Wednesday, March 11, 2020

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

குறள் 463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

பொருள்
ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

கருதி - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம்.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு
இழக்கும் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்.
செய்வினை

ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

ஊக்கார் -  முயலமாட்டார் 

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

முழுப்பொருள்
ஆக்கம் என்றால் இலாபம் என்று பொருள் கொள்வதை விட பெருக்கம் என்ற பொருளை எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும். ஏனெனில் எந்த ஒரு செயலிலும் ஒருவித பயன் அல்லது இலாபம் இன்றியமையாததாகும். ஆனால் பெருக்கம் என்றால் அளவிற்கு மீறிய இலாபம் அல்லது மிகுதி என்று பொருள்.

ஆதலால் அளவிற்கு மிகுதியான இலாபத்திற்காக ஆசைப்பட்டு ஒரு செயலை செய்து அதனால் நஷ்டமும் அடைவது மட்டும் அல்லாமல் நம்மிடம் இருக்கும் மூலதனத்தையும் இழக்கமாட்டார்கள் அறிவுள்ளவர்கள். ஏனெனில் அதீத இலாபத்தினை ஒரு செயல் கொடுக்குமெனில் அதில் அதிக இடர்கள் வர அபாயம் (ஆபத்து) இருக்க வாய்ப்புகள் பல உண்டு. அத்தகைய அதீத இடர்கள் அபாயங்கள் பெருமளவு நஷ்டத்தையும் துன்பத்தையும் தரும்.

அதனால் தான் அறிவுள்ளவர்கள் அத்தகைய செயல்களை செய்ய முயலக்கூட மாட்டார்கள். அதற்காகவே ஊக்கார் என்ற சொல்லை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார் திருவள்ளுவர்.

ஒப்புமை
வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால்
ஊணிகந் தீட்டப் பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
ஏணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார் (சீவக.770)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார்.
('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.).

மணக்குடவர் உரை
தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார்.

இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.

மு.வரதராசனார் உரை
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

Thirukkural - Management - Decision Making
Kural 463 provides insights into business decisions. People with business acumen — that is the 
ability to anticipate the outcomes of their decisions — and awareness of the time for the return
on investment do not undertake any business venture that will lead to loss of capital, though there 
is an expected gain in the distant future.

It is not wisdom to rose the capital
For the safe of interest.

Extreme risk takers may venture into any business. But calculated risk takers will not do that. Calculated risk takers venture into business dealings only when they are confident of the possibility of achieving success. So a high achievement orientation is needed for success in business.

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு

தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு.

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

தூயார்க்கு -  தூய்மையானவர்களுக்கு ; வலிமையானவர்களுக்கு

எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு

ஆகும் - நடக்கும்,
ஆகும்  - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

தூயார்க்கு - தூய்மையானவர்களுக்கு ; வலிமையானவர்களுக்கு 

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆகுதல் - ஆதல்.
ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன்.
ஆகா - ஆகாது

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
ஒருவர் தன் மனதை தூய்மையாக வைத்துக்கொண்டால் அவருக்கு நல்லவை எஞ்சி நிற்கும். அதாவது அறத்தின் பலனாக புகழ், பெருமையாகியவை நிற்கும். அது அவருடைய வருங்கால சந்ததியருக்கும் பயனை தரும். மனதை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஒருவிதத்தில் எளிதாயினும் அது ஒன்றும் எளிதல்ல. மாசுப்போல் சிறிது சிறிதாக தீமை மனதில் வந்துசேர வாய்ப்புகள் பல உண்டு. அம்மாசுகளை பொசுக்கி / நீக்கி மனதை தூய்மையாக வைத்துக்கொளல் அவசியம்.

அதுப்போல ஒருவர் தன்னுடைய சுற்றத்தை / குலத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் மிக அவசியம். அவ்வாறு ஒருவர் வைத்துக்கொண்டால் அவரால் செய்துமுடிக்க முடியாத நற்செயலே இல்லை என்று கூறலாம். ஏனெனில் கீழோர்களை சிறுமைகொண்டோர்கள நம்முடன் வைத்துக்கொண்டால் அது நமக்கு தீயவற்றை செய்யும். நம்முடைய ஒழுக்கத்தை கெடுக்க வாய்ப்புகள் நேரிடும். கவனத்தை சிதைக்கும். நற்செயலை செய்ய இடையூறாக அமையும். மேலும் சான்றோர்கள் சிறுமைகொண்டோருடன் உறவு வைத்துக்கொள்வதனால் நம்முடன் உறவு வைத்துக்கொள்ளாமல் போகலாம். அல்லது நம்மிடம் பெரிய செயல்கள் செய்துமுடிக்க வாய்ப்புகள் கொடுக்கப்படமாட்டாது. ஆதலால் தன்னையும் தன் சுற்றத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் நற்செயல்களை செய்ய இன்றியமையாததாகும்.

சிறுமைக்கொண்டோரிடம் பழகினால் சிற்றின்பங்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் பேரின்பங்களை அடைவதாற்கான வழியிலிருந்து விலகி பேரின்பத்தை மெய்யான இன்பத்தை மெய்ப்பொருளை அடைய மாட்டோம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) .

மணக்குடவர் உரை
மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.

இது மேலதற்குப் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

Tuesday, March 10, 2020

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

குறள் 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
தக்கார் - தரமும், தகவும் (நடுவாண்மை குணநலம்); மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்.

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

இனத்தனாய் - இனத்தான் - உறவினன்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

ஒழுக - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வல்லானைச் - வல்லான் - வலிமையுள்ளவன்; திறமையானவன்; கடவுள்; சூதாடுபவன்.

செற்றார் - பகைவர்

செயக்கிடந்தது -செய்யக் கூடியது

இல் - ஒன்றுமில்லை

முழுப்பொருள்
தக்கார் என்றால் பெரியோர் சான்றோர் என்று மட்டும் அல்லாது நடுவுநிலைமையுடையோர் என்ற பொருளும் அடங்கும். ஆதலால் (ஒரு அரசர்) ஒருவர் நடுவுநிலைமையுடையோரான சான்றோர்களுடன் ஒழுகி உறவு வளர்த்து அவர்கள் அறிவுரைகளை ஏற்று நடக்கக்கூடிய திறமையுள்ளவனை பகைவர்கள் ஒன்றும் செய்ய இயலாது. சான்றோர்கள் நாம் தவறு செய்தால் நம்மை திருத்தி நல்வழிப்படுத்துவர். நம்மில் பகை வளராது நம்மை காக்கப்பர்.

உதாரணமாக மஹாபாரதத்தில் துரியோதனனிடம் பீஷ்மர் போன்ற பிதாமகர் இருந்தும் துரியோதனன் பலர் அறிவுரைகளை கேட்கவே இல்லை. தன் சித்தத்திற்கு வேண்டியதை தவிர பிறர் சொல்லும் நல்லதை கேட்கும் திறனற்றவனாக இருந்தான். அதனால் தான் பகையை வளர்த்துக்கொண்டு அழிந்தான். ஆனால் பாண்டவர்கள் அறத்தில் சான்றோர் சொன்னவற்றை மதித்தார்கள். பாண்டவர்களுக்குள் உள்ளே தருமன் / யுதிஷ்ட்ரன் சொன்னவற்றை மற்ற நால்வரும் (பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்) என்றும் மதித்து நடந்தனர். தருமன் பகை வளராது பாதுகாத்தார்.

நாலடியார் பாடல் ஒன்று,
புன்செய் நிலத்திலும், நன்செய் நிலத்திலும் மரக்கட்டையைச் சார்ந்து முளைத்திருக்கும் புல்லானது, உழவர்களின் கலப்பைக்குச் சிறிதும் அசையாது. அதுபோல, வலிமை அற்றவராயினும் வலிமை மிக்காரைச் சார்ந்திருப்பாராயின், பகைவர் சினம் அவர்மேல் செல்லாது என்கிறது. அப்பாடல் கீழே:
கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
செல்லாவாம் செற்றார்சினம். (நாலடி 178)

ஆத்திச்சூடி சொல்வதும், “சான்றோர் இனத்திரு” என்பதுதான். பகையென்பது புறப்பகை மட்டுமல்லாது, உடனிருந்து அழிக்கும் அகப்பகையும் என்பது பெறப்படும்.

”....... தோள்வலி தாங்கினராயினும்
அமைச்சர் சொல்வழியாற்றுதல் ஆற்றலே” (கம்ப.மந்தரை.15)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.
(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்¢த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.).

மணக்குடவர் உரை
தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.

இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.

மு.வரதராசனார் உரை
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

குறள் 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]

பொருள்
குற்றமே - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

காக்க - காத்தல், பாதுகாத்தல், தடுத்தல்; காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.

பொருளாக பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. 

குற்றமேகுற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

அற்றம் அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை

தரூஉம் - தரும், கொடுக்கும்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

முழுப்பொருள்
குற்றங்கள் நடக்காதவண்ணம் அரசு ஆட்சிப்புரிய வேண்டும்.  அதனை கொள்கையாக கடைப்பிடிக்கவேண்டும். இல்லையென்றால் அக்குற்றங்களே துன்பத்தை தரும் அழிவை தரும். மேலும் அக்குற்றங்கள் பகை முளைத்தெழ வித்தாக அமைந்துவிடும். பகை அழிவை தரும். பகை ஒருவித மனக்குற்றமாகும்.

மனதில் பகை ஒருவனுக்கு பலவகையில் அழிவு தரும். மனதில் சந்தோஷம் முகத்தில் சிரிப்பு ஆகியவை அழிந்துவிடும். ஆதலால் துன்பங்களும் அழிவுகளும் வராது இருக்க வேண்டும் என்றால் பகை வராது மனதை பாதுக்காக்க வேண்டும். ஆதலால் குற்றங்கள் நடக்காது பாதுகாக்க வேண்டும். மேலும் பகையும் ஒருவித மனக்குற்றமே ஆகும். இது தனி நபருக்கும் பொருந்தும், அரசுக்கும் பொருந்தும். 

பாண்டியன் நெடுஞ்செழியன் ஆராயாமல் செய்த தவற்றினால், சிலம்பைத் திருடிய உண்மைக் கள்வனை அறியாமல், தானும் அழிந்து தன்குடிமக்களும் அழிபடுவதற்கு காரணமான கதை எல்லோரும் அறிந்ததுதான்!

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே, குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.
(இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாராமையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றம் அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது 'அரும்பண்பினால் தீமை காக்க,' என்பதுபோல நின்றது.).

மணக்குடவர் உரை
தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான். இது குற்றங் கடிய வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

Monday, March 9, 2020

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

குறள் 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]

பொருள்
எண் - எண்ணிக்கை; கணக்கிடுதல்; எண்ணம்; ஆலோசனை; அறிவு; மனம்; கவலை; மதிப்பு; இலக்கம்; கணக்கு; சோதிடநூல்; இலக்கியம்; வரையறை; தருக்கம்; மாற்று; மந்திரம்; அம்போதரங்கம்; எளிமை; வலி; எள்; (வி)எண்என்னும்ஏவல்; நினை, கருது.

பொருளவாகச் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

செலச்சொல்லித் - செலுத்தல்
செலுத்தல் - செல்¹(லு)-தல்
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

பிறர் - piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர். பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் (குறள்,319).; அயலார்

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

நுண் - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

காண்பது - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
நாம் பெற்ற அறிவென்பது யாது?
நாம் பெற்ற அறிவை பிறர் எளிதாக விளங்கி அவர்கள் மனதில் நிலைக்கும் வண்ணம் எடுத்துரைக்கும் தெளிவும் ஆற்றலும் வாய்ந்தது (தெளிந்த) அறிவாகும்.

மிகவும் கடினமான கருத்துக்களையும், கோட்பாடுகளையும் கூட மிகவும் எளிதாக அடுத்தவர் மனங்களில் பதிய, அறிய சொல்லும் திறமைவாய்க்க ஐயம் அகன்ற ஆழ்ந்த நூலறிவும், அனுபவ அறிவும் தேவை. 

நாம் எவ்வாறு அவ்வறிவை பெறுவோம்?
தானாக நூல்பலக்கற்று அல்லது பிறரிடம் இருந்து கற்கும் கல்வியின் பொருளை நுண்மையாக ஆராய்ந்து நுட்பமான பொருளை (மெய்ப்பொருள்) காண்பதே அறிவாகும்.

மிக்க கவனமும், கேட்டத்தை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் திறமையும் அறிவுடையவர்களுக்கே இருக்கும்.

சொல்வன்மை, கேள்வி, மெய்யுணர்தல் ஆகியவற்றை ஒருங்கே அமையப்பெறுதலே அறிவுடைமையாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க” (சம்பந்தர்.ஆமாத்தூர்.6)

“நீ என்ன கற்கிறாய் இப்போது?” என சுவடிகளை கட்டிவைத்தபடி தேவயானி கேட்டாள். “நாளும் கல்விதான். எதுவும் என்னுள் நுழைவதில்லை” என்றாள் சர்மிஷ்டை. “கற்றவற்றைப்பற்றி உன் கருத்தை உருவாக்கிக்கொள், உன்னுள் முளைத்தவையே உன்னில் வளரமுடியும்” என்றாள் தேவயானி.


பரிமேலழகர் உரை
தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி, பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு.
(உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொருளாம்படி பிறரிசையச் சொல்லிப் பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது. இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.

மு.வரதராசனார் உரை
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை
அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.

Thirukkural - Management - Knowledge
Anybody can complicate the simple. But it demands knowledge to simplify the complicate.  A knowledgeable person is one who has the ability to simplify complicate subjects and make them easier for others to understand.  That is why a knowledgeable person is called  a facilitator. To achieve that, he has to assess the validity of information  shared by others and share that with others in a way others can understand, advises Kural 424.

Wisdom simplifies its subtlety to others
And other's subtlety to itself.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

குறள் 413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
[பொருட்பால், அரசியல், கேள்வி]

பொருள்
செவி காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை.

உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை

கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ்

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

அவி -  வேள்வித்தீயில்இடும்கடவுளர்க்குரியஉணவு; உணவு சோறு நெய் நீர் ஆடு கதிர் கதிரவன் காற்று மேகம் மலை மதில் பூப்பினள்

உணவின் - உணவு -  சோறு; உணவுப்பொருள்; மழை

ஆன்று - நிறைந்து:விரிந்து; நீங்கி.

ஆன்றார் -  அறிஞர்; தேவர்:பெரியோர்:பண்புள்ளோர்.

ஆன்றாரொடு - அறிஞர் உடன்

ஒப்பர் -
ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

முழுப்பொருள்
நம் செவியிற்கு இடப்படும் உணவென்பது கேள்விச்செல்வம். அது வானுலகத்தோர்க்கு வேள்வியில் இடப்படும் அவியை போன்றதாகும். இப்பூமியில் வேள்விகளை நடத்தும் பொழுது அவியினை உணவாக தேவர்களுக்குப் படைப்பார்கள் மானிடர்கள். அந்த அவியனை உண்டு இவ்வுலகத்திற்கு நன்மை செய்வார்கள் தேவர்கள். வானுலகத்தவர்களுக்கு உணவில்லையா என்ன? ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். உணவை அளித்ததனால் பயனும் கிட்டிற்று. அதுமட்டுமின்றி வேள்வி எனப்படுவது வேதங்கள் ஒலிக்கும் இடம். வேதங்கள் ஞானத்தின் ஊற்று. அவி என்பது அனலை வளர்ப்பதற்கு. வேள்வியில் நெருப்பு வளர வளர மாசுகள் அழிந்துவிடும். நெருப்பைப் போல் பசிக்கொண்டது வேறேதுமில்லை.  கேள்விச்செல்வமும் இந்த வெளியில் இடப்படும் அவியைப் போன்றது தான். அது வளர்ந்துக்கொண்டே இருக்கும். வேள்வியை பற்றியும் அதில் இடப்படும் அவியைப் பற்றியும் கீழ்க்காணும் பத்திகளில் அறிந்து அதனை கேள்விச்செல்வதுடன் ஒப்பிட்டு கேள்வியின் சிறப்பை உணர்க.

வேள்வியை பற்றி [வெண்முரசு - நூல் ஐந்து – பிரயாகை – 21]
நெருப்பின் பசிக்கு அளவே இல்லை. அதை உணவு அணைக்கமுடியாது. உண்ணும்தோறும் வளரும் பசி என்றால் நெருப்பு மட்டுமே. நெருப்பைவிட ஆற்றல்மிக்க ஏதும் இப்புவியில் இல்லை. பிரம்மத்தின் புன்னகை ஒளி என்றால் அதன் சினமே நெருப்பு. வெண்ணிற நெருப்பு இன்னும் அழுத்தமானது. செந்நிற நெருப்பு தன்னை நெருப்பென காட்டிக்கொள்கிறது. வெண்ணிற நெருப்பு அதில் எரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் வெம்மைகொண்டது. இப்புவியில் உள்ள அனைத்தும் இருத்தல் கொண்டவை. ஒன்றே ஒன்றுதான் அழிதலே இருப்பாகக் கொண்டது. காலத்தையும் வெளியையும் சுமந்துகொண்டிருக்கின்றன அனைத்தும். நெருப்போ அவற்றை ஒவ்வொரு கணமும் உதறிக்கொண்டிருக்கிறது. நெருப்பென்றால் என்ன என்று எண்ணினீர்கள்? நெருப்பென்றால் நெளிவு. மாட்டேன் மாட்டேன் என உதறும் விரைவு. வேண்டாம் வேண்டாம் என மறுக்கும் திமிறல். சொல்லப்போனால் இங்கே உள்ளவை இரண்டே. நெருப்பும் நெருப்பு அல்லாதவையும். நெருப்பல்லாத அனைத்தையும் உண்ணுவதே நெருப்பின் இயல்பென்பதனால் பசியும் உணவுமன்றி இங்கு ஏதும் இல்லை. நெருப்பை அன்றி மானுடன் அறிவதற்கேதுமில்லை இங்கே. நெருப்பை வளர்ப்பதுபோல புனிதமானது ஏதுமில்லை. நெருப்புக்கு அவியிடுவதைப்போல மகத்தானது ஏதுமில்லை. நெருப்பில் மூழ்கி அழிவதுபோல முழுமையும் வேறில்லை. அவி என்பது அனலை வளர்ப்பதே என்று அறிக.

மேலும் அவியை  பற்றி [வெண்முரசு  நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 11]
பிரம்மனின் காமமே அக்னிதேவன் என்கின்றன நூல்கள். மாளாப் பெருங்காமத்தின் அனலே அக்னி. ஆயிரம் நாக்குகளால் ஆன ஒளி. தொட்டுத்தொட்டுத்தாவும் துடிப்பு. உச்சம் கொண்டு அந்தரத்தில் எழுந்து நிற்கும் விசை. அணைந்து புகைந்து கருகி மறைகையிலும் எங்கோ தன் பொறியை விட்டுச்செல்பவன். குளிர்ந்திருக்கும் அனைத்திலும் உள்நின்று எரிபவன். அமைந்திருக்கும் அனைத்திற்குள்ளும் தழலாடும் தனியன்.
ஏழுமுனிவரும் பங்குகொண்ட பெருவேள்வி ஒன்றில் மூன்று எரிகுளங்களிலாக எழுந்து பொன்னொளியுடன் நின்றாடினான் எரியிறை. அக்னியின் முன் அத்தனை பெண்களும் அழகிகளாகிறார்கள். அங்கிரஸின் அறத்துணைவி சிவை பேரழகியாக சுடர்ந்தாள். அவளை நோக்கி நா நீட்டி தவித்தாடியது நெருப்பு. அதன் நடனத்தை எதிரொளித்து தழலாடியது அவள் உடலின் மென்மை.
எரிந்து எரிந்தமைந்தது எரியிறையின் காமம். அதில் தெறித்த பொறி பறந்துசென்று அருகே ஒரு காய்ந்த மரத்தை பற்றிக்கொண்டு வானோக்கி இதழ் விரித்து பெருமலராகியது. ஒன்றிலிருந்து ஒன்றென பற்றி எரிந்துகொண்டே இருந்தான் அக்னிதேவன். அவன் காமத்தில் அவியாகி அழிந்தது காய்ந்து நின்றிருந்த மலைச்சரிவின் காடு.

கம்பர் நாட்டுப்படலத்தில் (15), “மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்” என்று கேள்வியை நோயறுக்கும் மருந்தைவிட சிறந்தது என்கிறார்.

“அவியுணவினோர் புறங்காப்ப” (புறநா.377:5)

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.
(செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.

மு.வரதராசனார் உரை
கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

சாலமன் பாப்பையா உரை
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

Sunday, March 8, 2020

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

குறள் 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
[பொருட்பால், அரசியல், கல்லாமை]

பொருள்
கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

கல்லா ஒருவன் - கல்வி கற்காதவர்கள்.

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

தலைப்பெய்து - தலைப்பெய்தல் - ஒன்றுகூடுதல்; கிட்டுதல்; பெய்துரைத்தல்; கூடுதல்.

சொல்லாட - சொல்லாடுதல் - பேச்சில்வழங்குதல்; பேசுதல்.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
கல்வி கற்காதவர்களின் குணம் அல்லது தன்மை எப்படிப்பட்டது தெரியுமா? அத்தகைய கல்வி அல்லாதவர்களிடம் நாம் ஒன்றுக்கூடும் பொழுது சிறிது நேரம் பேசினாலே நமக்கு சோர்வு உண்டாகும். ஆனால் கற்றவர்களிடம் பேசினால் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படும். 

கல்வி என்றால் கற்கை. அந்தக் கற்கையானது கல்விக்கூடங்களில் தான் பெறமுடியும் என்றில்லை. பலர் பயிற்சியாலும் அனுபவத்தாலும் அவதானிப்பினாலும் கற்றோரிடம் பழகுவதால் பெற முடியும். உதாரணமாக தமிழகத்தின் இலக்கிய சாதனையாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அவர் தனது ஒன்பது வயது வரை மட்டும் படித்துள்ளார் (சுமார் 3 ஆம் வகுப்பு). ஆனால் அவர் எழுதிய ஒவ்வொன்றும் உலகத்தரம் வாய்ந்தவை. பல கதைகள், சிறுகதைகள், நாவல்கள் பல காலங்கள் கடந்து நிற்கும் தகுதி வாய்ந்தவை. 

ஆதலால் இக்குறள் கல்வியறிவினை எத்தகைய முறையிலும் பெறாதவர்களை பற்றியே என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால்” (பழமொழி 2)

“அயர்வில் கேள்விசால் அறிஞர் வேலைமுன்
பயில்வில் கல்வியார் பொலிவில் பான்மைபோல்” (கம்ப.மராமர.70)

பரிமேலழகர் உரை
கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.
('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...