Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு


நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்). ஆனால், கடந்த 2.5 வருடங்களாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல்.

1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “எண்ணித் துணிக கருமம்”. அக்குறளை ஒரு சங்கல்பமாகவே சொல்லிக்கொண்டு இச்செயலை துவங்கினேன். பல மாதங்கள் குறள்களை கற்று உரை எழுதாத காலங்களிலும், உரை எழுத வேண்டாம் வெறும் கற்றால் போதும் என்ற நினைப்புகள் வந்த காலங்களிலும் நான் சொல்லிக்கொண்டது “குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.”. அக்குறளே என்னை இச்செயலை முடிக்க முக்கியமான காரணம்.

இதுப்போல் பல குறள்கள் உள்ளன. அவற்றை பற்றி என்னால் இன்று எழுத முடியாது. எல்லா குறள்களையும் மறுபடியும் ஒரு தடவை வாசித்துவிட்டு ஒவ்வொரு அதிகாரத்திலும் சிலவற்றை தேர்ந்தெடுக்கவேண்டும். (அவற்றை Favorites என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்). 

(குறிப்பு: ஒரு குறளுக்கு சராசரியாக 30 நிமிடம் ஆகும். சில குறள்கள் பெரிய கட்டுரை வடிவில் சென்றால் ஒரு குறளுக்கு 45நிமிடங்கள் ஆகும். அரிதாக ஒரு குறளுக்கு 1 மணிநேரம் ஆகியதுண்டு)

திருக்குறள் அறத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கென்று பொருளையும் இன்பத்தையும் நிராகரிக்கவில்லை. பொருளின் நிலையாமையை கூறினாலும் பொருளின் அவசியத்தையும் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளது. உறவுகளில் இன்பம் எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைத்துள்ளது.

திருக்குறள் என்பது ஒருவன் இல்வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக நன்றாக தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இந்த லௌகீக வாழ்க்கையை தாண்டி வீடுபேறு அடைவதற்கான துறவு வாழ்க்கையையும் மிக தெளிவாக வகுத்துள்ளது. துறவியலில் கூறப்பட்டது துறவு வாழ்க்கைக்கு என்று மட்டும் அல்ல இல்வாழ்க்கைக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் (எனக்கு இருக்கிறது) என்பதில் சந்தேகமில்லை. 

வாணிப நிர்வாக மேலாண்மை கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் சில முக்கியமான தலைமை பண்புகளையும்(Leadership skills) திட்டமிடல் (Planning Skills, SWOT Analysis etc) செயல்முறை (Execution Skills, Risk Management analysis etc) பாடங்களையும் மிக தெளிவாக பொருட்பாலில் கூறப்பட்டுள்ளதை காணலாம்.

அடுத்து காமத்துப்பால். காமத்துப்பாலில் காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள அன்பை அவர்கள் காதலிக்கும் நாட்களை மிக அழகாக கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் பல குறள்கள் மிக சிறந்த மனோதத்துவங்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனை பிரிவு என்று கடந்து செல்லக்கூடும். பிரிவு தரும் துன்பம் என்று பார்க்காமல் துன்பம் என்று பார்த்தால் அது வாழ்வில் பலவற்றிற்கும் பொருந்தும் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு என்பதும் புரியும். 

பரிந்துரைகள்

திருக்குறளை நான் இப்படி பரிந்துரைப்பேன்

1) முக்கியாமான ஒரு 300-400 குறள்களை குழந்தைகள் 12 வயதிற்குள்ளாகவே மனனம் செய்யவேண்டும். முடிந்தால் அவர்களுக்கு எளிமையாக அர்த்தம் சொல்லித் தர வேண்டும்.

ஆயினும் எல்லா வயதினரும் இதனை படிக்கலாம் என்பதை நான் தனியாக கூறவேண்டியது இல்லை.

2)  12 முதல் - 15 வயது வரை அறத்துப்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். மறுபடியும் 20-22 வயது வரை மறுபடியும் வாசிக்க வேண்டும். அதன்பிறகு அடிக்கடி (தினமும் ஒரு குறள்) வாசிப்பது இன்னும் சிறப்பு

3) 12 முதல் - 15 வயது வரை பொருட்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். நேரத்தின் மதிப்பை, திட்டமிடலின் அவசியத்தை, வினைத்திட்பம், விடாமுயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, மறதியின்மை என்று பலதரபட்ட நிர்வாக திரண்களை மாணவர்களுக்கு இளமையிலேயே கற்பித்து அவர்கள் பின்பற்றச்செய்ய வேண்டும்.

ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களாக உருவாவது அந்த பருவத்தில் தான். Formative years ஆன 14 வயது வரை பிள்ளைகள் கற்பதே அவர்கள் வாழ்நாள் முழுக்க பயனுள்ளதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆதலால் இளமையில் தான் திருக்குறளை முக்கியமாக சொல்லித்தர வேண்டும். 

4) பின்பு ஒருவர் அலுவகத்தில் வேலைக்கு சேர்ந்தப்பின்பு 21-25 வயது வரை பொருட்பாலையும் அறத்துப்பாலையும் மீண்டும் நன்கு படிக்க வேண்டும். அது அவர்களின் மிக உற்சாகமான 20-30 வயது காலக்கட்டங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள அறிவுரைகளை கொடுக்கும். 

5) 20-25 வயது வரையில், மறுபடியும் கல்யாணம் ஆகும் முன்பும் ஆனப்பிறகும் காமத்துப்பாலை படித்தல்வேண்டும். உறவு ஆழமாக அமைய மிக பயனுள்ளதாக அமையும். பொதுவாக கடந்துச்செல்லும் நுண்ணிய உணர்வுகளை நாம் அலட்சியம் செய்யக்கூடாது என்பதை அறியலாம்.

6) திருக்குறளை எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு கீழ்காணும் பரிந்துரைகளை காணவும்

-- திருக்குறளை எப்படி மனனம், ஸ்வாத்யாயம் (அதன் அத்தனை பொருட்களையும் தானாக கற்றறிதல்), தியானம் செய்து கற்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விவரித்துள்ளார். அதற்கு ஜெயமோகனின் ”மனப்பாடம் (சுட்டியை தட்டவும்)”, ”குறள் என்னும் தியானநூல்”, ”குறள்;இருகடிதங்கள்”, “குறள் – கவிதையும், நீதியும்”, “இந்திய சிந்தனை மரபில் குறள் 1”,   ”இந்திய சிந்தனை மரபில் குறள் 2”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 3”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 4”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 5” கட்டுரைகளை வாசிக்கவும். 

பி.கு: ஸ்வாத்யாயம் - சுவாத்தியாயம் - அத்தியயனம் - தானாகக்கற்றகல்வி;  Studying without the help of ateacher; voluntary study; 

-- திருக்குறளை எப்படி ஒரு கவிதையாக வாசிக்க வேண்டும் என்பதை பற்றி மூன்று நாட்கள் உரையாற்றியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்கான YouTube சுட்டிகள் இதோ - குறளினிது (சுட்டியை தட்டவும்)

-- எழுத்தாளர் ஜெயமோகன் மேற்சொன்ன இரண்டு சுட்டிகளிலும் ஆபத்வாக்கியம் பற்றிப் பேசியிருப்பார். திருக்குறள்களை மனனம் செய்தால் அவை கண்டிப்பாக ஆப்த்வாக்கியமாக தோன்றும். சில காலம் ஆகும். உதாரணமாக எனக்கு சில வார்த்தைகள் 1) அருமை - அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் 2) அரும்பயன் - அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 3) பொருள் - பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு 4) எண்ணித் துணிக 5) எண்ணிய எண்ணியாங்கு எய்துப 6) இன்பம் விழையான் 7) விழைதகையான் வேண்டி இருப்பர் 8) முதலிலார்க்கு ஊதிய மில்லை 9) தன்னுயிர் தான்அறப் பெற்றானை 10) யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

-- திருக்குறளை எனது தளமான (இத்தளத்தில்) http://DailyProjectThirukkural.blogspot.com/  ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பலத்தரப்பட்ட பொருளை கற்று படிக்க மிக ஏதுவாக இருக்கும். அகராதியில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் தேடி படிப்பதைக்காட்டிலும் இங்கு ஒரே இடத்தில் அகராதியில் உள்ள எல்லா பொருளும் உள்ளன. ஆதலால் வேகமாகவும் ஆழமாகவும் படிக்கலாம்

-- திருக்குறள் தான் வேதவாக்கு என்று எல்லாம் சொல்லமாட்டேன். பலதரப்பட்ட புத்தகங்களை வாசித்து அவற்றுடன் திருக்குளை தொடர்பு படுத்தி, திருக்குறளை மற்றவற்றுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் நம் மனதில் திருக்குறள் நன்றாக பதியும். பொதுவாக விஸ்தாரமான வாசிப்பும் ஆழமான புரிதலும் நுண்ணிய கல்வியிற்கு அவசியம்.

-- திருக்குறள் ஒரு செவ்வியநூல். ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட. (- எழுத்தாளர் ஜெயமோகன் - குறள்- கடிதம்)

-- ஒரு முழுமையான பார்வை வேண்டும் என்றால் எல்லா திருக்குறள்களையும் கற்றல் அவசியம். சில குறள்கள் முழுமையானவையாக இருக்கும். உதாரணமாக “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”. ஆனால் “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறளை மட்டும் படித்துவிட்டு இமயமலை ஏறச்சென்று வானிலை சரியில்லை என்று அறிந்தப்பின்பும் இமயமலை ஏறத் தொடர்ந்தால் உயிர் தான் போகும். அதற்குத்தான் “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற குறளையும் படித்து இருக்க வேண்டும். அதேப்போல் “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.” என்பதை மட்டும் படித்துவிட்டு பொருளை நிராகரித்தால் துன்பமே எஞ்சும். அதற்கு தான் “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” என்பதையும் உணர்ந்து பொருளை ஈட்ட வேண்டும். அப்படிச் செய்தால் தான் அறம் பொருள் இன்பம் சமநிலையில் இருக்கும். 

ஒரு சமச்சீரான அணுகுமுறைக்கு திருக்குறளை முழுமையாக கற்றல் மிக பயனுள்ளதாக இருக்கும். 

-- ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் கற்பதாக இருந்தால் நீங்கள் உங்களுக்கு உகந்த வழியில் கற்கவும் அதாவது, 1,2,3,4,5,6, என்ற குறள் வரிசையில் கற்கலாம், அல்லது 1,2,3,4,5 என்ற அதிகாரவரிசையில் உள்ள முதல் குறள் அல்லது ஏதாவது ஒரு குறள், அல்லது அதிகார வரிசையும் இன்று குறள் வரிசையும் இன்றி ஏதாவது ஒரு குறளையும் கற்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு நல்லது உண்டு. அது அவரவர் தேவைகளைக்கும் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். 

நான் எப்படிச் செய்தேன் என்றால், (1) வரிசையாக ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று முறையில் சென்றேன், பிறகு முதல் அதிகாரத்தில் இருந்து மறுபடியும். இதில் உள்ள நல்லது என்னவென்றால் திருக்குறளில் உள்ள ஒரு முழுமையான நோக்கு கிடைத்துவிடும். தேவையற்ற முரணான எண்ணங்களை மனதில் சுமக்கவேண்டாம். சிலசமயம் தவறான முன்முடிவுகளை தவரிக்கலாம். (2) முதல் தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுது அவ்வாதிகாரத்தில் உள்ள எல்லா குறள்களையும் ஒருதடவை வாசித்துவிட்டு அதற்கான சாலமன் பாப்பையா போன்றவர்களின் எளிய உரைகளையும் வாசிக்கலாம். இது அவ்வதிகாரத்தின் முழு சாராம்சத்தையும் கொடுத்துவிடும். (3) ஒவ்வொரு தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுதும் அவ்வதிகாரத்தில் உள்ள முந்திய 2-3 குறள்களை மனனம் செய்வது அல்லது அதன் அர்த்தங்களை ஆழ்ந்து வாசித்து மனதில் நன்கு பதியவைப்பது நன்று. ஏனெனில் நாம் ஒரு தடவை வாசிப்பதால் கல்லில் பதிவதுப்போன்று அர்த்தம் (எல்லோருக்கும்) பதிந்துவிடாது. மறுபடியும் மறுபடியும் படிக்க படிக்க தான் நம் மனதில் நன்றாக பதியும். அது நமது செயலிலும் தென்ப்படும்.

-- பிறருக்கு கற்பித்தல். நாம் திருக்குறளுக்கு கற்பிக்கும் பொழுது பல நன்மைகள் உண்டு (1) நாம் பிறருக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கிறோம். நாம் கற்றது வீணாகவில்லை (2) நாம் பிறருக்கு கற்றுத்தரும் பொழுது நாம் ஏற்கனவே படித்ததை மீண்டும் படிக்கிறோம். அதனால் அக்குறள் மனதில் பதிய அதிக வாய்ப்பு உண்டு. அதன் அர்த்தம் கண்டிப்பாய் மனதில் நன்றாக பதியும் (3) நாம் பிறருக்கு சொல்லித்தருவதால் (பிறருக்கு ஓதுவதால் நாம் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மன உறுதி நமக்கு பிறக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் நாம் முன்னேறுவோம்). ”குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்” என்பதை நினைவில் கொள்க (4) நாம் தவறாக கற்றிருந்தால் அதை கண்டுக்கொண்டு திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. நமது புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு (5) பிறருக்கு கற்றுத்தரும் பொழுது / பிறருடன் கற்கும் பொழுது அங்கே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அது பெரும்பாலும் ஒரு நல்ல தருக்கத்தை உருவாக்கும். அத்தருக்கத்தில் நாம் மிகுந்த பயனடைவோம். வாழ்வோடு தொடர்புடைய உதாரணங்கள் வெளிவரும். ஆழ்ந்த புரிந்தல் உண்டாகும். அர்த்தம் மனதில் பதியும் (6) மற்ற குறள்களுடனும் மற்ற புத்தகங்களில் உள்ள உதாரணங்களுடனும் தொடர்பு படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி நுனிப்புல்லில் இருந்து வெளிவந்து வாசிப்பு செம்மை அடைய முடியும். 

-- குழந்தைகளுக்கு கற்பித்தல் - குழந்தைகளுக்கு கற்பிக்கும் பொழுது குறிப்பாக அவர்களை மனனம் செய்ய பழக்கும் பொழுது 1) நமக்கு நன்றாக மனனம் ஆகும். 2) நமக்கு அது ஆபத்வாக்கியங்களை உருவாக்கிக்கொடுக்கும். 3) சில வார்த்தைகள் நமக்கு நன்கு மனதில் பதியும். 4) பல அதிகாரங்களை தொடர்பு படுத்திப் பார்க்க நல்ல ஒரு வாய்ப்பும் கூட. 5) மேலும் அடுத்த தலைமுறைக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கிறோம் அதுவும் சின்ன வயதிலேயே. 

நன்றிகள்

திருக்குறள் கற்றல் செயலை செய்தற்கு சிலருக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டும். 

இறைவனுக்கு நன்றி

இச்செயல் எனக்கு அமைந்தது என் பேறு அல்லது நல்லூழ் என்பேன். இதனை வரமாக கருந்துகிறேன். ஆதலால்  இச்செயலை முடிக்க அருள்புரிந்த இறைவனின் மலர்பாதங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்கு கீழ்க்காணும் இத்தனை சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் வினைத்திட்பத்தையும் கொடுத்தது இறைவன் தான். இச்செயலை துவங்கியப்பின்பு பல மாதங்கள் திருக்குறள் கற்காமல் இருந்தாலும் என்னை மறுபடியும் அதில் செலுத்தி என்னை இச்செயலை முடிக்க துணையாக இருந்த இறைவனுக்கு மறுபடியும் நன்றி.

(இதில் வரிசை முறை என்று ஏதுமில்லை)

-- பேராசிரியர் திரு. ஒளவை நடராஜன்

நான் 2008-2011 ஆண்டுகளில் டெல்லியில் இருக்கும் பொழுது இவர்கள் பொதிகை தொலைக்காட்சியில் காலை வேலைகளில் திருக்குறளுக்கு அர்த்தம் உரைப்பர். ஒவ்வொரு குறளுக்கும் 20 நிமிடங்களுக்கு உரை கூறுவார்கள். என்னடா இது 2 வரில உரைகள் மலைப்போல் குவிந்துள்ளன. இவர் 20 நிமிடம் சொல்கிறாரே என்று தோன்றும். ஆனால் அவரை தொடர்ந்து கேட்கையில் எப்படி திருக்குறளை உள்வாங்க வேண்டும். எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் அணுகி பொருள்க்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.நன்றி ஐயா.

-- எழுத்தாளர் ஜெயமோகன்

இச்செயலை துவக்க காலத்தில் புரியாமல்தான் செய்துக்கொண்டு இருந்தேன். அங்கே வெட்டி இங்கே வெட்டி எல்லாவற்றையும் கலந்து என்னமோ ஏதோவென்று செய்துக்கொண்டு இருந்தேன். அப்படியான காலகட்டங்களில் தான், ஒரு கடிதத்திற்கு பதிலாக எப்படி மனனம், ஸ்வாத்யாயம்(அதன் அத்தனை பொருட்களையும் தானாக கற்றறிதல்), தியானம் முறையில் எப்படி திருக்குறளை கற்றால் பயன் இருக்கும் என்று ஒரு சிறிய கட்டுரை எழுதி இருந்தார். அதன்படி நான் எனது கற்றல் முறையை மாற்றிக்கொண்டேன். அது எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. இல்லையேல் எனது வலைத்தளம் திருக்குறளுக்கான பத்தாயிரத்தி சொச்ச உரையாக அமைந்திருக்கும். நானும் ஆழமாக கற்று இருக்க மாட்டேன். நான் சிந்தித்து திருக்குறளை கற்றேன் என்றால் அதற்கு ஜெயமோகனே ஒளிவிளக்கு ஏற்றிவைத்தார். அதனை நோக்கியே சென்றேன். 
பி.கு: ஸ்வாத்யாயம் - சுவாத்தியாயம் - அத்தியயனம் - தானாகக்கற்றகல்வி;  Studying without the help of ateacher; voluntary study; 

-- சொற்பொழிவாளர் தமிழ்க்கடல் திரு.நெல்லைக்கண்ணன்

2009, 2013 ஆண்டுகளில் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் வந்த ”தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்ற போட்டித் தொடர் நிகழ்ச்சியில் திருக்குறளின் எல்லா சுவைகளையும் பல போட்டியாளர்கள் கொடுத்தார்கள். இவர் அருமையான நெறியாளராக நடுவராக இருந்தார். மேலும் மற்ற இலக்கிய தலைப்புகளிலும் மிக நன்றாக அதன் சுவையை எடுத்து உரைத்தார். இவரின் சில பேச்சுகளில் எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும், இவர் எனது தமிழ் ஆர்வத்தை ஒரு படி மேலே உயர்த்தினார், எனது வாசிப்பு தேடலை ஒரு படி மேலே உயர்த்தினார் என்பதில் ஐயமில்லை.  அதனால் தான் நாம் பாடத்திட்டங்களுக்கும் வேலைக்கும் வெளியே மற்றவற்றை குறிப்பாக தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற செயலில் இறங்கினேன். நன்றி ஐயா

-- எனது பாட்டி சரஸ்வதி சுப்ரமணியம்

என்னை எப்பொழுதும் ஊக்கிவிக்கும் எனது பாட்டி. இது என்ன வேண்டாத வேலை என்றெல்லாம் கூறமாட்டார். நல்லது. திருக்குறளில் வாழ்க்கைக்கான எல்லாம் இருக்கு. இதை படித்தால் எல்லாத்தையும் படிச்ச மாதிரி. படி என்று என்னை ஊக்கபடுத்தினார். படிச்சு அதுமாதிரி நடந்துக்களையே என்று சிலர் நையாண்டி செய்வர் அல்லது குத்திக்காண்பிப்பர். அப்படி எல்லாம் நையாண்டி செய்யமாட்டார் பாட்டி. எல்லாவற்றையும் ஒரே அடியாக மாற்றுவது கடினம் என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவர். எல்லாவற்றையும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், சிலவற்றை பின்பற்றுகிறாயே, அதுவே முன்னேற்றம் தான். ஒரு படி மேலே சென்று இருக்கிறாய். நல்லவிஷயம் தான். அப்படியே தொடர்ந்தால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளலாம். உன்னால் முடியும் என்று கூறுவார். நான் இப்பொழுது எனது மருமகள் (ஆதாவது தங்கையின் மகள்) ப்ரத்ன்யாவிற்கு திருக்குறளை மனனம் செய்ய பயிற்சிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் (ஒருவருடத்தில் இதுவரையில் 90 திருக்குறள்கள்) . இதனைப்பார்க்கும் எனதுப்பாட்டி, எனக்கு இப்படி ஒரு மாமா இல்லையே என்று ஆதங்க படுகிறாள். நாம் நல்லது தான் செய்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறாள். ஆதலால் பாட்டிக்கும் நன்றி. 

-- பள்ளிகாலத்துத் நண்பன் S.ராஜேஷ்

2010 ஆண்டுகளில் இவனது Google Talk / Chat இன் தன்னிலை செய்தி (status message) "எண்ணித் துணிக கருமம்”, “சிறுக்கோட்டுப் பெரும் பழம்” என்று தான் இருக்கும். அவை என்னை ஈர்த்தன. அதனை கேட்டு அறிந்தேன். எனது தமிழ் ஆர்வத்தை ஆழமாக ஆக்கியது. அன்றில் இருந்து இன்று வரை நான் ஒரு முக்கியமான செயலில் ஈடுபட்டாலோ அல்லது நெடுநாட்கள் எடுக்கும் பெரிய செயல்களில் ஈடுட்பட்டாலோ நான் மனதில் சங்கல்பமாய் சொல்லிக்கொள்வது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”. நன்றி டா.

-- நண்பர் நாகமணி

இந்த செயலை துவங்கிய காலக்கட்டங்களில், இது நல்ல முயற்சி பாஸ், நல்லா பண்ணுங்க என்று ஊக்கப்படுத்தினார். நீங்களும் சேர்ந்துக்கொள்ளுங்களேன் என்று அழைத்தபொழுது, அவரும் வந்து சில பல குறள்களுக்கு உரை பதிவு செய்துள்ளார். அவ்வப்பொழுது சில மைல்கல்களை தாண்டும் பொழுது, செம பாஸ் என்று கூறுவார். சினிமா, கிரிக்கேட், அரசியல் என்பத்தை தாண்டி சற்று இலக்கியத்தை பற்றியும் இவரிடம் பேச முடியும். நன்றி பாஸ்.

-- திரு.அசோகன் சுப்பிரமணியம்

இச்செயலை துவங்கிய காலங்களில் திருக்குறள்களுக்கு பொருள் அறிந்துக்கொள்ளும் முனைப்பில் பல வலைத்தளங்களை மேய்வதுண்டு. 99% சதவிகித உரைகள் ஏற்கனவே உள்ள உரைகளை தொகுத்து வலையேற்றபட்டு இருக்கும். அதற்கு மேலே ஒரு துளி உழைப்பைக்கூட செய்து இருக்கமாட்டார்கள். ஒரு சில வலைப்புகள் சில குறள்களுக்கு மட்டும் கட்டுரை வடிவில் திருக்குறளை விவரித்து நன்றாக எழுதியிருப்பார்கள். அது பயனுள்ளதாகவும் இருந்தது. அப்படித் தேடிக்கொண்டு இருக்கையில், தற்செயலாக திரு அசோகன் சுப்பிரமணியன் அவர்களின் வலைத்தளத்தை கண்டடைந்தேன். அவரும் நான் மேற்கொண்ட பாதையில் முன்னரே பல காலமாக பயணித்துக்கொண்டு இருந்தார். ஆதலால் நாம் சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவர் விளக்கம் அளிப்பதுடன் நிறுத்திவிடாமல் திருக்குறளை இன்று புழங்கும் வார்த்தைகளை வைத்து மறு ஆக்கம் செய்து இருப்பார். பாராட்டப்பட வேண்டிய முயற்சி. பல குறள்களுக்கு மற்றவர்கள் வேறுவிதமாக(தவறாகவோ அல்லது குழப்பமாகவோ) உரை எழுதி இருந்தாலும் அவர் அவருக்கு தோன்றியதை அவருக்கு சரி எனப்பட்டதை தெளிவாக எழுதியிருந்தார். அந்த இயல்பு எனக்கும் ஒரு மனத்திட்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு சரியென பட்டதையே நானும் உரையாக எழுதினேன். திரு.அஷோக் அவர்களிடம் இருந்து சில குறள்களுக்கு வேறுபட்டு இருக்கிறேன். அவரின் உரை எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. திருக்குறளின் உரையை ஆங்கிலத்திலும் விரிவாக எழுதியது இவ்வுலகிற்கு கிடைத்த பேறு எனவே சொல்லுவேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.

பெருமை

குறள் 505 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்

இச்செயலை முடித்தது எனக்கு பெருமையே அளிக்கிறது. ஆயினும் நான் திருக்குறளை ஒரு முறை கற்று உள்ளேன். அதன் படி நடக்க, பெருமை பயக்கும் பல செயல்களை செய்ய நான் ஏறவேண்டிய சிகரங்கள் பல இருக்கிறது. அப்பெருமை எனக்கு வாய்க்க நான் செயல்களை செய்ய இறைவன் துணைப்புரியட்டும். 

குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

இச்செயலை செய்து முடித்தது என்னளவில் ஒரு பெரிய காரியம் ஆயினும் அதனை தாண்டியும் பல காரியங்கள் உள்ளன. ஆதலால் நான் சரிசெய்யவேண்டிய என்னுடைய குறைப்பாடுகளை எண்ணியும் நான் அடையவேண்டிய சால்புகளை வேண்டியும் பணிவு கொள்கிறேன். 

அடுத்து?

திருக்குறள் கற்றல் பணி தொடரும்

எனது அடுத்த செயல்களுக்கான எண்ணங்கள்

திருக்குறள்

எழுதிய எல்லா குறள்களையும் மறுவாசிப்பு செய்து தேவையெனில் சீரமைப்பு செய்ய வேண்டும். 1. துவக்க காலங்களில் சில குறள்களுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் இருந்து பொருளை எடுக்கவில்லை. அவற்றை பூர்த்தி செய்யவேண்டும் 2. எழுதிய உரைகளை தேவையெனில் பொருட்பிழைகளை களையவோ அல்லது சுருக்கவோ  அல்லது நீட்டவோ வேண்டும். 3. சொற்ப்பிழைகள், எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், வலிமிகும் வலிமிகா இடங்கள் பிழைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும்.

1. திருக்குறள் - ஒவ்வொரு அதிகாரத்திலும் முக்கியாமான 2-4 குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

2. திருக்குறள் - தலைமை பண்புகளை பறைச்சாற்றும் குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

3. திருக்குறள் - அதிகார வாரியாக கட்டுரைகள் - இது ஒரு பெரும் பணி

4. திருக்குறள் - ஆத்மார்த்தமான உறவுகளுக்கு காமத்துப்பால் சொல்லும் சில முக்கியமான மனோத்தத்துவங்கள்

5. திருக்குறள் - ஆபத் வாக்கியங்கள்

மற்றவை

மூதுரை - ஔவையார்
கொன்றை வேந்தன் - ஔவையார்
நல்வழி - ஔவையார்
புதிய ஆத்திசூடி - பாரதியார்
நாலடியார்
புறநானூறு

எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.

சமர்ப்பணம்

இச்செயலை பாதிக்கடந்து (665 குறள்கள்) இருக்கும் பொழுது தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். 

இப்பொழுது மீதமுள்ள பாதிச்செயலை (665 குறள்கள்) எனது தனிப்பெருந்துணை பாட்டி சரஸ்வதி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.

இச்செயலை மொத்தமாக எனது குழந்தை உமையாள் மற்றும் எனது தங்கை தம்பியின் பிள்ளைகளான ப்ரத்ன்யா, தன்யா, சேந்தன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் திருக்குறளையும் மற்ற நூல்களையும் கலைகளையும் கற்று அவற்றை உறுதுணையாகக்கொண்டு வாழ்வை நன்கு அமைத்துக்கொண்டு வீடுபேறு அடையவேண்டுகிறேன். இறைவன் துணைநிற்கட்டும்.

அன்புடன்
ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன்

21 comments:

  1. அருமை நண்பரே

    ReplyDelete
  2. Please share the list of 300-400 Thirukural for young kids.. My email id in the

    ReplyDelete
  3. அற்புதம்.
    தொடரட்டும் உங்கள் தமிழ் பணி

    ReplyDelete
  4. #ஒரு சமச்சீரான அணுகுமுறைக்கு திருக்குறளை முழுமையாக கற்றல் மிக பயனுள்ளதாக இருக்கும். #
    இமாலய சாதனை.. திருக்குறளை உணர்ந்து கற்றுள்ளீர்கள். பின்பற்றி பிறருக்குரைக்க6கற்றுள்ளீர்கள்.
    அடிக்கடி இங்கே வந்து பல குறள் களுக்கு நான் விளக்கம் காண்பதுண்டு..

    www.voiceofvalluvar.org என்ற இணையதளத்தை உருவாக்க பல்லாண்டுகளாக முயற்சித்து வருகிறேன்.. எண்ணம் முழுதாக நிறைவேற வில்லை.. திருக்குறள் உவமை நயம், பாமரருக்கும் பரிமேலழகர் என்ற இரண்டு நூல்களை நானும், நிழல் காட்டும் நிஜங்கள் என்ற நூலை (124 கதைகள் 108 அதிகாரம் ) எனது துணைவியாரும் மலர்க்கொடி இராஜேந்திரன் எழுதியுள்ளோம். எனைத்தானும் நல்லவை கேட்க என்ற நிகழ்ச்சி வலைத்தமிழுடன் சேர்ந்து நடத்தி வருகிறோம்.ம மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறீர்களா.. வாழ்த்துகளுடன். சி. இராஜேந்திரன்

    voiceofvalluvar1330@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இத்தளத்தை அவ்வப்பொது வந்து கண்டு வாசிப்பது - மகிழ்ச்சி. உங்களை இன்னும் ஒரு இரு நாட்களில் தொடர்புகொள்கிறேன்.

      Delete
  5. உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கிடைக்குமா

    ReplyDelete
    Replies
    1. rajeshbalaa@gmail.com என்பது எனது மின்னஞ்சல். அஞ்சல் செய்யுங்கள். அங்கு தருகிறேன். பொதுவெளியில் அல்ல. மன்னிக்கவும்

      Delete
  6. திருக்குறள் வணக்கம் அன்பரே. மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தெய்வப்புலவர் ஆசியுடன் இறைவன் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் நலமுடன்

    ReplyDelete
  7. இன்றுதான் தற்செயலாக உங்கள் தளம் கண்டடைந்தேன். நன்றி...மிகச் சரியான இடங்களில் எழுத்தாளர் ஜெயமோகனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதுடன் சுட்டியும் உள்ளீர்கள். தொடர்க தங்கள் பணி ...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்கள் வலைத்தளம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது . 2500 நாட்களாக மிகவும் கடின முயற்சியுடன் 1330 குறளுக்கான பொருள் , பதவுரை , பல உரையாசிரியர்களின் உரை குறிப்பாக குறளுக்கான பொருளையுணர சங்ககால நூல்களின மேற்கோள்கள் , இன்றைய தலைமுறையில் உள்ள உரையாசிரியர்களின் கட்டுரை விளக்கங்களென பல வகையில் , குறளுக்கான முழு விளக்கத்தை அறியவும் , படிப்பவர் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் குறளுக்கான உட்பொருளை மெய்ப்பொருளை ) பல கோணங்களில் சிந்திக்க உதவுகிறது தங்களது வலைத்தளம்.

    இதைத் தொகுத்தளித்தற்கு மிக்க நன்றி ." செய்முறை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல்"- எனும் குறளுக்கேற்ப, எனக்கும் முப்பாலை கற்க நினைக்கும் அனைவருக்கும் தங்களின் பரிந்துரைகள் உதவும் என்பதில் ஐயமில்லை .தினமும் திருக்குறளை படிக்கும் பழக்கத்தை இனிமேல் கடைபிடிக்கவுள்ளேன் . இதற்கு உங்களுக்கும் , இதை உருவாக்க உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி குறிப்பாக பாட்டி சரசுவதிக்கும்🙏 மற்றும் தங்கள் வாழ்வில் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் வாழ்த்துகள் . ஒரு வேண்டுகோள் ; முக்கியமான ஒரு 300-400 குறள்களின் பட்டியலை . எனக்கு மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்துங்கள் , மிகவும் உதவியாக இருக்கும் . நன்றியுடன் ,விஷ்ணு

    ReplyDelete
  9. உங்கள் வலைத்தளம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது . 2500 நாட்களாக மிகவும் கடின முயற்சியுடன் 1330 குறளுக்கான பொருள் , பதவுரை , பல உரையாசிரியர்களின் உரை குறிப்பாக குறளுக்கான பொருளையுணர சங்ககால நூல்களின மேற்கோள்கள் , இன்றைய தலைமுறையில் உள்ள உரையாசிரியர்களின் கட்டுரை விளக்கங்களென பல வகையில் , குறளுக்கான முழு விளக்கத்தை அறியவும் , படிப்பவர் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் குறளுக்கான உட்பொருளை மெய்ப்பொருளை ) பல கோணங்களில் சிந்திக்க உதவுகிறது தங்களது வலைத்தளம்.

    இதைத் தொகுத்தளித்தற்கு மிக்க நன்றி ." செய்முறை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல்"- எனும் குறளுக்கேற்ப, எனக்கும் முப்பாலை கற்க நினைக்கும் அனைவருக்கும் தங்களின் பரிந்துரைகள் உதவும் என்பதில் ஐயமில்லை .தினமும் திருக்குறளை படிக்கும் பழக்கத்தை இனிமேல் கடைபிடிக்கவுள்ளேன் . இதற்கு உங்களுக்கும் , இதை உருவாக்க உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி குறிப்பாக பாட்டி சரசுவதிக்கும்🙏 மற்றும் தங்கள் வாழ்வில் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் வாழ்த்துகள் . ஒரு வேண்டுகோள் ; முக்கியமான ஒரு 300-400 குறள்களின் பட்டியலை . எனக்கு மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்துங்கள் , மிகவும் உதவியாக இருக்கும் . நன்றியுடன் ,விஷ்ணு

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஷ்ணு. தங்கள் email id?
      நான் முக்கியமான 300-400 குறள் என்று எதையும் தொகுக்கவில்லை. நான் ஒரு பள்ளிமாணவருக்கு திருக்குறள் கற்றுக்கொடுக்கிறேன். அப்பொழுது அந்த நேரத்தில் அந்த அதிகாரத்தில் எது முக்கியம் என்று தோன்றுகிறதோ அதை சொல்லிக்கொடுக்கிறேன். பல சமயங்களில் நான் வேகமாக கடந்து சென்ற குறள்கள் பின்பு மிக முக்கியமான ஒரு நுட்பமான பொருளை உணர்த்தியுள்ளன. ஆகவே என்னுடைய பரிந்துரை ஒரு அதிகாரத்தை 3-4 நாங்கு தடவை ஒவ்வொரு சொல்லின் பொருள் எண்ணி முழுமையாக வாசிக்கவும். ஜெயமோகன் சொன்னதுப்போன்று கவிதை என நினைவில் நினைத்து சிந்திக்கவும். வாயாலும் மனதாலும் சில முறை ஓதிப்பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நான் அந்த மாணவர் கற்பிக்கும் பொழுது வாயால் ஓதும் பொழுதே எனக்கு அந்த ஓசை நுட்பமான அர்த்தங்களை உணர்த்தியது. அப்படித்தான் நாம் ஒரு தரிசனத்தை அடைய முடியும். அது தான் நம் மனதில் எஞ்சும். trust me, it works beautifully.

      Delete
    2. மிக்க நன்றி ஐயா, உங்களிடமிருந்து கிடைத்த பதில் மற்றும் பரிந்துரைகளுக்கு நன்றிகள் ஐயா.இதை நடைமுறைப்படுத்துவேன். நீங்கள் மேலே குறிப்பிட்டது போல் குறளை அதன் அகராதி பொருளுணர்ந்து மீண்டும் மீண்டும் வாசிக்க ஆழமான பல அர்த்தங்களை தருகிறது . பலகோணத்தில் சிந்திக்க வைத்து விடிகிறது. எனவே, உடனுக்குடன் அதைக் குறிப்பெழுதி வைத்து, மறுபடியும் இதைப் பற்றி சிந்தித்து அதன் உட்ப்பொருளை மனதில் பதிவு செய்துவருகிறேன்.அதை எனது வாழ்க்கையில் நடந்த அல்லது பிற வரலாற்று நிகழ்வுகளுடன் பொருத்தி பார்க்கும் பொழுதும் போதும்,
      அதன்படி வாழும் பொழுதும் வாழ்க்கைக்கு மேலும் நன்மை ஒன்றை மட்டும் அளிக்கிறது. அந்த கணம், திருவள்ளுவரை நினைவு கூர்ந்து நன்றி🙏💕 கூறி வருகின்றேன்.

      இதற்கு, தங்கள் இணையம் இதற்கு மிக உதவியாக இருந்து வருகிறது.

      தங்கள் பதிவை, இன்று தான் பார்த்தேன். மன்னிக்கவும்,

      mvishnu4498@gmail.com


      உங்கள் இணையத்தின் உதவியால் தான், திரு. ஜெயராஜ் ஐயாவின் திருக்குறள் தொடர் வகுப்பு தெரியவந்தது. மிகச்சிறந்த வகுப்பு . நேரம் கிடைக்கும் போதெல்லாம் இலக்கணக்குறிப்புடன் வள்ளுவனின் வாயிலாக தமிழை கற்று கொள்கிறேன் .இதற்கும் உங்களுக்குதான் நன்றி சொல்ல நான் எஞ்ஞான்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

      வாழ்க வளமுடன்🙏
      Gmail ID : mvishnu4498@gmail.com

      எஞ்ஞான்றும் நன்றியுடன்,
      விஷ்ணு,,,

      Delete
    3. நீங்கள் தொடர்ந்து குறள்களை கற்றுக்கொண்டு இருப்பது, மீள் வாசிப்பு செய்வதும், முடிந்தால் மாணவர்களுக்கு கற்றுகொடுப்பதும், உங்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். திருக்குறள் நினைவில் இருக்கும். வாழ்வில் பல முக்கியமான தருணங்களிலும் அன்றாட தருணங்களிலும் குறள்கள் மனதிலே தோன்றும்.

      இலங்கை ஜெயராஜ் அவர்களின் குறள் உரைகள் அபாரமா இருக்கும். அவர் மற்ற இலக்கியங்கள் குறிப்பாக கம்பராமாயணம், மகாபாரதம், போன்றவற்றில் இருந்து பல உதாரணங்களை கூறுவார். அது மிகவும் உதவியாக இருக்கும். ஆயினும், அவர் பரிமேலழகர் க்கு உண்மையாக இருப்பார். ஆதலால் நாம் கொஞ்சம் யோசித்து அனுக வேண்டும் என்று நினைப்பேன்.

      Delete
  10. உறுதியாக . தாங்கள் மேலே கூறிய அனைத்தையும் மனதில் உறைத்து கொள்வேன்.

    தங்களது பரிந்துரைகள் அனைத்திற்கும் நன்றி ஐயா 🙏🙏

    ReplyDelete