பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

குறள் 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]

பொருள்
பொய்யாமை - பொய்பேசாமை; நடுவுநிலைமை

பொய்யாமை - பொய்பேசாமை; நடுவுநிலைமை

பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111).

பொய்யா - என்றும் தவறாத; என்றும் அணையாத

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

பிற  - மற்றவை; ஓர்அசைச்சொல்.

செய்யாமை - செய்யாதிருத்தல்

செய்யாமை  - செய்யாதிருத்தல்

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்”

பொய் உரைக்காதிருப்பதை (உண்மையை மட்டும் பேசுவது) ஒருவர் ஒருபொழுதும் தவறாது பின்பற்றுபவர் ஆயின் அதுவே அறம்.

பொய்யாமை என்பது நற்பண்பு. ஆனால் அதனை ஒரு அறமாகவே திருவள்ளுவர் கூறுகிறார். 

எல்லா அறத்தையும் பின்பற்றி ஒருவர் பொய் உரைப்பார் ஆயின் அவருக்கு அவர் செய்த அறப்பயன்கள் கிட்டாது.


பிற செய்யாமை செய்யாமை” “
அறம் அல்லாதவற்றை செய்யக்கூடாது

”நன்று"
அப்படி பொய் சொல்லாது இருக்கும் அறத்தை ஆற்றி, அறம் அல்லாதவற்றை செய்யாது இருந்தால் அதுவே நன்மை பயக்கும். அறத்திற்கான பயனை ஒருவர் அனுபவிப்பார். 

நம்மில் பலர் பொய் சொல்வதே இல்லை என்கிறோம். ஆனால் அது உண்மையா? பெரும்பாலும் இல்லை. 1) நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுது அன்று நான் ஊரில் இல்லை அல்லது தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தால் வேறு வேலையாக இருக்கிறேன் என்று சிறு சிறு பொய்கள் சொல்கிறோம் 2) நான் ஒரு வீட்டிற்கு குடிப்புகுந்தேன். அந்த வீட்டில் குளிர்காலத்திற்கான அறையை சூடு செய்யும் வசதி சரியாக வேலை செய்யவில்லை. நீங்கள் ஏன் சொல்லவில்லை என்று என்னிடம் பேசியவரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில், எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு என்று தெரியாது என்றார். அதன் பிறகு பல நேரங்களில் கூறுவார் நான் பொய்யே சொல்ல மாட்டேன். பொய் சொன்னால் எனக்கு தூக்கம் வராது. ஒரு பொய் சொன்னால் நான் பாவமன்னிப்பு கேட்டாலே ஒழிய எனக்கு தூக்கமே வராது என்பார்.  ஒரு வருடம் கழித்து நான் அவ்வீட்டை விட்டு வெளியேரும் பொழுது அவரிடம் கேட்டேன், நீங்கள் இப்பிரச்சனையை சரி செய்து தரவில்லை. குறைந்தது வருவரிடமாவது இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லிவிடுங்கள் என்று. அவர் சொன்னார், வருபவர் கேட்டால் நான் சொல்லிகிறேன். நான் சொன்னேன், நீங்கள் இப்படி மறைப்பது பொய்க்கு சமானம் என்று. அதற்கு அவர், ”அது எப்படி பொய்? நான் எல்லாவற்றையும் சொன்னால் யாரும் இவ்வீட்டிற்கு வரமாட்டார்கள்” என்றார். நான் கூறினேன், தெரிந்தே சொல்லாமல் இருப்பது மட்டும் பொய் அல்ல. தெரிந்து மறைப்பது பொய் தான். நீங்கள் பிரச்சனையை சரி செய்யுங்கள் அல்லது உண்மையை சொல்லிவிடுங்கள். பிறகு அவர் சரி என்று பிரச்சனையை சரி செய்தார். 

நாம் சொல்லும் சிறு சிறு பொய்களும் பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது நமது பிள்ளைகளுக்குத் தவறான முன்னுதாரணமாக இருக்கும். இது போன்ற சின்ன சின்ன பொய்களே பெரிய பொய்கள் சொல்ல பழக்கத்தை கொடுக்கும்.  நம்மை பார்த்து நமது பிள்ளைகள் பொய் சொன்னால் அதற்கு நாம் தான் பொறுப்பு. அப்படி அவர்கள் சொன்னால் நமக்கு அறப்பயன் கிட்டாது. “குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்” என்பதை நினைவில் கொள்க. நமது பிள்ளைகளுக்கு நாம் எல்லாவிதத்திலும் நல்ல ஒரு முன் மாதிரியாக (role model) இருக்க வேண்டும். பொய் சொல்வதை காட்டிலும் உண்மை சொல்லித் தண்டனையை அனுபவிப்பதே சாலச் சிறந்தது.

நாம் மேலும் கவனிக்க வேண்டிய ஒரு சொல் ”பொய்யாமை ஆற்றின் அறம்”. திருவள்ளுவர் “செய்யின் அறம்” என்று கூறவில்லை. ஏனெனில் ஆற்றின் என்பது ஆறு என்ற வேர்சொல்லில் இருந்து வருவது. தன்னலமின்றி, பிறர்க்கென, பிற உயிர்களுக்கெனச் செய்வதை, அதையும் வலிந்து செய்யாமல் தன்னியல்போடு ஒன்றைச் செய்தலை “ஆற்றுதல்” என்று கூறலாம். 

நம்மிடம் யாரேனும் பொருள், பணம் என்று ஏதேனும் உதவி கேட்டால் பொய்யாமை பற்றிநின்று நாம் எல்லாவற்றையும் இழந்துவிடக் கூடுமே என்று இல்லறத்தில் இருப்போர் அஞ்சக்கூடும். ஆனால் அங்கு பொய் சொல்லி தட்டிக்கழிப்பதைவிட, தன்னால் முடிந்த உதவியை செய்தோ அல்லது உண்மையை சொல்லி கெட்டப்பேர் வாங்கலாம். ஏனெனில் வைத்துக்கொண்டே இல்லை என்று சொன்னால் அது மற்றவருக்கு தெரியாமல் போகாது. அது கண்டிப்பாக தெரியும். அது தெரியும் பொழுது நமக்கு கெட்டப்பெயர் தான் கிட்டும். மேலும் நமது நெஞ்சே நம்மை சுடும்.

மேலும், பிற செய்யாமை என்கிறார். செய்ய கூடாதவற்றை கண்டிப்பாக செய்யாதே. அறம் அல்லாதவற்றை ஒருவர் செய்வார் ஆயின் அவர் அறத்தில் இருந்து வழுவுகிறார் என்று அர்த்தம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று (அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று 'என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார்.இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.

மு.வரதராசனார் உரை
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

No comments:

Post a Comment