Thursday, July 9, 2020

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

குறள் 237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

பட - paṭa   part. படு¹-. A particle of comparison; ஓர் உவமவுருபு மலைபட வரிந்து (சீவக.56).  

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்

வாழாதார் - வாழாதவர்கள்

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

நோவார் - நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

தம்மை -  tmmai   s. Mother, தாய். See தம்; ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு

இகழ்வாரை - இகழ்வார் - இகழ்-தல் - ikaḻ-   4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).  

நோவதுநோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

முழுப்பொருள்
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (குறள் 505)" அதாவது ஒருவருடைய பெருமைக்கு அவ்ருடைய நடவடிக்கைகளும் குணங்களும் செயல்களுமே காரணம். வேறு யாரும் அல்ல. வேறு ஏதும் அல்ல. 

ஒருவர் புகழ்பட வாழவில்லை என்றால் அவரை எல்லோரும் இகழ்வார்கள். அத்தகைய இகழ்ச்சிக்கு தன்னை தான் குறைக்கூறிக்கொள்ளவேண்டும் தவிர பிறரை கூறக்கூடாது. தன்னுடைய இகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தன்னுடைய செயல்கள்கள் தான் காரணம். தான் செய்ய தவறவிட்ட நற்செயல்களுக்கு பொறுப்பு அவரே. 

ஒருவர் புகழுடன் வாழத் அதற்கான தகுதியினை அவர்தான் வளர்த்துக்கொள்ளவேண்டும். தகுதியையும் புகழையும் வளர்த்துக்கொள்ளாமைக்கு தம்மையே நொந்துகொள்ள வேண்டுமே தவிர பிறரை அல்ல. 

ஆதலால் ஒருவரின் இகழ்ச்சிக்குத் தன்னை தான் கடிந்துக்கொள்ளவேண்டுமே தவிர பிறரை அல்ல. பிறரை கடிந்துகொள்வது எதற்காக? 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.).

மணக்குடவர் உரை
புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு? இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது

மு.வரதராசனார் உரை
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
செயலுக்கும் விளைவுக்கும் நாமே காரணம். பிறரைப் பழிக்காதீர்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person doesn't earn growth/greatness/fame/respect etc, then that person should blame himself/herself for it. He/She should not blame others such as parents, friends, relatives, teachers, environment etc. Because (we already knew that) பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளை கல்.  Our (body of) work is the measuring yardstick of greatness. How much we work, how we work, how consistently and and for how long we work, what we work, how much sincere efforts we have put etc. all factor in the greatness.

Questions that I ask to the kid
Whom to blame if one doesn't achieve greatness? 
Is it fair to blame to others if doesn't achieve greatness?

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

குறள் 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
தோன்றின் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

புகழொடு - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

தோன்றுக - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.
 
அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
இலார் - இல்லை என்றால்; இல்லாதவர் 

தோன்றலின்  - தோன்றுவதை விட 

தோன்றாமை  - தோன்றாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
தோன்றுதல் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றில் இக்குறளுக்கு தகுந்த பொருள் கண்காணவெளிப்படுதல், அறியப்படுதல் மற்றும் உண்டாதல். 

பிறத்தல் என்ற பொருள் இக்குறளுக்கு அவ்வளவாக பொருந்தாது ஏனெனில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் புகழுடன் தோன்ற முடியாது. வெறும் அரசர்களின் குடும்பத்திலும் பிரபலங்களின் குடும்பத்திலும் பிறப்பதால் மட்டுமே புகழுடன் பிறக்க முடியும்.  

ஆதலால் தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார் என்ற பொருளும் சாலப் பொருந்தும். 

ஒருவர் இவ்வுலகில் வெளியே குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ கண்காணவெளிப்பட்டாலோ அல்லது அறியப்பட்டாலோ அவர் புகழுடன் தோன்றுக / அறியப்படுக என்று கூறுகிறார். அதாவது ஒருவர் அவருடைய குணத்திற்காக அறத்திற்காக தன் வேலையில் நிபுணத்துவத்திற்காக புகழுடனும் பெருமையுடனும் விளங்கவேண்டும். அதுவே அவருக்கு சிறந்தது. இந்நாட்டிற்கு சிறந்தது. அவரை பார்த்து பலர் (சிலராவது) மன உந்துதல் அடைந்து முன்னேறுவர். ஒருவர் புகழுடன் இருப்பதால் அவர் இவ்வுலகிற்கு நன்மை செய்தவராக இருப்பார். பொதுவான வழக்கிலிருக்கிறார்போல், “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்” என்கிற கதையாயிராமல் இருக்கவேண்டும்.

மாறாக ஒருவர் புகழ் இல்லாமல் இருக்கிறார் என்றால் அவர் இகழ்ச்சியுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அறத்திற்கு புறம்பான பாவங்களை தீச்செயல்களை செய்தல், சோம்பித் திரிதல், செயல்களைச் செவ்வெனச் செய்யாது இருந்தால், கடமையை ஆற்றாது இருத்தல் இகழ்ச்சியை பெற்றுத் தரும். ஆதலால் புகழ் இல்லாத ஒருவர் (இகழ்ச்சி உடைய ஒருவர்) இவ்வுலகத்தில் முன்னே கண்காணவெளிப்படாது அல்லது பிறர் முன் அறியப்படாத இருத்தலே சிறந்தது. ஏனெனில் இவர்கள் பலருக்கு கெடுதலை பரப்புவர். இவர்களை பார்த்து சிலர் தவறான பாதையில் செல்வர். செயல்களை, கடமைகளை புரியமாட்டார்கள். இவர்கள் இவ்வுலகத்திற்கு பாரமே. இவ்வுலகமக்களுக்கும் சுமையே. ஆதலால் தோன்றிக் கெடுதலை உருவாக்குவதைவிட தோன்றாமல் இருப்பது நன்மை.

அதனால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் தோன்றுவது என்றால் புகழுடன் தோன்ற வேண்டும். அப்படிப் புகழ் இல்லையேல் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பது நன்மை பயக்கும். அதனால் ஒருவர் வளரும் பருவத்தில் நூல்களைக் கற்று அறிந்துக் கடமைகளை ஆற்றி செயல்களைப் புரிந்துப் புகழ் பெரும் வண்ணம் தன்னை உண்டாக்கிக்கொள்ளவேண்டும். 

சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பதை மற்றுமோரு குறளில் காணலாம். ஆதலால் ஒருவர் தன் வேலையில் செவ்வென செய்யவில்லை என்றால் அவருக்கு புகழ் இல்லை. அவருக்கு இகழ்ச்சியே இருக்கும். அத்தகையவர் வெளியுலகில் நடமாடும் பொழுது அவர் இகழ்ச்சியை மேலும் சந்திக்கக்கூடும். பலர் அவரை ஒரு தவறான முன்னுதாரணமாக காண்பிக்க வாய்ப்பு உண்டு. அதனால் தோன்றாமல் இருப்பது நன்று. உதாரணமாக புகழ் இல்லாத ஒருவர் அவருடைய நண்பர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவரை தவறான விதத்தில் காண நிறைய வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக நண்பரின் மனைவி அல்லது பிள்ளைக்கள். ஏன் அவர் வாழ்வில் தோல்வியுற்று இருக்கிறார்? பெரிய ஆளாக வில்லை என்று பெற்றோர்களிடம் கேட்க வாய்ப்பு உண்டு. அடுத்த முறை செல்லும் பொழுது அவர்கள் இவருக்கு கொடுக்கும் மரியாதையில் மாற்றம் இருக்கலாம். அப்பொழுது மனம் வலிக்கும். அதனால் தோன்றாமல் இருப்பது நன்று எனலாம். 

வள்ளுவரே “குறள் 235 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்  வித்தகர்க் கல்லால் அரிது” என்று சொல்கிறார். ஒரு வேலையில், தன்மையில் திறனோடு அதாவது சிறப்போடு அல்லது புகழோடு இருக்கவேண்டும்.

மருத்துவத் துறையில் நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லா மருத்துவர்களும் எல்லா பண்டுவமும் பார்ப்பதில்லை. “இந்த நோயாளியை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு போய் விடுங்கள்” என்று மருத்துவர்கள் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம். அவர்களுக்கு நோய் பற்றித் தெரியாதென்பதல்ல. ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது புகழ் இல்லாமல் அந்த நோயாளியைக் குணப்படுத்த முடியாதபோது அவர் வேறு மருத்துவரை பார்க்கச் சொல்கிறார். அன்றி அவரே முயன்று நோயாளிக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் என்ன செய்வது. அதனால் தான் “புகழ்” இல்லாத அந்த மருத்துவர் தோன்ற மறுக்கிறார்.

“தோன்றலின் தோன்றாமை நன்று”. தோன்றாமல் இருப்பது இருவருக்குமே நன்மையைத் தரக்கூடும். தோன்றவே கூடாது என்று வள்ளுவர் சொல்லவில்லை. தோன்றாமை நன்று என்றுதான் சொல்கிறார். ஆனால் திருவள்ளுவர் ஒருவரை ஆமைஓட்டில் ஒழிந்துக்கொள்ள சொல்லவில்லை (i.e don't get into the shell). தோர்வடையாமல் நண்பர்களுடனும் நிபுணர்களுடம் பேசி நமது திறமைகளை வளர்த்துக்கொண்டு புகழை ஈட்டவேண்டும். ஏனென்றால் இன்னொரு இடத்தில் “மெய்வருத்தக் கூலி தரும்” என்று சொன்னவர்தானே வள்ளுவர். 

தாமாக முன்வந்து எதைச் செய்வதானாலும், அதற்குரிய திறனோடு முன் வருக. திறனில்லாதவர்கள் முன்வராமலிருப்பது அவருக்க்கும் அடுத்தவருக்கும் நன்மையே தரும். 
 
பிறக்கும் பொழுது எல்லோராலும் புகழுடன் தோன்ற முடியாது என்று முன்னர் கூறியிருந்தோம். ஆயினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெறும் முன் இவ்வுலகிற்கு நன்மை செய்யும் குழந்தை வேண்டி நற்பண்புகள் கொண்ட குழந்தை வேண்டி தவங்களை (நல் எண்ணங்களும், ஒழுக்கமும், அறமும் இங்கே தவம் எனக்கூறலாம்) செய்து (நல்ல எண்ணங்கள் நல்லவற்றை கொடுக்கும்) குழந்தை பெற வேண்டும். குழந்தைகளும் ஓரளவு வளர்ந்த பின்பு (அதுவரையில் பெற்றோர்கள் நன்கு வளர்க்க வேண்டும்) மறுமையில் (அடுத்த பிறவியில்) புகழுடன் தோன்ற இம்மையில் (இப்பிறவியில்) நற்செயல்களை செய்து நற்குணங்களை கொண்டுப் புகழுடன் சிறந்து விளங்க வேண்டும்.  இவ்வாழ்வு நெற்கதிர்ப் பயிர்கள் போன்று ஒரு தொடர் சங்கிலி என்று உணர வேண்டும். நல்ல விதைகளை உற்பத்தி செய்வது நமது கடமை என எண்ணவேண்டும். அதற்கு தான் முதலில் ஒழுங்காக/புகழுடன் இருத்தல் வேண்டும். 

ஒப்புமை
“துறந்தா யாகில் தூயையு மாதி யுலகத்தே
பிறந்தா யாதி யீதல தில்லைப் பிறிதென்றான்” (கம்ப. பள்ளிடை 86)

“மற்றில தாயினும் மலைந்த வானரம்”
இற்றில தாகிய தென்னும் வார்த்தையும்
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேரலால்
முற்றுவ தென்னினிப் பழியின் மூழ்கினோம்” (கம்ப.மந்திரப் 14)

“அறந்தலை...
மறந்தும்நன் புகழலால் வாழ்வு வேண்டலன்” (கம்ப. விபீடணன் 18)

மேலும்: அஷோக் உரை

கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்களின் ”அழிந்த பிறகு ...” (தமிழில் எம்.சித்தலிங்கையா) நாவலில் இப்படிச் சில வரிகள் வருகிறது 
அவர் (யசவந்தராயர்) என் வாழ்க்கையில் பொறித்துச் சென்ற நினைவு என்றென்றும் என் கைக்கு எட்டக்கூடியது. அதை நான் இருத்திக்கொள்ளலாம் அல்லது மறந்தும்விடலாம். ஒரு மனிதனின் அடையாளம் நீடிப்பதோ அல்லது அழிவதோ அவனுடைய வாழ்க்கையினால்தான். அந்த வாழ்க்கை நம்முடைய நினைவுகளுக்கு உயிர் ஊட்டி, நம் வாழ்க்கையின் மூலம் அழியாது நின்று, கலந்து தொடர்ந்தால், அதுவே மறுபிறப்பாகும் என்று எனக்குப் பட்டது. 

பரிமேலழகர் உரை
தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்).

மணக்குடவர் உரை
பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை
பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
செயல் சிறந்தால் மட்டும் வெளியே சொல்லவும்.


எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உரை (சுட்டியைத் தட்டவும்)
தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார். 

Wednesday, July 8, 2020

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

குறள் 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் 
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
இரத்தலின் - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இன்னாது - தீது; துன்பு

மன்ற - maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக

நிரப்பிய - நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி.

தாமே - தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

தமி - தனிமை; ஒப்பின்மை; கதியின்மை; இரவு
தமியர் -தமி-த்தல் - tami-   11 v. intr. தமி¹. Tobe alone, lonely; தனியாதல். நூறுசெறுவாயினுந்தமித்துப்புக் குணினே (புறநா. 184, 3)., தண்டித்தல் என் குற்றத்தைப் பார்த்துத்தமிக்க நினைத்தாராகில் (ஈடு, 1, 4, 7).  

உணல் -உண்ணல் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

முழுப்பொருள்
தான் ஈன்ற செல்வத்தையும் தன்னிடம் இருக்கும் செல்வத்தையும் பிறருக்கு கொடுத்து உதவாது தனது தனது என்று தானே தனிமையில் உண்ணுவதை போல உண்ணுகிறவர் தன் செல்வத்தை தனக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு பாதுக்காத்துக்கொள்கிறவர் மிகவும் இழிவானவர். அவருடைய இச்செயல் பிறரிடம் இரத்தலை விட தீயது/துன்பமானது. வறுமையில் யாசிப்பவரைவிட துன்பமானது.  

அப்படியென்றால் இரத்தல் தீதா? ஆம் இரத்தல்(யாசித்தல்) தீது ஏனெனில் இரத்தல் தீதில்லை என்றால் எல்லோரும் இரந்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் தான் கொடுத்தலை உயர்த்தி இரத்தலை இகழ்கிறார்கள். கொடுப்பவர்கள் எண்ணிக்கைஉயரும் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும். இது லட்சியவாதம். யதார்த்தம் வேறு. அதனால் தான்  இரத்தல் முழுவதுமாக தீதில்லை. இரத்தலும் இன்பம் என்று இரவு அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். 

“விருந்து புறத்திருக்கக்” என்னும் குறளிலும் வள்ளுவர் சொல்லியிருப்பார். விருந்தோம்பும் பண்பினர், செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருக்கும் தகைமையினர். அது அவர்களிந் ஈகைப் பண்புமாம்.

புறநானூற்றுப் பாடல் வரி(182:3), “தமியர் உண்டலும் இலரே” என்பதிலிருந்து, தனித்திருந்து உண்ணாததைச் சிறப்பாகச் சொல்லலை அறியலாம். பதிற்றுப்பத்துப் (38-13) பாடலொன்று, தனியாக நுகர்வோம் என்ற எண்ணம் எழாமல், பிறரோடு பகிர்ந்து உண்ணும் வேட்கை கெடாமல் நுகரக்கொடுத்த சேரமானது வள்ளமன்மைப் பற்றி இவ்வாறு கூறுகிறது.
“வசையில் செல்வ வான வரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவினெஞ் சத்துப்
பகுத்தூண் டொகுத்த வாண்மைப்
பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே”


“என்னை இரவூக்கும் இன்னா இடும்பைசெய்தாள்” (கலி.141:13-4)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.

மு.வரதராசனார் உரை
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தானே தின்று தீர்ப்பது பிச்சை எடுப்பதினும் கேவலம்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஈத்து - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

உவக்கும் -  உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

அறியார்கொல் -  அறிய மாட்டார்கள்; அறியாதவர்கள்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை

வைத்து - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு
இழக்கும் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்.

வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.
வன்கணவர் - கொடுமையானவர்; அருளற்றவர்

முழுப்பொருள்
பிறருக்கு கொடுப்பதால் (கொடுத்து உதவுவதால்) ஒருவர் மகிழும் இன்பத்தை அனுபவித்தால் தான் உணரமுடியும். அதை பெறுபவரும் இன்பம் அடைகிறார். ஆனால் கொடுப்பதில் இருக்கும் இன்பத்தை அறியாத பேதைகள் தன்னிடம் இருக்கும் (நிலையில்லா) உடைமைகளை பொருட்செல்வத்தை தனது தனது என்று பிறருக்கு கொடுக்காது பேணிப்  பாதுகாக்கின்றவர் மிக கொடுமையானவர். அவர் பின்பு ஒரு நாள் எவரிடமோஅச்செல்வத்தை இழந்து வேதனை அடைவார். பிறருக்கு கொடுத்து உதவாதவருக்கு அருள் கிடையாது. 

கொடுக்காததனால் ஒருவர் செல்வத்தை இழப்பர் என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் கொடுப்பதனால் செல்வத்தை இழப்பர் என்று கூறவில்லை ஏனெனில் ஈகை அளிப்பவர்களுக்கு அருள் பெருகும். அதனால் செல்வமும் பெருகும் அவ்வருளும் அச்செல்வத்தை காக்கும் என்றும் நாம் உணரலாம்.
மூன்று செய்திகளை இக்குறள் சொல்கிறது.  
1) ஈகை அளிப்பது உவகையும், மனநிறைவையும் அளிக்கும். 
2) ஈகை குணம் இல்லாதவர் மனத்தளவில் வறியர். 
3) அச்செல்வம் இருப்பதினால், மகிழ்ச்சியில்லை. மாறாகக், குறையக்கூடாதே, களவாடப்படக்கூடாதே என்னும் கவலைதான் எஞ்சும். கவலை ஒரு நோய். பின்பு தங்கள் செல்வத்தை முறையில்லா வழிகளிலோ அல்லது களவாடப்பட்டோ இழப்பர். அது அவர்களுக்கு நோயை தரும். ஆதலால் செல்வதை பிறருக்கு கொடுக்காது கட்டிக்காப்பது என்பது நோயை கட்டிக்காப்பது போல் ஆகும். 

ஐசக் நியூட்டன் கூறிய “ஒவ்வொரு வினைக்கும், அதே அளவிலான ஓர் எதிர் வினை உள்ளது” என்பது ஓர் இயற்பியல் விதி மட்டுமல்ல. இந்த வாழ்வின், நாம் இருக்கும் பிரபஞ்சத்தின் அடிப்படை விதி! நாம் கொடுப்பதால், அதே அல்லது அதைவிடப் பல மடங்கு நாம் திரும்பப் பெறுகிறோம். நாம் மற்றவர்களுக்கு உதவினால், நமக்கு உதவி தேவையான சமயத்தில் கேட்காமலேயே கிடைக்கிறது! இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். 

கிணற்று நீர் இறைக்க இறைக்க மேலும் மேலும் ஊறும் அல்லவா? அதுபோல, கொடுப்பவர்களுக்கு மேலும் மேலும் செல்வங்கள் வந்து குவியும்.

நூறு ரூபாய்க்கு தானம் செய்து விட்டு, “இதோ பார், நான் தானம் செய்து விட்டேன்” என்று ஐநூறு ரூபாய்க்கு விளம்பரம் செய்யக் கூடாது. “அரை கொத்தரிசி அன்ன தானம், விடிய விடிய மேள தாளம்” என்றொரு பழமொழி உண்டு!

அமெரிக்காவைச் சேர்ந்த சக் ஃபீனீ(Chuck Feeney) என்னும் தொழிலதிபர் தன்னுடைய 6 பில்லியன் வருமானத்தில் 99% அளவு தானமாக அளித்துள்ளார்! மிகவும் எளிமையாக வாழும் முறையைக் கொண்ட இவர், “மற்றவர்களுக்கு உதவி செய்யவே நமது செல்வம் பயன்பட வேண்டும். இந்த எண்ணமே என்னிடம் எப்பொழுதும் இருந்துள்ளது.” என்கிறார். இவர் பல வருட காலமாக யாருக்கும் தெரியாமலேயே தொண்டு செய்துள்ளார். பின்னாளிலேயே இவர் தானம் செய்து வந்து கொண்டிருந்து தெரிய வந்தது. அவர் “நான் செய்யும் வேலை மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமானால் மட்டுமே எனக்குச் சந்தோஷமாக இருக்கும்“ என்றும் கூறுவார்!

கல்வி: “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் பாரதியார். கல்வி தானம் என்பது தானங்களிலேயே மிகவும் சிறந்த தானம்.
பெற்றுக் கொள்பவருக்கு அதிகரிக்கும் அதே சமயத்தில் கொடுப்பவருக்கும் கல்வி அறிவு சிறிதளவும் குறையாது!

நேரம்: வயதானவர்கள், தீராத நோய் வாய்ப்பட்டவர்கள், ஆகியவர்களுடன் பேசுவது. அவர்கள் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பது போன்று நமது நேரத்தை மற்றவர்களுக்கு உபயோகமாகச் செலவிடலாம்.

உணவு, உடை மற்றும் பொருள்: இவற்றை இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

உடல் உழைப்பு: ராமர் பாலம் கட்ட அணில் சிறியதாக உதவி செய்த மாதிரி ஏதாவது வழியில் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம், கண் பார்வையற்றவர்களுக்குத் தேவையானவற்றை உடன் இருந்து கவனிக்கலாம்.

பாலம் கலியான சுந்தரம் அவர்கல் தனது கல்லூரிப் பேராசிரிய பதவியில் 35 ஆண்டுகள் சம்பாத்தித்த அனைத்தையும் ஏழைகளுக்காகச் செலவிட்டார் (மொத்தம் 30 லட்சம் ரூபாய்). குடும்பச்சொத்தில் கிடைத்த ரூபாய் 50 லட்சத்தையும் தானமாக தந்தார். அமேரிக்கா இவரை Man of the Millennium என்று விருது வழங்கி கௌரவித்தது. அப்பொழுது கிடைத்த ரூபாய் 30 கோடியையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து விட்டார்.

இத்தகைய ஈகையை இளமையிலேயே செய்ய வேண்டும். பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் அந்த வாய்ப்பு வராமலே போகலாம். அல்லது வயதான காலத்தில், நோய் மற்றும் முதுமையுடன் அறிவு மயக்கமும் வந்து ஈகை/தர்மம் செய்ய முடியாமல் போகலாம். அதையே திருவள்ளுவரும் கூறியுள்ளார்

எந்த உன்னதம் வாய்ப்பினும்
நீங்களே வைத்துக் 
கொண்டிராதீர்கள்
உடனே யாரிடமாவது சேர்த்துவிடுங்கள்.
அதுவே அதி உன்னதமானது
----- வண்ணதாசன்

 “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்று ஔவையார் சொல்லியிருப்பது போல, செல்வமிருந்தும் பிறர்கீவதற்கு மனமில்லாத கஞ்சர்களின் செல்வத்தை, பிறை களவாடிச் செல்வர், அவர்களே அறியாத வழிகளில்.

“ஈதல் இன்பம் வெஃகி” (அகநா 69:5)

சம்பந்தர் ஆக்கூர் தேவராப்பதிகத்தில், “இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே” என்கிறார். “செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எநிநே தப்புந பலவே” என்கிறது புறநானூற்றுப் பாடலொன்று (189:7-8). “கொன்னே வழங்கான் பொருள்காத்திருப்பானேல் அஆ இழந்தான் என்றெண்ணப்படும்” (நாலடியார் 9), “கொடாஅது வைத்தீட்டினார் இழப்பர்” (நாலடியார் 10) என்ற நாலடியார் பாடல்களும் இக்குறளின் கருத்தையொட்டியன.

"பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் (குறள் 88)" என்றும் திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தில் கூறியிருந்தார். 
 
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர். இஃது இடார் இழப்பரென்றது.

மு.வரதராசனார் உரை
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

சாலமன் பாப்பையா உரை
இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அள்ளித் தருவதே மகிழ்ச்சி. பதுக்காதே.

English Meaning - As I taught a kid - Rajesh
Sharing and giving our wealth to others in various forms will give us happiness / fulfillment in life. A person can realize it only by giving. But the selfish / self centric people who protect their money will not know the real fulfillment gained by giving. These selfish people who protect their money saying "mine", will loose their wealth in some other form. These selfish people are cruel people. Because this excessive amount of wealth actually doesn't belong to them. They had received it more in the name of profits, salary, from ancestors etc which actually belonged to the people

Questions that I ask to the kid
Who will loose everything that will have?
Who is a cruel person?

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

குறள் 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி.

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

மரீஇயவனைப்  - பழகியவனை

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

தீப் - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

பிணி  - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை.

தீண்டல் - தீண்டுதல்; பிறப்புஇறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும்தீட்டு; மாதவிடாய்; வயல்.

அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

முழுப்பொருள்
எக்காலமும் தன்னுடைய உணவை பிறருக்கும் பகுத்துண்டு வாழ்கிறவனுக்கு பசி என்னும் கொடிய (நரக) நோய் தீண்டுவது மிக மிக அரிது. ஏனெனில் பிறர் பசியை போக்கினவனுக்கு பசி (அதாவது வறுமை) எடுக்கும் நிலை வராது அப்படி ஒரு வேலை வந்தாலும் அவன் பசியை வேறு ஒருவர் (இறைவன்) போக்குவார். 

தீப்பிணி என்றது, தீயவையைத் தரக்கூடிய நோய் என்பதனால் மட்டுமல்ல. நோய் தனிமனிதனை அழிப்பது, சில நேரங்களில் சேர்ந்தவரையும் அழிக்கும் தொற்று நோய். பலசமயங்களில் சமூகத்தையே அழிக்கக்கூடிய  தீமையைப் பரப்பும் நோய் . எப்படி என்பதை சென்ற குறளுக்கான விளக்கத்திலேயே சொல்லப்பட்டது. பசியென்பது பத்தையும் பறக்கச்செய்து, களவு, பொய் போன்ற  மனம், மற்றும் ஒழுக்கக்கேட்டை விளைவிக்கும் நோய் .

பகுத்துண்ணலைப் பற்றி, “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” (குறள் 322) என்றும், “தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்” (குறள் 1107) என்றும் கூறுகிறார். நாலடியார் (271) “நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்” என்று கூறுகிறது. இன்னா நாற்பது பாடலொன்றில், “பாத்துணலில்லார் உழைச்சென்று உணலின்னா” என்கிறது

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பாத்து ஊண் மரீஇயவனை - எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை. இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பிறர் பசி போக்குபவனுக்குப் பசிநோய் இராது.

Tuesday, July 7, 2020

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

குறள் 220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து 
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
ஒப்புரவினால் - ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.

வரும் - வரும் ; வந்து சேரும் 

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

எனின் -  என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்

விற்றுக் - விற்றல் - பண்டங்களைவிலைக்குக்கொடுத்தல்.

கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

தக்கது - தகுதி; தகுதியானது.

உடைத்து  -  உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
ஒப்புரவாளனுக்கு பிறருக்கு உதவி செய்து ஒரு கேடு (அல்லது வறுமை) வரும் என்ற நிலை வந்தால் (அல்லது யாராவது சொன்னால்) அக்கேட்டை பெறவதற்காகவாது அவன் தன்னை விற்றாவது அவ்வுதவியை செய்யவேண்டும். உட்பொருள் என்னவெனில் பிறருக்கு உதவி செய்து கெட்டவன் யாரும் இல்லை யாரும் இருக்கவும் முடியாது. ஆதலால் கண்ணை மூடிக்கொண்டு தன்னை விற்றாவது உதவு என்று கூறுகிறார் திருவள்ளுவர். பிறருக்கு உதவ வேண்டுமெனில் தன்னை விற்றலும் தகும்.

அதுமட்டும் இன்றி, பிறருக்கு உதவுவது எவ்விதத்திலும் கேடு அல்ல. இம்மையில் பிற்காலத்திற்கும், அடுத்துவரும் மறுமைக்கும் முதலீடு. ஒப்புரவு செய்தால் பெருமையும் புகழும் கிட்டும். 

பழமொழிப் பாடல் (218) ஒன்று  இதே கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது:
“அடுத்தொன் றிரந்தார்கொன் றீந்தாரைக் கொண்டார் படுதேழை யாமென்று போகினும் போக”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து. கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உன்னை விற்றேனும் உதவி செய்.

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

குறள் 219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

நயம் - nayam   n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

நல்கூர்-தல் - nalkūr-   4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. To be wearied; களைப்படைதல். நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் (மணி. 13, 72). 3. To suffer;துன்புறுதல். மாலைநீ யாயின் மணந்தா ரவராயின்ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை (சிலப். 7, 50).  

நல்கூர்ந்தான் - வறியோன்

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

செயும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

நீர - nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன.

செய்யாது - செய்யாமல்

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அமைகலா - உண்டாகாமல் 

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

முழுப்பொருள்
ஒரு ஒப்புரவாளானுக்கு எது வறுமை? பிறருக்கு கொடுத்து உதவ முடியாத நிலைமையே ஒருவருக்கு வறுமை எனப்படுவது. பணம் இல்லை பொன் இல்லை என்ற நிலைகளை தாண்டி கொடுத்து உதவ வேண்டியவனுக்கு கொடுத்து உதவமுடியாத நிலையே வறுமை. 

செல்வ நிலையில் வறுமையுற்றாலும் ஒப்புரவாளர் மனம் வருந்தமாட்டார். ஆனால் பிறருக்கு கொடுத்து உதவ முடியாத நிலையை எண்ணியே மனம் வருந்துவார். அந்நிலையில் தான் வறியவராய் உள்ளோம் என்று நோகுவார்.

கி.வா.ஜ உரையில் புறநானூற்றிலிருந்து மேற்கோளிட்டு சுட்டியிருப்பார் இவ்வாறு: “புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா இன்மையான் உறவே” (புற 72:17-8)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பிறர்க்கு உதவ முடியாத நிலையே வறுமை.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...