யான் தமிழ் விருது - அனுபவம்
அன்பர்களே,
1. விருது
விருது அறிவிப்பு
முன்பு இத்தளத்தில் தெரிவித்தது போல, 'யான் அறக்கட்டளை' (Yaan Foundation) வழங்கிய Change Makers 2025 ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது - தமிழ்ப் பணியை "Daily Project Thirukkural" தளத்திற்கு அளித்தார்கள் என்பதை மனமார்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விருதைப் பற்றியும் என்னுடன் விருது பெற்றவர்கள் பற்றியும் தனியாக ஒரு பதிவு [’யான் அறக்கட்டளையின் - Change Makers 2025 விருது’] எழுதியுள்ளேன். வாசிக்கவும்.
விருது அறிவிப்பு முன்பு இத்தளத்தில் தெரிவித்தது போல, 'யான் அறக்கட்டளை' (Yaan Foundation) வழங்கிய Change Makers 2025 ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது - தமிழ்ப் பணியை "Daily Project Thirukkural" தளத்திற்கு அளித்தார்கள் என்பதை மனமார்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விருதைப் பற்றியும் என்னுடன் விருது பெற்றவர்கள் பற்றியும் தனியாக ஒரு பதிவு ['யான் அறக்கட்டளையின் - Change Makers 2025 விருது'] எழுதியுள்ளேன். வாசிக்கவும்.
திருவள்ளுவர் டிஜிட்டல் பேச்சுப்போட்டி
யான் அறக்கட்டளை கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் டிஜிட்டல் பேச்சுப் போட்டி ஒன்றை உலகளவில் அறிவித்து இருந்தார்கள். சில நாட்கள் பின்பு நானும் பங்கேற்கலாம் என்று எண்ணி “குறள் 758 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை” குறளுக்கு 5 நிமிடத்திற்குள் ஒரு சிறு பேச்சை காணொளியாக பதிவு செய்து அனுப்பினேன். அது ஒரு நல்ல கன்னி முயற்சி என்றே எண்ணினேன். அதன் முடிவுகளுக்கு நான் எத்தனைகாலம் காத்திருந்தேன் தெரியுமா. அவர்களும் ஒரு வழியாக 2-3 மாதம் கழித்து அறிவித்தார்கள். என் பெயர் இல்லை. மனம் ஒத்துக்கொள்ள தயாராக இருந்தது. ஏனெனில் எனது பேச்சு ஒரு கன்னிப்பேச்சு என்பதை நான் உணர்ந்தே இருந்தேன். மேலும் நான் ஒரு ஆசிரியர் தொனியிலேயே பேசி இருந்தேன். அது மட்டும் இன்றி அந்த குறளுக்கு நான் அளித்த பொருள்/பார்வை பொதுவாக எல்லோரும் கூறும் பொருளும் அல்ல. ஆதலால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
Change Makers விருது
இத்தகைய நிலையில் கடந்த 26-நவம்பர்-2025 அன்று Bestseller வாசிப்பது எப்படி நூலை எழுதிய எழுத்தாளர் திரு.செல்வேந்திரன் அவர்கள் என்னை வாட்ஸ்அப் இல் தொடர்புக்கொண்டு Daily Project Thirukkural உக்காக யான் தமிழ் அறக்கட்டளை சார்பாக திருவள்ளுவர் விருது - தமிழ் பணி என்ற Change Makers 2025 ஆண்டிற்கான விருதை எனக்கு அளிக்க விருப்பதாக கூறினார்கள். கூடவே விருது வாங்குவோரின் இறுதிப் பட்டியலை பகிர்ந்துகொண்டார்.
- யான் வினோபா பாவே விருது for சமூக சேவை - திரு. காலித், உறவுகள் டிரஸ்ட்.
- யான் வள்ளலார் விருது for பசிப்பிணி தீர்த்தல் - கமலாத்தாள் பாட்டி, ஒரு ரூபாய் இட்லி, கோயம்புத்தூர்.
- யான் விவேகானந்தர் விருது for இளையோர் நலம் - தாசில்தார் மாரிமுத்து, விருது நகர்
- யான் வள்ளுவர் விருது for வள்ளுவம் - திரு. ராஜேஷ், திருக்குறள் டெய்லி புராஜெக்ட்
- யான் காமராசர் விருது for பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி - திரு. ஓடந்துறை சண்முகம்
ஏற்பு
விருது பட்டியலை படித்தபோது எனக்கு உண்மையாகவே இதெல்லாம் ஒத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று இருந்தது. ஏனெனில் இவர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் எல்லாம் பல தசாப்தங்கள் இந்த சமூகத்திற்காக களத்தில் நின்று பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் ஆற்றிய சேவைக்கு முன்பாக எனது பங்களிப்பை என்ன சொல்வது என்று எனக்கு குழப்பமாகவே இருந்தது.
பின்பு செல்வேந்திரன் அவர்களை அழைத்தேன். அவர் தான் என்னை சமாதானப்படுத்தினார். ”Daily Project Thirukkural தளம் திருக்குறளுக்கு ஒரு களஞ்சியம். அதனால் தான் நீங்கள் இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர் என்றார். உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” . அந்த அன்பிற்காக ஒப்புக்கொண்டேன். மேலும், எனக்கும் அந்த நேர்மறை ஊக்கம் தேவையான மனநிலையிலான வாழ்வில் இருக்கிறேன்.
ஆயினும் இவ்விருதிற்கு திருக்குறள் ஆய்வுகளுக்கும், திருக்குறள் மீதும் சமூகத்தின் மீதும் கொண்ட மெய்யான அன்பால், திருக்குறளை இச்சமூகத்திற்கு எடுத்துச்செல்ல பல ஆண்டுகாலம் பல வடிவங்களில் பல வழிகளில் பங்களிப்பாற்றியவர்கள் பலர் உள்ளனர்.
எனது வலைத்தளத்தை google தருவதால் என் மீது கூடுதல் வெளிச்சம் படுகிறது. ஆதலால் இவ்விருதை திருக்குறளுக்கும் தமிழுக்கும் பங்காற்றியவர்கள் சார்பாகாவே பெற்றுக்கொள்கிறேன்.
ஆய்வாளர்கள் பங்களிப்பு
ஏனெனில் சொற்களின் பொருளுக்கு 98% agarathi.com ஒப்புமைக்கு அஷோக் சுப்ரமணியம் (அவனின் பக்கங்கள்), மற்றும் கி.வ.ஜகன்நாதன் -இன் திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு நூல் ஆகியவற்றையே நான் சார்ந்து இருந்தேன். இப்பொழுது செய்துக்கொண்டு இருக்கும் பணிக்கும் ஜைன உரை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை உரை, Thomas Hitoshi Pruiksma வின் The Kural மற்றும் பல வலை பதிவுகள். குட்டிச்சாத்தான் ChatGPT உம் அடக்கம். London Swaminathan, இறையன்பு IAS, டாக்டர் தெ.ஞானசுந்தரம், பேராசிரியர் இ.சுந்திரமூர்த்தி, பேராசிரியர் R.P. சேது பிள்ளை, லண்டன் சுவாமிநாதன் ஆகியோரின் ஆய்வுகளையும் பயன்படுத்த திட்டங்கள் உண்டு.
”கணிசமான குறள் உரைகள் ஒரு அடுப்பில் தீ வாங்கி ஊரே சமைப்பது போன்றவை.” என்று ஜெயமோகன் சொல்வார். நானோ ஊரில் எல்லா அடுப்பில் இருந்தும் தீயும் விறகும் வாங்கி, அரிசி பருப்பு வாங்கி சமைத்தேன் என்று சொல்லலாம். Village Cooking Channel பயன்படுத்துவது போல கொஞ்சம் பெரிய அடுப்பு. ஆனால் இவை அனைத்தும் உலகிற்கே என்பதில் தெளிவையும் ஊருணி என்ற வள்ளுவத்திடமிருந்தே பெற்றேன். அதனால் தான் எனது வலைத்தளத்தில் விளம்பரங்கள் கூட இருக்காது. ஏனெனில் இது ஒரு செறிவான வலைத்தளம் என்ற அடிநாதத்தை (tone)ஐ கடைப்பிடிக்கவேண்டும் என்பதற்காக.
மேலும் கூறுவதற்கு முன் மற்ற விருதாளர்கள் பற்றிய விருது குறிப்பை "யான் அறக்கட்டளையின் - Change Makers 2025 விருது" என்ற பதிவில் காணாவும்.
2. விருது விழா
சொல்வேந்தர் திரு.சுகி சிவம்
சொல்வேந்தர் திரு.சுகி சிவம் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விருதை வழங்குகிறார் என்று அறிந்தேன். எனக்கு மிகபெரிய அங்கீகாரம். ஏனெனில் அது அவர் கையால் வழங்கப்படுகிறது. டெல்லியில் வசிக்கும் நாட்களில், ஒரு குமரனாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காலையில் சன் டிவியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற ஒரு 10-15 நிமிட நிகழ்ச்சியை பார்த்துவிட்டு செல்வேன். சில சமய ஊக்க உரை, சில சமயம் ஆன்மீகம், சில சமயம் சிந்தனை உரைகள். எனக்கு நன்றாக நினைவில் இருப்பது ஒரு தடவை ”நாள் என் செயும்? வினைதான் என் செயும்? ….. குமரேசர்…. எனக்கு முன்னே வந்து தோன்றிடினே” என்ற பாடலை விளக்கினார். இறை மீது உண்மையான நம்பிக்கை முழுமையாக இருந்தால் அஷ்டமி நவமி இராகு காலம் எமகண்டம் என்று நாள் கடத்த கூடாது என்று கூறினார். அது எனக்கு ஒரு மிகபெரிய திறப்பாக இருந்தது. அவருடைய பல பட்டிமன்ற நடுவர் பேச்சு, மேடைப்பேச்சுகளை கேட்டுள்ளேன். அவர் கையால் விருது என்பது மனம் குதுகளிக்கும் ஒரு வைபவம். உண்மையில் நேரில் செல்லலாம் என்று தான் நினைத்தேன். சந்தர்ப்பசூழ்நிலை நேரில் செல்ல இயலவில்லை.
திரு. சுகி சிவம் ஐயா அவர்கள் தனது பேச்சில், ”இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நூல் திருக்குறள். அது இன்று மனிதன் படும் பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் கொடுத்துள்ளது. இது போல் ஒரு நூல் உலகில் அரிது. அத்தகைய நூலிற்கு நாங்கள் (சுகி சிவம் ஐயா அவர்கள்) கல்லூரி படித்த காலங்களில் மு.வரதராசனார் எழுதிய ஒரு சிறிய உரை நூலை எல்லா போட்டிகளிலும் பரிசாக வழங்குவார்கள். ஆனால் திருக்குறளை அக்குவேர் ஆணிவேராக பிரித்து ஒரு இளைஞர் செய்து இருக்கிறார். அவரை நாம் பாராட்ட வேண்டும்”, என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டபின்பு நான் அடைந்த ஆனந்தத்தை எப்படிச்சொல்வேன்.
யான் அறக்கட்டளை சார்பாக திரு.அரங்கசாமி கூறியவை
தமிழில் மிக அதிகமான நூல்கள் எழுதப்பட்டது வள்ளுவருக்குத்தான். மிக அதிகமான ஆய்வுகள் திருக்குறளில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளாக அகழ்ந்து அகழ்ந்து எடுத்தாலும் இன்னும் இன்னுமென வள்ளுவம் தந்துகொண்டிருக்கும் புதையல்களுக்கு ஓர் அளவில்லை. அத்தனைப் புதையலும் மொத்தமாக ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் மொத்த மானுடத்துக்கும் இலவசமாகக் கிடைத்தால்? வள்ளுவம் குறித்த ஒட்டுமொத்த உரையாடல்களையும் ‘daily project thirukkural’ எனும் வலைப்பூவில் தொகுத்து வரும் கனடாவில் வாழும் தம்பி, திரு. ராஜேஷூக்கு திருவள்ளுவர் பெயராலே விருது வழங்கப்படுகிறது.
குடும்பம்
வீட்டில் பாட்டி, அம்மாவிடம் கூறினேன். இருவருக்கும் ரொம்ப சந்தோஷம். பாட்டியிற்கு ஏக சந்தோஷம். ஏனெனில் அந்த விருது அறிவிப்பில் சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்கள் சிறப்பு விருந்தினர் என்று கொட்டை எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தது. பறந்துக்கொண்டே இருந்தார்கள். மனைவியிடம் சொன்னேன். வாழ்த்துக்கள் என்றார்.என்னை எப்படியாவது கன்னடமும் ஹிந்தியும் கற்க வைக்கவேண்டும் என்பவற்கு குறளை பற்றி பெரியதாய் தெரியவில்லை. அம்மாவிற்கு இவ்விருது ஏன் என்று புரியவில்லை. திருக்குறளில் ஏதோ செஞ்சு இருக்கான் போல என்று தான் இருந்தார்கள். தம்பி தங்கைக்கும் சந்தோஷம்.
எனது சில நண்பர்கள் நாகமணி, சேவியர், ப்ரசன்னா தேவி, இராஜேஷ் ஆகியோருக்கு நான் செய்யும் செயலின் ஆழம் முதலில் இருந்தே புரியும். ஆயினும் இவ்விருது சொல்வேந்தர் சுகி சிவம் ஐயா அவர்கள் கையால் வழங்கபடுவதால் என்னுடைய பணி அவர்களின் மனதில் இடம்பெற்று இருக்கிறது. (எத்தனை பேர் எனது தளத்திற்கு சென்று இருப்பார்கள் என்றால் 3 அல்லது 2 அல்லது NULL எனலாம்).
3. பொறுப்பு, நன்றி, முக்கியத்துவம், சமர்ப்பணம்
எனது பொறுப்பு மற்றும் திட்டங்கள்
இவ்விருது எனக்கு மனமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், நல்ல வேலை இது நிறைவு என்று கருதும் சூழ்நிலையில் நான் இல்லை. ஏனெனில் கடந்த 6 மாதங்களாக DPT – Project SKY என்ற எனது இரண்டாவது சுற்று கற்றலில் பொறுமையாக சென்றுக்கொண்டிருக்கிறேன். இது ஒரு நெடும்பயணம். ஏனெனில் எனது மூன்றாவது திட்டத்திற்கு இதில் சில கச்சாப்பொருட்களை தயார் செய்துக்கொண்டு செல்கிறேன். இறையருள் துணைவர அப்பரம்பொருளை வாலறிவனை வேண்டுகிறேன்.
இத்தளத்தில் அரிதாகவே comment கள் இடுவார்கள் (மொத்தமாக 120 தான் இருக்கும்). அதில பலர் தங்களது TNSPC தேர்விற்கு இத்தளம் பயனுள்ளதாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் சில தினமும் இத்தளத்தை வாசிப்பதாக கூறியுள்ளனர்.
ஆதலால், இவ்விருது எனக்கு மேலும் சமூகப்பொறுப்பை A. நுணிகி ஆராய்ந்து நல்ல கட்டுரைகளையும் விளக்கங்களையும் அளிக்க வேண்டும் என்ற உறுதி உள்ளது.
நன்றிகள்
நான் இந்த தருணத்தில் மூன்றுப் பேருக்கு நன்றிகள் சொல்லிகொள்ள எண்ணுகிறேன்
1) எழுத்தாளர் பேச்சாளர் திரு.செல்வேந்திரன் (வாசிப்பது எப்படி நூல் ஆசிரியர்)
மே-2025, Daily Project Thirukkural தளத்தையும் என்னையும் பாராட்டி யான் தமிழ் சேனலில் ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார். அதுவே எனக்கு பெரிய அங்கீகாரம். இந்த விருதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் ஆசைப்பட்டு எனக்கு அளிக்கும் இந்த விருதிற்கு நான் என்றென்றும் நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன்.
செல்வேந்திரன் அவர்கள் எனக்கு இந்த விருதை அளிப்பது எனக்கு மிகுந்த உவகை அளிக்கிறது. ஏனெனில் செல்வேந்திரன் அவர்கள் உலக காப்பியங்கள், இந்திய காப்பியங்கள், 26000 பக்கங்கள் கொண்ட வெண்முரசு எனும் நவின செவ்வியல் காப்பியம், நவீன நாவல்கள், கவிதைகள் மற்றும் துறை சார் நூல்கள பலவற்றை கற்றுத் தேர்ந்தவர். பல விமர்சன அரங்குகளை ஒருங்கிணைப்பவர். பல இலக்கிய நூல்களை அறிமுகம் செய்து, விமர்சித்து பேசியவற்றை நான் ஸ்ருதி டிவி லிட்ரேச்சர் (Shruti TV Literature YouTube) சேனலில் கேட்டுள்ளேன்.
இரண்டு வருடங்களாக யான் தமிழ் சேனலில் வரும் திருக்குறள் காணொளிகளுக்கு script எழுதி கொடுக்கிறார். அதற்கான ஆயத்த பணிகளில் DPT தளம் கண்ணில் பட்டுள்ளது. தொடர்ந்து பயன்படுத்தியிருக்கிறார். ஆதலால் கறாரான தர அளவுகோள்கள் அடிப்படையிலேயே DPT தளம் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியே.
2) யான் அறகட்டளை
இவ்விருதை எனக்கு வழங்க சம்மதித்து எனது பாட்டியையும் அம்மாவையும் பெற்று நல்ல விருந்தோம்பல் அளித்து உபசரித்த யான் அறக்கட்டளை குழுவிற்கு நன்றி. குறிப்பாக திரு.அரங்கசாமி, திரு. பிரதிப் குமார், திருமதி தீபா அவர்களுக்கு நன்றி.
தம்பி கோலவண்ணன், தம்பி தமிழ், தம்பி விஜயகுமார் ஆகியோருக்கு அன்பும் நன்றியும்.
3) Voice of Valluvar சி.இராஜேந்திரன் Retd IRS ஐயா அவர்கள்.
சி.இரா ஐயா அவர்கள் ஏப்ரல் 2021 வாக்கில் எனது தளத்தை வாசித்துவிட்டு முதல் நிலை கற்றல் பதிவில் என்னை பாராட்டினார். பின்பு அவரை நான் தொடர்புகொண்டேன். என்னை Voice of Valluvar telegram இல் இணைத்தார். நான் Telegram அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. மேலும் நான் வாரத்திற்கு ஒருதடவை சென்று பார்த்தால் 1000 messages இருக்கும். சில மாதங்களில் அந்த குழுவில் இருந்து விலகிவிட்டேன். ஏனெனில் அந்த குழுவில் ஆறு போல வரும் செய்திகளை எப்படி process செய்யவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
2025 இல் எனது பதிவுகள் சிலவற்றை விரித்து எழுதியிருந்தேன். அவர் தான் navigation க்கு Table of Contents ஐ சேர்க்க சொன்னார். பின்பு குழந்தைகளுக்கு கதைகளை சேர்க்க சொன்னார். அவர் சொன்னபின்பே இவ்வலைதளத்திற்கு புதிய theme வாங்கி update செய்தேன்.
சில iteration களுக்கு பிறகு எனது பதிவுகள் ஒரு கட்டமைப்புக்கு வந்தது. அதை பகிரும் பொழுதெல்லாம் நீங்கள் நல்ல ஒரு பணியை செய்கிறீர்கள். brick by brick செய்கிறீர்கள். நீங்கள் தான் வருங்காலம் என்று ஊக்கமூட்டுவார்.
1-2 குறள்களுக்கு வேறு மாதிரி பொருள் இருந்தாலும், அவரிடம் நான் பகிர்ந்துக்கொள்ள தயங்கமாட்டேன். ஏனெனில் அவர் திறந்த மனதுடன் அதை கேட்பார். வள்ளுவர்த்தை பல கோணங்களில் பார்க்கலாம் என்பதே அதன் சிறப்பு என்பார். அந்த விஸ்தாரமான பார்வைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சார்.
மேலும், பல திருக்குறள் சார்ந்த நூல்களை பகிர்ந்துக்கொள்வார். அவர் மனதில் உள்ள நேர்மையான கருத்தை நயமாக சொல்லுவார். திருக்குறள் அறிஞர்கள் பற்றி கூறுவார். அது எனக்கு மிகுந்த பணிவை உணரவைக்கும். ஏனெனில் அத்தகையோ போட்ட ஏணியில் தான் நான் ஏறிச்செல்கிறேன்.
4) தென்காசி கிருஷ்ணன்
Voice of Valluvar குழுவில் எனக்கு அறிமுகமானவர் தென்காசி கிருஷ்ணன். எனது தளத்துப் பதிவுகளை மனதார பாராட்டுபவர். தொடர்ந்து அக்குழுவிலேயே இந்த தளம் மிக முக்கியமான தளம். ஒவ்வொரு குறளுக்கு இவ்வளவு ஆழமாக விஸ்தாரமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் உரைகள் இருப்பது அரிது என்று கூறுவார். அவர் ஒரு தேர்ந்த கவிஞர், வெண்பாவிலும் தேர்ச்சிப்பெற்று பல வெண்பாக்களை இயற்றுவார்.
சமீபத்தில்அவருடன் உரையாடிய பொழுது அவர் என்னிடம் கூறியது - டாக்டர் தெ.ஞானந்தரம் (தமிழக அரசின் 2024 ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மாமணி விருது பெற்றவர்) ஐயாவிடம் உங்கள் தளத்தை முன்பு பகிர்ந்துள்ளேன். அவர் வாசித்துவிட்டு நன்றாக இருக்கிறது. (ஆனால் எழுத்துப்பிழைகள் இருக்கிறது) என்று கூறியுள்ளார். அவர்களை போன்ற பேராசிரியர்கள் திருக்குறள் அறிஞர்கள் எனது தளத்தை பார்த்து இரண்டொரு சொற்கள் நல்லதாக கூறியது எனக்கு மிகுந்த சந்தோஷம்.
கிருஷ்ணன் ஐயா அவர்களின் தொடர்ந்த மனமார்ந்த பாரட்டுகளுக்கு மிக்க நன்றி சார்.
ஏன் இவ்விருது எனக்கு முக்கியம்?
பள்ளிக்காலங்களில் ஒரு சில கட்டுரைப்போட்டிகளுக்கு எப்படி தயாரிப்பது என்று தெரியாமல் அம்மாவின் சில அலுவலக நண்பர்கள் மூலம் கட்டுரை தயாரித்து அதை மனப்பாடம் செய்து எழுதி, அதற்கு விருது எல்லாம் மனதில் எதிர்பார்த்து இருக்கிறேன். அதை நினைத்து பலகாலம், ஒரு கட்டுரை தயாரிக்க process கூட தெரியாமல் இருந்து இருக்கிறேனே என்று வருந்தி இருக்கிறேன். சிலதடவை குழந்தைகள் தினத்திற்கு (Childrens Day) காந்தி வேஷம் போட்டு சென்று உள்ளேன். ஆனால் அஹிம்சை என்ற ஒரு வார்த்தையை தாண்டி ஒரு வரி மேடையில் கூறியதில்லை. அதற்கும் தயாரித்தது இல்லை. ஆனால், என் நண்பர்கள் சிலர் creative யோசித்து செய்வார்கள். ஒன்றும் தயார் செய்யாதது எல்லாம் எனக்கு பிற்காலத்தில் மிகுந்த தாழ்வுணர்ச்சியை கொடுத்திருந்தது. 20 வருடம் முன்பு வேலைக்கு சேர்ந்து இருந்தேன். என் வேலையை ஒழுங்காய் செய்தேன். 3 ஆம் ஆண்டு best performer என்று கூட எனது architect மற்றும் மேலாளர் (இன்று Tata Elxsi யின் CTO) performance review இல் rate செய்தார். ஆனால் அப்பொழுது கூட எனக்கு Extra Mile Award எல்லாம் கிடைத்தது இல்லை. அப்பொழுது ஒரு விருது கடமை செய்வதற்கு அல்ல அது கடமையை தாண்டி ஆழமாக செய்வதற்கு என்ற புரிதல் வரவே எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன் பின் MBA படிக்கும் பொழுது Scott K Christofferson என்ற ஒரு நண்பர் presentation slide கள் தயார்செய்யும் பொழுது எங்களது professor இடம் ஒரு கேள்வி கேட்டான். இந்த slide ஐ எதிர்ப்பார்ப்பை விட content வாரியாக ஒரு 10% சதவிதம் அதிகம் நன்றாக எப்படி தயாரிப்பது? எப்படி பட்ட கேள்வி அது. அது என் மனதில் எப்போதும் நிலைத்த ஒரு கேள்வி. இந்த தளத்தை update செய்யும் பொழுத்தெல்லாம் அதை நான் நினைவில் வைத்துக்கொள்வேன்.
பள்ளி நாட்களில் பின்பு ஆசிரியர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றுள்ளேன், கல்லூரியில் paper presentation க்கு சென்று விருதுகள் பெற்றுள்ளேன், அலுவகத்தில் விருதுகள் பெற்றுள்ளேன். ஆனால் அவைகள் அந்த அந்த குறுகிய காலத்திற்கான பாராட்டுக்கள். நம் மனதில் உள்ள தாழ்வுணர்ச்சியை கரைகளை அவைப் போக்காது.
இத்தகைய சூழ்நிலையில், இவ்விருது எனக்கு மிக முக்கியமான ஒரு விருது. இது எனது பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது (வேகத்தில் அல்ல). நான் மேலும் சீராக / consistent இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
சமர்ப்பணம்
1) சீதாராமன் சார்
பாண்டிச்சேரியில் நான் 10 ஆம் வகுப்பு முதல் சேதுராமன் சாரின் சங்கரா கோச்சிங்க் செண்டரில் ட்யூஷன் படித்தேன். +1 இல் கொஞ்சம் serious ஆக படித்தேன் எனலாம். அப்பொழுது பேராசிரியர் சீதாராமன் சாரின் chemistry வகுப்பில் முதல் வரிசையில் படிப்பேன். (ஒழுங்கா வீட்டுப்பாடம் எல்லாம் செய்துவிட்டு வருவேன்/வருவோம். எனது பள்ளியிலும் சீதாராமன் சேர் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு கோச்சிங்க் கொடுக்க வருவார். அந்த பள்ளியிலும் நான் நன்றாக தான் படித்தேன்.)
+1 வகுப்பின் இறுதி வாரங்களில் ஒரு நாள் வகுப்பில் திடீர் என எனது பெயரை ராஜேஷ் என்று சொல்லி அழைத்தார் (எனது நோட்டு புத்தகம் கேட்டாரோ அல்லது கேள்விக்கு பதில் கேட்டாரோ). அந்த வகுப்பே என்னை திரும்பிப் பார்த்தது. ஏனெனில், அவர் அதற்கு முன்பு யாரையும் பேர் சொல்லி வகுப்பில் அழைத்ததில்லை. அன்று முழுதும் நான் பறந்துகொண்டே இருந்தேன். அதுவரையில் என்னை ஒரு சிறுவனாக பார்த்த எல்லோரும் பின்பு என்னை சீதாராமன் சாரின் செல்லப்பிள்ளையாக பார்த்தனர். அவர் அன்று என்னை அப்படி கூப்பிட்டது, நல்லா படி மேலும் உயர உயர பறக்க நல்லா படி என்று தோளை தட்டி சொல்லியது போல் இருந்தது.
அதன்பின் நன்றாக படிப்பவர்கள் பலரை அவர் பேர் சொல்லி கூப்பிட்டார். +2 வில் என்னை complacent ஆக இருந்ததற்கு ஒரே ஒரு கேள்வியாலும் பார்வையாலும் பாடம் எடுத்தார்.
2) பாட்டி
எனது பாட்டியிற்கு தான் இந்த விருதில் மிகபெரிய சந்தோஷமே. அவர் விருது பெற்று 2 நாட்கள் பின்பு என்னிடம் சொன்னது, நம் குடும்பத்தில் இதுப்போல் இலக்கிய மேடைகளில் விருது வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது உனக்கு நிறைவேறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில் பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் எனது பாட்டி ஆயுள் உறுப்பினர். அதில் பலகாலம் பங்குப்பெறுவார். ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழா பத்திரிக்கை வீட்டிற்கு வரும். எனது பாட்டி எனக்கு 8-10 வயது இருக்கும் பொழுது கம்பன் விழாவிற்கு கூட்டிக்கொண்டு சென்றுள்ளார்கள். ஆதலால் அவர்களுடைய மனதின் ஓரத்தில் இருந்த இந்த ஆசையை புரிந்துகொள்ள முடிந்தது.
மேலும், 2013 இல் நான் ஜெயமோகனை வாசிக்க துவங்கிய காலம். அவரிடம் அப்போது அறம் கதைகளை printout எடுத்து கொடுத்து படிக்க சொல்வேன். அவர்களும் படிப்பார்கள். மேலும் கேட்பார். வெண்முரசு கூட ஐ-பேட் கிண்டிலில் கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறேன். படிப்பார்கள். நான் பல புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி குவிப்பேன். அவற்றில் 30-40% படித்து இருப்பேன். நான் முதிரா வாசகனாக வாங்கிய சில புத்தகங்களை நான் படிக்க போவதில்லை. நல்ல வேளை அவற்றில் பலவற்றை எனது பாட்டி படித்துள்ளார் என்ற ஆறுதல் உண்டு.
கடந்த ஒரு வருடமாக புத்தகம் வாங்கி குவிப்பதை குறைத்துள்ளேன் ஏனெனில் எனக்கு கனடா எடுத்து வருவதே பெரிய காரியம். மேலும் எடுத்து வந்தவற்றிலேயே படிக்க நிறைய உள்ளது. ஆனால் இப்பொழுது எதை வாங்கினாலும் கூட எனது பாட்டி ஏன் இதையெல்லாம் வாங்கி வீண் செய்கிறாய் என்று சொன்னதில்லை. இலக்கியத்தை என்றுமே வெறும் கதை புஸ்தகம் என்று கூறியதில்லை. ஏனெனில், எனது கொள்ளுதாத்தாவிற்கு (பாட்டியின் அப்பா) பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், அகிலன் கதைகள் எல்லாம் வாசித்து காண்பித்து; கம்பன் கழகத்தில் கம்பரின் இலக்கிய சுவை அறிந்தவர்; பாண்டிச்சேரியில் உள்ள All India Radio வில் நாடகங்களுக்கு குரல் கொடுத்தவர் என்றபடியால் வாசிப்பின்பமும் இலக்கிய சுவையும் அறிந்தவர். ஒருவருக்கு இலக்கியம் நன்மை செய்யும் என்று ஐயமின்றி நம்பியவர்.
என் வெற்றிகளையும் எனது உயரங்களையும் எனது மகிழ்ச்சியை மட்டுமே விரும்பும், எல்லோரிடமும் அன்பு பாராட்டும் எனது பாட்டியை பெருமை படுத்த எனக்கு வாழ்வில் நிறைய கடமைகள் உள்ளது, இருப்பினும் இவ்விருதை எனது பாட்டியிற்கும், தோளைத்தட்டி கொடுத்த உற்சாகத்தை தரும் இவ்விருதை மானசீகமாக சாரின் கால்களில் சென்னி சூடி சீதாராமன் சாருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
எனது DPT – Project SKY ஐ என்ன செல்லங்கள் உமையாள் குட்டிக்கும் ரங்கப்ரியா [(எ) யஸ்வி] குட்டிக்கும் செய்துக்கொண்டு இருக்கிறேன்.
4. பாட்டி, அம்மா/பாட்டியின் விருதுவிழா அனுபவங்கள்
அம்மாவை புதுக்கோட்டை சென்று நீங்கள் தான் என் சார்பாக விருதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். சரி என்றார்கள்.அதற்கு தங்காச்சி, இல்லை அவன் (அண்ணன் என்றெல்லாம் எங்கள் வீட்டில் தங்காச்சி தம்பிகள் அழைப்பதில்லை), அவன் தான் போய் வாங்கிக்கனும். சுகிசிவம் ஐயா கொடுப்பதால் என்றால். ஆனால் எனக்கு இங்கு -30 °C மனைவி, 6 வயது குழந்தை 6 மாத கைக்குழந்தையை விட்டு விட்டு 10 நாட்கள் வருவது என்பதெல்லாம் இயலாத காரியம் என்று கூறிவிட்டேன் வீட்டில். செல்வேந்திரன் அவர்களுக்கும் தெரியப்படுத்தினேன். அவரும் நான் கனடாவில் இருப்பதால் புரிந்துக்கொண்டார்.
அம்மாவோ என்னிடம் அங்கு என்னை ஏதாவது பேசச்சொல்லி கேட்டால் என்ன சொல்லுவது என்று. நன்றி என்று சொல்லுங்கள் என்றேன். வேற என்ன சொல்ல என்றேன். எனக்கு தெரியலை என்று சொல்லிவிட்டேன். ஏனெனில் நான் ஏதாவது தயாரித்து கூறினால் எங்க அம்மா கண்டிப்பாக அதை கிளிப்பிள்ளையாக ஒப்பிப்பார்கள் என்று தெரியும். அது கண்டிப்பாக நான் சொல்லிக்கொடுத்தது என்று தெரியும். அது நன்றாக இருக்காது என்று எதுவும் கூறவில்லை.
பாட்டி
எனது பாட்டி திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்கள் என்னுடைய பள்ளி நாட்களிலேயே அவரிடம் இருந்த பரிமேலழகர் உரையை ஆசைக்காட்டியவர். அவர் வைத்திருந்தது 1965 வாக்கில் அச்சான ஒரு மலேசிய பதிப்பு என்று நினைக்கிறேன். அவர்களை பொருத்தவரை அது ஒரு அரிய பதிப்பு. ஏனெனில் 1980,1990 களில் இன்று இருப்பது போல இரண்டு வரி உரைகள் அவ்வளவு மலிவாக எல்லா இடங்களிலும் கிடைக்காது. அதை அன்று நான் படித்த போது எனக்கு ஒன்றுமே புரியவிலை. இன்றும் கூட அவ்வளவாக இலக்கணம் புரியாது. [ஜெயமோகன் ஒரு கட்டுரையில் சொல்லி இருப்பார், கவிதை வாசிக்க இலக்கணம் தெரிந்து இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால் இலக்கணம் தெரிந்தால், சில வற்றை (கணிணி excel துணையோடு) தொகுக்க, குறுக்குவெட்டு தொற்றத்தில் சிலவற்றை ஒட்டுமொத்தமாக பார்க்க பயன்படும் என்றே எண்ணுகிறேன்.].
எனது பாட்டிக்கோ எனக்கான விருதை சுகிசிவம் ஐயா அவர்கள் வழங்குவதை பார்க்க என்னப்பற்றி அவர்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்க அளவிடமுடியாத அவா. என்ன ஆனாலும் சரி நான் போய் வருவேன் என்று உத்தரவு என்று சொல்லமுடியாத கட்டளைக் கல். பாட்டியும் புதுக்கோட்டைக்கு ஆயுத்தமானார்.
பயண ஏற்பாடு
விருது நாள்
விருது நிகழ்வு
விருதை நான் எப்படி உணர்ந்தேன்.
விருது விழா பற்றி எங்கள் வீட்டில் சொன்னது
விருதால் நான் பெற்ற மெய்யான உடனடி பயன்
அன்புடன்
ராஜேஷ்


.jpg)





Join the conversation