Monday, February 3, 2014

கண்டுகேட்டு உண்டுயிர்த்து

குறள் 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்
கண்டு - கண்ணால் கண்டும்

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

கேட்டு - செவியால் கேட்டும்

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்டு - நாவால் உண்டு

உயிர்-த்தல் - uyir-   11 v. [K. usir, M. uyir.]intr. 1. To revive; to regain consciousness;to be re-animated; உயிர்பெற்றெழுதல். 2. To bein vigorous functioning activity; தொழிற்படுதல் அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிகள் (சி. போ 3, 4).3. To breathe hard; மூச்செறிதல் உரைதடுமாறாவுயிர்த்து (பாரத. பதினெட். 173). 4. To be waftedas fragrance; கமழ்தல் உயிர்த்த தாமத்தன (கம்பரா. நிகும். 114). 5. To breathe one's last; இறந்துபடுதல் உயிர்ப்பது மோம்பி (சீவக. 1989).--tr. 1.To give birth to, bring forth; ஈனுதல் குழந்தையை யுயிர்த்தமலடிக் குவமைகொண்டான் (கம்பரா.உருக்காட். 65). 2. To smell; மோத்தல் கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியும் (குறள், 1101). 3. To say,declare; கூறுதல் விட்டுயிர்த் தழுங்கினும் (தொல்.பொ. 111). 4. (Math.) To multiply a number;பெருக்குதல். அம்மு வாறுமுயிரொடு முயிர்ப்ப (நேமிநா.3, உரை). 5. To emit, send forth; வெளிப்படுத்துதல் கொங்குயிர்த்த பூந்தடத்துலாய் (நைடத. நாட்டுப். 5).  

உயிர்த்து - மூக்கால் நுகர்ந்தும் / மோந்தும்

உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.
உற்று - uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  
உற்று -  இன்புறுதல்

ஒண்மை - விளக்கம்; இயற்கையழகு; நன்மை; மிகுதி; ஒழுங்கு; நல்லறிவு.

ஒண்தொடி - பைந்தொடி, பொற்றொடி, ஒளிமிக்க வளையல் வளையல், பெண்கள் கையில் அணியும் அணிகலன்; ஒண்டொடி = ஒண்(மை) + தொடி;
ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர் (புறநானூறு)

தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்

ஒண்தொடி கண்ணே  - ஒளிமிக்க வளையல்கள் அணிந்த நல்ல அழகிய பெண்ணின் கண்ணில்

உள - உள்ளது

முழுப்பொருள்
விழிகளால் கண்டு
செவிகளால் கேட்டு
நாவால் சுவைத்து
மூக்கினால் முகர்ந்து
(மேலே சொன்ன நான்கும் புறவையமான புலன்கள் தரும் இன்பம்)
அன்பினால் இன்புற்று காதல் கொள்வது
(காதல் இன்புறுவது என்பது அகவயமான புலன் இன்பம்)
என
ஐம்பொறிகளாலும்
அனுபவிக்கும் இன்பம்
பெண்ணிடம் மட்டுமே உள்ளது.

பாரதியாரின் குறிப்பு (தமிழ் நாட்டு நாகரிகம் என்னும் கட்டுரையில் இருந்து)
புகழ் அதிகாரம் முதலியவற்றை அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சார்ந்தனவாகக் கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனியபக்‌ஷணங்களையும் கணிகளையும் உண்டல் மலர்களை முகர்தல் முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக் கூடியனவும், வெறுமே சரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகாரம் இல்லாததனவும் ஆதல் பற்றி அவற்றையும் இன்பப்பாலிலே சேர்க்கவில்லை.

கண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல் எனும் ஐவகை இந்திரங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தே தானுள்ளது என்பது அக்குறளின் பொருள். இதனுடன் உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்பளிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஆதலால், நான்கு புருஷார்த்தங்களுள் அதாவது மனிதப்பிறவி எடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும்பயன்களைக் கணகிடப்புகுந்த இடத்து நம் முன்னோர் காதலின்பத்தையே இன்பமெனும் பொதுப் பெயரால் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும்: அஷோக் உரை
மணிமேகலையில் வரும் கீழ்காணும் வரிகளைப் பார்ப்போமா?

இன்ன ளார்கொ லீங்கிவ ளென்று
மன்னவ னறியான் மயக்க மெய்தாக்
கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்
உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்
உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்
பயிலிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த
மலர்வா யம்பின் வாசங் கமழப்
பலர்புறங் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப
ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்
பொருவரு பூங்கொடி போயின வந்நாள்

மேலும் பல இலக்கிய எடுத்துக்காட்டுகள், பெருங்கதை, சீவகசிந்தாமணி, திருவாய் மொழி, கம்ப இராமாயணம் போன்றவற்றிலும் இக்குறளின் கருத்தையொட்டியே அமைந்திருப்பதைக் காணலாம்.


”வாயினும் செவியினும் கண்ணினும் மூக்கினும்
மேதகு மெய்யினும் மோதல் இன்றி
உண்டும் கேட்கும் கண்டும் நாறியும்
உற்றும் மற்றிவை சுற்றம் இன்றி
ஐம்புல வாயிலும் தம்புலம் பெருக
வைகல் தோறும் மெய்வகை தெரிவார்” (பெருங் 2.15:64:9)

“ஏலங் கமழ்குழல் ஏழை யவரன்ன
ஆலைக் கரும்பின் அகநா டணைந்தான்” (சீவக.1613)

“மகளிரைப் போலே ஐம்புலனுக்கும் வேண்டும்
பொருள்களை உடைய மத்திம தேசத்தைச் சேர்ந்தான் என்க” (ஷ ந.உரை)

”கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளவென்று பண்டையோர்
கட்டுரையே மேம்படுத்தாள்” (திருக்கைலாய ஞானவுலா 173-4)

“கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்” (திருவாய் 4.9:10)

“பண்டுநிகழ் பான்மையினால் பசுபதிதன் அருளாலே
வண்டமர்பூங் குழலாரை மணம் புணர்ந்த வன்றொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்
கண்டு கேட்டுண்டுயிர்த்துற் றமர்ந்திருந்தார் காதலினால்” (பெரிய 3426)

“பொன்னின் சோதி போதினி னாற்றம் பொலிவேபோல்
தென்னுண் டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோ
டன்னம் மாடும் முன்றுறை கண்டங் கயனின்றார்” (கம்ப.மிதிலைக்காட்சி.23)

நன்றி: KFTD TTAMIL
காதல் தோன்றினால் அதில் காமம் இருந்தே ஆகவேண்டும்.  காமம் இருந்தால் கூடலும் இருக்க வேண்டும்.  அந்தக் கூடலிலும், கூடிக் களித்தபின் உள்ளதில் தோன்றும் இன்பத்தையும் பற்றிய அதிகாரம் ‘புணர்ச்சிமகிழ்தல்’.

“கண்ணால் கண்டு, காதல் கேட்டு, நாவால் ருசித்து, மூக்கால் முகர்ந்து, அன்பால் இன்புற்று காதல் கொள்ளும் ஐம்புலன்களும் ஒரே நேரத்தில் விருந்து படைக்கும் திறன் அழகிய, பொருத்தமான வளையல்கள் அணிந்த உன்னிடத்தில் மட்டுமே உள்ளது.” என்று நாயகியை தலைவன் புகழும் வண்ணம் அமைந்துள்ளது குறள்.

எல்லா அனைத்து  புலன் சார்ந்த இன்பங்களில், உச்ச உயர்வான, ஒப்புயர்வற்ற  மகிழ்தல் என கருதப்படும் ஐம்புல இன்பங்களும் நிறைந்த  காம இன்பம் ஒரு பெண்ணிடம் நிறைந்துள்ளன என்பதை திருவள்ளுவர் இக்குறள் மூலம் கூறுகிறார்.

கூடலில் உள்ள தேக சுகம் பற்றியல்லாமல் அதன் முன்பும் பின்பும் வரும் நுண் உணர்ச்சிகளை அடிகோடிடும் விதம் இந்த அதிகாரத்தில் மிகவும் இரசிக்கதக்கது.  சாதாரணமாக ஒரு சமையத்தில் ஒரு புலன் மூலமே நாம் இன்பம் அனுபவிப்போம்.  கூடலில் ஐந்து புலன்களும், மூன்று காலத்திலும் ஒரு சேர இன்பம் சுகிக்க வைக்க தலைவியோடு கூடுவதால்  மட்டுமே அனுபவிக்க முடியும் என்பது இதில் தொக்கியுள்ள அர்த்தம்.  கூடலில் உள்ள இன்பம் அதை அனுபவிப்பதாலும், அதை எதிர்பார்ப்பதாலும், பின்னர் அசை போடுவதாலும் பல மடங்கு அதிகரிக்க படுவதை சுட்டிகாட்டுகிறது குறள்.

பரிமேலழகர் உரை
இயற்கைப் புணர்ச்சி (சுட்டியை சொடுக்கவும்) இறுதிக்கண் சொல்லியது. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் - கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள்கண்ணே உளவாயின.

விளக்கம் (உம்மை, முற்று உம்மை. தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது. வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.)

பி.கு
இயற்கைப் புணர்ச்சி
முன்னர் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கையாக ஓரிடத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்தல்; கூடிமகிழ்தல்; அன்பு காட்டுதல் ஆகியவை இயற்கைப் புணர்ச்சிஎனப்படும். இது தெய்வத்தால் நிகழும்; அல்லது தலைவி விருப்பத்தால் நிகழும்.

மணக்குடவர் உரை
கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள. இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை
விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

ஐம்புலனின்பமே இல்லாள் [நன்றி: குருநாதன்]
சமூகத்தின் வடிவம் இல்லற மாண்பின் இனிமையைச் சார்ந்துள்ளது. இல்லறம் இனிக்க ஒத்த இணையர் ஒற்றுமை பேணி கவின்மிகு மக்களைப் பெற்று, நற்சமூகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த வேண்டும். இல்லறத்தின் மகிழ்விற்கு கணவன் மனைவியின் மகிழ்வே அடிப்படை. காணல், கேட்டல், உண்ணல், முகர்தல், தொடுதல் ஆகிய ஐம்புல இன்பங்களும் தன் இல்லாளிடம் மட்டுமே உள்ளதாகக்
கணவன் கூறுகிறான்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.          
              
தன் இல்லாளுடன் புணர்ந்து மகிழ்ந்து பூத்த கணவனுக்குத் தான் எத்தனை அன்பு. 

கண்களுக்கான நிறைவுப் பயிற்சி இது. கண்களின், அதன் பயன்பாடுகளின் அருமை பெருமைகளையெல்லாம் அறிந்து உணர்ந்து, அந்தக் கண்களை பலப்படுத்துகிற, பார்வைக்கு உரமூட்டுகிற நிறைவுப் பயிற்சியில் ஆழ்ந்து ஈடுபடுவது, கண்களுக்கும் கண்களால் நமக்கும் நன்மைதானே?

'கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள'

காதலியின் பெருமையை காதலன் சொல்வதாக வள்ளுவப் பெருந்தகை எழுதிய திருக்குறள் இது. காதல் என்பது ஆசைப்படுவது; அன்பு செய்வது; நேசத்துடனும் கனிவுடனும் பார்ப்பது! அப்படியரு கனிவுடன், நேசத்துடன், பிரியத்துடன், மிகுந்த வாஞ்சையுடன் நாம் நம் உடலைப் பார்க்கத் துவங்கிவிட்டால் எப்படியிருக்கும்? எந்த நோய்களும் தாக்காதவாறு, பூரண பொலிவுடன் விளங்கும் நம் தேகம். என்ன, உண்மைதானே!

ஐம்புலன்களையும் காதலிக்கத் துவங்குங்கள். நம் விருப்பத்துக்கும் நேசிப்புக்கும் உரியவர் களைக் கொண்டாடுவதுபோல், மதிப்பது போல், நம் உடலையும் மதித்து நேசித்தால், உடலானது எந்தச் செய்கூலியும் சேதாரமும் இன்றிச் சீராக இயங்கும். அதிலும், 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து...' என்பதில் முதலாவதாக இடம்பிடித்த கண்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நம் கடமை!

குறளும் தேவாரமும்
பாடல் எண் : 267
பண்டுநிகழ் பான்மையினால்
    பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை
    மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப்
    புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற்
    றமர்ந்திருந்தார் காதலினால்.

பொருள்:
முன் திருக்கயிலாய மலையில் நிகழ்ந்த நியதியால், உயிர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் அருளாலே, வண்டுகள் மொய்த்திடும் கூந்தலையுடைய சங்கிலியாரைத் திருமணம் செய்த நம்பிகள், தாமரை மலர்மேல் இருக்கும் திருமகளின் வனப் பையும் புறங்கண்ட அத்துணை அழகுடைய தூய நலமுடைய சங்கிலி யாரைக் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் விருப்பம் மீதூரத் துய்த்திருந்தார்.

குறளும் வைரமுத்துவும்
இந்த குறள் ‘நேருக்கு நேர்’ என்ற திரைப்படத்தில் ‘அவள் வருவாளா’ என்ற பாடலில்  அமரர் ஷாகுல் அமீது என்ற பாடகர் பாடும் வாரு வரும்.  இதனை கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியிருப்பார்.

பாடலில் இருந்து சில வரிகள்

அவள் வருவாளா 
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை 
ஒட்டவைக்க அவள் வருவாளா
.............
.............
அவளை ரசித்தபின்னே 
நிலவு இனிக்கவில்லை
 மலர்கள் பிடிக்கவில்லை
கண்டு கேட்டு 
உண்டுயிர்த்து உற்றறியும் 
ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து 
நானும் பிறந்ததற்கு 
பொருளிருக்கு பொருளிருக்கு
.............
.............

உடல் உறவில் பயன்கள்
கீழ்க்காணும் சுட்டிகளை தட்டவும்


எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சில பத்திகள் கீழே 

அத்தியாயம் 22 // உணவும் உடலுறவும் 
"காமம் என்பதும் உணவு, மற்றும் நீர் போன்றே முக்கியமானது. தேவையற்ற அடக்கமும், கட்டுப்பாடும் இன்றி, இம்மூன்றின் வேட்கையையும் தணித்தல் அவசியம்."  — Marquis de Sade 
எந்தவிதமான சுவையும் சேர்க்காது, வெற்றுச் சோற்றையோ, இட்டிலியையோ அல்லது ரொட்டியையோ நாம் உண்ண முடியுமா? குறைந்தபட்சம் உப்பையோ அல்லது மசாலாவையோ இவற்றோடு நாம் எதிர்பார்ப்போம் எதிர்பார்ப்போம் இல்லையா? இல்லை இனிப்பையாவது சேர்த்துக்கொள்வோம் அல்லவா?  இப்படி வெறுமையாக சுவையற்ற உணவை, நொந்து கொள்ளாது, ஒருமுறையாவது உண்ண இயலுமா?  

காமம் என்பதும் உணவு போன்றதே. புலனின்பத்துக்காக, அவை பயன்பட்டாலும், நம் பசியையும் அவையே போக்குகின்றன. வெற்றுச் சோறு நம் பசியைத் தணிக்கும் என்றாலும், நாம் சுவைகளைச் சேர்க்காது உண்டு, நம்மை நாமே வருத்திக்கொள்வதில் பயன் இல்லை. அதைப்போலவே, காமத்தின் சுவையையும் இன்பத்தையும் ஏன் நாம் புறக்கணிக்கவேண்டும்? அப்படிச் செய்வதற்கான தேவைதான் என்ன? நம் உடலின் சிறிய பாகமான நம் நாவே உணவின் ருசிக்காக ஏங்கும்போது, நம் உடல் மட்டும் இன்பத்துக்கும், ஆசைக்கும் ஏங்குவதில் என்ன தவறு? ஆனால், காமம் என்று வரும்போது, நாம் என்ன செய்கிறோம்? நாம் நம்மையும், நமது துணைவரையும் புறக்கணிக்கிறோம். சேர்த்து உண்ண ஏதுமற்ற நிலையில், வெற்று சோற்றை நம் துணைவருக்குக் கொடுத்துவிட்டு, அவர் உண்பதை நம்மால் பார்க்க இயலுமா? அது பரிதாபமாக இருக்கும் அல்லவா? 

எல்லா ஆண்களும், தங்கள் விந்துவை வெளியேற்ற ஒரு துவாரம்  மட்டுமே  தேவை எனக் கருதினால், அவர்கள் பெண்களைத் தொந்தரவு செய்வதை விட்டுவிட்டு, கழிவறையின் இருக்கையையே பயன்படுத்திக்கொள்ளலாம். அத்தகைய கழிவறை இருக்கையாக தாங்கள் பயன்படுத்தப் படுவதைத் தவிர்த்து, பெண்கள், சுய இன்பத்தால் தங்கள் வேட்கையைத் தணித்துக்கொள்ளலாம்.



களவும் கற்பும்

நன்றி: TamilVu

3.1 கைகோள் வகை
கைகோள் என்றால் ஒழுக்கம் என்று பொருள். கைக்கொள்ளப்படும் நெறிகள், பின்பற்றப்படும் ஒழுக்கங்கள் என்றும் குறிப்பிடலாம்.

அளவில்லாத இன்பத்தைத் தரும் ஐந்திணையின் தலைமக்கள் மேற்கொள்ளும் நெறிமுறைகளைக் களவு - கற்பு எனும் இருவகைக் கைகோள் ஆகப் பகுத்து வழங்குவது அகப்பொருள் இலக்கண மரபு ஆகும்.

களவும் - கற்பும்

களவு என்பது தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் மறைமுகக் காதல் வாழ்க்கை. அது இயற்கையாய்த் தொடங்கி, தொடர்ந்து நிகழ்வது.

களவு வெளிப்படும் சூழலில் - களவு முறையிலேயே அன்பு கலந்த காதல் வாழ்க்கையைத் தொடர முடியாத சூழலில் - அதனைத் தலைமக்கள் கற்பு வாழ்க்கையாக மாற்றி அமைத்துக் கொள்வர்.வரைவு என்னும் திருமணம் மூலம் களவு - கற்பாக மலரும்.

3.1.1 களவுப் புணர்ச்சி வகை
இருவகைக் கைகோள்களில் முதலாவதாகிய களவு முறையில் தலைமக்கள் கூடும் புணர்ச்சி என்பது நான்கு வகையாக நிகழும். அவையாவன :-

- இயற்கைப் புணர்ச்சி
- இடந்தலைப்பாடு
- பாங்கன் கூட்டம்
- பாங்கியிற் கூட்டம்

இயற்கைப் புணர்ச்சி

முன்னர் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கையாக ஓரிடத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்தல்; கூடிமகிழ்தல்; அன்பு காட்டுதல் ஆகியவை இயற்கைப் புணர்ச்சிஎனப்படும். இது தெய்வத்தால் நிகழும்; அல்லது தலைவி விருப்பத்தால் நிகழும்.

இடந்தலைப்பாடு

இயற்கைப் புணர்ச்சியின் போது, சந்தித்த இடத்திலேயே தலைமக்கள் மீண்டும் கூடி மகிழ்வது இடந்தலைப்பாடு எனப்படும் (இடம் - முதலில் சந்தித்த இடம், தலைப்பாடு - மீண்டும் கூடுதல்).

பாங்கன் கூட்டம்

தலைவன், தனது பாங்கன் (தோழன்) மூலமாகத் தலைவியைக் காணும் வாய்ப்பைப் பெற்றுக் கூடி மகிழ்வது பாங்கன் கூட்டம்எனப்படும்.

பாங்கியிற் கூட்டம்

தலைவன், தான் விரும்பும் தலைவியின் தோழி வாயிலாகத் தலைவியை மீண்டும் காணும் வாய்ப்பைப் பெற்றுக் கூடி மகிழ்வது பாங்கியிற் கூட்டம் எனப்படும்.

3.1.2 களவுப் புணர்ச்சியின் இருபெரும் திறம்
இயற்கைப் புணர்ச்சி முதலான நான்கு வகைகளிலும் தலைவனும், தலைவியும் சந்தித்துப் பழகும் களவுப் புணர்ச்சி இரு பெரும் திறங்களாக அமையும் என்பது அகப்பொருள் மரபு ஆகும். அவையாவன :-

1. உள்ளப் புணர்ச்சி
2. மெய்யுறு புணர்ச்சி

இக்கருத்தை,
உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய (34)

என்ற நூற்பா எடுத்துக் காட்டுகிறது.

1. உள்ளப் புணர்ச்சி
தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்உள்ளப் புணர்ச்சி எனப்படும். மனம் ஒன்றுபட ஏற்படும் காதல் உணர்வே களவில் முதற்கண் நிகழ்வது.

பழி பாவங்களுக்கு அஞ்சுதலும், தக்கது எது என அறியும் ஆற்றலும் உடையவன் தலைவன். அச்சமும், நாணமும், அறியாமையும் உடையவள் தலைவி.

இருவர்க்கும் உரிய இத்தகு இயற்கைப் பெருங்குணங்கள் காரணமாக இருவருமே முதலில் உள்ளத்தால் இணையும் உள்ளப் புணர்ச்சியை மட்டுமே மேற்கொள்வர்.

2. மெய்யுறு புணர்ச்சி
உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை மெய்யுறு புணர்ச்சி எனப்படும். (மெய் - உடல்)

காலமும் - காரணமும்

மெய்யுறு புணர்ச்சிக்கான காலமும் காரணமும் பற்றியும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் காணுதலாகிய காட்சி, வேட்கை, ஒருதலை உஎ்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்புதல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம் சாக்காடு எனச் சொல்லப்படும் பத்துவகையான வளர்நிலைச் செயல்கள் நிகழ நிகழத் தலைவனும், தலைவியும் உடலால் புணரும்மெய்யுறு புணர்ச்சி மேற்கொள்வர்.

3.1.3 களவுப் புணர்ச்சிக்குரிய இடம்
உள்ளப் புணர்ச்சியும், தொடர்ந்து மெய்யுறு புணர்ச்சியும் நடைபெறும். மெய்யுறு புணர்ச்சியை மேற்கொள்ளும் தலைமக்கள் பகலிலும் இரவிலும் சந்தித்துக் கொள்ளும் இடம் குறி எனப்படும்.

இருவகைக் குறி இடம்

தலைவன், தலைவி இருவரும் சந்தித்துக் கொள்ளும் குறி இடம் இரண்டாகும். அவை
1. பகற்குறி
2. இரவுக் குறி

பகற்குறி - இது பகல் பொழுதில் தலைவனும் தலைவியும் சந்திக்கக் குறித்த இடமாகும். இது தலைவியின் வீட்டின் எல்லையைக் கடந்ததாக அமையும்.

இரவுக்குறி - இவ்விடம் இரவு நேரங்களில் தலைவனும், தலைவியும் சந்திக்க ஏற்ற இடமாகும். இது தலைவியின் வீட்டின் எல்லையைக் கடவாதது. வீட்டை ஒட்டிய பகுதியில் அமைவது.

தொடிப்புழுதி கஃசா உணக்கின்

குறள் 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
தொடி - toṭi   n. தொடு²-. 1. Curve, bend;வளைவு. தொடிவளைத் தோளும் (சிலப். 10, 128). 2.Bracelet; கைவளை (பிங்.) குறுந்தொடி கழித்தகைச்சாபம் பற்றி (புறநா. 77). 3. Armlet;தோள்வளை.நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து . . . போக்கில்பொலந்தொடி (நற். 136). 4. Armlet, warrior'sarmlet; வீரவளை வலிகெழு தடக்கை தொடியொடுசுடர்வர (மதுரைக். 720). 5. [T. toḍi.] Ring,ferrule, ornamental knob of an elephant's tusk;பூண். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243). 6.Circular projections in stone-wells serving assteps; பாறைக்கிணறுகளில் படியாக உதவ வெட்டப்படும் சுற்றுவட்டம். Loc. 7. A standard weight.See பலம் தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள்,1037)


தொடி - ஒரு பலம் எடையுள்ள
பலம் - நிறைவகை (a standard weight)

புழுதி - மண்தூள்; துகள்; காய்ந்தநிலம்; காண்க:புழுதிக்கால்
புழுதி - காற்றால் பரவும் தூசி, சிறு துகள் போன்றவை; மண்தூள்; துகள், காய்ந்த நிலம்

கஃசா  கஃசு - காற்பலம் கொண்ட நிறுத்தல் அளவு ; காற்பலம் என்னும் எடை அளவு; ¼ பலம்

உணக்கு-தல் - uṇakku-   5 v. tr. caus. ofஉணங்கு-. [M. uṇakku.] 1. To cause to dry,to dry in the sun; உலர்த்துதல் தொடிப் புழுதிகஃசா வுணக்கின் (குறள், 1037). 2. To injure, ruin;கெடுத்தல். உணக்கினான் . . . என்வாழ்க்கை (விநாயகபு. 80, 120).  .

உணக்கின் - உணக்கல் – காய செய்தல்; நிழலுணத்தலாய் உணத்த.
உணத்த - வெயிலில் உலரத்துவது

பிடி - பற்றுகை; மனத்திற்பற்றுகை; நம்பிக்கை; மதக்கொள்கை; கைம்முட்டி; மற்பிடி; ஆயுதப்பிடி; குதிரையின்வாய்க்கருவியிற்கோக்குங்குசை; உபாயம்; உறுதி; உதவி; உள்ளங்கைப்பிடியளவு; பணியாரவகை; நான்குவிரல்கொண்டஓர்அளவு; பெண்யானை; பேய்; உலர்ந்தது; காண்க:ஏலம்; சீட்டாட்டத்தில்ஒருமுறைஎடுக்கப்படும்சீட்டு.

எரு - உரம்; சாணி; வறட்டி; பசளை; மலம்.

பிடித்தெருவும் - பிடி + எரு - ஒரு பிடி எருவும்

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டாது - தேவையில்லாமல்; வேறு உரங்களை விலைக்கு வாங்காது

சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்.
சால் - நிறைவு; நீர்நிரப்பும்பானை; நீர்இறைக்கும்கலம்; உழவுசால்; கும்பராசி; ஆண்டு.

சாலப் படும் - செழிப்பாய் வளரும்.

முழுப்பொருள்
காய்ந்த நிலத்தில், ஒரு பலம் மண் (மண் காற்றோட்டம் பெரும் வகையில்) உழுது காற்பலம் (¼) அளவாகும் வரை உழுதால், அந்த நிலத்தில் ஒரு பிடி அளவு எருக்கூட தேவையில்லாமல், பயிர் செழுப்பாய் விளையும்.

பி.கு: திருக்குறளில் ஏதாவது தொழிலுக்கு அதிகாரம் என்று கேட்டால். இல்லை. ஆக உழவை வள்ளுவர் தொழிலாக பார்க்க வில்லை. அதனினும் மேலாக, அதன் முக்கியத்துவத்தை பார்த்தார் என்று கூறலாம்.

குறளின் அறிவியில் நோக்கு
நன்றி: திரு. இளமுருகன் (Star Vijay - தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு
நன்றி: Questpedia (வேளாண்மை பற்றிய நல்ல ஒரு வலைப்பக்கம்)
உங்கள் விஞ்ஞானத்தால் சாதிக்க முடிந்தது என்ன ? நிலம் குருடானது. விதை மலடானது. 

குறளில் உள்ள ஒரு அறிவியல் செய்தி
மண்னைத் தயார் செய்தல் என்பது பயிர் வளர்ப்புக்குத் தேவையான முதன்மையான செயலாகும். அடியில் உள்ள மண்ணின் சத்தை மேலே கொண்டுவரவும், கடினத்தன்மையை நீக்கவும் மண்ணைத் தயார் செய்தல் வேண்டும். இது உழுதல், சமன்படுத்தல் மற்றும் உரமிடல் ஆகிய செயல்களை உள்ளடக்கியதாகும்.

நீங்கள் செயற்கை உறமாக வாங்குகிறிரே அமோனியா (Ammonia  NH3), அது நைட்ரஜன் (Nitrogen N) கொண்டது. ஆனால் குறள் சொன்னவாரு ஏர் விட்டால், நன்கு உழுதால் மூலம் மண்ணிற்கு காற்றோட்டம் அதிகமாகிறது. காற்றிலே நைட்ரஜன் (Nitrogen N) உள்ளது. அது மண்ணில் தங்கும். ஆக மண்ணில் நைட்ரஜன் அளவு அதிகமாகும். நிலத்தில் உள்ள இலை தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுகின்றது என அறிகின்றோம். அந்த நைட்ரஜனை (Nitrogen) இழுத்து பயிர் செழுமையாக வளரும். ஒரு பிடி எரு கூட தேவையில்லை. 

உழுதல் என்பது கீழ்மண்ணை மேலே கொண்டுவருதலும் அதன் கடினத்தன்மையை நீக்கி மெண்மையாக்குதலும் ஆகும். இதனால் மண்ணானது தாவரத்தின் வேர் சுவாசிக்கத் தேவையான காற்றை அளிக்கின்றது; ஈரப்பதத்தை நீண்ட காலத்திற்கு நிலைக்கச் செய்கிறது; நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதன் மூலம் வளமான மண்ணை மேலே கொண்டு வரச்செய்கிறது; களைத் தாவரங்களையும் அதன் விதைகளையும் மண்ணிலிருந்து நீக்குகிறது.இதனால் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்பதோடு மட்டுமல்லாமல், மண்ணரிப்பபை தடுக்கவும், கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடும் சிதைவைத் தூண்டவும், மண் உயிர்ப்பொருள் பெருகுவதையும் மாறுபடுவதையும் குறைக்கிறது.

பரிமேலழகர் உரை
தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின் கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும். 

விளக்கம் 
(பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்,' 'சான்று' என்பன திரிந்து நின்றன.) 

மணக்குடவர் உரை
ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும். மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார். 

மு.வரதராசனார் உரை
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

சாலமன் பாப்பையா உரை
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.

குறளும் பசுமைபுரட்சியும்
நன்றி : Vaduvurvendan

பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலங்களில் வயலுக்குள் கொழுஞ்சி போன்ற செடிகளும், வரப்புகளில் உரத்துக்கான இலை, தழைகளைத் தரும் வளமான செடிகளையும் வளர்ப்பது  வழக்கமாக இருந்தது.

வயல் தரிசாக கிடக்கும் நாட்களில் புழுதி எடுப்பார்கள்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

உழவன் தனது கால் ஆழமாக அழுந்த தன் நிலத்தை உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும்.

இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தைப் புரிந்துகொள்கிறோம்.  நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது.  நிலத்தில் உள்ள இலை, தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுக்கின்றது என அறிகிறோம்.

அதன் பின்னர் ஆடி மாத மழையில் வயல் முழுவதும் கொழுஞ்சி செடி சில்லென்று முளைக்கும்.  நடவுப் பருவத்திற்குள் அந்த செடிகள் நன்றாகத் தழைந்துவிடும்.

நடவுக்கு தொழியடிக்கும் முன்னரே அந்த செடிகளை மடக்கி உழுது, மண்ணோடு சேர்ந்து மட்கட் செய்வார்கள்.

அடுத்து வயல் வரப்புகளில் உள்ள உயர்ந்த செடிகளில் உள்ள இலை, தழைகளையும் வெட்டி வயலுக்குள் பரப்புவார்கள்.  எல்லாம் சேர்ந்து மக்கி, மண்ணுக்கு உரமாகி, அதன் மணிச்சத்தை வளமாக்கும்.

நடவுக்கு முன்னர் தொழியோடு சேர்ந்து மட்கும் இந்த இயற்றை உரம் மண்ணின் உயிர்ச்சத்தோடு இரண்டறக் கலந்து பயிரை வளர்க்கப் பயன்படும்.

இப்படித்தான் நமது  பாரம்பரிய விவசாயம் நடந்து வந்தது.

உரம் ஒருபக்கம், பூச்சி மருந்து மற்றொரு பக்கம்.

உரம் மண்ணில் இருக்கும் மணிச்சத்தை உறிஞ்சி அதன் மூலம் பயிரை சூல் கொள்ள வைத்தது.

பூச்சி மருந்து உழவுக்கும் உழவனுக்கும் நண்பனான சிற்றுயிர்களையும் சேர்த்துக் கொன்றது.
இப்படி காலம் காலமாக நாம் கைப்பற்றி வந்த இயற்கை வழி வேளாண் முறைகள் அனைத்தையும் பறிகொடுத்தோம்.

நமது வாழ்க்கை முறையாக இருந்த இயற்கை விவசாயம், இப்போது வார்த்தை அளவில் கூட இல்லாமல் போய்விட்டது.

இரு குறள்களின் முரண்பாடு ?

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்த குறட்பாக்களில் முதல் குறட்பாவில் நன்றாக உழுதால், நிலத்திற்கு உரம் இடத் தேவையில்லை என்று சொல்கிறார்; ஆனால் இரண்டாம் குறட்பாவில் உரம் இடவேண்டும் என்று சொல்கிறார் ; ஏன் இந்த முரண்பாடு? " என்று கேட்டான்.

ஆசிரியர் சிரித்துக் கொண்டே ," நல்ல கேள்வி, காரணம் சொல்கிறேன், முதல் குறள் புன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகுமாறு உழுதுவிட்டு , மழை பெய்தவுடன் புன்செய்த் தானியங்கள், பயறு வகைகளை விதைத்து விட்டால் மேல் உரத்தையோ, பாய்ச்சு நீரையோ எதிர்பாராமல் வானத்தை, அதாவது மழையைப் பார்த்தே புன்செய்ப் பயிர்கள் விளைந்துவிடும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்தக் குறள் நன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. உழுதல்,எருவிடுதல்,களையெடுத்தல்,நீர்பாய்ச்சுதல், காவல் காத்தல் என்பது போன்ற எல்லா வேலைகளையும் பார்த்தால்தான் நன்செய் நிலத்தில் பலன் காணமுடியும். இப்போது புரிகிறதா? முரண்பாடு உன்னிடம்தான் உள்ளது; வள்ளுவரிடம் இல்லை."

Sunday, February 2, 2014

சுடச்சுடரும் பொன்போல்

குறள் 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் 
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சுடுதல் காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

சுடர் - ஒளி; சூரியன்; வெயில்; சந்திரன்; கோள்; ஆண்டு; தளிர்; விளக்கு; சுடர்; தீப்பொறி; சுடரிலிருந்துவிழும்எண்ணெய்த்துளி.

சுடர்தல் - சுடர்-தல் - cuṭar-   4 & 5 v. intr. சுடர் To give light; to burn brightly; to shine, as aheavenly body; to sparkle, as a gem; to gleam;ஒளிவிடுதல். சுடச்சுடரும் பொன்போல் (குறள், 267). 

சுடச்சுடரும் - ஒரு பொருளை (தங்கம்) தீயினால் சுடும் பொழுது சுடரும் / பொலிவு பெரும்.

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நான்குவகைப் பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி.

போல - ஓர்உவமவுருபு

பொன்போல் - தங்கத்தைப் போல்

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்

ஒளிவிடுதல் - ஒளிர்தல்.

ஒளிவிடும் - ஒளி வந்தால் இருள் நீங்கி வெளிச்சம் வருவதுப் போல், துன்பம், குற்றம் நீங்கி, மெய்யுணர்வு (ஞானம்) பிறக்கும்.

துன்பம் -  னவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

சுட - சுடுதல் காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

துன்பஞ் சுடச்சுட - துன்பங்கள், தீவினைகளை களைவது.

நோற்பு - பொறுமை; தவஞ்செய்கை.

நோற்கிற் பவர்க்கு - தம்மைத்  தாமே   வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை  - அதாவது தவம்.

முழுப்பொருள்
தங்கத்தை நெருப்பில் சுட்டால் அதனில் உள்ள மாசுகள் சாம்பலாகி தங்கம் பொன்னொளி கொண்டு சுடரும்.  தங்கமானாலும் அதனை ஒரு துணியால் துடைத்தால் ஒளி சுடராது. தங்கத்தையும் இரக்கமில்லாமல் நெருப்பில் சுட வேண்டும். 

அதுப்போல ஒருவர் துறவு மேற்கோண்டு வீடுபேற்றை இலக்காக கொண்டு தவத்தை மேற்கொண்டு தன்மீது இரக்கமற்று தனது குற்றங்களையும், ஆசைகளையும், குரோதங்களையும், மயக்கங்களையும் களைவார் என்றால் அவரும் தனது இலக்கை அடைந்து மெய்யுணர்வு பெற்று வீடுபேறு அடைவார்.

இது வீடுபேறு என்றில்லை, எந்த ஒரு குறிக்கோளையும் ஏகமனதாக நினைத்து அதனை தவம் போல் செய்தால் அதில் பிரகாசிக்க முடியும். குறிக்கோளை அடைய முடியும்

ஆக மெய்யுணர்வு பெறுவது என்பது ஒரு நாளில் அடைவது அல்ல. அது மெல்ல மெல்ல கடும் தவத்தினால் குற்றங்களை களைந்து அடையும் ஒரு நிலை.

தவம் என்பது ஒருமுகப்படுத்தும் ஒரு பயிற்சி, முயற்சி. அவ்வாறு முயலும் போது எத்தனையோ தடங்கல்களும், துன்பங்களும் வருவது இயல்பே. அத்தடங்கல்களையும் தாண்டி, துன்பங்களைப் பொறுத்துகொண்டு, அறிவை நோக்கிய ஒரு உறுதியும், அதனால் தெளிந்த ஞானம் அடைவதும் உறுதி.

ஆகவே தான் மற்றுமொரு குறளில் கடுமையான பயிற்சி தேவை என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

ஒப்புமை
“கொள்கைக் கட்டழல் உள்ளுற மூட்டி
மாசுவினை கழித்த மாதவர் போலத்
தீயகத் திலங்கித் திறல்விடு கதிரொளி
சேடுறக் கிடந்த செம்பொன்” (பெருங் 2.19:62-5)

“ஆரழல் முளரி யன்ன அருந்தவம்” (சீவக 2632)

உலைமீளும் பொன் ஒளிகொண்டிருக்கும் 

“நான் என்ன செய்வது, அருகரே?” என்றார் தருமன். அவர் “அவளை அறிக! அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி” என்றார். “நான் எப்போதும் அவளை அறியவே முயல்கிறேன்” என்றார் தருமன். “தவமின்றி அறிதலில்லை” என்றார் அருகப்படிவர். “அவளை அறிதலென்பது அவள் அழலை அறிதலே. அழலுக்கு அஞ்சி அப்பால் நிற்பவர்கள் அதை அறிவதில்லை. தீயில் இறங்கி உருகி மாசுகளைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. ஆகவே பொன்னை ஜடாக்னி என்கிறார்கள். தீயை சுவர்ணதாரா என்கிறார்கள்.”

அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.

அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.

இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.

அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.

தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.

ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!

தன் மேல் இரக்கமற்றிருப்பதே தவம்.

பரிமேலழகர் உரை
சுடச்சுடரும் பொன் போல்-தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளிமிகுமாறு போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும்-தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். 

விளக்கம்
('சுடச்சுடரும் பொன் போல' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: துன்பம் சுட சுட நோற்கிற்பவர்க்கு -(தம்மைத்) துன்பம் வருத்த வருத்தத் தவஞ் செய்ய வல்லார்க்கு, சுட சுடரும் பொன்போல் ஒளி மிகும் - சுடுங் காலையில் ஒளிரும் பொன் போல (அறிவாகிய) ஒளி மிகும்.

அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ஒளிவிடும்’. மணக்குடவர் பாடம் ‘சுடச் சுடப் பொன்போல’. ‘ஒளிவிடும்’ என்பதினும் ‘ஒளி மிகும்’ என்பது மிகப் பொருத்தமான பொருளைத் தருதலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: தவம் செய்வார்க்கு அறிவு வளரும்.

மணக்குடவர் உரை
நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும். இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.

மு.வ உரை
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.

சாலமன் பாப்பையா உரை
நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நெருப்பால் பொன்னும் தவத்தால் ஞானமும் துலங்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
When we burn gold over fire, the dirt in the gold gets burn into ashes. As the gold bears the heat and gets burned, it starts emitting light or it glitters. Similarly, when a person does penance, identifies and eradicates his mistakes, flaws, desires, anger, hatred, fluctuations etc while also bearing the pain of eradicating and giving up the flaws then he starts moving and attains his goal moksha. The process of cleansing is difficult and painful process. But the end result is going to be shining. 
This can be applied in achieve any goal. If one works towards a goal like a tapas with single minded focus, one can shine in that goal. 

Questions that I ask to the kid
How can you shine like a gold? What should you go through for it? Is it worth it?

Saturday, February 1, 2014

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

குறள் 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

போன்று - போல

உள்ளம்போன்று - மனம் போன்று; மனம் அவரிடம் செல்கின்றது போல்

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

உள்வழிச் - அவர் இருக்கும் இடத்திற்கு வழி.

செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு

செல்கிற்பின் - அவரிடம் செல்வது

வெள்ளம் - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

வெள்ளநீர் - கட்டுக்கடங்காத மிக மிக அபாயமான் அளவிலான நீர் பெருக்கு. அதில் நீந்துவது மிக கடினம். நம்மை அடித்து செல்லும். இங்கு கண்ணீர் வெள்ள நீர்ப் போல் பெருக்கு எடுத்து ஓடுகிறது என்கிறார் திருவள்ளுவர்.

நீந்துதல் - நீரில்மிதந்துசெல்லுதல்; கடத்தல்; பெருகுதல்; வெல்லுதல்; கழித்தல்.

நீந்தல - நீந்த தேவையில்லை.

மன்னோ - வாழ்வேனா ?

மன்னோஎன் 

மன் - ஒழியிசை (ஒழிந்தபொருள்தருஞ் சொற்களைத் தருவது.)

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

முழுப்பொருள்
என் மனம் அவர் இருக்கும் இடத்திற்கு செல்கிறது. என் மனம் செல்வதுப்போல் என் கண்களும் செல்லநேர்ந்திருந்தால் நான் ஏன் வெள்ள நீர்ப் போல பெருக்கெடுத்து ஓடும் என் கண்ணீரில் நீந்துகிறேன். இங்கே ஏன் வெள்ள நீர் என்று குறிப்பிடப்படுகிறது என்றால் வெள்ளத்தில் நீந்துவது கடினம், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாது. உயிரை விடக்கூடும்.

இங்கே நோக்க வேண்டியது ஒன்று, அவள் சென்றால் தான் கண்கள் செல்ல முடியும். ஆக அவள் செல்ல முடியாததை கண்கள் செல்ல முடியவில்லை என்று சொல்கிறாள்.

இதைப் போன்று மற்றும் ஒரு குறள் நாம் பார்த்தோம்
தின்னும் அவர்க்காணல் உற்று (சுட்டியை சொடுக்கவும்)

ஒப்புமை
“நீர்நீந்து கண்ணாட்கு” (கலி.121:10)
“நெடும்பெருங்கண் நீந்தின நீர்” (பு.வெ.313)


பரிமேலழகர் உரை
(நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. 

விளக்கம் 
(அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

மணக்குடவர் உரை
அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா. இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது. 

மு.வரதராசனார் உரை
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

Thursday, January 30, 2014

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்

குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் 
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு
[காமத்துப்பால், கற்பியல்,  அவர்வயின்விதும்பல்]

பொருள்
ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.

சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

வரு - வரும் 

நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

வைத்து  - vaittu   part. வை³-. Anexpletive; ஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டுவைத்தும் (சீவக. 681, உரை).

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

ஏங்குதல் - ஒலித்தல்; அழுதல்; இரங்குதல்; திகைத்தல்; மனம்வாடுதல்; அஞ்சுதல்; கவலைப்படுதல்:இளைத்தல்.
 
ஏங்கு பவர்க்கு - ஏங்குபவர் - மனம் வாடுபவர்க்கு; கவலைப்படுவர்க்கு


முழுப்பொருள்
தொலை தூரம் சென்ற காதலரை எதிர் நோக்கி, எப்பொழுது திரும்புவார் என்றும் அவர் வரும் நாளை மனதில் வைத்து அவரையே அவருடன் கூடி இருந்த நாட்களை மனதில் நினைத்து ஏங்கி  வாடும் காதலிக்கு ஒரு நாள் கூட பல நாட்களாக தோன்றும்.

கவிஞர் வாலியின் வரிகளில் இதை ஒற்றிய சினிமா பாடல் ஒன்றின் சில வரிகள் கீழே .
"நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருசங்கள் ஆகும்
நீ என்னை நீங்கி சென்றாலே
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே"

ஒப்புமை

”எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல” (குறுந் 24:4)
“ஏழூர்ப் பொதுவினைக் கோரூர்” (குறுந் 172:5)
“ஒருநாள் நம்மில் வந்ததற் கெழுநாள்
அழுப என்ப” (ஐங்குறு.32)
“ஒவா தெழுமடங் குட்குவரத் தோன்றி” (பெருங்.1.43:122)
“பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி” (சீவக.116)
“தெய்வங்காள் என்செய்கேன் ஓரிரவே ழூழியாய்” (திருவாய் 5.4:8)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.

மு.வரதராசனார் உரை
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

சாலமன் பாப்பையா உரை
தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.

இருவேறு உலகத்து இயற்கை

குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு.
[அறத்துப்பால், ஊழியில், ஊழ்]

பொருள்
இரு - iru   adj. இரு-மை. 1. Great,spacious, vast; பெரிய மாயிரு ஞாலம் (குறள், 999).2. Black; கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக.1171).  

இருமை, duality, the two births, the present and future life.

இரு - பெரிய; கரிய; இரண்டு

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

இருவேறு - இரண்டு வேறு ஊழ் பயன்கள் இருப்பது.

ஊழ் - நியதி.

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

உலகத்து - உலகத்தினுடைய.

இயற்கை – இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்

திரு வேறு – இதில் செல்வம் சேருவதற்கான விதி என்பது ஒன்று.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

தெள்ளியர் - தெளிந்தஅறிவுடையவர்.

ஆதலும் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

தெள்ளியராதலும் வேறு – அறிவுடையராக இருத்தல் என்பது மற்றொரு விதமாய விதி.

முழுப்பொருள்
நாஞ்சில் நாடன்: உலகத்தின் இயற்கை இரண்டு வகையானது. செல்வம் என்பது ஒன்று, தெளிவு என்பது மற்றொன்று.

அறிவுடமையே பொருள் ஈட்டுவதற்கும் செல்வம் சேருவதற்குமான காரணம் என்பது எல்லோருக்கும் அறிந்தவொன்று. ஆனால் அறிவுள்ளவர்களிடல் திரு இல்லாததும், திரு உள்ளவர்களிடம் அறிவு இல்லாததும், இரு வேறு விதமான உழ்வினையால்தான் என்பதும் இவ்விதம் ஊழ் பொதுவாக அறிந்த கோட்பாடுகளுக்கு மாறாக இயங்குவது இயற்கையானது என்றும் கூறுகிறது இக்குறள். இக்குறளும் ஊழின் பெருவலி யாவுள என்பதை வலிந்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்நிலையை எடுத்துக்காட்டும் பழமொழிப் பாடலொன்று இவ்வாறு கூறும்:
“உரைசான்ற சான்றோர் ஒடுங்கி யுறைய 
நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்” (பழமொழி.125)

நாலடியாரில் நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில், வரும் இரண்டு பாடல்கள் இக்குறளின் கருத்தையொட்டி வருகின்றன.
புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
உணர்வ துடையா ரிருப்ப – உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து. (நாலடி 264)

இப்பாடலின் கருத்து: 
கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும் கத்தாழையும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர்.  இப்பாடலின் உள்ளுரைக் கருத்து: கறி முள்ளியும் கத்தாழைச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்துவன. அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மையும் இல்லை என்னும் பாடல் இது.

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் – தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில். (நாலடி 265)

இப்பாடலின் கருத்து: 
இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும் நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக் காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை. அறிவொழுக்கம் அற்றவர் செல்வராக வாழ்வதற்குக் காரணம் ஊழ்வினையே! ஆயினும் அவரிடம் இரக்கத் தன்மையின்மையால், செல்வம் பெற்றும் ஒரு பயனும் இல்லை என்பது கருத்து.

மேலும் : அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

மணக்குடவர் உரை
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

மு.வரதராசனார் உரை
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.


அருளியலும்.. பொருளியலும்..
நாம் இப்புவியில் வாழ இன்றைய தினம் அடிப்படைதேவை பணம் என்றால் மிகையொன்றுமில்லை எனக் கருதுகிறேன். அன்றாட வாழ்வில் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பண்டமாற்றுமுறை மறைந்து உழைப்பின் குறியீடாக, மதிப்பாக உள்ள அந்த பணத்தை/பொருளைச் சம்பாதிக்கும் முயற்சியே,  நமது அன்றாட வாழ்க்கை/நடவடிக்கைகள், பணிகள்.

இதன் நிமித்தமாக அன்றாடம் சகமனிதர்களுடன் உறவாட வேண்டியதாக இருக்கிறது. அந்த முயற்சியில் தெரிந்தோ, தெரியாமலோ நம்மால் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இது தவிர்க்கப்படவேண்டியதா, இல்லை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானா என சிந்தனை நமக்கு வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்கொள்ளும் துன்பம், பிரச்சினைகளுக்கு காரணம் என்ன?, நம்மால் பிறருக்கு துன்பம் எனில் பிறரால் நமக்கு துன்பம் என்பதும் சரிதானே:) அப்போதுதான் இது என்ன எப்படி என்பதை கணிக்க முடியும். வெளிவரவும் முடியும், அதே சமயம் பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை நீக்க நம் பங்கு என சிந்தித்து செயல்படமுடியும்.

இந்த சூழ்நிலை நமக்கு பின்னர் தெரியவரும்போது என்ன செய்வது, தொழிலில், வணிக நடவடிக்கைகளில் இது சாதரணம் என எடுத்துக்கொள்வதா? , இல்லை நான் மிகவும் உணர்வுபூர்வமானவன். பணம் எனக்கு முக்கியமில்லை, மனிதமே முக்கியம் என பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்வதா? பொருளியலா அல்லது அருளியலா ?

இவ்வுலகில் இனிது வாழ மனிதனுக்கு அருளியலும் வேண்டும், பொருளியலும் வேண்டும்

பொருள் மட்டும் இருந்தால்/சம்பாதிக்க வேண்டி இருந்தால் அவன் தனக்காகவும், தனக்கு கிடைக்கும் வசதிகளுக்காகவும் மட்டுமே வாழ்வை நடத்துவான். இது விலங்குநிலை வாழ்வு. அமைதியற்ற வாழ்வு. பொருளே பிரதானம் என்று வரும்பொழுது மனித தன்மை குறைந்துவிடும். அறிவு மட்டுமே அரசாளும். இதுவே இன்றைய உலகவாழ்வு. இது தன்னளவில் உகந்ததாக இருந்தாலும், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நன்றியானது அல்ல.

அருள் மட்டும் இருந்தால் அவன் உலகியலில், பொருளாதார வாழ்வில் தோற்றுவிடுவான். பொருள் அற்ற வாழ்க்கை பொருளற்ற வாழ்வாகிவிடும். அங்கேயும் அமைதி இழப்பு வரும். தன்னளவில் நிச்சயம் பாதிப்பு வரும். இது சமுதாயத்தை பாதிக்கும். இது நம் அனைவருக்கும் பொதுவானது. விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம். 

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு  (374)

எனவேதான் உலகியலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் அருளியலை இழக்கிறார்கள். அருளியலில் ஈடுபட்டவர்கள் உலகியலை இழக்கிறார்கள். இதுவே இன்றைய நிலை. போலித்தனமான அருளியலில் இருப்பவர்கள் ’எல்லாவற்றையும்’ அனுபவிக்கிறார்கள்:)

 எது எப்படி இருப்பினும் இரண்டும் இணைந்த வாழ்வே வெற்றியான வாழ்வு, சீரான வாழ்வு. 

சரி, நமக்கு வேண்டியது என்ன?

அருளியலையும், பொருளியலையும் இணைக்கும் வாழ்வை தியானம் கொண்டுவரும். வாழ்வில் தியானம் செய்வதை விடவும், வாழ்வையே தியான வாழ்க்கையாக மேற்கொள்வது சிறந்தது. அது வேறென்ன.. விழிப்புணர்வுதான், ஒவ்வொரு நொடியிலும்..!!!!!

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்தின்கண் விதி இரண்டு வேறு (வகைப்பட்டது); திரு(வினர் ஆதல்) வேறு தெள்ளியர் ஆதலும் வேறு -செல்வத்தை உடையவராதற்கு (உரிய விதி) வேறு ) அறிவை உடையவ ராதற்கு (உரிய விதி) வேறு.

அகலம்: பின்னர்த் ‘தெள்ளிய ராதல்’ என்று கூறுகின்றமையான், முன்னர்த் திருவினர் ஆதல் என்று கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆதல்’ இரண்டும் உருபும் பொருளும் உடன் தொக்க தொகைகள்.


கருத்து: செல்வந்த ராதற்கும் அறிவுடைய ராதற்கும் உரிய விதிகள் வெவ் வேறு.

Thirukkural - Management - Fate
The natural law of the world is that wealth and knowledge are two different things, differentiates Kural 374.

Twofold is the way of  the world 
Wealth is one, wisdom is another. 

There are people in possession of abundant wealth and there are people in possession of profound knowledge. Both, possession of abundant wealth and possession of profound knowledge, are the results of a person's fate. So to be wealthy and to be intelligent  are two different things. The Kural says that some are destined to be wealthy and some are destined to be intelligent. One cannot choose between these two as one's fate chooses what one deserves. 

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது. 

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...