நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
நன்றிக்கு - நற்பயனுக்கு, அறத்திற்கு
வித்து - மரஞ் செடி கொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.
வித்து ஆகும் - விதை யாகும் (நன்மை மரஞ் செடி கொடி போன்றதாகும். சில விதைகள் (உதாரணமாக மூங்கில்) முளைக்க பல நாட்கள்/வருடங்கள் ஆகும்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
நல் ஒழுக்கம் - நல்ல நன்னடத்தை
தீ ஒழுக்கம் - தீய நடத்தை, தீய பண்புகள்
என்றும் - என்றுமே, எக்காலத்திலும்
இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.
இடும்பை தரும் - துன்பத்தை/ தீமை/ நோய்/ வறுமை/ அச்சம் தனையே தரும்

முழுப்பொருள்
ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும். 

ஆக இறுதியில் நன்மை பயத்தமைக்காகவும் வழியில் தவறான பாதையில் இருந்து தடுத்தமைக்காகவும் ஒழுக்கத்திற்கு நாம் நன்றியே சொல்லுவோம். [நன்றிக்கு நன்மை என்ற பொருளும் உண்டு]

ஆனால் தீய பண்புகள் தீய குணங்கள் தீய நடத்தைகள் தீய நட்புகள் நமக்கு நல்லது செய்யாது. கேடான நீரை விளைச்சலுக்கு பாய்ச்சினால் செழுமையாக செடிகள் வளராது. சிறிது நாட்களில் துவண்டுவிடும். மடிந்துவிடும். அதுப்போல தீய பழக்கங்கள் நமக்கு தீமையே தரும். சிலர் சில தீய பழக்கங்களை ரகசியமாக கொள்வர். அவர்களுக்கு மட்டுமே தெரியும். அது தனக்கு உடனே தீமை பயக்காவிட்டாலும் நெடுங்காலத்தில் தீமை பயக்கும். அதற்கும் திருவள்ளுவர் கூறியுள்ளார் தன்நெஞ்சே தன்னைச் சுடும் [குறள் 293: தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்].  

இங்கே திருவள்ளுவர் வித்து என்று சொல்லி இருக்கிறார். ஏன் என்றால் குழந்தை பருவத்தில் இருந்தே நல் எண்ணங்களை வித்திடுதல் வேண்டும். அதனுடைய பலன் நல்ல மரமாக வளரும். ஆனால் மரமாக வளர்ந்தப்பின் மரத்தின் தன்மையை மாற்றவே முடியாது. முடிந்தாலும் மிக மிக கடினம். செடிகளை பிடுங்கிநடலாம். மரங்களை எளிதில் பிடுங்கிநட்டுவிடமுடியாது. மண் அத்தனை வல்லமை மிக்கது.  உதாரணமாக நாம் இளமையில் உடற்பயிற்சி செய்யாவிட்டாலோ, நல்ல உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கா விட்டாலோ அதனை மாற்றுவது எவ்வளவு சிரமமாக உள்ளது. 

இவ்வொழுக்கம் என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும். பேசும் சொல், வாழும் முறை, உண்ணும் உணவு, செல்வம் ஈட்டுவது, அறம் செய்வது, நிர்வாகம் செய்வது, நட்பு வைத்துக்கொள்வது என்று எல்லாவற்றிலும் ஒழுக்கம் வேண்டும்.

”விதைகறதெல்லாம் தப்பாம மொளக்கும்” என்பதை நினைவில் கொள்க. ஆதலால், நல்லொழுக்கத்தை வித்திடல் அவசியம் ஏனெனில் தீயொழுக்கத்தை விதைத்து துன்பத்தை அறுவடை செய்வவேண்டாதிருக்க

பொதுவழக்கில் வழங்கும் தொல்மொழி “விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?” என்பதாம். “பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்” என்றது அதனால்தான். ஆத்திச்சூடியில் ஒளவையாரும் கூறியுள்ளார் நன்மை கடைப்பிடி, நேர்பட ஒழுகு, தீவினை அகற்று, சீர்மை மறவேல், கீழ்மை அகற்று, உத்தமனாய் இரு, மோகத்தை முனி என்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.

தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும் .

மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால் , 'வித்தாகும்' என்றார் . தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால் , நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந்தருதல் பெற்றாம் .

மு.வ உரை
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்

சாலமன் பாப்பையா உரை
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: நல் ஒழுக்கம் நன்றுக்கு வித்து ஆகும் - நல்ல நடக்கை இன்பத்திற்குக் காரண மாகும்; தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய நடக்கை எஞ்ஞான்றும் துன்பம் தரும்.

அகலம்: நன்று என்பது இன்பம் எனப் பொருள் தருதலானும், எதுகை நயம் பயத்தலானும், முன் உரையாசிரியர்கள் பாடம், ‘நன்றிக்கு’.

கருத்து: நல்லொழுக்கம் இன்பத்தையும் தீ யயாழுக்கம் துன்பத் தையும் தரும்.

தி.பொ.ச. உரை
நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நல்லநீரைப் பாய்ச்ச வேண்டும். மாறாக, தீயொழுக்கம் என்ற கெட்டநீரைப் பாய்ச்சினால் கேடு எனும் பயிரே என்றும் விளையும். ( இங்கு வித்து = நீர். ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? ' ஆய்வுக் கட்டுரை காண்க. பயிர்களுக்கு நாம் பாய்ச்சும் நீரின் தன்மையைப் பொறுத்தே பயிரின் விளைச்சல் அமைகிறது என்பதை அறிவோம். நல்லநீரைப் பாய்ச்சாமல் கெட்ட நீரைப் பாய்ச்சினால் பயிர்கள் கெட்டு மடிந்து விளைச்சலற்றுப் போகும் என்பதையே கேடு விளையும் என்கிறார். இங்கு ஒழுக்கத்தினை நீருடன் ஒப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமாகவே படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டுமே ஒழுகும் தன்மை உடையவை என்பதுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் வல்லவை. ) 

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Self-discipline leads to all beneficial outcomes in one's life. Beneficial outcomes include health, happiness, harmony, and professional success. Kural 138 affirms that a self-disciplined person will be grateful because of his positive habits.

Good conduct sows good, and from bad springs
Eternal trouble

Positive habit is possible as a person becomes grateful when he achieves significant success. Achieving significant success is possible with positive habits. Whereas, lack of self-discipline leads to a long lasting misery. Happiness and misery are the products of positive and negative habits respectively. Let us remember Aristotle's thought, “Excellence is not an act. It is a habit.”

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
Good discipline will be the seed to good results. Whereas bad habits and indiscipline will always lead to difficulties in life. 

Questions that I ask to the kid
What is the seed for good results? What does indiscipline lead to ?
What gives you difficulties all the time?
Why indiscipline leads to difficulties? (indiscipline->distractions->unfocus->unproductivity->no wealth->difficulties)

No comments:

Post a Comment