மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
குறள் 829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]
பொருள்
மிகச் - Very much; abundantly; மிகவும்; பெரிய; ஓர்உவமவுருபு;
மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.
செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.
எள்ளுவாரை - எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
நகச் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.
செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
நட்பினுள் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
சாப் - சாதல் - இறத்தல்
புல்லம் - எருது; இடபராசி; வசைமொழி; மலர்
புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.
புல்லற்பாற்று - அவரோடு ஒட்டி ஒழுகுக (புல்லுதல் – நட்புறவாய் ஒட்டிக்கொள்ளுதல்)
முழுப்பொருள்
ஒரு சிலர் நம்மிடம் நெருக்கமாய் இருப்பதுப்போல் சிரித்து மகிழ்ந்து பேசுவர் விழாக்களில் இணங்குவர் முகஸ்துதி செய்வர் அகத்தில் அழிக்கும் எண்ணம் கொள்வர். ஆனால் உள்ளூர நம்மை இகழுவர். அவர்களை இனம் கண்டுக்கொண்டு, அவர்களிடம் அவர்கள் செய்வதுப்போலவே சிரித்து பேசி மகிழ்ந்து, நட்பை மனதில் அழித்துவிட்டு, அவர்களிடம் இணங்கி இரு. நாம் அவர்களை நம்பியதாக அவர்களை நம்பவைத்துவிடு. தக்க சமயத்தில் அவசியம் ஏற்பட்டால் தண்டித்துவிடலாம். அதுவே அவர்களுக்கு தண்டனை.
ஏன் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் எல்லா இடங்களிலும் நாம் நேர்மையாக இருந்துவிட முடியாது. சில இடங்களில் அது துவேஷத்தை வளர்த்து நமக்கு வெளிப்படையாகவே பல இன்னல்களை கொடுக்கும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறு. நாம் அவர்களை நம்பவில்லை என்று சொன்னால் உடனே அழுகை சிந்தி நாடகம் ஆடுவர் அல்லது நம்மை ஏசுவர். ஆதலால் இந்த நாடகத்தினை எல்லாம் பார்க்காமல் அந்நாடகத்தில் நாமும் ஒரு கதாபாத்திரமாகவே நடித்துவிட்டால் நாடகமும் சுமூகமாய் செல்லும்.
அதாவது வஞ்சகரை வஞ்சகம் செய்து வஞ்சிப்பதே தண்டிப்பது என்பது இக்குறளின் அடிநிலைக் கருத்து. ஆனால் வள்ளுவரே “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்றும் கூறியிருப்பதையும், ஒளவை சொன்ன, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்” என்பதையும் ஒப்பு நோக்கும்போது, கீதையில் கண்ணன் சொன்னது போல தருமத்தின் பாதை மிகவும் சிக்கலானது. வெவ்வேறு நேரங்களில் அது இடம், பொருள் இவற்றுக்கேற்ப மாறும் போலும். சாணக்ய நீதி சொல்லுவதுபோல், இக்குறள், “பகையை உறவாடிக் கெடு” என்கிறது. இதை இருவிதமாகக் கொள்ளலாம். அன்பின் வழி நின்று பகையை மாற்று என்றும், அல்லது அழி என்றும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச் செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி. ('நின்று' என்பதூஉம், 'அரசநீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார். அதன்மேல் வைத்துக் கூறினார். 'சாவ' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' (கலித். முல்லை.5) ¢என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.).
மணக்குடவர் உரை
பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மையிகழும் பகைவரைத் தாமும் அந்நட்பின்கண்ணே நின்று, புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணஞ் செய்து, அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி.
மு.வரதராசனார் உரை
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.
Comments
Post a Comment