குறள் 1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]
பொருள்
இமைப்பின் - இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல்
கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.
கரப்பாக்கு - தெரியாமல் மறைந்துவிடுவார் (கண்ணில் இமைக்கும் நேரத்துக்கு)
அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
அறிவல் - என்று நான் அறிவேன்
அனைத்தும் - எல்லாம்
அனைத்திற்கே - ஆனால் அதற்கே
ஏதிலர் - அயலார்; பகைவர்; பரத்தையர்; அன்பில்லா என் காதலர்
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
இவ் - இந்த
ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.
முழுப்பொருள்
காதலி கூறுகிறாள், என் காதலனை என் கண்களில் வைத்துள்ளேன். ஆனால் நான் கண் இமைத்தால் அவர் என் கண்களின் உள்ளே எங்காவது மறைந்துக்கொள்ளக்கூடும். அப்படி அவர் மறைந்துக்கொண்டால் என் காதலர் அன்பில்லாதவராக ஒரு அயலாராக இருக்கிறாரே என்று இவ்வூர் மக்கள் கூறுவர். அவருக்கு எதற்கு அவப்பெயர் உருவாக நான் ஏன் வாய்ப்பு அமைத்துத் தரவேண்டும்? ஆதலால்தான் நான் என் கண்களை இமைக்காமல் இருக்கிறேன். அதற்காக தூங்காமல் இருக்கிறேன் என்று கூறுகிறாள் காதலி. காதலனை கண்ணில் கட்டிவைக்க எப்படியெல்லாம் காதலின் சிறப்பை நயமான காரணமாக கூறுகிறாள் காதலி.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
குறள் 1130
குறள் 1204
”நெஞ்சு களனாக நீயலென்” (குறுந்தொகை 36.3)
“........ நத்துறந்து
நெடுஞ்சேண் நாட்ட ராயினும்
நெஞ்சிற் கணியரோ தண்கடல் நாட்டே” (குறுந்தொகை 228.6)
“அவர் இருந்த என் நெஞ்சே” (குறுந்தொகை 340.7)
”பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத் தகல்வறி யானே” (நற் 388:9-10)
“நொதுமல் சுழுறும் இவ் வழுங்கல் ஊரே” (குறுந் 12:6)
“பொய்க்கும் இவ் வூரே” (ஐங்குறு.154:4)
பரிமேலழகர் உரை
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். (தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.).
மணக்குடவர் உரை
கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன். இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.
மு.வரதராசனார் உரை
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
சாலமன் பாப்பையா உரை
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.
No comments:
Post a Comment