யான் அறக்கட்டளையின் - Change Makers 2025 விருது
யான் அறக்கட்டளை 2025 விருதுகள்
யான் அறக்கட்டளை தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு சமூக சேவை அறக்கட்டளை. அவர்கள் மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள், கிராமப்புரங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரம் யோகா, கிராமிய கலைகள், இலக்கியம் என்று பல வேறு தளங்களில் பங்களிப்பாற்றி வருகிறார்கள். கடந்த மே 2023 முதல் யான் தமிழ் என்ற YouTube சேனல் வழியாக திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்து பல காணொளிகளை வெளியிட்டு திருக்குறளை உலகிற்கு இன்றைய மொழியில் நவீன உலக எடுத்துக்காட்டுகளுடன் கொண்டு சேர்கிறார்கள்.
அவர்கள் ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2025 வரை திருவள்ளுவர் டிஜிட்டல் பேச்சுப் போட்டி நடத்தினார்கள். அதற்கான விருதுகளையும் பரிசுகளையும் வழங்கும் விருது விழா 10-ஜனவரி-2025 அன்று புதுக்கோட்டையில் நடைப்பெற்றது.
அதில் Change Makers என்று ஐந்து விருதுகளை அளித்தார்கள். அதன் விபரம் கீழே.
Change Makers விருது
கடந்த 26-நவம்பர்-2025 அன்று "வாசிப்பது எப்படி?" என்ற நூலை எழுதிய எழுத்தாளர் திரு.செல்வேந்திரன் அவர்கள் என்னை WhatsApp இல் தொடர்புக்கொண்டு Daily Project Thirukkural -க்காக யான் தமிழ் அறக்கட்டளை சார்பாக திருவள்ளுவர் விருது - தமிழ்ப் பணி என்ற Change Makers 2025 ஆண்டிற்கான விருதை எனக்கு அளிக்கவிருப்பதாகக் கூறினார்கள். கூடவே விருது வாங்குவோரின் இறுதிப் பட்டியலைப் பகிர்ந்துக்கொண்டார்.
- யான் வினோபா பாவே விருது for சமூக சேவை - திரு. காலித், உறவுகள் டிரஸ்ட்.
- யான் வள்ளலார் விருது for பசிப்பிணி தீர்த்தல் - கமலாத்தாள் பாட்டி, ஒரு ரூபாய் இட்லி, கோயம்புத்தூர்.
- யான் விவேகானந்தர் விருது for இளையோர் நலம் - தாசில்தார் மாரிமுத்து, விருது நகர்
- யான் வள்ளுவர் விருது for வள்ளுவம் - திரு. ராஜேஷ், திருக்குறள் டெய்லி புராஜெக்ட்
- யான் காமராசர் விருது for பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி - திரு. ஓடந்துறை சண்முகம்
ஏற்பு
விருது பட்டியலை படித்தபோது எனக்கு உண்மையாகவே இதெல்லாம் ஒத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று இருந்தது. ஏனெனில் இவர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் எல்லாம் பல தசாப்தங்கள் இந்த சமூகத்திற்காக களத்தில் நின்று பணிப்புரிந்துள்ளார்கள். அவர்கள் ஆற்றிய சேவைக்கு முன்பாக எனது பங்களிப்பை என்ன சொல்வது என்று எனக்கு குழப்பமாகவே இருந்தது.
பின்பு செல்வேந்திரன் அவர்களை அழைத்தேன். அவர் தான் என்னை சமாதானப்படுத்தினார். ”Daily Project Thirukkural தளம் திருக்குறளுக்கு ஒரு களஞ்சியம். அதனால் தான் நீங்கள் இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர் என்றார். உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” . அந்த அன்பிற்காக ஒப்புக்கொண்டேன். மேலும், எனக்கும் அந்த நேர்மறை ஊக்கம் தேவையான மனநிலையிலான வாழ்வில் இருக்கிறேன்.
ஆயினும் இவ்விருதிற்கு திருக்குறள் ஆய்வுகளுக்கும், திருக்குறள் மீதும் சமூகத்தின் மீதும் கொண்ட மெய்யான அன்பால், திருக்குறளை இச்சமூகத்திற்கு எடுத்துச்செல்ல பல ஆண்டுகாலம் பல வடிவங்களில் பல வழிகளில் பங்களிப்பாற்றியவர்கள் பலர் உள்ளனர்.
எனது வலைத்தளத்தை google தருவதால் என் மீது கூடுதல் வெளிச்சம் படுகிறது. ஆதலால் இவ்விருதை திருக்குறளுக்கும் தமிழுக்கும் பங்காற்றியவர்கள் சார்பாகாவே பெற்றுக்கொள்கிறேன்.
சொல்வேந்தர் திரு சுகி சிவம் ஐயா
நான் குமரனாக இருந்த காலத்தில் இருந்தே திரு.சுகி சிவம் ஐயாவின் பேச்சை கேட்டு வளர்ந்தவன். அவர் கையால் இவ்விருது என்பது நான் கற்பனையில் காணாத ஒரு நிகழ்வு.
திரு. சுகி சிவம் ஐயா அவர்கள் தனது பேச்சில், ”இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நூல் திருக்குறள். அது இன்று மனிதன் படும் பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் கொடுத்துள்ளது. இது போல் ஒரு நூல் உலகில் அரிது. அத்தகைய நூலிற்கு நாங்கள் (சுகி சிவம் ஐயா அவர்கள்) கல்லூரி படித்த காலங்களில் மு.வரதராசனார் எழுதிய ஒரு சிறிய உரை நூலை எல்லா போட்டிகளிலும் பரிசாக வழங்குவார்கள். ஆனால் திருக்குறளை அக்குவேர் ஆணிவேராக பிரித்து ஒரு இளைஞர் செய்து இருக்கிறார். அவரை நாம் பாராட்ட வேண்டும்”, என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டபின்பு நான் அடைந்த ஆனந்தத்தை எப்படிச்சொல்வேன்.
யான் அறக்கட்டளை சார்பாக திரு.அரங்கசாமி கூறியவை
தமிழில் மிக அதிகமான நூல்கள் எழுதப்பட்டது வள்ளுவருக்குத்தான். மிக அதிகமான ஆய்வுகள் திருக்குறளில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளாக அகழ்ந்து அகழ்ந்து எடுத்தாலும் இன்னும் இன்னுமென வள்ளுவம் தந்துகொண்டிருக்கும் புதையல்களுக்கு ஓர் அளவில்லை. அத்தனைப் புதையலும் மொத்தமாக ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் மொத்த மானுடத்துக்கும் இலவசமாகக் கிடைத்தால்? வள்ளுவம் குறித்த ஒட்டுமொத்த உரையாடல்களையும் ‘daily project thirukkural’ எனும் வலைப்பூவில் தொகுத்து வரும் கனடாவில் வாழும் தம்பி, திரு. ராஜேஷூக்கு திருவள்ளுவர் பெயராலே விருது வழங்கப்படுகிறது.
மற்ற Change Makers விருதாளர்கள் பற்றி
வினோபா பாவே விருது – சமூக சேவை – உறவுகள் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் திரு.நி.காலித் அகமது
சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உறவுகள் டிரஸ்ட்’ (Uravugal Trust) அமைப்பின் நிறுவனர் திரு. காலித் அகமது அவர்கள், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மனிதாபிமானத்தின் சிறந்த அடையாளமாகத் திகழ்கிறார். உயிரிழந்த ஆதரவற்ற மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களைக் கண்டெடுத்து, அவர்களுக்கு உரிய சடங்குகளுடன் மரியாதையான இறுதி அஞ்சலி செலுத்துவதைத் தன் வாழ்நாள் பணியாகக் கொண்டுள்ளார். இவரது ஈடு இணையற்ற மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டி, ’யான் சேஞ்ச் மேக்கர்ஸ் 2025 வினோபா பாவே விருது - சமூகசேவை’ வழங்கி இவரைப் போற்றிக் கௌரவிக்கிறது யான் அறக்கட்டளை.
வள்ளலார் விருது – பசியாற்றுதல் – திருமதி.எம்.கமலாத்தாள்
பசிப்பிணி போக்கும் பாசமிகு அன்னை. கோயம்புத்தூர் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் ஒரு ரூபாய்க்கு இட்லி எனத் தினமும் நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களின் பசியாற்றி வருகிறார். தனது முதுமையையும் பொருட்படுத்தாமல், இவர் காட்டும் இந்த மனிதாபிமானம் தேசத்தையே திரும்பிக் பார்க்கச் செய்துள்ளது. எளிய மனிதர்களுக்கு உணவளிப்பதே இறைப்பணி என்பதைத் தனது வாழ்வின் மூலம் மெய்ப்பித்து வருகிறார். திருமதி. எம். கமலாத்தாள் (இட்லி பாட்டி) அவர்களின் தன்னலமற்ற உன்னதமான மனிதாபிமான சேவையைப் பாராட்டி, ‘யான் சேஞ்ச் மேக்கர்ஸ் 2025 வள்ளலார் விருது - பசியாற்றுதல்’ வழங்கி இவரைப் போற்றிக் கௌரவிக்கிறது யான் அறக்கட்டளை.
விவேகானந்தர் விருது – இளையோர் நலம் – முன்னாள் வட்டாட்சியர் திரு.க.மாரிமுத்து
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர், பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தனது ஓய்வு நேரங்களில் இலவசமாகப் போட்டித் தேர்வுப் பயிற்சிகளை வழங்கி வருகிறார். தனது தன்னலமற்ற பயிற்சியின் மூலம் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களை அரசுப் பணியில் அமர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளார். கல்வியின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வரும் இவரது இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, ’யான் சேஞ்ச் மேக்கர்ஸ் 2025 விவேகானந்தர் விருது - இளையோர் நலம்’ வழங்கி இவரைப் போற்றிக் கௌரவிக்கிறது யான் அறக்கட்டளை.
திருவள்ளுவர் விருது – தமிழ்ப் பணி – Daily Project Thirukkural திரு.ஆ.ராஜேஷ் பாலசுப்ரமணியன்
திருக்குறள் மீது கொண்ட அளப்பரிய ஈடுபாட்டால், ‘Daily Project Thirukkural’ வலைப்பதிவின் வாயிலாக வள்ளுவத்தின் வாழ்வியல் நெறிகளைத் தினமும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருபவர் திருக்குறள் ராஜேஷ். 2009-ஆம் ஆண்டு முதல் திருக்குறளைத் தொடர்ந்து கற்று, அதன் ஆழமான பொருளை இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் பகிர்ந்து வரும் இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி, ’யான் சேஞ்ச் மேக்கர்ஸ் 2025 திருவள்ளுவர் விருது - தமிழ்ப் பணி’ வழங்கி இவரைப் போற்றிக் கௌரவிக்கிறது யான் அறக்கட்டளை.
காமராஜர் விருது – பங்கேற்பு ஜனநாயகம் – ஓடந்துறை கிராம ஊராட்சி முன்னாள் தலைவர் திரு. இரா.சண்முகம்
கோயம்புத்தூர் மாவட்டம் ஓடந்துறை ஊராட்சியை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சியில் இந்தியாவின் ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றினார். ‘குடிசைகள் இல்லாத கிராமம்’ என்ற இலக்கை அடைவதற்காக சுமார் 850-க்கும் மேற்பட்ட தரமான கான்கிரீட் வீடுகளை ஏழை மக்களுக்குக் கட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்து ஆற்றல் தன்னிறைவு கண்டதுடன், மிகச்சிறந்த உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார். திரு. இரா. சண்முகம் அவர்களின் சீரிய நிர்வாகத்தையும், அரிய சமூக மேம்பாட்டுப் பணிகளையும் பாராட்டி இவரது அரிய பணியைப் பாராட்டி, ’யான் சேஞ்ச் மேக்கர்ஸ் 2025 காமராஜர் விருது - பங்கேற்பு ஜனநாயகம்’ வழங்கி இவரைப் போற்றிக் கௌரவிக்கிறது யான் அறக்கட்டளை.
விருது பெறுதல்
நன்றிகள்
இவ்விருதை இப்பணிக்கு அளித்த எழுத்தாளர் செல்வேந்திரனுக்கும், யான் அறக்கட்டளை குழுவிற்கும் - குறிப்பாக திரு.அரங்கசாமி மற்றும் பிரதீப் குமார் இருவருக்கும் மிக்க நன்றி.
மிக்க நன்றி.
அன்புடன்
ராஜேஷ் பாலசுப்ரமணியன்
பி.கு: இது விருது பற்றிய நிரந்தர பதிவு என்பதால் விருதைப்பற்றி மட்டும் எழுதியுள்ளேன். விரிவாக இரண்டு பதிவுகள் விரைவில் வெளியிடுகிறேன்.








Join the conversation