ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

குறள் 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]

பொருள்
ஒறுத்தாரை - ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.

ஒன்றாக - ஒருபொருளாக;  (Certainly;surely; positively) நிச்சயமாக; ஒருமிக்க.
ஒன்றுதல் - பொருந்துதல், நெருங்குதல், ஒன்றாதல்; மனங்கலத்தல்; சம்மதித்தல்; உவமையாதல்; ஒருமுகப்படுதல்.

வைதல் - திட்டல், சபித்தல்; வஞ்சித்தல்; பழித்துரைத்தல்

வையாரே - திட்டமாட்டார்கள், சபிக்கமாட்டார்கள் ; வைக்க மாட்டார்கள்

வைப்பர் - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

பொறுத்தாரைப் -  தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்என்னும்நான்குவகைப்பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி

போல் - போல  ; போன்று

பொதிந்து -   பொதிந்துவைத்தல் - இடைவிடாதுமனத்துட்கொள்ளுதல்.

முழுப்பொருள்
சான்றாண்மை உள்ளவனாக இருக்க வேண்டும் என்றால் பொறுமை இருக்க வேண்டும். ஏன் சான்றாண்மை உள்ளவனாக இருத்தல் வேண்டும் ? அறிவுடையவர்களாலே நீ நினைக்கப்பட வேண்டும் என்றால் நீ சான்றுடையவனாக இருக்க வேண்டும். அறிவுடையவர்களிடம் நமக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். கற்றவர்கள் நடுவுநிலையானவர்கள் இவன் நல்லவன் போற்றக்கூடியவன் என்று சொல்லும் ஒரு நல்ல சமூதாயம். அதற்கேற்றவாறு நாம் வாழவேண்டும். சான்றாண்மைக்கு பொறுமை அவசியம்.

சில பல சமயங்களில் நீ பொறுக்கிறவனாக இருக்கிறாயா அல்லது ஒறுக்கிறவனாக இருக்கிறாயா? பிறர் உனக்கு ஒரு தீமையோ அல்லது ஒவ்வாத ஒன்றை செய்தாலோ நீ பதிலுக்கு அவனை தாக்கினாயா அல்லது பொறுத்தாயா  ?

நீ பதிலுக்கு தீமை செய்தால் அது ஒரு நாளைக்கு தான் பெருமை. பிறகு யாரும் அதைப்பற்றிப் பேசப்போவது இல்லை. அதுவே அந்த தீமையை பொறுத்தால் அறிவுடையவர்கள் எந்நாளும் உன்னை மனதில் வைத்திருப்பர்.

ஏன் பழிக்கு பழி என்று சென்றவரை நினைக்க மாட்டார்கள் என்றால், இருவரும் சமமாக நடந்துக்கொண்டார்கள். அதில் நினைக்க ஒன்றும் இல்லை. ஆனால் பொறுமையாக இருந்தால் பொன் போல பொதிந்து வைப்பார்கள்.

காந்திக்கு வெள்ளைக்காரர்கள் (பிரிட்டிஷ்க்காரர்கள்) என்னவோ இன்னல்களை தந்தார்கள். காந்தி பொறுக்கக்கூடிய எல்லைவரை பொறுத்தார். அதனால் தான் காந்தியை இன்றும் உலகம் பொன்போல் பொதிந்து (மனதின் உள்ளே) வைத்திருக்கிறார்கள்.

மீண்டும் இராமாயணத்தில் சீதையின் பொறுமையைப்பற்றி ஒரு இடத்தில் அனுமன், “இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும்” என்பான். 

இக்குறளால் பொறுமையை கடைபிடிப்பவர்களுக்கு உயர்ந்த மதிப்பு உண்டு என்பதை வலியுறுத்துவதைக் காண்கிறோம்.  தண்டிப்பதில் இன்பம் இல்லை, மன்னிப்பதில்தான் இன்பம் என்று பின்னர் வரும் குறளுக்கு முன்னோடியாக சொல்லப்பட்ட பொதுக்கருத்து.  இக்கருத்தை “செல்லிடத்துக்காப்பான் சினங்காப்பான்” என்ற குறளில் சொல்லப்பட்ட கருத்தொடு இணைத்து அறிந்துகொள்ளவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.).

மணக்குடவர் உரை
தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.

மு.வரதராசனார் உரை
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

Thirukkural - Management - Tolerance
Wise people do not admire or respect a person who cannot tolerate the injustice done to him and instead takes revenge on those who did the injustice. However, wise people admire, respect, and value higher than gold a person who tolerates injustices done to him and does not resort to revenge. This noble thought is presented in Kural 155. 

Avengers Count for nothing, forgivers
Are prized as gold.

Therefore, if you punish someone who troubled you, you will lose the respect of highly respectful people. Tolerate your troublemakers and earn the respect of great people. That is worthier than the satisfaction you get by punishing the person who troubled you.

No comments:

Post a Comment