குறள் 475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]
பொருள்
பீலி - மயில்தோகை; மயில்; சிற்றாலவட்டம்; வெண்குடை; பொன்; மகளிரிடும்கால்விரலணி; சிறுசின்னம்; வாத்தியப்பொது; பெருஞ்சவளம்; மலை; மதில்; நத்தைஓடு; பனங்குருத்து; நீர்பாய்தொட்டி; பந்தயமுறி.
சாகாடு - வண்டி; வணடியுருளை; உரோகிணிநாள்
சாகாடு - வண்டி; வணடியுருளை; உரோகிணிநாள்
அச்சு - வண்டியின் அச்சாணி ; அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம்
பண்டம் - பொருள்; பாண்டம்முதலியன; தின்பண்டம்; பயன்; பொன்; நிதி; ஆடுமாடுகள்; வயிறு; உடல்; உண்மை; பழம்.
சால - மிகவும்
மிகுத்துப் - மிகு-த்தல் - miku- 11 v. tr. Caus. ofமிகு¹-. [K. migisu.] 1. To augment, makelarge; அதிகப்படுத்துதல். சால மிகுத்துப் பெயின்(குறள், 475). 2. To excel, surpass; விஞ்சுதல்.3. To increase; பெருக்குதல். 4. To regard withpride; பெருமையாகக் கருதுதல். இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் (புறநா. 77, உரை). 5.See மிகுத்து-.
பெயின் - பெய்தல் - மேல்நின்றுபொழிதல்; வார்த்தல்; இடுதல்; எறிந்துபோடுதல்; இடைச்செருகுதல்; கொடுத்தல்; அமைத்தல்; பரப்புதல்; புகலிடுதல்; எழுதுதல்; அணிதல்; பயன்படுத்தல்; கட்டுதல்; சிறுநீர்முதலியனஒழுகவிடுதல்; தூவுதல்; பங்கிடுதல்; செறித்தல்.
முழுப்பொருள்
மயிலிறகு என்பது மிகவும் எடை குறைவான பொருள் தான். இது என்ன செய்து விட போகின்றது என்று, அதை வண்டியின் மேல் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சாணி முறிந்து விடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதனால் மயிலிறகு என்பதனால் அதனை குறைத்து இடைப்போடக்கூடாது.
இனிமையான ஒன்று தானே அல்லது சுலபான ஒன்று தானே, என்று நாம் எதிலும் அளவுக்கு அதிகமாக லயித்து விட கூடாது. அது நம்மை வீழ்த்தும் அளவிற்கு வலிமையானதாக மாறக் கூடும், என்பதற்கு ஒப்புமையாக இக்குறளை கருதலாம் .
இதனை உடல் ஆரோக்கியம், உறவுகள் என்று பலவற்றிற்கு பொருத்தி பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் நல்ல ஒரு தொழில்நுட்பம். ஆனால் அதில் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவு செய்தால் நாம் வாழ்வில் பெரும் பகுதியை வீண் அடிக்கிறோம். அது நமது வேலையை, உறவை பாதிக்கும் ஏனெனில் நமக்கு கவனச்சிதறல், தூக்கமின்மை, மனச்சோர்வு, (Facebook / Instagram இருப்பதை கண்டு பிறருடன் தொடர்ந்து ஓப்பிட்டுப்பார்ததால்) மனநிறைவின்மை போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்.
உதாரணமாக 1) சொன்னால் புற்றுநோய் (Cancer) போன்ற நோய்கள் ஒரு பெரிய கதிர்வீச்சால் வருவதைக்காட்டிலும் ஒரு சிறிய அளவு கதிர்வீச்சினை பல ஆண்டுகாலம் உடம்பில் பெற்றதால் வர வாய்ப்புகள் அதிகம். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபின்பு அந்த அணுகுண்டு தாக்குதலால் புற்றுநோய் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவே. ஆனால் பல இடங்களில் மெல்லிய கதிர்வீச்சுகளால் புற்றுநோய் பெற்றவர்கள் மிக அதிகம். இது கதிர்வீச்சு என்று அல்ல ஒரு சிறிய கெட்டப் பழக்கம் பல ஆண்டுகாலம் செய்தால் அதனுடைய தீவினை நம்மை அழிக்கும்.
உதாரணமாக 2) நீங்களும் உங்கள் நண்பர் ஒருவரும் எப்பொழுதும் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொள்வது வழக்கம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு நாள் அப்படி ஏதோ ஒன்று சொல்லி அவரைக் கிண்டல் செய்கிறீர்கள். அவருக்கு உடனே சர்ரென்று கோபம் வந்து விடுகிறது. உங்களைக் கன்னா பின்னாவென்று திட்டி விடுகிறார்.
நீங்கள் யோசிக்கிறீர்கள், “நாம் எப்போதும் இப்படித் தானே பேசிக் கொள்வோம்? இன்று என்ன ஆயிற்று? அதுவும் இன்று நாம் ஒன்றும் பெரியதாகவே சொல்லவில்லையே? இதைவிட மோசமாகச் சில நாள் பேசிருக்கிறோமே?” அன்று அது அளவை மீறிப் போய் விட்டது. அன்று பேசியது மட்டும் காரணமல்ல.
இதுநாள் வரை பேசியதெல்லாம் சேர்ந்து அவர் மனதைக் காயப்படுத்தி விட்டது!இதுநாள் வரை நட்பை வளர்ப்பதற்கு உபயோகமாக இருந்த அந்தக் கிண்டல் இன்று நட்பை முறிக்கும் அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது. அந்த அளவு எப்போது மீறுகிறது அல்லது மீறப்படுகிறது என்பது நாம் உன்னிப்பாகக் கவனிக்காவிட்டால் தெரியாது.
அந்த நிலையை அல்லது எல்லையை நாம் ஒரு விளிம்பு என்றோ, வரையரை என்றோ, உடையுநிலை (Breaking point) என்றோ குறிப்பிடலாம்.
இது கணவன் மனைவி உறவு, சகோதரர்கள் உறவு என்று எல்லாவற்றிலும் பொருந்தும். நாம் மற்றொருவரை தொடர்ந்து மட்டம் தட்டினாலோ அல்லது குறைக் கண்டுபிடித்துக்கொண்டு சதா சர்வகாலமும் சொல்லிக்கொண்டு இருந்தாலோ அது அக்கறையின்பால் இருப்பினும் அது பிறருக்கு எரிச்சலை உண்டாக்கும். ஒரு கட்டத்தில் எதிராளி கத்துவார். உறவில் விரிசல் விழும்.
அலுவகத்தில், நம்மை நமது மேலாளரோ அல்லது குழுத் தலைவரோ நம்மை நுண் மேலாண்மை செய்தால் (micro-management) நமக்கு எரிச்சல் வரும். ஏனெனில் அளவுக்கு மிஞ்சிய எதுவும் நல்லதுக்கு அல்ல. அது ஆக்கத்திற்கு வழி வகுக்காது. கண்டிப்பாக செயலூக்கம் /effective/ productive-ஆக இருக்காது. நாம் எல்லோரும் அதுப்போல் சிலரை பல இடங்களில் காணலாம்.
கடந்த குறளுக்கு மேற்கோளாகக் காட்டப்பட்ட பழமொழி நானூறுபாடலின் முழுவடிவம் இங்கே! முதல் இரண்டு வரிகள் சென்ற குறளுக்குப் பொருந்தியதைப்போல, இறுதி இரண்டு அடிகள் இக்குறளுக்குப் பொருந்தி வருகின்றன.
ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல்.
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல்.
சூழ்ந்த பகைவர் வீரத்தில் நன்றிலாராயினும், அவர்கள் பலராயிருப்பதைவிட வலிமையொன்றும் இல்லை என்று சொல்லும் இப்பாடலின் வரிகள், இக்குறளின் கருத்தை ஒட்டியதே.
அல்லது பரிமேலழகர் கூறுவது போல். பகைவரின் வலிமை குறித்து குறைவாக இடை போட கூடாது என்பதற்கு ஒப்புமையாகவும் கருதலாம்.
எதிரி நாட்டுப்படையினர் தனி நபர் பலத்தில் குறைவாக இருப்பினும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால், அந்த எண்ணிக்கையே மிகுந்த பலத்தை தரும். அதனால் தான் என்னவோ உலக நாடுகள் இந்தியா, சீனா போன்ற நாடுகளை தேவையில்லாமல் பகைத்துக்கொள்வதில்லை. இன்று வளர்ந்துவரும் நாடு என்றாலும், தங்களின் மக்கள் தொகை பலத்தாலும் மன உந்துதலாம் காலப்போக்கில் மிக விரைவாக இன்னும் சில காலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இனையாக இந்தியா சீனா ஆகிய நாடுகள் வளர்ந்துவிட வாய்ப்புகள் பிரகாசாமக உள்ளன எனலாம்.
பரிமேலழகர் உரை
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின். (உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
இக்குறளின் பொருளை ஒற்று வரும் வேறு சில பலமொழிகள்
1. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு .
2. சிறு துளி பேரு வெள்ளம்.
மணக்குடவர் உரை
பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
சாலமன் பாப்பையா உரை
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
Thirukkural - Management - Managing Stress - Stress Tolerance
Everyone has a limited capacity to withstand stressful events. That capacity is called the threshold limit. Even a small amount of pressure beyond the withstanding capacity of a person will break him. Valluvar compares, in Kural 475, stress in people to the weight bearing capacity a vehicle.
A peacock’s feather can break the axle-tree
Of an over-loaded cart.
If a vehicle is loaded just with peacock feathers, any excess weight will break the axle of that vehicle. So, even small things in repeated doses create stress and break the person. Stress is the result of accumulation of little things over a long period. Those little things will becomea big thing one day and will break you. Lead a life of balance or moderation.
Anything excess, both positive and negative, is dangerous.
Very Apt Kural for todays situation Thanks for the nice explanations
ReplyDelete