அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க

குறள் 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
அன்று - அந்நாள்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா.

அன்று அறிவாம் - அந்நாளில் அறிந்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், செய்துக்கொள்ளலாம்

என் -> என்ன -> இகழ்ச்சிக்குறிப்பு, என்று சொல்லுதல் (to say, utter, express)

என்னாது - என்று சொல்லாமல்

அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்)தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம்,

தன்னறம் - ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம்.  

செய்க - செய்ய வேண்டும்

மற்று அது - மற்றவை

பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வை முதலியன குறைதல்.

பொன்றுங்கால் - இறுதிக்காலத்தில்

பொன்றா - மறையாத, இறவாத, நிலைத்த

துணை -  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்

முழுப்பொருள்
ஒருவனுக்கு ஒரு செயலை அவன் சிறப்பாக செய்தால் மனநிறைவை அளிக்குமானால் அதுவே அவனுக்கு அறம். அதை தன்னறம் என்போம். சுவதர்மம்.  அப்படிப்பட்ட தன்னறத்தினை நாளை செய்துக்கொள்ளாம் என்று வேறு வேலை இருக்கிறது என்று தள்ளிப்போடக்கூடாது.

ஏன் என்றால் வாழ்வில் இறுதி காலத்தில் தன்னுடைய உடம்பும் மனதும் தளர்ந்தகாலத்தில் நாம் ஆசைப்பட்டதை செய்ய முடியவில்லையே என்று மன நிறைவு இல்லாமல் துன்பம் அடைய கூடாது. இல்லையேல் வாழ்வு வீணாகிவிடும்.

அப்படி மனநிறைவு அளிக்கும் செயல்களில் இளமையில் இருந்து ஈடுபட்டால் இறுதி காலத்தில் மனநிறைவு இருக்கும். அதுவே இறுதிக் காலத்திற்கு உற்சாகமாய் இருக்கும். துணையாக அமையும்.

அதுமட்டும் இன்றி நாம் இன்று செய்யும் செயல்களே நாளை நம்மை காக்கும். தருமம்(காலத்தேச் செய்யும் கடமைகள் / செயல்கள்) தலைக் காக்கும். இன்று நாம் செயல்களை செய்யாது பிற்காலத்தில் கிருஷ்ணா ராமா என்று புலம்புவதில் பயனில்லை. உதாரணமாக கடைசிக்காலத்தில் பகவத் கீதையும் /திருக்குறளும் படித்து என்னப் பயன்? ஏனேனில் பகவத் கீதையும் திருக்குறளும் நமக்கு கூறும் முதன்மையான செய்தி செயலாற்று. இளம் வயதில் கற்று செயலாற்றாமல் கடைசிகாலத்தில் கற்பதால் ஒரு பயனுமில்லை. ஆதலால் பிற்காலத்திற்கு எதையும் ஒத்திப்போடாதே. இன்றே செய். அது உன்னை நாளை பாதுக்காக்கும். 

பொதுவாக அறம் (கடமை, புண்ணியக்காரியங்கள், மனநிறைவு தரும் சேவைகள், ஒழுக்கம்) சார்ந்த எதையும் தள்ளிப்போடாதே! Do not procrastinate. 

அறம் தனை கடமை என்னும் நோக்கில் பார்த்தால் அதற்கு நான் வாழ்வில் நேரடியாக பார்த்த ஒரு சம்பவம் நினைவில் வருகிறது. எனது பக்கத்து வீட்டில் என்னை விட ஒரு வயது சிறிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பள்ளியில் படிக்கும் பொழுது நன்றாக படிப்பார். அவருடைய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் பொழுது கடைசி பரிட்சைக்கு முன்பு தினம் எதிர்ப்பாராத விதமாக திடீர் என்று அவருடைய தந்தையார் மாரடைப்பால் இறந்துவிட்டார். அந்த துக்கமான நேரத்திலும் அவர் மறுநாள் பரீட்சை எழுதினார். பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சிப்பெற்றார். அவர் கடைசி நிமிடம் வரை படித்துக்கொண்டு இருக்காமல் வருடம் முழுவதும் உழைத்ததால் அவரை ஒரு இக்கட்டான நிலையில் கூட அவர் முன்பு செய்த கடமை (நேரத்திற்கு அவரது கடமைதனை செய்தது. அதாவது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல் அவ்வப்போது படித்தது) அவரை கைவிடாது காப்பாற்றியது. ஆனால் நம்மில் பலர் கடைசி நிமிடத்தில் படிக்கலாம் என்று பரிட்சை அறை வாசல் வரை கையில் புத்தகம் வைத்துக்கொண்டுப் படிப்பதை பார்த்து இருக்கிறோம். அது தவறு.

என்பதை நினைவில் கொள்க

பி.கு: கண்டிப்பாக கீழ்க்காணும் ஜெயமோகன் உரையை காண்க
பி.கு: இதனை அமேஸான் (Amazon) நிறுவனர் ஜெப் பேஸாஸ்(Jeff Bezos) regret minimization framework என்கிறார். ஆகவே Bias for action என்ற ஒரு தலைமை பண்பை அவரது நிறுவனத்தில் அடிப்படையாக கடைப்பிடிக்கிறார்.

மூலநூல்களை மனப்பாடம் செய்தால்தான் அவற்றை நினைவில் ஓட்டி முழுமையாக அறியமுடியும். ஒரு வரி ஓர் உணர்வுடனோ அனுபவத்துடனோ இணைந்து தன்னிச்சையாக நினைவில் எழுவதுதான் அதை உண்மையில் புரிந்துகொள்ளும் தருணம்

உதாரணமாக ஒருநண்பரின் இறப்புச்செய்தி எனக்கு வந்தபோது பேருந்துப்பயணத்தில் இருந்தேன். அவர் இயற்கைவேளாண்மை, கிராமிய மேம்பாடு சார்ந்து பெரிய கனவுகள் கொண்டிருந்தார். அதைச்சார்ந்தே தன்னை பயிற்றுவித்து வந்தார். அவரது இயல்பே அதைச்சார்ந்து உருவாகி வந்தது

ஆனால் கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டு ஊர் திரும்பலாமென நினைத்து தொடர்ந்து வளைகுடா நாட்டிலேயே பணியாற்றினார். அவர் வெறுத்த வேலை. அவர் ஒன்றும் சாதிக்கமுடியாத வேலை.ஆனால் எப்போதும் அவருக்கு செய்து தீர்க்கவேண்டிய ஒரு சிறிய வேலை எஞ்சியிருபப்தாகத் தோன்றிக்கொண்டிருந்தது. ஒரு சிறு மாரடைப்பில் மறைந்தார்.

அவரைப்பற்றி எண்ணியதும் இயல்பாக ஒருகுறள் நினைவில் எழுந்தது

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத்துணை


நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப்போடாது அறச்செயல்களைச் செய்யுங்கள். இறக்கும்போது அதுவே துணைவரும்– இதுதான் வழக்கமான பொருள். ஆனால் அறம் என்ற சொல்லுக்கு ஏன் தானதர்மங்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்? அப்படி வள்ளுவர் காலத்தில் பொருள் இல்லை.

தன்னறம், தனக்கே உரிய அறம் என ஏன் பொருள் கொள்ளக்கூடாது? ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம். அதைச்செய்யாமல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கவேண்டாம். வாழ்நாள் வீணாகிவிடும். ஒருவன் தன் சொந்த அறம் எதுவோ அதைச் செய்தால் மட்டுமே நிறைவாக இறக்கமுடியும், இறப்பின் கணத்தில் மனநிறைவாக அதுவே உடனிருக்கும். அதையல்லவா வள்ளுவர் சொல்கிறார்?

இப்படி அக்குறள் எனக்கு அன்று திறந்துகொண்டது. மூலநூல்கள் அப்படி திறந்துகொள்ளவேண்டும். அதன்பெயரே தியானம். அதற்கு முதல்படி மனனம்.

எழுத்தாளர் வண்ணதாசனின் ஒரு கவிதை வாசித்த பொழுது இக்குறள் நினைவுக்கு வந்தது
நீங்கள் அந்த முயலை
வேட்டையாடிவிட்டீர்கள்.
இனிமேல் அதனுடைய காட்டைத் தேடுங்கள்.
நீங்கள் பட்டாம் பூச்சியைப்
பிடித்துவிட்டீர்கள்.
இனிமேல் அது அமர்ந்த மலர்களைப் பாருங்கள்.
நீங்கள் சிகரத்தில் ஏறிவிட்டீர்கள்.
இனிமேல் சமவெளி பற்றி யோசியுங்கள்.
நீங்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டீர்கள்.
இனிமேல் தண்டிக்கப்பட்டவனின்
குற்றமற்ற கண்களைச் சந்தியுங்கள்
நீங்கள் பலத்த கரவொலியுடன்
பாடி முடித்துவிட்டீர்கள்.
இனிமேல் உங்களுக்குப் பின்னால் இருக்கும்
அத்தனை வாத்தியக்காரரின்
ஒத்திசைவை நினையுங்கள்.
நீங்கள் இந்தக் கவிதையைப்
படித்துவிட்டீர்கள்.
இனிமேல் இது உங்களை
என்ன செய்யச் சொல்கிறதோ
அதைச் செய்யுங்கள்.
தயவுசெய்து, அதை மட்டும்.
-வண்ணதாசன் (எ) கல்யாண்ஜி

கவிக்கோ அப்துல் ரகுமான் “போட்டி” என்ற ஒரு கவிதை
ஒருநாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது

நான் புன்னகையை எடுத்து வைத்தேன்
அது வைகறையை எடுத்து வைத்தது

நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது

நான் வியர்வைத்துளிகளை
எடுத்து வைத்தேன்
அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது

நான் கோபத்தை எடுத்து வைத்தேன்
அது வெயிலை எடுத்து வைத்தது

நான் காதலை எடுத்து வைத்தேன்
அது நிலவை எடுத்து வைத்தது

நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன்
அது மேகங்களை எடுத்து வைத்தது

நான் எழுத்தை எடுத்து வைத்தேன்
அது மின்னலை எடுத்து வைத்தது

நான் பேச்சை எடுத்து வைத்தேன்
அது இடியை எடுத்து வைத்தது

நான் கவிதையை எடுத்து வைத்தேன்
அது வானவில்லை எடுத்து வைத்தது.

நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்
அது இருளை எடுத்து வைத்தது

நான் சந்தேகங்களை எடுத்து வைத்தேன்
அது கிரகணங்களை எடுத்து வைத்தது

நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது

இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை
எடுத்து வைத்தேன்

வானம் தோற்றது!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

ஒப்புமை
”தெரியின் அறமே துணை” (அறநெறிச் 146)
“முன்புநின் றிசைநி றீஇ முடிவு முற்றிய
பின்புநின் றுறுதியைப் பயக்கும் பேரறம்” (கம்ப.தைலமாட்டு.29)
“அறந்தலை நின்றார்க் கில்லை யழிவெனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது” (கம்ப.இந்திரசித்து வதை 58)


”மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு” (நாலடி 332)
“பின்னை அறிவென்றல் பேதைமை” (அறநெறிச் 105)

“காலைச்செய் வோமென் ற்றத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தானெழுத லரிதான்மற் றென்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு” (அறநெறிச்.66)
“நாளைச் செய்குவம் அறம்எனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகின் முழுவதும் இல்லை” (சிலப். 28:179-82)
“உம்பர்த முலகி னுய்க்கும் உலகினுக் கிறைமையாக்கும்
வெம்பிய இறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்கும் மெய்யே
நம்பிநல் லறத்தைப் போலும் துணையில்லை நமக்கு நாடின்” (மேருமந் 968)

மேலும் : அஷோக் (நன்றி)

தருமன் “அறத்தின்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையென்பது அது வெல்லும் என்பதனால் அல்ல. அளிக்கும் என்பதனால் அல்ல. அழைத்துச் செல்லும் என்பதனாலும் அல்ல. அது எனக்கு உவப்பானது, அது ஒன்றே இயல்பானது என்பதனால்தான்” என்றார். பீஷ்மர் விழிகள் ஈரம் கொள்ள, நெகிழ்ந்து தொண்டை அசைய, கைநீட்டி அவர் கைகளை பற்றிக்கொண்டார். “அவ்வண்ணமே இரு, மைந்தா! இம்மண்ணில் எதுவும் உன்னை துயர்கொள்ளச் செய்யாதிருக்கட்டும்” என்றார். அவரது கைகள் தருமனின் கைகளுடன் சேர்ந்து நடுங்கின. “தங்கள் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் தருமன்.


எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு -கிராதம்-44,45,46 கீழ்க்காணும் வரிகள் வருகிறது.  அதில், அசுரன் விருத்தினன் வெல்ல வாய்ப்பிருந்தும் அவனின் வீழ்ச்சி அவன் தள்ளிப்போடுவதால் வருகிறது என்பதை காணலாம். (விருத்தினனின் வீழ்ச்சியையும் இந்திரனின் வெற்றியையும் முழுமையாக வாசிக்க கிராதம் பகுதி 5 மாகேந்திரம் (35 முதல் 46 வரை)) வாசிக்கவும்)

அவன் மீண்டும் படிகளுக்கு வந்தபோது அங்கே இந்திராணி நின்றிருந்தாள். “வணங்குகிறேன், தேவி” என்றான்.

“என்ன சொல்கிறார்? காமம் நிறையவில்லையா அவருக்கு?” என்றாள். “ஆம், அவர் விழித்தெழ விழையவில்லை” என்றான். “அவர் விழித்தெழவேண்டும்… நான் சொல்லிச்சொல்லி சோர்ந்துவிட்டேன்” என்றாள் இந்திராணி. “கண்ணறிய மாறிக்கொண்டிருக்கிறது காலம். காலத்தில் பிந்தியவன் கணம்தோறும் தன்னை இழந்துகொண்டிருக்கிறான். வேந்தர் எண்ணி வாழும் அவ்வுலகம் இன்றில்லை. விழுந்துகிடக்கும் இனிய சேற்றிலிருந்து ஒருகணம் வெளிவந்து நோக்கும்படி சொல்லுங்கள்.” இந்திராணி அவனை அழைத்துக்கொண்டு விருத்திரனை அணுகினாள். “படைத்தலைவர் சொல்லையும் அமைச்சர் சொல்லையும் ஒற்றர் சொல்லையும் மறந்த அரசன் பகைவர் சொல்லை கேட்பான் என்பார்கள். இனி பொறுக்கமுடியாது. எழுக!” என்றாள்.


. அரண்மனையின் அகத்தளத்தை அடைந்ததும் “என் நகரும் வீழுமா? என் கொடியும் சரியுமா?” என்று தனக்குத்தானே என கேட்டான். “நான் தோற்கலாகுமா?” கௌமாரன் “அரசே, இன்னமும் நம் கோட்டைகளில் ஒன்று எஞ்சியுள்ளது. ஒன்று எஞ்சுவதுவரை நம்பிக்கை நீள்கிறது என்றே பொருள். நம் படைகள் எழும்படி ஆணையிடுக! வென்று பகை முடிப்போம்” என்றான்.

ஆம், நாம் எழவேண்டிய நேரம். ஆனால் என் உள்ளமும் உடலும் களைத்திருக்கின்றன. சற்று மது அருந்தி இளைப்பாறாது இங்கிருந்து என்னால் எழமுடியாது” என்றபின் இருக்கையில் சரிந்து அருகணைந்து நின்ற சேடியரிடம் மதுக்கோப்பைகள் வருவதற்கு கையசைத்தான் விருத்திரன். அவர்கள் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒன்றன்மேல் ஒன்றென அருந்தினான். எரிதீயை நீர்விட்டு அணைப்பதுபோல. விடாய்கொண்டிருப்பது அவனல்ல, அவன் உயிர் என கௌமாரன் நினைத்தான்.


“நீ அஞ்சவேண்டியதில்லை தேவி, என்னை வெல்ல எவராலும் இயலாது” என்றான் விருத்திரன். “எனக்கு எந்தை அளித்த நற்சொல் துணையிருக்கும். இந்திரனின் மின்படை ஒரு மென்மலரென என் தோளில் வந்துவிழுவதை நீ காண்பாய்.”

இந்திராணி அவன் தோளைப்பிடித்து உலுக்கி “பித்தன்போல பேசவேண்டாம். இனி உங்களுக்கு நேரமில்லை. இதோ நகரெங்கும் தேவர்கள் தாக்கப்படும் ஓசை கேட்கிறது” என்றாள். “இன்னொரு கலம் மது. இறுதிக் கலம் எனக்கென எதை வைத்திருக்கிறதென்று ஆவல்கொள்கிறேன். அதன்பின் நான் என் படைக்கலங்களுடன் எழுவேன்” என்றான் விருத்திரன்
===

பரிமேலழகர் உரை
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று. 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - யாம் இன்று இளைமையாயிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக; மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.

இறத்தலாவது உடம்பினின்றும் உயிர் நீங்குதல். உயிர் நீங்கிய உடம்பு அழியவும் அதனாற் செய்யப்பட்ட அறம் அதனோடழியாது உயிரோடொன்றி நின்று உதவுவதால், பொன்றாத்துணையாயிற்று. நிலையாத உடம்பு நிலையும் பொழுதே நிலைக்கும் பயனைப் பெற்றுக் கொள்க என்பது ஆசிரியரின் அன்பார்ந்த அறிவுரை.

பொருள்: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க‡இறக்கும் ஞான்று செய்வாம் கருதாது (இற்றை ஞான்றே ஒவ்வொருவரும்) நல் வினையைச் செய்க ; பொன்றுங்கால் அது பொன்றா(த) துணை‡ (அவர்) இறக்குங்காலத்தில் அஃது இறவாமல் (அவருயிருடன்) செல்லும் துணையாம்.

அகலம்: ‘பொன்றுங்கால்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான். அன்று என்பதற்கு இறக்கும் ஞான்று என்று பொருள் உரைக்கப்பட்டது. ஞான்று ‡ நாள். அறிதல் என்பது ஈண்டுச் செய்தல் என்னும் பொருட்டு, உரை காண்டல் என்பது உரை செய்தல் என்னும் பொருட்டாதற் போல. ‘மற்று’ அசை. ‘தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற், றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை‡ யாங்குத்தாம், போற்றிப் புனைந்த வுடம்பும் பயமின்றே, கூற்றங்கொண்டோடும் பொழுது.’ ‡ நாலடியார்.

கருத்து: அறமே உயிர்க்கு உற்ற துணையாகலான், அதனை இன்று முதலே செய்க.

மு.வ உரை
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இன்றைய நற்பணியே  நாளைய நற்பெயர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Do not procrastinate your duty thinking that you will do it tomorrow or some other day. Do your duties on time as you do not know what will happen later. If you consistently do your duties on time, your efforts will protect you like a pillar and you will not regret it.

Questions that I ask to the kid
What will protect you?
How should you do your work? (without procrastinating (and also consistently).
How will do your work on time will protect you ?

No comments:

Post a Comment