Skip to main content

இருநோக்கு இவளுண்கண் உள்ளது

குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
[காமத்துப்பால், குறிப்பறிதல், களவியல்]

பொருள்
இரு - இரண்டு

நோக்கு -  கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு
நோக்குதல் - கண்காணித்தல்

இவள் - இவளுடைய

உண்கண் - மைதீட்டியகண்

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

ஒரு - ஒரு

நோக்கு - பார்வையில்

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. 

நோக்கு - விருப்பம் (மேலே சொல்ல பட்ட நோக்கு-இன் பொருளை பார்க்கவும்)

ஒன்று - மற்ற ஒரு பார்வை

அந் நோய் - அந்த நோய்யை, துன்பத்தை 

மருந்து - தீருக்கும் மருந்து

முழுப்பொருள்
ஒரு காதல்வயப்பட்ட பெண்ணுடைய மைதீட்டிய கண்ணுக்கு இரண்டு பார்வைகளாம். ஒன்று அவளுடைய உள்ள காதலை குறிக்குமாம். அதாவது காதலனை பிரிந்து இருப்பதனால் வரும் விரக (காமம்/காதல்) வேட்கை உணர்த்தும் பார்வை. அந்த பார்வை காதலனுக்கும் துன்பம் தரும். அதுவே நோய் என்கிறார் திருவள்ளுவர்.

ஆனால் மற்றொரு பார்வையோ இந்த நோயை தீர்க்கும் மருந்தாகவே அமையுமாம். இந்த பார்வையால் அவன் உயிர்த்தெழுந்து செயல்படுவானாம். 

நான் பிரிவால் நோயுற்று இருக்கிறேன். என்னை விரைவில் திருமணம் செய்துக்கொண்டு புணர்ச்சி மகிழுங்கள் என்பதை குறிக்கிறாள் காதலி. குறிப்பால் உணர்ந்த்துவதே இக்குறளின் அழகு

நாஞ்சில் நாடன் உரை
திருக்குறளில் ஒரேயொரு இடத்தில். குறள் எண் 1091. இன்பத்துப் பாலில் குறிப்பறிதல் அதிகாரம்.

‘இரு நோக்கு இவளின் கண் உள்ளது ; ஒரு நோக்கு
நோய், நோக்கு ஒன்று அந்நோய் மருந்து’

பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகவே சொல் பிரித்து, Punctuation போட்டு எழுதியுள்ளேன். என்றாலும் மனது பொறுக்கவில்லை. அத்தனை நயம் மிக்க திருக்குறள் இது. மையுண்ட இவள் வேல் போன்ற, வாள் போன்ற, மீன்போன்ற கண்களுக்கு இரண்டு நோக்குகள் உண்டு. ஒரு நோக்கு காதல் அல்லது காம நோய் செய்யும். மற்றொரு நோக்கு அந்நோய்க்கு மருந்தும் ஆகும். ஒரு பாடல் காலம் கடந்து வாழ்வதற்கு இந்தச் செய்யுள் ஒரு எடுத்துக்காட்டு. மையுண்ட கண்கொண்ட பெண்களுக்கு என்றில்லை, பொய்யுண்ட கண்கொண்ட அருள் விற்பனை செய்யும் சாமியார்களுக்கும் இரு நோக்கு உண்டு. செல்வந்தர்களுக்கு என்று பொன்னோக்கு. அற்ப மானிடர்க்கு என்று புண்ணோக்கு

ஒப்புமை
“செவ்வனேர், நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்” (திருக்கைலாய ஞானவுலா, 78-9)

“...... நஞ்சும் அமிர்தமுமே
போல்குணத்த பொருகயற்கண்” (சீவகசிந்தாமணி 167)

“பிணியும் அதற்கு மருந்தும் பிறழ்ப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே” (திருக்கோவையார், 5)

மேலும்: அஷோக் உரை (நன்றி)
மாணிக்கவாசகரின் திருக்கோவையார் பாடலொன்றில், “பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே”, என்பார். அதாவது, மின்னையும் பாம்பையுமொக்கும் இடையினையும் பெருந்தோளினையும் உடையாளது படைபோலும் கண்கள், பிறழுந்தோறும், பொதுநோக்கத்தாற் பிணியும், உள்ளக் கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு மருந்தும் ஆயின என்பார்.

பின்பு வரப்போகும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்திலும், இக்குறளை அடியொற்றி, “பிணிக்கு மருந்து பிறமன் அணி இழை தன்நோய்க்குத் தானே மருந்து”, என்பார் வள்ளுவர்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும் , தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம் . தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின் , தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது.]

(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு. (உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.).

மணக்குடவர் உரை
இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம். நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
[தலைமகன் தலைமகள் காதற் குறிப்பை அவள் நோக்கினால் அறிந்தது ]
இவள் உன்கண் இருநோக்கு உள்ளது-இவளுடைய மையூட்டிய கண்கள் என்மீது இருவகையான நோக்குகள் கொண்டுள்ளன; ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒன்று என்னிடத்து நோயைச் செய்வது, இன்னொன்று அந்நோய்க்கு மருந்தாவது.

அழகிற்காகவும் குளிர்ச்சிக்காகவும் தமிழ்ப்பெண்டிர் கண்ணிற்கு மையிடும் பண்டை வழக்குப்பற்றி 'உண்கண்' என்றார். நோய்நோக்கு தலைமகன்மேற் காதற்குறிப்பை வெளிப்படுத்தாத பொதுநோக்கு; மருந்து நோக்கு அதை வெளிப்படுத்தும் சிறப்பு. இதுவரை ஒருதலைக்காதலாகிய கைக்கிளையாயிருந்த காமநிலை, இன்று இருதலைக்காதலாகிய ஐந்திணயாகப் பெயரத்தொடங்கியமை இதனார் கூறப்பட்டது. கண்டே மகிழும் காதலன் இனி உண்டு மகிழும் வாய்ப்பையுங் கண்டான்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உண்டு விட்டாள் கண்களினால் என் உயிரை இதழமுதம்
          தந்தேனும் காத்தாளா தளிர்க் கொடியாள்  இல்லை இல்லை
கொண்டேன் நான் நோய் அந்த்க் கோல விழிப் பார்வையினால்
          கொண்ட நோய் தீர்த்து விடக் கூடிய  ஒர்   மருந்தில்லை
கண்டு  நின்றார் அனைவருமே கணக்கொன்று சொன்னார்கள்
          கண்மணியாள் பார்வையொன்றே அதைத் தீர்க்கும்  மருந்தென்று
நோய்  தரும்  பார்வையாய் ஒரு பார்வை வைத்துள்ளாள்
          நோய் தீர்க்கும் பார்வையும்  அவளே தான் கொண்டுள்ளாள்

என் ஆதியும் அந்தமும் (நன்றி: கவிப்புயல் இனியவன்)
என்னவளின் பார்வை
நோயும் மருந்தும் 
அவள் கருமை கொண்ட கரு 
விழிப்பார்வை என் உயிரையே 
கொல்லும் பார்வை ...!!!

மறுமுறை பார்வை 
உயிர்த்தெழும் உயிராய் 
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான் 
என் ஆதியும் அந்தமும் ....!!!

மு.வ உரை
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்

சாலமன் பாப்பையா உரை
இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

வேடிக்கையாக சொல்வதுண்டு..இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..இருவருமே வாழ்க்கையே வெறுத்து விட்டது என்றனர்.மூன்றாவது நண்பர் வந்தார்..முதல் நண்பரிடம் வெறுப்பதற்கான காரணம் கேட்டார்..
என் மனைவியுடன் வாழ்ந்து அனுபவித்த துன்பங்களால் வாழ்க்கை வெறுத்துவிட்டது என்றார்.
மற்ற நண்பரிடம் கேட்டார்..
இதுநாள் திருமணமே ஆகாது..மனைவியுடன் வாழமுடியவில்லையே என்று வெறுத்துவிட்டது என்றாராம்/
வள்ளுவனும் இதை அறிந்திருப்பான் போலும்..
அவன் என்ன சொல்கிறான் பார்ப்போம்..

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இவளின் மைதீட்டிய கண்களில் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது..ஒரு பார்வை  காதல் நோயைத் தருகிறது..மற்ற பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை ஆகிறது/.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...