabadல் டைரக்டராக இருந்த போது, என்னிடம் கதிரேசன் என்பவர் எனது கார் டிரைவராக பணிபுரிந்தார். அப்பொழுது நீண்ட நேரம் பணியில் இருந்து விட்டு நான் காரில் ஏறி வீட்டுக்கு செல்ல வரும் பொழுதெல்லாம், கதிரேசன் எதாவது படித்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது ஒரு நாள் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார், சும்மா இருக்கும் நேரம் படித்தால் எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்குமே என்று படிக்கிறேன் என்று சொன்னார். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் 10ம் வகுப்பு வரை படித்ததாக சொன்னார். மேலும் படிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டேன். மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் என்னால் எப்படி படிக்க முடியும் என்று வினவினார். உடனே நான் அவரை திறந்தவெளி பள்ளி மூலம் +2 படிக்க ஏற்பாடு செய்தேன். அதை வெற்றிகரமாக முடித்தார். அதன் பின் B.A படித்தார். அப்புறம் நான் டெல்லி சென்று விட்டேன். அனால் அவர் படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படித்தார் M.A முடித்தார், MPhil முடித்தார், பின்பு அரசியல் அறிவியலில் Ph.D படித்து முடித்து டாக்டரேட் பட்டம் பெற்றார். இப்போது அவர் தமிழ்நாட்டில், மதுரைக்கு பக்கத்திலே மேலூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
நீ நீயாக இரு

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (குஞிச்ttஞுணூடிணஞ் ணிஞூ ஃடிஞ்டt), அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (கீச்ட்ச்ண உஞூஞூஞுஞிt) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். உங்களுடன் இன்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


எனது கிராமப்புர கல்வியின் அனுபவம்:
நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும், கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும், உங்களால் வெற்றி அடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் 1936 முதல் 1944 வரை நான் படித்த போது, கடற்கரையோரம், பாதி கட்டிடமும் பாதி கூரை வேய்ந்த நிலையில் தான் எங்கள் பள்ளி இருந்தது. இராமேஸ்வரம் தீவில் அது ஒரு பள்ளி தான். 400 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்றோம். இப்போது இருக்கும் பல பள்ளிகள் மாதிரி பல் வேறு வசதிகளும், கட்டிடங்களும் இல்லாத பள்ளி அது. அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எங்கள் கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயரும், அறிவியல் ஆசிரியர் திரு சிவசுப்பிரமணிய ஐயர் அவர்களும், மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப் பட்டவர்கள். நான் அப்பொழுது 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் கணிதத்தில் 40 மதிப்பெண்களுக்கும் கீழ் தான் எடுத்தார்கள். கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொன்னார், மற்ற பாடங்களில் 80க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள், ஏன் கணிதத்தில் மட்டும், மதிப்பெண் குறைகிறது என்று கேட்டார். மாணவர்கள் நிலையை அறிந்த கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொல்வார், எனது லட்சியம் எனது மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி படிக்கவைப்பது தான் என்று. அது மட்டுமல்ல, கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைப்பதும் எனது லட்சியம் தான் என்று சொல்வார்.உடனே அவர் மாணவர்கள் அனைவரையும் கணிதத்தில் எப்படி ஈடுபாட்டுடன் படிக்க வைப்பது என்று ஒரு திட்டத்தை தீட்டி, எங்களுக்கு கணிதத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். எங்களுக்கு என்று கணித சிறப்பு வகுப்பை ஏற்படுத்தினார், அதில் கணிதத்தை அனைத்து மாணவர்களுக்கும் புரியும் படி சிறப்பாக நடத்தினார். எங்களுக்குள் விவாதிக்க வைத்தார். அதன் மூலம், கணிதத்தை எங்களுக்கு எளிமையாக புரிய வைத்தார். அப்புறம் 10 முக்கியமான கணக்குகளை கொடுத்து எங்களை பரிச்சை எழுத வைத்தார். அந்த பரிச்சையில் 90 சதவிகிதம் மாணவர்கள் கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற வைத்தார். அதிலிருந்து கணிதத்தின் மீதிருந்த பயம் மாணவர்களை விட்டு அகன்றது. மகிழ்ச்சியால் அனைவரும் மிதந்தோம். பல வருடங்களுக்கு பிறகு தான், கணிதத்தில் அவர் விதைத்த நம்பிக்கை என்ற விதை எங்களுக்குள் எப்படி பரிணமித்தது என்பதை பற்றி அறிந்து கொண்டோம். எனவே நண்பர்களே, நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை, நாம் ஒவ்வொருவருக்கும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த நாட்டில் நம்மால் முடியும் என்ற எண்ணம் மலரும்.


அறிவு அற்றம் காக்கும்:
எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்கு பிடித்த ஓரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும் என்பதாகும்.


புத்தகம் படிப்பதின் அவசியம்:
ஒவ்வொரு குடும்பத்திலும், நல்ல அருமையான புத்தகங்கள் இருக்க வேண்டும். வீட்டில் ஒரு சிறு புத்தக நூலகம் அமைவது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே நண்பர்களே, நான் சொல்வதை திருப்பி சொல்வீர்களா.

அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்
அறிவு உன்னை மகானாக்கும்.

நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், அதை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும். புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான, தொடர்ந்த நண்பனாகும். சில நேரங்களில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நமக்கு முன்பே பிறந்ததாகும், நமது வாழ்க்கைப்பயணத்தில் அது நம்முடன் கூடவே வரும், அது மட்டுமல்ல தலைமுறை தலைமுறையாக அது நம் அடுத்த தலைமுறையோடும் தொடர்ந்து வரும். எனது இளமைக்காலத்தில் சென்னை மூர் மார்க்கெட்டில் நான் ஒரு புத்தகம் வாங்கினேன். அதன் பெயர் "Light from many lamps", அதை "Watson Lillian Eichler" என்பவர் எழுதியிருந்தார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக அது எனக்கு உற்ற தோழனாக இருந்து வருகிறது. அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்ததினால் அதை பல தடவைகள் பைண்ட் பண்ண வேண்டியதாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் கஷ்டமான, துன்பமான சூழ்நிலை நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த புத்தகம் அரும்பெரும் மனிதர்களின் எண்ணங்களை கொண்டு கண்ணீரை அது துடைக்கிறது. எப்பொழுதெல்லாம் அளவில்லா மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் அது மனதை ஒரு நிலைப்படுத்தி, சமன்படுத்தி எண்ணத்தை வரைமுறைப்படுத்துகிறது.


மனசாட்சியின் மாட்சி:
சமீபத்தில் திரு சமர்பண் எழுதிய "Tiya: A Parrot?s Journey Home" என்ற புத்தகத்தை படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை, எனக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஓரு புத்தகம் தான் இந்த புத்தகம். தியா என்ற இந்த புத்தகம் மனசாட்சியை பற்றியதாக இருப்பதால் நாம் ஓவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் திரு சமர்பண். எப்படி நல் மனசாட்சி கொண்ட ஓரு அருமையான பச்சைக்கிளியின் வாழ்வு, தியாவின் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான் அது.கோபம் விவேகத்திற்கு அழகல்ல. இதை பச்சைக்கிளி மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை, ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஓவ்வொரு வாசகரும் உணர்வார்கள். என்னை கவர்ந்த ஓரு முக்கியமான செய்தி என்னவென்றால்.

எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,
என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.
புத்தகமும் சிறு வயதில் அரும்பெரும் எண்ணங்களும்

நண்பர்களே, புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்துப்பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும், நல்ல புத்தகங்களின் மூலம் படித்து, கற்று தேர்ந்தால் தான், நாம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாறமுடியும். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தொலைக்காட்சிகள் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், எழுத்து, படிப்பு அதிகமாக இருந்தாலும், நாம் தினமும் ஒரு அரை மணிநேரமாவது ஒதுக்கி நல்ல புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பிறரைக் குறித்து மட்டும் ஆராய்பவர் சாதாரண மனிதர். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவரே கல்விமான்...... ஒவ்வொருவரும் கல்விமானாக முயல வேண்டும். கல்வியின் நோக்கம் மதிப்பெண்களையும், வேலை வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் உண்மையான நோக்கம்....... உளப்பூர்வ விவேகத்தினூடே ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களது வாழ்க்கையின் இரண்டாவது அதிசயம் என்று எதைச் சொல்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு. அதாவது, அவரது தனது 9வது வயதில் Mச்ஞ்ணஞுtடிண்ட் பற்றி அவர் கற்றுக்கொண்டது தான் அவரது வாழ்வின் முதல் அதிசயம். ஐன்ஸ்டீனின் அப்பா அவருக்கு ஒரு காம்பஸ்ஸை தரும் வரை நகரும் ஒரு பொருளை நகர்த்துவது வேறு ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி என்று தான் நினைத்திருந்தாராம். தனது 12 வது வயதில் அவரது ஆசிரியர் ஒரு புத்தகம் கொடுத்தார். அந்த புத்தகம் தான் Max Talmud எழுதிய Euclidean Plain Geometry என்ற புத்தகமாகும். அந்த புத்தகத்தை அவர் "Holy Geometry Book" என்று சொல்லுவார். அந்த புத்தகத்தை படித்தது தான் ஐன்ஸ்டீனின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டாவது அதிசயம் என்று கூறுகிறார். உண்மையான அர்த்தத்தை நோக்கி, அதனுடன் ஐன்ஸ்டீன் கலந்து விட்டார். மிகப்பெரிய ஆய்வுக்கூடமோ, உபகரணங்களோ இல்லாத சூழ்நிலையிலும், அவர் தனது உள் மனதின் எண்ணத்தின் சக்தியை கொண்டே, உலகலாவிய உண்மையை கண்டுணர்ந்தார். கணித்ததின் கடினமான விடை தெரியாத புதிர்கள் தான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்தது. அத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள் தான். எனவே நண்பர்களே, புதுமை என்பது உலகின் இயல்பில் பயணிப்பவர்களால் உருப்பெறுவதில்லை. உலகின் சராசரி போக்கிலிருந்து முரண்பட்டு தனித்து சிந்திப்பவர்களே புதுமையைப் புஷ்பிக்கிறார்கள்.

ஸ்ரீநிவாச இராமானுஜம் அவர்கள் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கணித மேதை, அவருக்கு இயற்கையாகவே கணித்தில் திறமை வாய்க்கப்பெற்றிருந்தார். அவரது 13வது வயதில் அவர் S.L. Loney GÊv¯ Advanced Trigonometry என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து, தானே தியரங்களும், அல்காரிதங்களும் படைத்தார். பள்ளியில் யாருக்கும் இல்லாத வகையில் கணிதத்தில் தனித்துவம் பெற்று விளங்கினார். கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வியடைந்தார். அனால் கணித வாழ்வில், உலக மேதையாகி வெற்றியடைந்தார். அதாவது நண்பர்களே, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்க கற்றுக் கொள்வது தான் உங்களை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும். சற்றும் எதிர்பார்த்திராத விஷயங்கள் எதிர்படுவதே எதார்த்தம்.


வெற்றி என்பது இறுதிப்புள்ளி....:
தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்..
மன உறுதியுடன் இடைப்புள்ளிகளை
தோல்வியடையச் செய்து உன்னால் வெற்றியடைய முடியும்.வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்விகளைக் கொண்டாட கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் தோல்விகள் தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. நம் பயணத்தை முழுமைப் பெறச் செய்பவை.

திருவள்ளுவர் சொன்னது போல்

இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு
இடும்பை படா தவர்.

எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற்றதினால் தான், அப்படிப்பட்ட ஒரு தனித்திறமை அவருக்கு கணிதத்தில் கிட்டியது. அந்த திறமை அவருக்கு புத்தகம் படித்ததினால் மெருகேற்றப்பட்டு பட்டை தீட்டிய வைரமாக விளங்கியது. இன்றைக்கும் அவரது எண் கணிதம், அறிவியலை, தொழில் நுட்பத்தை செம்மைப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

புதிய சிந்தனைகளுடன் படி:எனவே மாணவர்களே, இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் பாட புத்தகம் மட்டும் படிப்பது உங்களை கல்வியின் அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்லு ம். ஆனால் அது சம்பந்தமாக, பல்வேறு புத்தகங்களை நூல் நிலையங்களுக்கு சென்று படித்தால், உங்களது சந்தேகங்கள் நிவர்த்தியாகும். அடிப்படை கணிதம், அடிப்படை அறிவியலில் நீங்கள் பல்வேறு புத்தங்களை படித்து தேர்ந்து விட்டீர்கள் என்றால், பின்பு மேல் படிப்பு உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மனப்பாடம் பண்ணுவது ஒரு அறிவியல் தத்துவத்தை, கணித சூத்திரத்தை, தீர்வுக்கான முறையை உங்கள் மனதில் பதிய வைக்காது. ஒவ்வொரு பாடத்தையும் மூன்று முறையாவது ஆழப் படித்து, உங்கள் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் விவாதித்தீர்கள் என்றால், அது உங்கள் மனதை விட்டு அகலாது. கேள்விகளுக்கு பதில் சொல்லி தெளிவாக்கினீர்கள் என்றால், அது உங்களது வாழ்க்கைக்கும் நினைவிருக்கும்.

நான் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது, எனது தமிழ் ஆசிரியர் திரு பரமேஸ்வரன் அவர்களும், கணித ஆசிரியர் இராமகிருஷ்ணன் அவர்களும், வகுப்பு எடுக்கும் போதெல்லாம், சொல்கிற பாடங்களை, நான் அன்றே, அந்த பாடங்களை ஒரு தடவை என்னுடைய நோட் புத்தக்த்தில் அந்த இரவே என் கையால் எழுதி முடித்துவிடுவேன். இந்த பழக்கம், கல்லூரியிலும் நீடித்த்து. தமிழிலும், கணித்த்திலும் பல தடவைகள் ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் வகைகள் பல சமயங்களில், தமிழில் 90 சதவிகிதம் எடுத்திருக்கிறேன். கணிதத்தில் 100 சதவிதம் எடுப்பேன். இதிலிருந்து நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், ஆசிரியர் சொல்வதை புரிந்து அதை பாடமாக எழுதவேண்டும், அது மனதில் என்றென்றும் பதிந்து விடும்.

எனவே, ஆசிரியர் சொல்லித்தருவது, உங்களுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவது மட்டுமே. ஒவ்வொரு பாடத்தின் முதல் நிலை அறிமுகம் முடிந்தவுடன். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, அந்த பாடத்தின் ஒவ்வொரு பகுதியையும், மாணவர்கள் குழு அவர்களது கற்பனைத்திறத்தோடு, பல்வேறு புத்தகங்களின் துணை கொண்டு, பள்ளியில் விவாதிக்க வேண்டும். கேள்வி கேட்டு மாணவர்களே அதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி ஒவ்வொரு பாடத்தையும் செய்து பாருங்கள், எந்த படிப்பும் கஷ்டமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையை பள்ளிகளில், வீடுகளில், பள்ளி விடுதிகளில் ஏற்படுத்த வேண்டும். அந்த சூழ்நிலைதான் உங்களை அறிவார்ந்தவர்களாக மாற்றும்.

எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள், அதானல் பெற்ற அறிவை விவாதித்து தெளிவு படுத்தினீர்கள் என்றால் உங்கள் இலட்சியம் நிச்சயம் ஜெயிக்கும்.


கனவு காணுங்கள்!
அப்துல் கலாமின் சில பொன் மொழிகள்.கனவு காணுங்கள். அவற்றை நனவாக்ககடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்... நம்மால் முடியும்... இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.
* முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்வந்தது என விமர்சிப்பர்.
* மழை வந்தால் பறவைகள் எல்லாம்பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து,மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.
* அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால், திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகிடைக்கிறது.

40 டாக்டர் பட்டங்கள்:
ஒரு டாக்டர் பட்டம் பெறுவதே அரிதான காரியம். ஆனால், அப்துல் கலாமின் உயரிய பணிகளை பாராட்டி உலகம் முழுவதும் இருந்து 40 பல்கலை., சார்பில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
தேசத்தின் மீது நேசம்ஜனாதிபதி, விஞ்ஞானி என பன்முகமனிதராக இருந்த அப்துல் கலாம், தேசப்பற்றுமிக்கவராக இருந்தார். இந்தியாவின் மிகப் பெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயை தனது 'ரோல்மாடலாக' கொண்டு செயல்பட்டார்.

Thirukkural - Management - Managing Stress - Laughter far Stress Reduction
Laugh at your troubles. Those who are not troubled by troubles, affirms Kural 623, will trouble their troubles so that their troubles will disappear. This is Valluvar's version of managing troubles. One of the best ways to manage our troubles is to trouble our troubles. This is also the quality of a winner.

Those whom grief cannot grieve 
Will grieve grief.

Friday, July 22, 2016

தன்நெஞ் சறிவது பொய்யற்க

குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன் நெஞ்சு - தன்னுடைய மனம்/ நெஞ்சம் (பிறர் அறியாதது)
அறிவது - அறிந்துக்கொள்வது / அறிவது / தெளிந்துக்கொள்வது / உண்மையானது
பொய்யற்க - (அதனை) பிறர் அறியவில்லையே என்று எண்ணி பொய்யினை கூறாதே
பொய்த்தபின் - மீறி பொய் சொன்னால், அதன் பின்
தன் நெஞ்சே - தன்னுடைய நெஞ்சமே
தன்னைச் சுடும் - குற்ற உணர்ச்சியால் தன்னை சுட்டெரிக்கும் நெருப்பாக ஆகிவிடும்

முழுப்பொருள்
பல உண்மைகள் எல்லோருக்குமே தெரிந்து இருக்கும். ஆதலால் பொய் சொன்னாலும் மற்றவர்கள் சுட்டிக்காட்டி தகுந்த தண்டனை கொடுத்து ஒருவனை அழித்து விடுவர்.

ஆனால் பிறருக்கு தெரியாத சில உண்மைகள் தனக்கு மட்டும் தெரிந்த சில உண்மைகள் பல நேரம் அமையும். குறிப்பாக குடும்பங்களில், அலுவலங்களில், நட்பு வட்டாரத்தில். அத்தகைய நேரங்களில் பிறருக்கு தெரியாதே எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிற்றே என்று எண்ணாமல் உண்மையை சொல்லுக. பொய்யை சொல்லாதே, உண்மையை மறைக்காதே.

மீறி உண்மையை மறைத்தாலோ பொய்யை கூறினாலோ, பொய் சொன்னாதற்காக தன்னுடைய மனமே தன்னை நெருப்பாய் சுட்டு எரித்து விடும். மன நிம்மதியை அழித்து விடும்.

ஆக வாய்மை மட்டும் மொழிக.


குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்ற சொலவாடையை நினைவில் கொள்க

அறநெறிச்சாரப்பாடல் (206),
தன்னைத்தன் நெஞ்சம் கரியாகத் தானடக்கிற் 
பின்னைத்தான் எய்தா நலனில்லை” என்று இதே கருத்தை ஒட்டி கூறுகிறது.

“அறிகரி பொய்த்தலின் ஆகுமோ வதுவே” (நற் 196:9)
“அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை” (குறுந் 184:1)

மேலும்: அஷோக் உரை

"Above all, do not lie to yourself." — Fyodor Dostoyevsky

வசுஷேணர் மண்ணிலிருந்து எழுந்து மூச்சுலகை அடைந்தபோது விம்மி அழுதுகொண்டிருந்தார். மூச்சுலகில் அவரை எதிர்கொண்ட கந்தர்வனாகிய சுகாலன் “அழுதபடிதான் நீங்கள் இங்கு வரமுடியும் அரசே, வருக!” என வரவேற்றான்.நான் ஏன் இத்தனை துயர்கொண்டிருக்கிறேன்?” என்று வசுஷேணர் கேட்டார். “நீங்கள் காம்பு கனிந்து உதிரவில்லை” என்று சுகாலன் சொன்னான். “ஏன்?” என்று வசுஷேணர் மீண்டும் கேட்டார். “களம்கொண்டு செல்லும் அம்புகள் முற்றொழியாமல் பாசறை திரும்புபவர்களுக்கு போர் முடிவதேயில்லை” என்றான் சுகாலன். அவர் பெருமூச்சுடன் “என்னால் எதையும் வகுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.
.......
.......
"ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.
===
மேற்சொன்ன வரிகளை வாசித்தால் நமக்கு மற்றொன்றும் புரியும். நாம் நமது முழு ஆற்றலுக்கு செயல்புரியவில்லை என்றால், பின்னாநாட்களில் நாம் வருந்துவோம்

பரிமேலழகர் உரை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க- ஒருவன் தன் நெஞ்சு அறிந்த தொன்றைப் பிறர் அறியவில்லை யென்று கருதிப்பொய் சொல்லா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும்-பொய் சொன்னானாயின், அதனை யறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.

"நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை." (கொன்றை.54) முக்கரணவினைக ளெல்லாவற்றையும் நெஞ்சு அறிவதனாலேயே அதற்கு மனச்சான்று என்று பெயர். மனச்சான்று உடனிருந்துரைக்கவும் அதை மறுத்துப் பொய் சொல்வது கொடிய தென்பதை யுணர்த்தவே, "நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்." என்றார் உலகநாதர். 'சுடும்' என்றதினால், மனச்சான்று குத்தியுணர்த்தி மன நோவை யுண்டுபண்ணுவது மட்டுமன்றி, தெய்வச் சான்றாக நின்று வெளிப்படுத்தி அரசன் தண்டனையையும் அடைவிக்கும் என்பது பெறப்படும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: தன்னெஞ்சு அறிந்தது பொய்யற்க - தன் மனச் சான்று அறிந்ததனை அறிந்ததற்கு மாறாகக் கூறற்க ; பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னை சுடும் - அறிந்ததற்கு மாறாகக் கூறிய பின்னர்த் தன் மனச்சான்றே தன்னை வருத்தும்.

அகலம்: தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடியே கூறுதல் வாய்மை என்றும், அறிந்ததற்கு மாறாகக் கூறுதல் பொய்ம்மை என்றும், பொய்ம்மை கூறுவதால் இன்னது விளையு மென்றும் கூறினார். ‘நெஞ்சு’ ஆகு பெயர், அதன் சான்றுக்கு ஆயினமையால். மனச் சான்று - மனத்தின்கண் சான்றாய் நிற்கும் அறிவு. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அறிவது’. ‘அறிந்தது’ என்பது பொருத்தமான பொருளைத் தருதலானும், இன்னோசை பயத்தலாலானும், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. பரிமேலழகர் இக் குறளை மூன்றாங் குறளாகவும், இரண்டு, மூன்றாம் குறள்களை முறையே ஒன்று, இரண்டாம் குறள்களாகவும் கொண்டனர். இக் குறள் வாய்மைக்கு விதி கூறுகின்றமையாலும், இரண்டு மற்றும் மூன்றாம் குறள்கள் முறையே வாய்மைக்கு விலக்கும் பொய்மைக்கு விலக்கும் கூறுகின்ற மையாலும் இது முதற் குறளாகவும், அவை இரண்டு, மூன்றாம் குறள்களாகவும் அமைக்கப்பட்டன.

கருத்து:தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடி வெளியிடுதல் வாய்மை.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பொய் சொன்னால் மனச்சாட்சி துன்புறுத்தும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
பொய்  கூறி  வாழ்ந்திடலாம்  என்று  எண்ணும்
             பொறுப்பற்றோர் தனைப் பார்த்து  வள்ளுவரும்
சொல்கின்றார்  ஒரு  செய்தி  ஆகா   ஆகா
             சோர  உணர்வுள்ளோர்கள்  உணர்வதற்காய்
எல்லார்க்கும்  தெரியாதே  பொய்கள்  சொல்லி
             ஏய்த்ததுவாய்  நினைக்கின்றீர் அய்யோ  பாவம்
உள்ளம்  உம்  உள்ளம்  அப்பொய்யைக்  கொண்டு
             உமைச் சுட்டு  உமைச்சுட்டுக்  கொன்றே  போடும்

Thirukkural - Management - Ethical Behavior
Valluvar would have anticipated that people would take undue advantages of his thought in Kural 291 
and has warned us immediately with another Kural, 293. The Kural says: 

Lie not against your conscience 
Lest it burn you.

One should not tell harmful or hurtful lies by deliberately knowing that that sort of lie would cause trouble for both the person who tells and the person who receives. That sort of lie disturbs the conscience of the person who tells. If we tell a lie consciously,  our consciousness will hurt us forever. In other words, telling a lie should not make us feel guilty. If telling a lie ends in regret for the person, that act becomes unethical.

Let us be honest with ourselves as we are
living our life.

English Meaning - As I taught a kid - Rajesh
Your heart knows the lies that your saying, your insincerity, your dishonesty etc. Hence, don't tell lies, don't be dishonest, don't be insincere because your heart itself will burn you with guilt. You cannot escape from your heart/conscience

Questions that I ask to the kid
1) What will burn your heart?
2) Your heart knows it is wrong. What should you do or don't do? why?
3) Your heart doesn't knows it is wrong. What should you do or don't do? why?

Tuesday, July 19, 2016

இரப்பன் இரப்பாரை எல்லாம்

குறள் 1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன்-இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)

இரப்பன்- யாசகம் செய்வேன்
இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள்
எல்லாம் - எல்லோரிடமும்
இரப்பின் -  மற்றவர்களிடம் யாசகம் செய்வது
கரப்பு -  மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.
கரப்பார் - வஞ்சகம் செய்வோர்
இரவன்மின் - யாசகம் செய்ய வேண்டாம்
என்று - என்று

முழுப்பொருள்
ஒருவர் வறுமையில் யாசகம் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் யாரிடம் சென்று யாசகம் செய்வது என்பதில் ஒரு அளவுகோல் வேண்டும். அதாவது எல்லோரிடமும் யாசகம் செய்யக் கூடாது. யாசகம் என்று வந்தால் மற்றவரை ஏமாற்றுவார் பலர் உள்ளனர். அவர்கள் பலவகையாக ஏமாற்றுவார்கள். உதாரணமாக 1) என்னிடம் பணம்/ பொருள்/ உணவு/ யாசகம் வேண்டி வந்த பொருள் இல்லை என்று பொய் சொல்லுவார்கள் 2) அதிக வட்டிக்கு பணம் கொடுப்பார்கள் 3) ஏமாற்றி பத்திரம் எழுதிக்கொள்வார்க்ள்.  இவர்கள் யாசகம் வேண்டி வந்தவர்களை வஞ்சிப்பார்கள்.  

வறுமையில் வாட வேண்டிய நிலை வந்தாலும் தயவு செய்து இத்தகைய வஞ்சகர்களிடம் யாசகம் செய்யாதீர் என்று வேண்டுகிறார் திருவள்ளுவர்.

“கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறும் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே” (சம்பந்தர்.கோவலூர் வீரட்டம் 2)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - யாது சொல்லி? எனின், நுமக்கு இரக்கவேணடுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.)

மணக்குடவர் உரை
பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ள நின்றேன்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி.

இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இரப்பின்-இன்றியமையாமை பற்றி இரக்கநேரின்; கரப்பார் இரவன்மின் என்று-தம்மிடமுள்ளதை யில்லையென்று ஒளிப்பாரை மட்டும் இரக்கவே வேண்டாமென்று; இரப்பாரை எல்லாம் இரப்பன்-இவ்வுலகில் இரப்பாரையெல்லாம் நான் இரந்து வேண்டிக்கொள்கின்றேன்.

இது ஆசிரியர் கூற்று. இதனால் மேற்கூறிய நெறியின் கடுமையைத் தளர்த்தித் தம்மை நடைமுறைக்கேற்ற வழிகாட்டியாகக் காட்டியுள்ளார். ’கரப்பாரிரவன்மின்’ செய்யுள் நடைபற்றிய இரண்டாம் வேற்றுமைத்தொகை. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின் வருநிலை. இதனால் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.

மு.வ உரை
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கையேந்தி நிற்கின்ற ஏழையர் முன்
கையேந்தி நிற்கின்றார் வள்ளுவரும்
பொய்யாகப் பொருள் சேர்த்து வீட்டினுள்ளே
பூட்டியே அதைக் காவல் காப்பார் முன்னே
அய்யா நீர் கையேந்தி நின்றிடாதீர்
அடியேனின் வேண்டுகோள் என்று சொல்லி
கையேந்தல் வறுமையால் என்ற போதும்
கையேந்தும் சரியான இடத்தில் என்று

Thursday, July 14, 2016

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
நெஞ்சத்தார் - நெஞ்சத்தில், மனதில் உள்ளவர்
காதல் அவராக - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக
வெய்து - வெம்-மை, வெப்பமுடையது; வெப்பம்; துயரம்; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்.
உண்டல் -  உண்டாகுகை, உண்டல்; அழித்தல்; சிரித்தல்.
அஞ்சு - ஐந்து; அச்சம்; ஒளி.
அஞ்சுதும் - அச்சம் கொள்கிறது
வே - s. Spying, reconnoitering, espio nage, வேவு. (சது.),
-- (வேக,வெந்து) vee (veeka, ventu) வே (வேக,வெந்து) be cooked (in narrowest sense, in water and without seasoning), parcook; be hot
-- எரிதல்,  வெப்பமாதல், துன்பமுறுதல், சினமுறுதல்

பாக்கு - அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும் வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி;

அறிந்து - தெரிந்ததனால், உணர்ந்ததனால்.

முழுப்பொருள்
மனதிற்கு இனியவர் காதலர் ஒரு பெண்ணின் மனதில் நிறைகிறார். அப்படிபட்டவர் பெண்ணின் மனதில் குடிகொள்வதனால் அவள் உணவு உண்ணும் பொழுது மிகுந்த கவனம் கொள்கிறாள். ஏன் என்றால் சூடான உணவோ அல்லது காரமான உணவோ உண்டால் அவை மனதிற்கு துன்பம் தரும் (யோசித்துப் பாருங்கள், நெஞ்செரிச்சல் வந்தால் தகாத உணவை உண்டு இருப்போம் என்கிறோம்). ஆகவே காதலருக்கும் துன்பம் வருமாம்.

ஆகவே சூடான உணவையோ காரமான உணவையோ உண்டால் கனவருக்கு துன்பம் வரும் என்று முன்னறே தெரிந்ததனால் அவள் அத்தகைய உணவை அஞ்சுகிறாளாம் தவிர்க்கிறாளாம்.

கேட்க பேதமையாய் இருந்தாலும் அதுவே காதலின் சிறப்பு! பேதமை இல்லா காதல் எங்கே!

ஒப்புமை
”நெஞ்சு களனாக நீயலென்” (குறுந்தொகை 36.3)

“........ நத்துறந்து
நெடுஞ்சேண் நாட்ட ராயினும்
நெஞ்சிற் கணியரோ தண்கடல் நாட்டே” (குறுந்தொகை 228.6)

“அவர் இருந்த என் நெஞ்சே” (குறுந்தொகை 340.7)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை 
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. ('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காதலவர் நெஞ்சத்தாராக - எம் காதலர் எப்போதும் எம் நெஞ்சினுள் ளிருக்கின்றாராதலால் ; வேபாக்கு அறிந்து - அவர் சூடுறுதலை யறிந்து ; வெய்துஉண்டல் அஞ்சுதும் - வெம்மையாக வுண்ணுவதற்கு அஞ்சுகின்றேம்

எப்போதும் எம்நெஞ்சிலிருக்கின்றவரைப் பிரிந்தாரென்று கருது வதென்னை என்பது குறிப்பெச்சம் , ' வேபாக்கு ' தொழிற்பெயர் ; 'பாக்கு ' தொழிற்பெயரீறு .
மு.வ உரை
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கம்பன் அவன் குறள் கற்று கரைந்ததைத்தான்
காட்டி நின்றேன் கம்பனது பாடல் தன்னில்
நம்பி யவன் கொண்ட குறள் இங்கே சொல்வேன்
நானிலத்தீர் தமிழ் கொணடே மகிழ்ந்திடுவீர்
செம்பு நிறப் பெண்ணொருத்தி வீட்டில் என்றும்
சீராகச் சூடாக எதையும் உண்பாள்
அம்பு விழிப் பெண்ணவளின் உள்ளே ஒரு
ஆணழகன் நுழைந்தானாம் குடி கொண்டானாம்

வம்பு வந்து சேர்ந்ததவள் வீட்டிற்குள்ளே அன்னை
வடிவழகுப் பெண்ணவட்கு அன்பு சேர்த்து
செம்பு நிறைப் பசும்பாலைக் காய்ச்சி அவள்
சீர் அறிந்து சூடாகக் கொண்டு தந்தாள்
கொம்பு முலைப் பெண்ணாளோ அருந்தவில்லை
கொண்டு தந்த தாயார்க்குப் புரியவில்லை
அன்பு கொண்டு உள்ளிருக்கும் காதலனோ
அச்சூட்டைத் தாங்கானென்றருந்தவில்லை

இதயத்தில் குடியிருப்பவனே ...!!!  (நன்றி கவிப்புயல் இனியவன்)
என் நெஞ்சுக்குள்ளே
குடியிருக்கும் என்னவனே
இதயமே உனக்கு கோயில்
நீயே என் இதய தெய்வம் ...!!!

என் இதய தெய்வமே
இதயத்தில் குடி கொண்டு
வாழ்பவனே - உனக்கு
சுட்டு விட கூடாது என்பதால்
சூடான உண்பதையே
தவிர்த்து விட்டேன்
என்னவனே ....!!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க

குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
மற-த்தல் - 12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

மறந்தும் - மறதியுலும், நினைவில் கொள்ளாமல் கூட, உறக்கத்தில் கூட

பிறன் - மற்றவர்களுக்கு

கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

சூழல் - s. (சூழ்) a small-hill; 2. a company; 3. an incarnation, அவதாரம்; 4. a trick or stratagem, தந்திரம்; 5. consultation; 6. deliberation, thought; reflection
s. Thought, reflection, கருத்து. 2. Purpose, intention, design, குறிப்பு. 3. Place, location, position, இடம். 4. Collec tion, group, clump, assemblage, கூட்டம். (p.) See under சூழ், v.

சூழற்க! - நினைக்காதே. அந்த எண்ணத்தை ஒழித்து விடு

சூழின் - மீறி அப்படி நினைத்தால் 

அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்) -  தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம்,

சூழும் - அவதரித்து, தந்திரத்தால்

சூழ்ந்தவன் - கேடு நினைத்தவனுக்கு, கேடு எண்ணியவனுக்கு

கேடு - கேடு விளைவாகும்

முழுப்பொருள்
பொதுவாகவே நாம் மற்றவருக்கு கேடு நினைத்தல் தவறு. ஆனால் திருவள்ளுவர் ஒரு படி மேலே சென்று மறந்தும் கூட கனவிலும் கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காதீர் என்கிறார். ஒரு வேளை மறந்து தீங்கு நினைத்தால் அதனை உடனே மனதில் இருந்து ஒழித்து விடுக. கண்டிப்பாக பிறருக்கு தீங்கு செய்யாதே. அப்படி அல்லாமல் மற்றவர்களுக்கு தீங்கு நினைத்தாலோ அல்லது செய்தாலோ, அறம் அதாவது கருமம் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால் கனவிலும் மற்றவருக்கு கேடு நினைக்காதீர்.

உதாரணமாக சொன்னால் ஒரு விவசாயி பயிர்கள் நன்கு விளையவேண்டும் என்பதற்காக ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தால் அதனை உண்ணும் மனிதர்களுக்கு கேடு ஏற்படும். சில காலம் கிடைக்கும் வருமானத்திற்காக இதை செய்தால் சில காலத்தில் அந்த விவசாய நிலம் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தியதால் கெட்டுப்போகும். மேலும் பூச்சிகொல்லிகள் இருப்பதால் பூச்சிகள் பறவைகள் வராமல் மகரந்த சேர்க்கை நடக்காமல் செடிகள் பூக்காது பழங்களையும் தானியங்களை தராது. அதனால் தான் மறந்து பிறன்கேடு செய்யாதே என்றார் திருவள்ளுவர். ஏனெனில் விளைவுகள் உனக்கே ஆபத்தாக முடியும்.

குறிப்பு: இதனால் தான் என்னவோ மனசு படி தான் எல்லாம் நடக்கும் என்று சொல்கிறார்களோ என்னவோ. சில நேரம் நான் நினைப்பது உண்டு. நாம் மற்றவர் பற்றி நினைத்துக்கொண்டு நம் வாழ்வை தொலைத்து விடுகிறோம். அவர்களை பற்றிய வெறுப்பை கக்கி நமது மகிழ்ச்சியை சிதைத்துக்கொள்கிறோம். இதற்கு மாறாக நாம் நமது முன்னேற்றத்திலும் ஆக்கப்பூர்வமான செயல்களில் நேரத்தை செலவு செய்தால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் கிட்டும் என்று.


ஒப்புமை
”விட்டனன் இலங்கை தன்மேல் விண்ணுற விரிந்த மாடம்
பட்டன பொடிக ளான பகுத்தன பாங்கு நின்ற
சுட்டனபொறிகள் பின்னைத் துளங்கினர் அரக்கர் தாமும்
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்” (கம்ப.பொழிலிறுத்த 54)

“ஈண்டிவ் வண்டத்துள் இராக்கதர் எனும்பெய ரெல்லாம்
மூண்டு வந்தது தீவினை முன்னின்று முடுக
மாண்டு வீழும் இன் றென்கின்ற தென்மதி வலியூழ்
தூண்டு கின்றதென் றடிமலர் தொழுதவன் சொன்னான்” (கம்ப.மூலபல 33)

பரிமேலழகர் உரை
பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
(நன்றி கவிப்புயல் இனியவன்)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறன்கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.

தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.

பொருள்: மறந்தும் பிறன் கேடு சூழற்க - (ஒருவன்) மறந்தும் பிறனது கேட்டை எண்ணற்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - (பிறனது கேட்டை) எண்ணின் (அவ்வாறு) எண்ணியவனது கேட்டை அறக் கடவுள் எண்ணும்.

கருத்து: பிறன் கேட்டைக் கருதியவனுக்குக் கடவுள் கேடு நினைப்பர்.

மு.வ உரை
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்

சாலமன் பாப்பையா உரை
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கெடுதல் செய்ய நினைப்பவன் கெட்டொழிவான்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தனை மறந்த நிலையினிலும் பிறர்க்குத் தீங்கைத்
தான் செய்ய ஒரு காலும் எண்ணிடாதீர்
அதை மறந்து தீங்கதனைச் செய்தீர் என்றால்
அறம் செய்யும் தீங்கதனைச் செய்தவர்க்கு
நிதம் இதை மனதினிலே கொண்டு விட்டால்
நிம்மதியாய் வாழ்ந்திடலாம் அதனை விட்டு
அறம் நம்மைச் சூழ்ந்து நின்று தீங்கைத் தரும்
அதை உணர்வீர் யார்க்கும் தீங்கு செய்ய வேண்டாம்

Wednesday, July 13, 2016

ஓஒ இனிதே எமக்கிந்நோய்

குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் 
தாஅம் இதற்பட் டது
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
- பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

- பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு
இனிதே!- மகிழ்ச்சியானதே, இனிமையானதே, விருப்பத்திற்கானதே, நன்றானதே
எமக்கு
இந் நோய் - இந்த நோய்
செய்த - செய்து கொடுத்த
கண் - இந்த கண்களும்
தாம் இதற்பட்டது -  உறங்காமல் அழுதுக் கொண்ட இருக்கும் 

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் தலைவனின் பிரிவால் நான் வாடுகிறேன். துன்ப படுகிறேன். இல்லை இல்லை. அவரை காண முடியாமல் நான் துன்ப படுகிறேன். என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை

அடடே!! இந்த கண்களும் உறங்கவில்லை. நன்றாய் வேண்டும் இதற்கு. நான் காதல் வயப்பட முதற்காரணம் என் கண்களே. எனக்கு என் தலைவனை காட்டியவை கண்களே. தலைவனின் முகத்தை என் மனதில் ஆழ பதித்தவை என் கண்கள். ஆழ பதித்ததனால் கண்கள் மூடினாலும் அவரே கண் முன் வருகிறார். உறக்கம் இல்லை. இப்படி எனக்கு துன்பமே கடைசியில்.... ஆனால் இதிலும் ஒரு ஆறுதலும் மகிழ்ச்சியும்.  என்னை இந்நிலைக்கு ஆழ்த்திய இந்த கண்களும் உறக்கம் கொள்ளாமல் என்னை போன்றே தவிக்கிறதே. மகிழ்ச்சி மகிழ்ச்சி!!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)

மணக்குடவர் உரை
எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது.

இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)

எமக்கு இந்நோய் செய்தகண் தாம் இதற்பட்டது-எமக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது; ஒ ஒ இனிதே-மிகவும் இனிதாவதே.

துன்பமென்றது தூங்கா தழுதலை.எம்மைத் துன்புறுத்தினார் துன்புறுவது. எம் துன்பந் தீர்ந்தாற் போல்வதென்பதாம். 'ஓ' மிகுதிப்பொருட் குறிப்புச்சொல். 'ஓ ஒ' 'தா அம்' இசைநிறையளபெடைகள். ஏகாரம்தேற்றம்

மு.வ உரை
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

சாலமன் பாப்பையா உரை
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலனைப் பிரிந்து வெந்தாள் மங்கை நல்லாள்
கண்ணுறக்கம் கொள்ளவில்லை கண்ணீர் வேறு
சாதலுக்கு வழி உண்டா என்றால் அவன்
சரியாக மனத்துக்குள் அமர்ந்துளானே
பேதலித்துப் போன பெண்ணாள் பேசுகின்றாள்
பிரிவில் அழும் கண்களினைப் பார்த்து பார்த்து
நீர் தந்த நோய் தானே அவரைப் பார்த்து
நீர் வழிய அழுங்கள் எனக்கு இனிமை ஈது

காரணமான கண்களே ......!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)
பூக்கள்
வாடுவதுபோல் ...
என் கண்களும் வாடுகின்றன ...
என் காதல் நோய்க்கு
காரணமான கண்களே ......!!!

நான்
வாடுவதுபோல் ..
என் கண்களும் வாடுகின்றன ...
ஒருவகையில் எனக்கு
இன்பம் தான் - என்னை வாட
வைத்த கண்கள் வாடுவதால் ...!!!

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...