குறள் 1295
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]
பொருள்
பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
அமை - மைவு; அழகு தினவு மூங்கில் நாணல் அமாவாசை சந்திரனுடையபதினாறாங்கலை.
பெறாஅமை - காதலந்தன் கலவியைப் பெறாததற்கு
அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.
அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்
அறாஅ - அகலாத
இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.
இடும்பைத்து - துன்பத்தை தன்னிடம் உடைத்து
என் - என்னுடைய - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
முழுப்பொருள்
தலைவி இப்படி நினைக்கிறாள், பிரிந்து சென்ற காதலரின் அன்பை பெறமுடியாமல் இருப்பதை எண்ணி அல்லது அவர் மறுபடியும் வந்து சேரமாட்டாரா என்று எண்ணி ல்லது அவர் இல்லாத தனிமையை என்று எண்ணி என்(/தலைவியின்) நெஞ்சம் அஞ்சுகிறது. அதுப்போல தலைவன் வந்துவிட்டாலும் எங்கே அவன் மறுபடியும் பிரிந்து சென்றுவிடுவானா (ஏனெனில் பிரிந்து சென்றவன் தானே) என்று என் நெஞ்சம் அஞ்சுகிறது. ஆக மொத்தம் தன் நெஞ்சம் எப்பொழுதும் நீங்காத துன்பத்தை பெற்றுள்ளதாக எண்ணிப் (நெஞ்சைப்பற்றி நெஞ்சுடனே) புலம்புகிறாள் தலைவி.
அதற்கு ஒரே தீர்வு தலைவன் தலைவியை பிரிந்து செல்லமாட்டான் என்ற உத்திரவாதம் மட்டுமே என்று சொல்லாமல் சொல்கிறாள் தலைவி (திருவள்ளுவர் மூலம்)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சம் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும் , 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.).
மணக்குடவர் உரை
காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு. இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.
மு.வரதராசனார் உரை
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
சாலமன் பாப்பையா உரை
என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.
No comments:
Post a Comment