வேண்டற்க வென்றிடினும் சூதினை

thirukkural meaning விளக்கம் பொருட்பால்,நட்பியல், சூது குறள் 931 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
குறள் 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் 
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
[பொருட்பால்,நட்பியல், சூது]

பொருள் 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டற்க - வேண்டாம் 

வென்று வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

வென்றிடினும் - வென்றாலும் 

சூதினை - சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

வென்றதூஉம் வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

தூண்டுதல் - செலுத்துதல்; ஏவுதல்; தள்ளுதல்; விளக்கைத்தூண்டுதல்; நினைப்பூட்டுதல்; செலுத்துதல்; அனுப்புதல்; கிளப்பிவிடுதல்.

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்என்னும்நான்குவகைப்பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி.

மீன் - நீர்வாழ்உயிரி; விண்மீன்; சித்திரைநாள்; அத்தநாள்; மீனராசி; சுறா; நெய்தல்நிலப்பறை.

விழுங்குதல் - மெல்லாதுஉட்கொள்ளுதல்; கவளீகரித்தல்; தெளிவின்றிப்பேசுதல்; வெல்லுதல்; சொற்களைமழுப்புதல்; கவர்தல்; பரவுதல்; கொல்லுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள் 
நமக்கு ஆரம்பித்தில் வெற்றியை தரக் கூடியதாகவே இருந்தாலும், நாம் என்றும் சூது விளையாட்டை நாடி செல்ல கூடாது. ஏனெனில், அந்த வெற்றியானது, மீன் தூண்டில் முனையில் உள்ள இரும்பை போன்றது. அந்த இரும்பை இரை என எண்ணி மாட்டிக்கொள்ளும் மீனை போல், சூது மூலம் வரும் வெற்றியானது நம்மை சிக்க வைத்து விடும்.

சூதினால் மகாபாரதத்தில் தர்மர், நாடு, சகோதரர், மனைவி எல்லாம் இழந்து காட்டில் ஒளிந்து வாழும் அவல நிலையும், அதை தொடர்ந்த மிக பெரிய போரும், அதன் இழப்புகளும் அனைவரும் அறிந்ததே.

சூது அத்தகைய வலிமை உடையது. வெற்றி என்னும் மாய தூண்டிலால் கவரப்பட்டு. சூது விளையாட்டில் எக்காரணம் கொண்டும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது என்பதே கருத்தாகும் .

பரிமேலழகர் உரை
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும். (வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.).

மணக்குடவர் உரை
வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும். இது பின் கேடுபயக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain