Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_130. Show all posts
Showing posts with label Athikaaram_130. Show all posts

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

 

குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்] 

பொருள்
தஞ்சம் - எளிது; தாழ்வு; எளிமை; பற்றுக்கோடு; அடைக்கலப்பொருள்; உறுதி; பெருமை.

தமர்  - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.)

நெஞ்சம் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

தமர்  - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

அல்வழி - நெறிஅல்லாதநெறி; தகாதவழி; அல்வழிப்புணர்ச்சி

முழுப்பொருள்
என்னுடைய நெஞ்சமே நெறிக்குப்புறம்பாக எனக்கு அணுக்கமாக இல்லை. அப்படி இருக்கையில் நான் விரும்புவர் என்னுடன் பற்றுடன் இருக்கவேண்டியவர் எப்படி அணுக்கமாக இருப்பார்? 

ஆதலால், என் நெஞ்சமே எனக்கு அணுக்கமாக இல்லாத பொழுது என் தலைவர் அந்நியரைப்போல் எனக்கு அணுக்கமாக இல்லாமல் இருப்பதை எளிதாக உணர்ந்துக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?.

மு.வரதராசனார் உரை
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

 

குறள் 1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்] 

பொருள்
துன்பத்திற்கு - துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

யாரே - யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

ஆவார் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.)

நெஞ்சம் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

அல்வழி - நெறிஅல்லாதநெறி; தகாதவழி; அல்வழிப்புணர்ச்சி

முழுப்பொருள்
தலைவனை விரும்புவதற்கு தலைவியின் நெஞ்சமே காரணம். அப்பொழுது நெஞ்சம் துணைப்புரிந்தது. இப்பொழுது தலைவனை பிரிந்துள்ள பொழுது பிரிவாற்றாமை தரும் துன்பத்திற்கு ஆறுதலாக துணையாக இருக்கவேண்டியது (காதலுக்கு துணைப்புரிந்த) நெஞ்சம். ஆனால் இந்நெஞ்சோ பிரிந்து சென்ற தலைவனை நினைத்துக்கொண்டு இருக்கிறது. 

அதனால் தலைவி கேட்கிறாள், (இன்பத்தில் துணையாக இருந்த) நெஞ்சே!!, இப்பொழுது துன்பத்தில் துணையாக இருக்கவேண்டிய நீயே துணையாக இல்லாவிட்டால் வேறு யார் வந்து எனக்கு துணையாக இருப்பார்கள்? என் துணைக்கு வழி என்ன? சொல் நெஞ்சமே சொல். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை (ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம்.).

மணக்குடவர் உரை
துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ? தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து. இது தலைமகள் துணையாவார் யாரென்ற தோழிக்குக் கூறியது

மு.வரதராசனார் உரை
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?.

சாலமன் பாப்பையா உரை
ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

 

குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்] 

பொருள்
நாணும் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

மறந்தேன் - மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

அல்லா - வருத்தம்; மகமதியர்வழிபடும்கடவுளின்பெயர்.

மறக்கல்லா  -  மறக்க முடியாமல்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மாணார் - மாட்சிமையற்ற பகைவர்.

மாணா - மாட்சியற்று, பகை

மட - மடமை - பேதைமை

நெஞ்சின் -நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

பட்டு - பட்டாடை; பட்டுப்பூச்சியால்உண்டாகும்நூல்; கோணிப்பட்டை; சிற்றூர்; இருந்தேத்தும்மாகதர்; கட்டியம்; கள்ளிவகை.

முழுப்பொருள்
மறக்கக்கூடாத பெண்ணின் நாற்பண்புகளில் ஒன்றான நாணத்தையும் மறந்துவிட்டேன். எதனால்? என்னுடைய மாட்சிமையற்ற பேதை நெஞ்சினால். எப்படி? தலைவனின் பிரிவினால்  அவரை மறக்காமல் வாடிக்கொண்டு இருப்பது என்னவோ நானும் என் நெஞ்சுமும். ஆனால் தலைவனை கண்ட மாத்திரத்தில் என் பேதை நெஞ்சு அடக்கமற்று மன உறுதியற்று அவரை தழுவ என்னை அவருடன் கூட வைத்தது. நாணத்தை மறந்து அவருடன் ஊடாமல் கூடினேன் என்று கூறுகிறாள் தலைவி. 

தலைவனை கண்ட உடன் கூட நினைத்ததால் அவள் நெஞ்சு மாட்சிமையற்றது எனவும், அடக்கமற்றும் மன உறுதியற்றும் கண்ட உடனே கூடியதால் நாணம் மறந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். (மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.) .

மணக்குடவர் உரை
என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

சாலமன் பாப்பையா உரை
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

குறள் 1295
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்] 

பொருள்
பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

அமை - மைவு; அழகு தினவு மூங்கில் நாணல் அமாவாசை சந்திரனுடையபதினாறாங்கலை.

பெறாஅமை - காதலந்தன் கலவியைப் பெறாததற்கு 

அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்

அறாஅ - அகலாத

இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.

இடும்பைத்து -  துன்பத்தை தன்னிடம் உடைத்து

என் - என்னுடைய - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு -  மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
தலைவி இப்படி நினைக்கிறாள், பிரிந்து சென்ற காதலரின் அன்பை பெறமுடியாமல் இருப்பதை எண்ணி அல்லது அவர் மறுபடியும் வந்து சேரமாட்டாரா என்று எண்ணி ல்லது அவர் இல்லாத தனிமையை என்று எண்ணி என்(/தலைவியின்) நெஞ்சம் அஞ்சுகிறது. அதுப்போல தலைவன் வந்துவிட்டாலும் எங்கே அவன் மறுபடியும் பிரிந்து சென்றுவிடுவானா (ஏனெனில் பிரிந்து சென்றவன் தானே) என்று என் நெஞ்சம் அஞ்சுகிறது. ஆக மொத்தம் தன் நெஞ்சம் எப்பொழுதும் நீங்காத துன்பத்தை பெற்றுள்ளதாக எண்ணிப் (நெஞ்சைப்பற்றி நெஞ்சுடனே) புலம்புகிறாள் தலைவி. 

அதற்கு ஒரே தீர்வு தலைவன் தலைவியை பிரிந்து செல்லமாட்டான் என்ற உத்திரவாதம் மட்டுமே என்று சொல்லாமல் சொல்கிறாள் தலைவி (திருவள்ளுவர் மூலம்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சம் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும் , 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.).
 
மணக்குடவர் உரை
காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு. இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

சாலமன் பாப்பையா உரை
என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

குறள் 1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
இனி - இப்பொழுது; இனிமேல் பின்பு இப்பால் இதுமுதல்

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

நின் - உனது

நின்னொடு - உன்னோடு

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

சூழ்வார் - சூழ்வோர் - அமைச்சர்; உறவினர்; சூழ்ந்துநிற்பவர்.

யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி

நெஞ்சே! - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

துவ்வு-தல் - tuvvu-   perh. 5 v. து-.tr. To eat, enjoy; நுகர்தல் (திவா.) துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12).--intr. Tobe strong; வலியுறுதல். ஆன்ற துணையிலன் றான்றுவ்வான் (குறள், 862).

துவ்வாய் - நுகரமாட்டாய்

காண் - காட்சி; அழகு; காணுதல்; முன்னிலையில்வரும்ஒர்உரையசை.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்று இருக்கிறான். அப்பொழுது பல நேரங்களில் நெஞ்சிடம் புலம்பும் பொழுது சொல்கிறாள் "அவர் திரும்பிவந்தால் எல்லாவற்றையும மறந்து உடனே கூட மாட்டேன். அவருடன் ஊடல் புரிந்து அவர் செய்த (பிரிவெனும்) தவறை நான் பட்ட (பிரிவால்) துன்பத்தை அவருக்கு விளக்குவேன். அவர் அதை உணர்ந்து என்னைவிட்டு பிரியமாட்டேன் என்று கருதவேண்டும்". இது எல்லாவற்றிற்கும் "ஆம்", "ஆம்" என்று கூறி கேட்டது அவள் நெஞ்சம்.

ஆனால் தலைவன் வந்த பிறகு, அவள் முன்பு பேசியதற்கு மாறாக, அவள் நெஞ்சம் பிரிவின் துன்பத்தையெல்லாம் மறந்து அவருடன் இன்பத்தை நுகர உடனே சென்றுவிட்டது. ஆதலால் நெஞ்சத்திடம் கூறுகிறாள் "இனி உன்னிடம் முன்புபோல் வந்து புலம்ப மாட்டேன் ஏனெனில் நீ நான் சொன்ன எதையும் செய்யவில்லை என்னையும் செய்யவிடவில்லை". ஊடலுக்கு எதிரான விழைவை எனக்கு தந்து உடனே கூட வழி செய்துவிட்டாய். தன்னுடைய தவறுகளை நெஞ்சத்தின் மேல் கடத்துகிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள். 'காண' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.

மு.வரதராசனார் உரை
நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

குறள் 1293
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
கெட்டார்க்கு - அழிந்தார், வறுமையடைந்தார், பாழானார்,

நட்டார் - நண்பர்; உறவினர்.

இல் - இல்லை

என்பதோ - என்பதோ

நெஞ்சே - நெஞ்சமே

நீ - நீ

பெட்டு - பொய்; மயக்குச்சொல்; சிறப்பு; மதிப்பு.

ஆங்கு  - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

செலல் - செல்லுகை.

முழுப்பொருள்
அழிந்துக்கொண்டிருப்போர்க்கு நண்பர்களும் உறவினர்களும் இல்லை என்பதை நீ அறிந்தாயோ நெஞ்சமே. அதனால் தான் என்னை பிரிவில் ஆழ்த்திவிட்டு சென்று அங்கு வருந்தி அழித்துக்கொண்டு இருக்கும் தலைவனை மதித்து அவர் பின்புச் செல்கிறாயே மனமே ? என்று தன் நெஞ்சை வினவுகிறாள் தலைவி.

தலைவிக்கு தலைவன் மேல் கோபம். இருந்தாலும் அவள் தலைவனையே நினைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் தன் நெஞ்சம்தான் அவரை நினைக்கிறது என்று பொய்யாக கூறிக்கொண்டு நெஞ்சத்திடம் புலம்புகிறாள். தான் எப்படி பிரிந்து வாடுகிறோமோ அதுப்போல் தலைவனும் பிரிவால் வாடுகிறான் என்று தலைவி நினைக்கிறாள்.

அகநானூற்று வரிகள் (71:1-3), 
“குறைந்தோர் 
பயனின்மையிற் பற்றுவிட் டொரூஉம் 
நயனின் மாக்கள் போல்” என்று கூறுவதும், 

வளையாபதி வரிகள், 
“விழுமிய ரேனும் வெறுக்க யுலந்தாற் 
பழுமரம் வீழ்ந்த பறவையிற் போல்” என்று கூறுவதும், கெட்டார்க்கு நண்பர்கள் இல்லை என்பதைதான்.

செல்வத்துட் சேந்தவர் வளனுண்டு மற்றவர்
ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் தொடர்பு” (கலித் 25:19-20)

(ஒப்புமை பார்க்க)

(ஒப்புமை பார்க்க)

(ஒப்புமை பார்க்க)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக. ('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?.

உறாஅ தவர்க்கண்ட கண்ணும்

குறள் 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
உறாஅ  - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

உறாஅதவர்க் - பணத்துக்காக வேண்டி பிரிந்து சென்றவரை

கண்ட - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அவரைச் - அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

செற்றல் - ceṟṟl   v. noun. Hating, detesting, வெறுப்பு. 2. Killing, கொல்லல். 3. Narrow ing, நெருக்கல்; [ex செற்று, v.] (p.)

செறாஅர் - வெறுக்க மாட்டார்

எனச் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

சேறி - செல்கிறது

என் - என்னுடைய

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
தன்னை விட பணம் முக்கியம் என்று எண்ணி தன்னை பிரிந்து சென்ற காதலனை பற்றிய உண்மை அறிந்துள்ளது என் உள்ளம். காதலனுக்கு நம்மிடத்தில் அன்பு இல்லை என்று அறிந்த பின்னும் அவரை காண செல்கிறது என் நெஞ்சு ஏனெனில் காதலர் அவர் என்னை வெறுக்கமாட்டார் என்று நினைக்கிறது என் நெஞ்சம். காதலன் தன்னை வெறுக்கக்கூடாது என்பதை சொல்லாமல் சொல்லும் குறள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ? ('அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய். இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது

மு.வரதராசனார் உரை
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!.

எள்ளின் இளிவாம்என்று எண்ணி

குறள் 1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
'எள்ளின் - எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

இளி- இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு

வாம் - தமக்கே

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு, பசு, எருமை கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

உள்ளும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உயிர்க் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
பிரிந்துச்சென்று உள்ள காதலர் மீது காதலிக்கு கோபம் உள்ளது. பிரிவு தரும் காமந்நோயை எனக்கு தந்த காதலனை நான் இகழலாம். ஆனால் அவரை ( பொதுவாக பிறரைக் கூட) இகழ்ந்துப் பேசுதல் இழிவான செயல் என்று நான் நினைப்பதால் அவரை நான் இகழவில்லை. மாறாக அவரின் சிறந்த பண்புகள், குணங்கள், மேன்மைகள் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து (உள்ளும்), ஆராய்ந்து கொண்டு இருக்கிறது எங்கள் உயிரோட்டமான காதலை அன்பினை கொண்ட என்னுடைய நெஞ்சம்.

காதலன் மேல் கொண்ட அன்பினால் காதலனை எந்த ஒரு காரணத்திற்காகவும் தவறாக நினைக்க கூடாது, எதிர்மரையான சிந்தனைகள் தன்னில் வேர் ஊன்ற விடக்கூடாது என்று காதலி நினைக்கிறாள். காதல் வளர்ந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். அதுவே காதலின் சிறப்பு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது. (எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு?. இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

தனியே இருந்து நினைத்தக்கால்

குறள் 1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 
தினிய இருந்ததென் நெஞ்சு.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
தனியே - தன்னந்தனியே - taṉṉantaṉiyē   adv. quite alone
தனி - ஒற்றை; தனிமை; ஒப்பின்மை; உரிமை; கலப்பின்மை; உதவியின்மை; சீட்டாட்டத்தில்ஒருவனேஎல்லாச்சீட்டையும்பிடிக்கை; தேர்நெம்புந்தடி.
தனி-த்தல் - taṉi-   11 v. intr. தனி¹. 1.To be alone, single, solitary; ஒன்றியாதல்.(W.) 2. To be separate, detached from company; ஏகாந்தமாதமல். தனித்தே யொழிய (கலித். 114).3. To have no equal or match; நிகரற்றிருத்தல்.4. To be deserted, forsaken, helpless, as by thedeparture or death of friends; உதவியற்றிருத்தல்.(W.)

இருந்து - இருந்துக்கொண்டு

நினைத்தக்கால் - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

என்னைத் - என்னை

தினிய - தின்றுக்கொன்று இருக்கிறது
தினிசு - tiṉicu   தினுசு, தினுசவாரி, s. kind, sort, வகை. தீ தீ , s. fire, நெருப்பு; 2. the elementary principle of fire; 3. hell, நரகம்.

இருந்தது- இருக்கிறது
என் - என்னுடைய
நெஞ்சு - நெஞ்சம்,மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
நான் எனது தலையாய காதலுக்கு பாத்திரமானவர் (பாத்திரமானவள்) உடன் இல்லாத பொழுது (பிரிவால ஏற்பட்ட தனிமை) தனியே வாடுகிறேன். அப்பொழுது அவருடன் (அவளுடன்) சேர்ந்து இருந்த பொழுதுகளை நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சம் என்னை தின்றுவிடுகிறது. அவரது நினைவுகள் என்னை கொல்கிறது. நினைவு என்னும் கோல் புண்களில் பட்டு ரணமாய் வலிக்கிறது.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
தனியே இருந்து நினைத்தக்கால்-காதலரைப் பிரிந்திருந்து அவர் செய்த கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால் ; என்னைத் தினிய என் நெஞ்சு இருந்தது-என்னைப் பிய்த்துத் தின்பதுபோல் துன்பஞ் செய்தற்கே என்உள்ளம் என்னொடுகூட இருந்தது.

என் நெஞ்சு என்னோடிருந்தது.அவர் செய்த கொடுமைகளை எண்ணி எனக்கு ஆற்றாமைமேலுந் துன்பஞ் செய்தற்கேயன்றி , இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன் றென்பதாம்.

மணக்குடவர் உரை
என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது. இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

சாலமன் பாப்பையா உரை
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

அவர்நெஞ்சு அவர்க்காதல்

குறள் 1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

அவர்நெஞ்சு -> அவருடைய நெஞ்சு / மனம்.

அவருக்கு - 
அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.

ஆதல் - ஆவதுஎனப் பொருள் படும் இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

அவர்க்காதல்  -> அவருக்கு ஆதல் -> அவருக்கு உடம்படுதல் -> அவர் சொன்னப்படி கேட்கிறது. அதாவது நம்மை நினைக்காது.

கண்டும்  - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

கண்டும்  -> பார்த்தும்.

எவன் -
யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

எவன்நெஞ்சே -> ஆனால் எதற்கு நெஞ்சே ?

நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.
எமக்கு - எனக்கு
நீஎமக்கு  -> நீ எனக்கு.

ஆகுதல் - ஆதல்

ஆகாது - அல்ல ; நிகழாது; முடியாது; அமையாது; 

ஆகா தது -> ஒத்துழைக்கவில்லை.


முழுப்பொருள்
தலைமகள் தன் நெஞ்சிடம் புலம்புகிறாள்:

அவர் என்னை நினைக்கவில்லை. அவர் என்னை காண வரவில்லை. அவர் சொன்னபடி அவர் நெஞ்சு கேட்கிறது. அதைப் பார்த்துமா நீ அவரை நினைத்துக்கொண்டு இருக்கிறாய். ஒருவர் தானாக அறிந்து செயல்பட வேண்டும். அப்படி செயல் பட வில்லை என்றாலும் குறைந்தது அடுத்தவர் செய்வதை பார்த்தாவது செய்ய வேண்டும். நீ அதையும் செய்யவில்லை. அவரை நினைத்து நான் எவ்வளவு துன்பப்படுகிறேன். ஆனால் நீ என்னோடு இல்லாமல் அவரை நினக்கிறாய். ஏன் நெஞ்சே இப்படி செய்கிறாய் ? - என்று அவருக்காகக் காத்திருக்கும் பொழுது தன் நெஞ்சுடன் செல்லக் கோபம் கொள்கிறாள்.

இங்கு நாம் மற்றொன்றையும் நோக்க வேண்டும். ஒரு பெண் தன் தலைவன் அவளை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவளை காண வர வேண்டும் என்று எப்போதும் விரும்புவாள். அது தான் ஒரு பெண்-இன் நெஞ்சமாகும்.

(அதனால, மனைவி (காதலி) போன் செய்யனும். அவுங்க நீங்க என்ன பத்தி அக்கரையே படலனு சொன்னா கோவம் கொள்ள கூடாது - இது இந்த பதிவாசிரியரின் சொந்த சரக்கு)

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
மாற்றிக் கொள்ள நினைந்தானா அவன் தன் நெஞ்சை
   மயக்குகின்ற வேலை மட்டும் செய்த மகன்
ஆற்றிக்  கொள்ள வழியின்றி அவன் நினைவில்
   அரற்றுவதும் பிதற்றுவதும்  மீண்டும் மீண்டும்
தேற்றுதற்கு ஆளின்றித் தவிப்பதுவும்
   தினம் வேண்டாம் சொல்வதை நீ கேட்பாய் நெஞ்சே
மாற்றமின்றி என்னிடமே இருந்திடு    நீ அவன்
   மயக்கு நெஞ்சு அவனிடத்தே இருந்தால்  போல

ஒப்புமை
”புலப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
கலப்பென் என்னுகிக் கையறு நெஞ்சே” (கலி 67:8-9)

“ஊடுவென் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
கூடுவென் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே” (கலி 12-3)

“துனிப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
தனித்தே தாழும் இத் தனியில் நெஞ்சே” (கலி 16-7)

“நிற்காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னும் தம்மோ
டுடன் வாழ் பகையுடை யார்க்கு”  (கலி 77:22-4)

பரிமேலழகர் உரை
[அஃதாவது , காரணம் உண்டாய வழியும் புலக்கக் கருதாது , புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும் ,தலைமகன் புலத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?. இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?.