Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Friday, January 25, 2019

பொச்சாப்புக் கொல்லும் புகழை

குறள் 532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]

பொருள்
பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

பொச்சாப்புக் - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றிமனம்நெகிழ்ந்திருக்கை.

கொல்லும் - kol-   3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties by oxidation; இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுத்தல்  

புகழை - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

அறிவினை - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

நிச்சம் - நிச்சயம்; எப்பொழுதும்.

நிரப்புக் - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக்குறியாகநெல்வைத்துநிரப்பியநாழி.

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

கொன்றாங்கு -  கொல்வதுப் போல

முழுப்பொருள்
இளமைப் பருவம் கல்வி கற்கும் பருவம். “கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்றார் ஔவையார். இளமையில் என்றும் வறுமையிலே வாடியவர்க்கு அறிவென்னும் செல்வம் வாய்க்காது, அழிந்துபடும். 

வள்ளுவரே அறிவுடைமை அதிகாரத்தில் அறிவு என்பது நம்மை துன்பத்திலிருந்து காக்கும் கருவி; எந்தவொரு பகையும் அதை அழிக்கமுடியாது என்பதை, குறள் 421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.என்னும் குறள் வாயிலாகச் சொல்லியிருக்கிறார் என்பதை முன்பே கண்டிருக்கிறோம். வறுமை என்பது துன்பமாயின் அறிவு நம்மை காக்கவேண்டும். இது கற்றபின் வறுமைக்கு என்றால் சரியாயிருக்கும். வறுமையினால் கல்வியே கற்க முடியாதவருக்கு அறிவைக் கொடாத கூற்றாகத்தான் வறுமையிருக்கும். 

ஆதலால் எப்பொழுதும் இருக்கும் வறுமையால் நாம் கல்வியினை பெற முடியாமல் போய்விடும். கல்வி இருந்தால் வறுமையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம். அதுவே அதன் சிறப்பு. வறுமை கல்வி கற்கும் வாய்ப்பினை கொன்றுவிடும்.

சில சமயங்களில் ஒருவர் நூல்கள் கற்ற அறிவுடையவர்களாக இருப்பர். ஆனால், வறுமையினால் திருடுதல், பொறாமைக்கொள்ளுதல், பிறர் பொருள்களை கவர முற்படுதல் போன்றவற்றில் ஈடுபடுவர். அதற்கு காரணம் வறுமை. வறுமை அவ்வளவு கொடியது. அதுப்போல் அவ்வளவு கொடியது மறதியும் ஆகும். வறுமை அறிவை அழிப்பதுப்போல் மறதி செயலையும் செல்வத்தையும் புகழையும் அழிக்கும் ஆற்றல் பெற்றது.

ஆதலால் மறதி சோம்பல் அலட்சியம் உறுதியின்மை என்னும் நோய்கள் ஒரு அரசனின் (ஒரு தலைவனின் / ஒருவரின்) புகழை கொன்று விடும் என்கிறார் திருவள்ளுவர். புகழ் என்றால் துதி என்று இங்கு அர்த்தம் ஆகாது. தான் செய்த அருஞ்செயலின் பலன்களை புகழ் என்று இங்கு கூறலாம். ஆதலால் மறதி சோம்பல் (..) முதலியவை ஈன்ற எல்லா பலன்களையும் அழித்துவிடும். செயலில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தால் பலனை அழியாமல் பார்த்துக்கொள்ளலாம். பலன்களை பெருக்க வேண்டும் என்றால் அதற்கு அரும்பாடுபட வேண்டும். மறதி சோம்பல் கொடியது. அதற்கு மருத்துவரீதியான காரணங்களும் உண்டு. செயலில் இல்லாத ஒன்று வேகமாக மறைந்துவிடும்.

உதாரணமாக எனது (நண்பர்) மருத்துவர் குழந்தை நிபணுத்துவத்தில் மிக நன்றாக படித்துவிட்டு அதில் பயிற்சி செய்யாமல் இருந்தால் (சூழ்நிலைகளால் மற்றும் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று முயற்சியில் ஈடுப்பட்டு இருந்ததால்). அவர் படித்து முடிக்கும் பொழுது அத்துறையில் அவருக்கு நல்ல புகழ் (பலன், கல்வி, அனுபவம்) இருந்ததது. அவருடைய நண்பர் ஒரு அனுபவம் மிக்க உயர் அதிகாரி. அவர் எனது நண்பரிடம் கூறிய ஒன்று ஆறுமாதத்திற்குள் நீ பயிற்சியில் (clinical practice) ஈடுபடவில்லை என்றால் எல்லாம் நீராவி போன்று (evaporation) மறந்துவிடும். நீ இரண்டு வருடம் செய்த உழைப்பும் எல்லாம் வீணாகிவிடும் என்பதை மறவாதே. இது என்னுடைய வாழ்விலும் பார்த்ததுண்டு. மறதி கொடியது.

மறதி சோம்பல் உறுதியின்மை இல்லாமல் செயலில் ஈடுபட்டுக்கொண்டு வாழவேண்டும். பலன் குன்றாது.

இதனை திருக்குறள் கற்றலுக்கும் பொருத்திப்பார்க்கலாம். திருக்குறளை கற்றுவிட்டு அதனை செயலில் காண்பிக்க மறந்துவிட்டால் என்ன பயன்? தேக்கமே. திருக்குறள் சொல்லியவற்றை மறவாமல் தொடர்ந்து செயலாற்றினால் நம் புகழ் ஓங்கும்.

மேலும்: அஷோக் உரை
நிச்சநிரப்பாவது நாள்தோறும் வருந்தி இரந்துண்ணும் நிலைமை. 'அன்ன மொடுங்கினால் அஞ்சு மொடுங்கும்'.ஆதலாலும்,

"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்".

(குறள் . 1046)

ஆதலாலும், நிலையான வறுமை ஒருவனது அறிவைக் கெடுக்கும். அதுபோல் மறவியும் தற்காப்பின்மையாலும் கருமக்கேட்டாலும் அரசனது புகழை அழிக்கும் . வறுமையை நிரப்பென்பது மங்கல வழக்கான எதிர்மறைக் குறிப்பு .
ஒப்புமை
“அறிவுகெட நின்ற நல்கூர் மையே” (புறநா.266:13)

"குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் 
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பிசிப்பிணி என்னும் பாவி” (மணி. 11:76-80)

“பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட 
இன்மை தழுவப்பட் டார்க்கு” (நாலடி.285)

“நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழுப்பர் - கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய் இரப்பென்னும்
அல்லல் அடையப்பட்டார்” (நாலடி.289)

பரிமேலழகர் உரை
புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.
(நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மறவியாகின்றது புகழைக்கொல்லும்: நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல.
இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.

மு.வரதராசனார் உரை
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

Thirukkural - Management - Memory
Memory is the ability to store information and retrieve the stored information at the required time. Both storing and retrieving when needed are skills required to obtain a superior memory.

Poverty destroys the intellect of a person, as he cannot use his intellect for productive purposes. All day long, he can think only of poverty. There is no possibility or chances to employ his intellect when he is affected by poverty. Similarly, forgetfulness, or lack of superior memory, destroys the name, fame, and intellect of a person, claims Kural 532.

Laxity kills fame as a hand-to-mouth life
Kills the intellect.

Therefore, remember to remember facts, events, and people. Memory is the right source and resource of all achievements. 

No comments:

Post a Comment

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...