Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Wednesday, July 30, 2014

வேண்டற்க வென்றிடினும் சூதினை

குறள் 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் 
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
[பொருட்பால்,நட்பியல், சூது]

பொருள் 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டற்க - வேண்டாம் 

வென்று வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

வென்றிடினும் - வென்றாலும் 

சூதினை - சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

வென்றதூஉம் வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

தூண்டுதல் - செலுத்துதல்; ஏவுதல்; தள்ளுதல்; விளக்கைத்தூண்டுதல்; நினைப்பூட்டுதல்; செலுத்துதல்; அனுப்புதல்; கிளப்பிவிடுதல்.

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்என்னும்நான்குவகைப்பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி.

மீன் - நீர்வாழ்உயிரி; விண்மீன்; சித்திரைநாள்; அத்தநாள்; மீனராசி; சுறா; நெய்தல்நிலப்பறை.

விழுங்குதல் - மெல்லாதுஉட்கொள்ளுதல்; கவளீகரித்தல்; தெளிவின்றிப்பேசுதல்; வெல்லுதல்; சொற்களைமழுப்புதல்; கவர்தல்; பரவுதல்; கொல்லுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள் 
நமக்கு ஆரம்பித்தில் வெற்றியை தரக் கூடியதாகவே இருந்தாலும், நாம் என்றும் சூது விளையாட்டை நாடி செல்ல கூடாது. ஏனெனில், அந்த வெற்றியானது, மீன் தூண்டில் முனையில் உள்ள இரும்பை போன்றது. அந்த இரும்பை இரை என எண்ணி மாட்டிக்கொள்ளும் மீனை போல், சூது மூலம் வரும் வெற்றியானது நம்மை சிக்க வைத்து விடும்.

சூதினால் மகாபாரதத்தில் தர்மர், நாடு, சகோதரர், மனைவி எல்லாம் இழந்து காட்டில் ஒளிந்து வாழும் அவல நிலையும், அதை தொடர்ந்த மிக பெரிய போரும், அதன் இழப்புகளும் அனைவரும் அறிந்ததே.

சூது அத்தகைய வலிமை உடையது. வெற்றி என்னும் மாய தூண்டிலால் கவரப்பட்டு. சூது விளையாட்டில் எக்காரணம் கொண்டும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது என்பதே கருத்தாகும் .

பரிமேலழகர் உரை
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும். (வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.).

மணக்குடவர் உரை
வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும். இது பின் கேடுபயக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

Tuesday, July 29, 2014

இகலென்ப எல்லா உயிர்க்கும்

குறள் 851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பாரிக்கும் நோய்.
[பொருட்பால்,  நட்பியல், இகல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி.
இகலாட்டம், s. Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை. எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing.

என்ப - என்பது

இகல் என்ப - மனவேறு பாடு என்பது யாது என்று நூலோர் சொல்வார்கள் என்றால்

எல்லா - எல்லாம் ; முழுதும்; யாவும் 

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

எல்லா உயிர்க்கும்  - எல்லா உயிர்கள் இடத்திலும்

பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.

பகல் - பகு - பிறரோடு கூடாமை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

பகலென்னும் - பிறரோடு கூடாது இருத்தல்

பண்பு -  வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இன்மை இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

பண்பின்மை - பண்பு இல்லாது

பார் - பரப்பு; தேரின்பரப்பு; வண்டியின்நெடுஞ்சட்டம்; பூமி; நிலம்என்னும்பூதம்; நாடு; வன்னிலம்; பாறை; தடை; உரோகிணிநாள்; பருமை; வரம்பு; முத்துவிளையும்திட்டு; மறையோன்; புத்தன்; பாத்திபலகொண்டபகுதி; அடுக்கு; தடவை.

பார் - பூமி, நிலம்

பாரி-த்தல் -   pāri-   11 v. cf. sphāri. intr.1. To spread, expand; to abound; பரவுதல்.இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706). 2. Tobe bulky, huge; பருத்தல். Colloq. 3. To increase; மிகுதியாதல். தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து (பெரியபு. இளையான். 9). 4. Toarise, appear, come into being; தோன்றுதல்.பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442).5. To prepare; ஆயத்தப்படுதல். பாயிய வெழுந்தவேங்கை பாரிக்குமளவில் (சூளா. துற. 19).--tr. 1.To foster; வளர்த்தல். பண்பின்மை பாரிக்கு நோய்(குறள், 851). 2. To cause to appear; தோன்றச்செய்தல். 3. To cause to be obtained;அமைத்துக்கொடுத்தல். பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால் (அரிசமய. பத்திசா. 98). 4. Tomake, form, construct, create, constitute; உண்டாக்குதல். (W.) 5. To fill up, complete;நிறைத்தல். பாரித்துள்ள இப்பண்டமும் (திருவிளை.குண்டோ. 16). 6. To wear, as ornaments; அணிதல். கைவளை பாரித்தார் (இராமநா. பால. 21). 7.To worship with flowers; அருச்சித்தல். தடமலரெட

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

பாரிக்கும் நோய் - உலகத்தில் நிலவும் நோய்

முழுப்பொருள்
இகல் என்றால் பகைமை, போர், முரணுகை, மனவேறுபாடு. அத்தகைய இகல் என்பது யாது என்றால் எல்லா உயிர்களையும் பகுத்து அதனுடன் இணங்கிச் செல்லாமல் அதனுடன் கூடாது இருப்பது. இத்தகைய பண்பின்மையை (பண்பு இன்மை) வளர்க்கும் தீய குணமே/நோயே மனவேறுபாடு/இகல் என்று நூலோர்/சான்றோர் சொல்லுவர்.

குடும்பம் உறவுகள் என்றால் ஏற்ற தாழ்வுகள் வேறுபாடுகள் இருப்பது எல்லா மனிதர்களுக்கும் இருப்பது போன்று இயல்பான ஒன்று தான். ஊர்க் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். விட்டுக்கொடுத்தான் குடும்பத்தில் உறவுகளை பேண வேண்டும். வாழ்நாள் முழுதும் செய்ய தேவையாக இருந்தாலும் செய்ய வேண்டும். ஏனெனில் பகைவளர்த்து தனித்து வாழ்ந்து நாம் சாதிப்பது ஒன்றுமில்லை. அதற்காக சுயமரியாதையை குறைத்துக்கொண்டு உறவு வளர்க்கவேண்டியதில்லை. சுயமரியாதை பாதிக்கப்படும் இடங்களில் அமைதியாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் நன்றல்லவற்றை அன்றே மறப்பதே நன்று. அது பகையை வளர்க்காது நம் நிம்மதியை காப்பாற்றும். ஏனெனில் நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற?. பாதிப்பிரச்சனைகள் போனவற்றை பற்றிப் பேசி பேசி ஊதிப் பெருக்கி வளர்ப்பவை யாகும். அது சில உறவுகள் பிரச்சனைகளை தூபம் போட்டு வளர்த்துவிடுவதில் கெட்டிகாரர்கள். ஆதலால் நினைவில் கொள்ளுகள் ”பகல் என்னும் பண்பு இன்மை இந்த பார் உலகில் ஒரு நோயாகும்”. நோயினை விலகி இருங்கள்.

பரிமேலழகர் உரை
எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை, பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.

விளக்கம் (மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லா உயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும் கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று. இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இகல்-மாறுபாடு; எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய்- இயங்குதிணைப்பட்ட எல்லாவுயிர்கட்கும் இனத்தொடு கூடி வாழாமைக்கு ஏதுவான, பிரிவினை யென்னும் தீய குணத்தை வளர்க்கும் மனநோய்; என்ப- என்று கூறுவர் அறநூலார்.

சேக்கையும் உணவும் இணைவிழைச்சும் பற்றி அஃறிணையுயிரினங்கட்குள்ளும் இகல் விளைதலின், 'எல்லாவுயிர்க்கும்' என்றும், ஒன்றுபட்டிருக்க வேண்டிய இனத்தைப் பல்வேறு பிரிவாகப் பகுத்தலால் 'பகல்' என்றும், கூறினார். சேக்கை தங்குமிடம். இகலென்னுந் தீக்குணமுடைய மாந்தர் உயர்திணையாகாது அஃறிணைப்பாற்படுவர் என்பது தோன்றப் 'பண்பின்மை பாரிக்கு நோய்' என்றார்.

மணக்குடவர் உரை
எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று. 

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
இகல் means enmity/war/conflict/Rivalry. What is rivalry? Rivalry breeds differences/discrimination among humans (and all organisms) thereby separating them just like day and night doesn't gel together. Rivalry is a dangerous trait; a disease that kills us, friendship, relationships, families, societies. So, one should not support rivalry or discrimination

Questions that I ask to the kid
What is rivalry? Why rivalry is considered a disease?

அறன்கடை நின்றாருள் எல்லாம்

குறள் 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்.
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின் பிறனில் விழையாமை வைக்கப்பட்டது.)

பொருள்
அறம் - அறம் - அறன்,  Moral or religious duty, virtue; the performance of good works according to the shasters--includ ing justice, hospitality, liberality, &c., also what is prescribed as the duty to be prac tised by each particular caste. Compare தருமம்

அறன்கடை - பாவம்.
அறன்கடை - பாவம் செய்து வாழ்வோர் ; அறத்தை தன் வாழ்வில் முதலாக வைக்காது, இறுதியாகயாக வைத்தல் (அறமில்லாதிருத்தல்)

நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

நின்று -  எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்படவரும் ஒர்இடைச்சொல்.

நின்றாருள் - நின்றவர்களில் 

எல்லாம் - எல்லோரிலும் , முழுதும்

பிறன் -  மற்றையான், அன்னியன், அயலான்

பிறன்கடை - பிறன்பெண்டிரில் காமம் கொண்டு

நின்றாரின் - அவரது வீட்டில் நின்றவர்

பேதையார் - அறிவில்லாதவர், மடயர்

இல் - வேறு இல்லை.

முழுப்பொருள்
முதலில்: காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழைவதே பெரிய ஒழுக்க கேடு என்பதை குறிக்கவே இவ்வதிகாரம் ஒழுக்கமுடைமைக்கு அடுத்த அதிகாரமாக வைக்கப்பட்டுள்ளது. 

அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்னும் கருத்தால் கரிசு (பாவம் ) அறங்கடை எனப்பட்டது. அத்தகைய பாவ வழியில் அறத்தினை தன்வாழ்வில் முதன்மையான வாழ்முறையாகக் கொள்ளாது கீழான, நெறியற்ற, அறமொழிந்த வாழ்வை வாழ்கின்ற மனிதருள் எல்லாம், காம மயக்கத்தால் பிறர் மனைவியின் மீது இச்சைகொண்டு விழைந்து பிறர் வீட்டின் வாசலில் இரப்புக்காக நிற்கும் மூடர் இழிந்தோர் பேதையார் (அறிவிலிகால்) யாரும் வேறு இல்லை.  பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் (பிச்சை கேட்டுக்கும்) நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று .

ஐம்பெரும் அறப்பிழைகளாகக் கருதப்படுபவற்றுள், பிறன் மனைவிழைதலும் சேருதலும் ஒன்றாகும். இப்பிழையினால் அறக்கேடும், பொருட்கேடும் விளையும்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
”அறன்கடைப் படாஅ வாழ்க்கை” (அகநா 15:1)
“பிறன்கடை நின்றொழுகு வானும்” (திரிகடுகம் 19)

ஆத்திச்சூடி
மெல்லி நல்லாள் தோள்சேர் - பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்
மோகத்தை முனி - காம ஆசைகளை விட்டொழிப்பாயாக
மனம் தடுமாறேல் - எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

பரிமேலழகர் உரை
அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை. 

விளக்கம்
(அறத்தின் நீக்கப்பட்டமையின் 'அறன்கடை' என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார்; எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் ; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் - பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண்போய் நின்றாரைப்போலப் பேதையாரில்லை .

அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதென்னுங் கருத்தால் கரிசு (பாவம் ) அறங்கடை எனப்பட்டது . காமத்தாற் பெண்ணிற்கடிமை யாகும் அண்ணாளரும் விலைமகளிரொடு கூடும் காமுகரும் போல , அறமும் பொருளும் இழத்தலேயன்றி , அச்சத்தால் தாம் விரும்பிய இன்பமும் இழத்தலால் , பிறன் மனைவியை விரும்புவாரைப் போலப் பேதையாரில்லை என்றார் . கடை என்னும் சொல்லொப்புமை பற்றித் தீவினையில் நிலைத்தவரையும் ' நின்றார் ' என்றார் . பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று .

மணக்குடவர் உரை
காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.

மு.வரதராசனார் உரை
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுபவனே பெரும்பாவி.

Monday, July 28, 2014

பேதைமையுள் எல்லாம் பேதைமை

குறள் 832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை 
கையல்ல தன்கட் செயல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

பேதைமையுள் - பேதைமைகளில்

எல்லாம் - எல்லாம்

பேதைமை - பேதைமை; கொடியது

காதன்மை - காதல், 1.Affection, attachment; அன்பு. காதன்மை கந்தா (குறள்.507); 2.Desire; ஆசை, 3.lust, passion, விரகம்
கை - கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

கையல்ல - கையல்லது - தகாதது

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

தன்கட்செயல் - தன்னுடைய நேரத்தை அதில் ஈடுப்படுத்தி செயல்படுதல்

முழுப்பொருள்
ஒருவனுக்கு அறியாமையுள் எல்லாம் அறியாமை என்னவென்றால் தன் நிலைக்கு ஒவ்வாத, ஒழுக்கத்திற்கு ஒவ்வாத, அல்லது எப்பயனையும் தராத ஒரு தகாத செயலை மிகுந்த விருப்பப்பட்டு / ஈடுப்பாடுடன் / பற்றுக்கொண்டு செய்வதே ஆகும். 

ஒப்புமை
சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் – கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில். (பழமொழி 67)

பரிமேலழகர் உரை
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். 

விளக்கம் 
(இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பேதைமையுள் எல்லாம் பேதைமை - பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; கை அல்லதன்கண் காதல் செயல் - ஒருவன் தனக்குத்தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல்.

கையல்லது செய்தல் , இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப் பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செய்தொழுகுதல். 'கை' ஒழுக்கம்; ஆகுபெயர்.

மணக்குடவர் உரை
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று 

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு

குறள் 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள்.
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
நகல் - சிரிக்கை (சிரிப்பு), மகிழ்ச்சி (தம்முட் குழீஇ நகலி னினிதாயின்(நாலடி, 137)), நட்பு (நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860)) ; பரிகாசம், ஏளனம்; படி; 

வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

வல்லர் - வலிமை; habit of feasting or fasting for days at a time

நகல்வல்லர் - பல மக்களுடன்/மனிதர்களுடன் நட்புறவாடிக் கூடி மகிழும் பண்பு / தன்மை உடையவர்

அல்லார்க்கு - அல் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) 

மாயிரு  - ஏகமாயிரு-த்தல் -> ஒன்றாயிருத்தல்; மிகுதியாய்இருத்தல்.
ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

பகலும் - பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.

பாற்படுதல் - ஒழுங்குபடுதல்; நன் முறையில் நடத்தல். (பாற்பட்டார் கூறும் பயமொழி(இனி. நாற். 7).)

பாற்பட்டன்று - நன் முறையில் நடக்காமல்

இருள் -  இரு-மை, அந்தகாரம், கறுப்பு,  மயக்கம்; அறியாமை; துனபம்; நரகவிசேடம்; பிறப்பு; குற்றம்; மரகதக்குற்றம்; எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம்; யானை; இருவேல்; இருள்மரம்.

முழுப்பொருள்
ஞானம், பணம் முதலியவற்றை மிகுதியாக பெற்றவராக ஒருவர் இருந்தாலும் பிறருடன் நட்பாய் சிரித்து மகிழ்ந்து நகையாடி பகடி செய்து வாழும் பண்பு இல்லாதவராய் இருப்பின் அவர் பகலிலே இருளில் மூழ்கியிருப்பதற்கு ஒப்பாகும்.

நாஞ்சில் நாடன் உரை
இரு எனும் சொல்லுக்கே பெரிய என்றும், கரிய என்றும் பொருள் சொல்கிறார்கள். இருள், இருட்டு, இருண்ட எனும் சொற்கள் ‘இரு’ எனும் சொல்லின் பிறப்புக்கள் ஆகலாம். பண்புடைமை அதிகாரத்துக் குறள், ‘மாயிரு ஞாலம்’ என்கிறது. மாபெரும் உலகம் என்ற பொருளில்.

‘நகல் வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற் பட்டன்று இருள்’


என்பது முழுப்பாடல். எல்லோரிடமும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழத் தெரியாதவர்களுக்கு, இந்த மாபெரும் உலகமானது பட்டப் பகலிலும் நட்ட நடு இரவாகவே இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். பெரியாழ்வார்,

பரிமேலழகர் உரை
நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். 

விளக்கம் 
(எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பில்லார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நகல்வல்லர் அல்லார்க்கு -பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மா இரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகப்பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகும்.

ஒருவரோடுங் கலந்தறியப் பெறாத பண்பிலிகட்கு உலகியல் முற்றும் தெரியாதென்பது கருத்து. பட்டன்று என்பது உடன்பாட்டுச் சொல்லாதலின் , ' பாழ் பட்டன்றிருள் ' என்று பாடமோதி, ' இருள் நீங்கிற்றன்று ' என்றுரைப்பது பொருள்கெடாவிடினும் பொருந்தாது. 'மாயிரு' மீமிசைச் சொல்.

மு.வரதராசனார் உரை
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

மேலும் (நன்றி: அந்தமிழ்)
புண்பட்ட நெஞ்சுக்குச் சிரிப்பைப்போல இதமான மருந்து வேறு கிடையாது. உலக வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்பதுன்பம், பித்தலாட்டம் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிரிக்கத் தெரியாமலும் நாம் இருந்தோமேயானால், என்ன ஆகும் நம் கதி? பைத்தியம் பிடித்துவிடும். பைத்தியம் பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பதற்காகவே நமக்குச் சிரிப்பு என்ற தெய்வீகசக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
என்று சொன்னார் குறளாசிரியர்.

சிரிக்கத் தெரியாதவனுக்குப் பட்டப் பகலும் அமாவாசை இருட்டாகத்தான் இருக்கும் என்பது இந்த்க் குறளின் பொருள். தெளிவு இல்லாத காரணத்தால் சிரிப்பற்று இருக்கிறோம். உள்ளத்தில் தெளிவு வந்துவிட்டாலோ, வாழ்க்கையே ஒரு சிரிப்பாக இருக்கும். சிந்தனைத் தெளிவுள்ளவனுக்கு இந்த உலகம் ஒரு ஹாஸ்ய நாடகமாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டவனுக்கு இந்த உலகம் சோக நாடகமாகக் காட்சி கொடுக்கிறது.

மிருக வர்க்கங்களிலேயே சிரிக்கும் ஆற்றலைப்பெற்ற பிராணி, மனிதன் ஒருவன்தான். ஆனால் இந்த அரிய ஆற்றலை மனிதனுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறார் வள்ளுவர்.

அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது என்பதை ஒரு புராணக்கதை விளக்குகிறது. திரிபுரத்தில் அட்டகாசம் செய்துகொண்டு இருந்த அரக்கர்களை சிவபெருமான் அழித்தார். எப்படி அழித்தார்? ஹைட்ரஜன் குண்டு போட்டல்ல, ஒரு சிரிப்பு சிரித்தார். அவ்வளவுதான் தீமையே வடிவாக வந்த அரக்கர்கள் தீய்ந்து ஒழிந்தார்கள்.

சீராரூர் மேவும் சிவனே – சிரிப்பன்றோ
நேராரூர் இட்ட நிலை
என்று பாடினார் கவிஞர்.

சிரிப்பு புற இருளை மாத்திரமல்ல, அக இருளையும் அகற்றி துன்பத்தைத் துடைத்து இன்பத்தை நல்குகிறது.

Thirukkural - Management - Managing Stress - Laughter far Stress Reduction
Valluvar, through Kural 999, uses an analogy to enforce the importance of laughter. The world is never dark during a bright sunny day. For those who cannot laugh, do not laugh, and do not join others in their laughter this big bright world is dark even during the day. The world here may refer to their inner world.

This world is dark even at noon 
To those who cannot laugh.

If you do not laugh, your inner world will become dark. Laugh a lot to brighten your inner world. Laughter is also called inner jogging. Jog, in addition to jogging for physical fitness, for mental fitness.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்

குறள் 913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று. 
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பொருள் - பொருடனைப்போற்றிவாழ்

பெண்டிர் - பெண்கள்

பொருட்பெண்டிர் -  வேசியர், பொருள் தனை மட்டும் நேசிக்கும் பெண்

பொய்ம்மை - பொய், மாயம், போலி

முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

இருட்டு - இருள்; அறியாமை

அறையில் - அறை - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை

இருட்டறையில் -  இருட்டு + அறைDark, unlit place

ஏதில் -  foreignness, அன்னியம்; 2. vicinity, அயல்; ஏதிலார், strangers, foreigners, enemies, neighbours; 2. prostitutes, பரத்தையர்.

தழீஇ - ஓர்ஒலிக்குறிப்பு (clamoming, rattling, roar, as of a drum.)

பிணம் - சவம், பிசாசம்

பிணந்தழீஇ - பிணத்துடன் உருண்டு ஒலி எழுப்பவது

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது

முழுப்பொருள்
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார் என்று காமத்துப்பாலில் கூறுவார் திருவள்ளுவர். இதில் ‘மிக மென்மையான அகம் சார்ந்த விஷயம் காமம் என்பது’ என்று கூறியிருப்பார். அப்படிப் பட்டது காமம்.

ஆனால் தான் தழுவிப் புணரும் ஆடவர் கொடுக்கும் பொருளுக்காக ஆசைப்பட்டுப் பொய்யாகத் தழுவும் பெண் வேசியர் எனப்படுவார். அத்தகைய வேசியருடன் ஒருவர் தழுவல்/புணர்ச்சிக் கொள்வது என்பது இருட்டறையில் பிணத்துடன் (பிணம் என்று அறியாது) உருண்டு ஒலி எழுப்பவதுப்போல் ஆகும். அதாவது அகம் சாராத ஒரு செய்கை பிணத்துடன் செய்யும் செய்கைக்கு ஒப்பாகும்.

ஆதலால் விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில் என்கிறார் திருவள்ளுவர்.

ஆத்திச்சுடி
மைவிழியார் மனை அகல் - விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
மெல்லி நல்லாள் தோள்சேர் - பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்
மோகத்தை முனி - காம ஆசைகளை விட்டொழிப்பாயாக
நோய்க்கு இடம் கொடேல் -  நோய்க்கு இடம் கொடுக்காதே
மனம் தடுமாறேல் - எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
உத்தமனாய் இரு - நற்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்.
குணமது கைவிடேல் - நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே
கோதாட்டு ஒழி - குற்றமான விளையாட்டை விட்டு விடு 

நாஞ்சில் நாடன் உரை
இருட்டறை: இருட்டு அறை. வரைவின் மகளிர் அதிகாரத்துக் குறள் பேசுகிறது,

‘பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையுள்
ஏதில் பிணம் தழீஇ அற்று’

இந்தக் குறளின் அளபெடை நயத்தைக் கவனிக்கவும். இன்று விலைமகள், வேசி, தேவடியாள் என்று மலிவாக்கப்பட்ட சொற்களுக்கு, அன்று வள்ளுவம் பயன்படுத்திய சொல் பொருட்பெண்டிர். Sex worker என்பதை விடவும் அருமையான சொல் இது. இருமனப் பெண்டிர் என்பான் கம்பன். பொய்மை எனில் போலி, முயக்கம் எனில் தழுவல், கலவி. பொருட் பெண்டிரின் பொய்மையான முயக்கமானது, இருட்டறையில் முன்பின் அறிந்திராத பெண்ணின் பிணத்தைத் தழுவது போன்றது என்பது குறளின் பொருள்.

பரிமேலழகர் உரை
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும். 

விளக்கம் (பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - பொருள் கொடுப்பாரை விரும்பாது அவர் கொடுக்கும் பொருளையே விரும்பும் விலைமகளிரின் பொய்யான தழுவல்; இருட்டு அறையில் ஏது இல் பிணம் தழீஇய அற்று-கூலிக்கு அமர்த்தப்பட்டவன் இருட்டறையில் யாதொரு தொடர்புமில்லாத கன்னிப் பெண்ணின் பிணவுடம்பைப் பொருளாசை கருதித் தழுவினாற் போலும்.

இதிலுள்ள உவமத் தொடருக்கு, "பிணமெடுப்பார் இருட்டறைக் கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும்." என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாது.'முயக்கம்' , 'தழீஇ' இரண்டும் இடக்கரடக்கல்.பிணமெடுத்தலையே ஆசிரியர் கருதியிருப்பின், பிணம்எடுத்தற்று என்றோ பிணந்தூக்கியற்று என்றோ யாத்திருப்பர்.மேலும், உயிர்போனபின் பேய்வந்து அண்டும் என்று கருதி விளக்கேற்றி வைப்பது தமிழர் வழக்கமே யன்றி, இருட்டறையிற் சவத்தை வைப்பதன்று. இங்கு முயக்கம் கூட்டத்தைக் குறிப்பதால் அதற்கு உவமமான தழுவலும் அதனைக் குறித்தல் வேண்டும்.தொடுதல் அல்லது தூக்குதல் மட்டும் முயக்கத்திற்கு உவமமாகாது.உவமையைக் கூர்ந்து நோக்கின், பொருளாசையும் உள்ளத்தொடு பொருந்தாத கூட்டமும் பொதுத்தன்மை யென்பது பெறப்படும்.இத்தகைய பிணந்தழுவும் வழக்கம் தமிழரல்லாத வேற்றினத்தாரிடையே ஆசிரியர் தம் காலத்தில் இருந்தது கண்டு, அதை உவமமாக அமைத்திருத்தல் வேண்டும்.

18-ஆம் நூற்றாண்டிற்கும் 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் (1792-1823) தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக்குரவராகிய அப்பர் தூபாயிசு,தம் தாய்மொழியில் எழுதிய 'இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்' என்னும் பொத்தகத்திற் கீழ்வருமாறு வரைந்திருக்கிறார்.

"இதேமக்களிடை, இனி ,அருவருப்பானதும் வெறுப்புண்டு பண்ணுவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்ட நம்பூதிரி என்னும் ஒரு தனிக்குலமும் உள்ளது. இக்குலப் பெண்கள் வழக்கமாகப் பூப்படையுமுன் மணஞ் செய்து வைக்கப்படுகின்றனர்; ஆயின், பூப்புக் குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தை யடைந்த பெண் ஆடவனொடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த்தன்மையான புணர்ச்சிக் குட்படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம்.இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப் பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது,ஏனெனின், அம்மணம் முற்றுவிக்கப்பெறாவிடின்,அக்குடும்பம் தன் மானத்தை இழந்து விட்டதாக்க் கருதிக் கொள்ளும்." (மூன்றாம் பதிப்பு, பக்.19-17.)

அதுபற்றி 17-ஆம் பக்கத்தில் பதிப்பாசிரியர் வரைந்துள்ள அடிக்குறிப்பு வருமாறு:-

இந்த அப்பர்(Abber) காலத்தில் செய்தி எவ்வாறாயிருந்திருப்பினும், இக்காலத்தில் இவ்வழக்கங்கள் இல்லை,இது பற்றித் திரு.உலோகன் (W.Logan) தம் 'மலைவாரக் கைப் பொத்தகம்' (Manual of Malabar) என்னும் நூலிற் பின் வருமாறு வரைகின்றார்.'மணவாதிறக்கும் பெண்டிர்க்குப் பிந்திய சிற்றீடு-இத்தகைய பெயர் அது பெறத் தகுந்ததாயின் - செய்தற்கு, (ஐரோப்பிய மணவாழிக் கொத்த இந்துச் சின்னமாகிய) தாலி ஈமத்தின் மேற்கிடத்தப் பட்டிருக்கும் சவத்தின் கழுத்தில் முறைகாரனான ஓர் உறவினனாற் கட்டப்படும் வரை,அதை எரிக்க முடியாதென்று சொல்லப்படுகின்றது. நம்பூதிரிமார் தம் இழவுச் சடங்குகளும் கைக்கொள்வுகளும் பற்றி அளவிறந்து வாய்வாளாமை மேற்கொள்கின்றனர்.இத்தனிவியப்பான ஈம மணத்தைச் சேர்ந்த பிற கைகொள்வுகள் பற்றித் தமக்குச் சொல்லப்பட்டதை அப்பர் தூபாயிசு வரைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. நம்பூதிரிக் குமுகத் தலைமக்களையும் மலைவாரத்தில் நம்பூதிரி வழக்கங்களை நெருங்கிப் பழகி யறிந்த பிறரையும் உசாவிய கவனமான உசாக்களால், அந்த அப்பர் இங்கு வரைந்திருக்கும் பழக்கத்தைப் பற்றி அவருக்குச் சொன்னவன் கூற்றை அவர் தவறாக உணர்ந்திருக்க வேண்டுமென்று எனக்குத் தெரிகின்றது.அத்தகைய நிகழ்ச்சியிற் செய்யப்படுவதென்னவென்றால் ,இந்துத் திருமணங்களில் வழக்கமாகச் செய்யப்படும் மதவியற் சடங்குகளை, இறந்த பெண்ணின் உடம்பைச் சுட்டெரிக்குமுன் அதன் மிசை நிகழ்த்துவதே. இங்கு மணமென்பது திருமணச் சின்னமாகிய தாலியைக் கட்டுவதேயன்றி மணமுற்றுவிப்பு வினையன்று."

பதிப்பாசிரியர் இங்ஙனம் மறுத்திருப்பினும், அப்பர் துபாயிசு கூற்று வலியிழந்து விடாது. கீழ்க்காணும் ஏதுக்குறிப்புகள் கவனிக்கத் தக்கன.

(1)இந்திய ஆரியப் பூசாரியர் முதற்காலத்திற் பல அருவருப்பான சடங்குகளை ஆற்றி வந்தமை, சென்ற நூற்றாடில் மார்க்கசகாய ஆச்சாரியார் வெளியிட்ட 'சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' என்னுஞ் சுவடியினின்று தெரிய வருகின்றது.

(2)திருவள்ளுவர் காலம் கி.மு. 2-ஆம் நூற்றாண்டாதலால், அப்பழங் கால நம்பூதிரி வழக்கம் ஆங்கில நாகரிகம் தென்னாட்டிற் புகும் வரை தொடர்ந்திருக்கலாம்.

(3) அப்பர் தூபாயிசு தம் நூலை எழுதி முடித்த ஆண்டு 1806. அந்நூலின் 3-ம் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1905. ஆதலால், பதிப்பாசிரியர் காலத்திற் பண்டை வழக்கம் நின்று போயிருக்கலாம்.நம்பூதிரிக் குல முதியோர் நினைவிலிருந்திருப்பினும் , இழிவு பற்றி அவரால் மறைக்கவும் மறுக்கவும் பட்டிருக்கலாம்.

(4) அப்பர் தூபாயிசு மதி நுட்பமும் உண்மையும் நடுவுநிலைமையும் உடைய துறவியராதலாலும், தென்னாடு வந்து தமிழ வாழ்வு வாழ்ந்து பதினாலாண்டு எல்லா மக்களொடும் நெருங்கிப் பழகிய பின் தம் நூலை எழுதினமையாலும், அவர் பிறன் கூற்றைப் பிறழவுணர்ந்தோ பொறுப்பற்ற தனமாகவோ எழுதியிருக்க முடியாது.

(5) முறைகாரன் தாலிகட்டற்கும் உறவினனல்லாத ஒரு பரம பஞ்சை பணம் பெற்றுத் தழுவற்கும் பெரு வேறுபாடிருப்பதால்,ஒன்றை யின்னொன்றாகப் பிறழவுணரவோ உணருமாறு கூறவோ முடியாது.

(6) மணமென்பது உண்மையிற் கூட்டமேயாதலால், பூப்படைந்து மணமாகாத அல்லது மணச்சடங்கு மட்டும் நடந்து கூட்டம் நிகழாத பெண் இறந்தபின் அவள் ஆவியைப் பொந்திகைப்படுத்தற்குச் செய்யும் சடங்கு, முதற் காலத்திற் கூட்டமாகவே யிருந்திருத்தல் வேண்டும். நாகரிகமடைந்த பிற்காலத்திலேயே, அது 'கொடும்பாவிகட்டியழுதல்' போல அடையாளச் சடங்காக மாறியிருத்தல் வேண்டும்.(பொந்திகை=திருப்தி (வ.).)

(7)'நம்பூதிரிமார் தம் இழவுச் சடங்குகளும் கைக் கொள்வுகளும் பற்றி அளவிறந்த வாய்வாளாமை மேற்கொள்கின்றனர்.' என்று திரு.உலோகன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

(8) "இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇயற்று" என்னும் திருக்குறள் உவமத்திற்கு, அப்பர் தூபாயிசு கூற்றே சிறந்த விளக்கமாகப் பொருந்துகின்றது.

(9) பூப்படையுமுன் பெண்ணிற்கு மணஞ்செய்து வைப்பதும், மணந்தபின் மணமக்கள் கூட்டத்தைத் தள்ளிவைப்பதும், பூப்படைந்த பெண் கூட்டத்திற்குமுன் இறப்பின் அவள் சவவுடம்பின் கழுத்தில் தாலி கட்டுவதும், பண்டைத் தமிழர் வழக்கமல்ல.

(10) திருவள்ளுவர் சேரநாடு சென்றிருக்க வேண்டுமென்பது முன்னரே "வெள்ளத்தனைய மலர் நீட்டம்"என்னும் குறளுரையில் (595) கூறப்பட்டது.

'தழீஇ' இன்னிசையளபெடை.

மணக்குடவர் உரை
பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங்கும் முயக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியதுபோலும். இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது. 

மு.வரதராசனார் உரை
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.

Saturday, July 26, 2014

வகைமாண்ட வாழ்க்கையும்

குறள் 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் 
தகைமாண்ட தக்கார் செறின்.
[பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வகை - வலிமை, வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன, வணிகமுதல் ( the principal stock in trade, முதல்.); இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள், கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை

மாண் - Beinggreat, being worthy; மாட்சியாகை; மாண்டூகம்(One of the thirty-two Upanishads. See உபநிடதம்.),
மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

வகைமாண்ட வாழ்க்கையும் - வலிமையாக, வாழ்க்கைக்குரிய பொருள்களை (மற்றும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின) ஆடம்பரமாக (முதல் ரகத்தில்) வைத்துக்கொள்வதை வாழ்க்கையின் மாட்சியாக கருத்துதல்

வான் - s. air, ether, sky, ஆகாயம்; 2. rain, மழை; 3. cloud, மேகம்; 4. adj. great, excellent, பெருமையான.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வான்பொருளும் - பெருமைப்படக்கூடிய பொருள்கள்

என்னாம் - என்னவாம் ? என்ன பயன் ? (அப்பொருள்களுக்குப் பயன் இல்லை)

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

தகைமாண்ட - தன்மை, தகுதி, பெருமை, குணம் கொண்ட மதிப்பிற்குரிய 

தக்கார் - மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்

செறின் -  செறு¹-தல் - சினத்தல். அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134), வெறுத்தல். செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).

முழுப்பொருள்
தன்மை, தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுங்குப் போன்ற நற்குணங்கள் கொண்ட மேன்மக்களின் சினத்திற்கு ஒருவர் உண்டானால் அவர் எத்தகைய வலிமையான வாழ்க்கை அதாவது வாழ்க்கைக்குரிய எல்லா பொருள்களும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின், மற்றும் வான்ப்போல் பெருமைக்குரிய பொருள்களை வைத்து இருந்தாலும் அவற்றுக்கு எப்பயனும் பொருளும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக ஒரு பெரிய பணக்காரர் ஒரு நிகழ்ச்சிக்கு பிறரை காக்க வைக்கும் படியாக தாமதமாக சென்றால் அது மற்றவர்களை எரிச்சலடைய செய்யும். நான் வர தாமதமாகிறது நிங்கள் நிகழ்ச்சியை துவங்குகள். நாங்கள் வந்து சேர்ந்துவிடுகிறோம் என்று கூறலாம்.  அதேப்போல், பொருள் வைத்து இருக்கும் ஒருவர் பொருள் இல்லாத ஒருவரிடம் குறிப்பாக அறத்துடனும் ஒழுக்கத்துடனும் இருக்கும் ஒருவரிடம் சென்று பிழைக்க தெரியாதவனாக இருக்கிறாயே என்று கூறினால் அது அடுத்தவரின் சினத்தை சம்பாதிப்பது போன்று.

ஆத்திச்சூடி
சையெனத் திரியேல் - பெரியோர் "சீ" என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே .
மேன்மக்கள் சொல் கேள் - நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட .
தக்கோன் எனத் திரி - பெரியோர்கள் உன்னை நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள். .
சான்றோர் இனத்து இரு - அறிஞர்களின் குழுவிலே இரு
பெரியாரைத் துணைக் கொள் - அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள் .

பரிமேலழகர் உரை
தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? 

விளக்கம் 
(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தகைமாண்ட தக்கார் செறின்- ஆக்க வழிப்பிற் கேதுவாகிய ஆற்றல் மாட்சிமைப்பட்ட மாதவர் அரசரை வெகுள்வாராயின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்ஆம் - ஆறுறுப்புக்களும் மாட்சிமைப்பட்ட அவர் அரச வாழ்வும் அவர் தமக்குச் சொந்தமாக ஈட்டிவைத்த பெருஞ் செல்வமும் என்ன ஆகும்! ஒரு நொடியுள் வெந்து சாம்பராய் விடுமே!

படை,குடி,நாடு,கூழ்,அமைச்சு, அரண் என்பன ஆறுறுப்புக்கள். நட்பு என்பது அரசனின் வலிமையை மிகுப்பதேயன்றி நாட்டுறுப்பன்று.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல்." (குறள்.158)


என்று இல்லறத்திற்கும்,
"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை." (ஷ.310)


"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்." ( .314)

என்று துறவறத்திற்குங் கூறியிருப்பதால், 'செறின்' என்பது முற்றத் துறந்த முழு முனிவர் செறாமை தோன்ற நின்றது. 'வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு னென்னாம்' என்றது, அருந்தவரின் பெருந்திறலை யுயர்த்தி அரசர் தம் செல்வச் செருக்கால் அவருக்குத் தவறு செய்யாதவாறு எச்சரித்ததே யன்றி வேறன்றென வுணர்க.

மு.வரதராசனார் உரை
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

மணக்குடவர் உரை
எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின். எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின 

சாலமன் பாப்பையா உரை
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?.

English Meaning - As I taught a kid - Rajesh
One's luxurious /pompous lifestyle, sky high wealth doesn't matter (is insignificant) if we irk (or earn the wrath of) scholars / elders / respectable people. Wealth/money is essential in running day to day life. But it doesn't mean, if we have lot of money, we can do things that irritates others or disrespect others. We have to be humble irrespective of the money we have. By the way earning money illegitimately (through unethical means) will automatically irk others and they will not be respected irrespective how much money they have.

Questions that I ask to the kid
Does luxurious lifestyle or sky high wealth matter in front of scholars?
If we irk scholars would our pompous lifestyle or wealth save us? Why?

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...