அறிவிப்பு – திருக்குறள் பயணத்தி்ல் ஒரு மைல்கல்

அன்பர்களே,

நம் வாழ்வில் கனவு காணாத சில நிகழ்வுகள் நடக்கும் அல்லவா. அதுபோல தான் சென்ற மே 2025 யான் தமிழ் youtube channel இல் daily project thirukkural தளத்தைப் பாராட்டி ஒரு காணொளி (திருக்குறள் இப்ப ஈஈஈஸி! 🤩 - யான் தமிழ்) வெளியிட்டார்கள். அதுவே நான் எதிர்பாராத ஒரு அங்கீகாரம்.



யான் அறக்கட்டளை சர்வதேச அளவில் நடத்திய குறளில் குரல் டிஜிட்டல் பேச்சுப் போட்டி - வெள்ளியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா  ஜனவர் 10 2026 அன்று புதுக்கோட்டையில் நடைப்பெறும். சிறப்பு விருந்தினர் - சொல்வேந்தர் திரு சுகி.சிவம் ஐயா வர்கள். அதில் நான் கூட ஒரு குறளைப் பற்றி பேசி காணொளி தயாரித்து அனுப்பினேன். விருது பட்டியலில் இல்லாவிட்டாலும் அடுத்தகட்ட பட்டியில் இருந்தால் அதிலாவது எமது பெயர் வருமா என்றொரு நப்பாசை. வரவில்லை. [நானும் பங்குபெற்றேன் என்பதில் வரலாற்றி பதிவு செய்யவே இந்த பத்தி 😆]

உண்மையைச் சொல்ல தன்னடக்கம் தடையாக இருக்கக் கூடாது என்று நூல்கள் சொல்கின்றன .. ஆதலால் (வீரத்திற்கு ஆபத்து வரக்கூடாது) என்பதால், நான் காத்திருந்தாலும் விருது தேதி காத்திருக்காது என்பதால் (தமிழ்க்) காதலால் சொல்கிறேன் . (கவித கவித)





ஆனால், தற்பொழுது, வள்ளுவத்தைப் பரப்பத் இத்தளம் ஆற்றி வரும் தமிழ்ப் பணியைப் பாராட்டி  2025 ஆம் ஆண்டுக்கான “யான் திருவள்ளுவர் விருது - தமிழ்ப் பணி” எனக்கு / இத்தளத்திற்கு அளிக்கப்படுகிறது என்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

அதுவும் சொல்வேந்தர் திரு சுகி.சிவம் ஐயா அவர்கள் தலைமையில் இவ்விருது விழா நடைப்பெறுகிறது. இது கற்பனைக்கு எட்டாத ஒரு வைபவம் எனலாம். ஐயாவின் பேச்சுக்களை நான் குமரனாக இருந்த பொழுதில் இருந்தே கேட்டுக்கொண்டு வருகிறேன். சன் டிவியில் சனி அல்லது ஞாயிறு காலை ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற ஒரு நிகழ்ச்சியில் அவருடைய ஒரு 5-10 நிமிட பேச்சை கேட்டுவிட்டு அந்நாளை துவங்கிய நாட்கள் அவை. பிற்காலத்தில் பல உரைகளை பல வடிவங்களில் கேட்டுள்ளேன். அவர் கையால் அல்லது அவர் வீற்றிருக்கும் ஒரு மேடையில் எமது ஒரு பணிக்கு ஒரு விருது என்பது மனதிற்கு எப்படிப்பட்ட இன்பமும் நிறைவும் பயக்கும் ஒரு தருணம். தன்யன் ஆனேன். 

இந்த கௌரவத்திற்கு மிக்க நன்றி திரு.செல்வேந்திரன் மற்றும் யான் அறக்கட்டளை (திரு.K.பிரதிப்குமார்). 

இது எனக்கு மிகுந்த உற்சாகமூட்டும் விருது.  குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு திருக்குறளையும் மேலும் ஆழமாக விரிவாக கற்றுக்கொண்டு பதிவேற்றுகிறேன். இப்பொழுது தான் பலகட்ட சுழற்சிகளுக்குப் பிறகு ஒரு பதிவிற்கான வடிவம் அமைந்திருக்கிறது. அதிகார வாரியாக ஒட்டுமொத்தமாக அலசி ஆராய்ந்தும் பதிவிடுகிறேன். இந்த தருணத்தில் இவ்விருது எனக்கு எனது பணியை மேலும் கவனத்துடன், பொறுப்புடனும் செய்ய வேண்டும் என்று உத்வேகத்தையும் தெளிவையும் தருகிறது. இது ஒரு நீண்ட கால நிதானமான பயணம். 

இத்தளத்தை வாசித்து உற்சாகமூட்டிய வாசகர்களுக்கு அறிஞர்களுக்கும் என்பது தாழ்மையான நன்றிகள்.

நான் கனடாவில் வசிப்பதால், -40 deg Celsius பனிக்குளிரில் கையில் 6 மாத குழந்தையை வைத்துக்கொண்டு திட்டமிடுவது சிரமம் வாய்ந்தது. ஆதலால் என்னால் நேரில் வந்து இவ்விருந்தை பெற்றுக்கொள்ள இயலாத தருணம். ஆதலால் எனது தாயார் எனது சார்பாக பெற்றுக்கொள்வார்.

இன்னும் விரிவாக எழுதுகிறேன் விருது விழாவிற்குப் பின்பு.

அன்புடன்,
ராஜேஷ்