ஒருபொழுதும் வாழ்வது அறியார்

குறள் 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

பொருள்
பொழுது காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்

ஒருபொழுது - ஒருகாலம்; ஒருசந்தி.

ஒருபொழுதும்  - எந்த ஒரு பொழுதும்; ஒரு காலமும்

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வது - எப்படி வாழ்வது என்று. வாழ்க்கை என்றால் என்ன என்று. வாழ்வின் நிலையாமை என்ன என்று. (உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை. ஒரு நாள் உடம்பை விட்டு உயிர் பிரியும் என்ற நிலையாமை)

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியார்  -  அறிய மாட்டார்கள்.
அறியார் - அறிய மாட்டார்கள்.

கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

கருதுப - (ஆனால்) எண்ணிக்கொண்டு இருப்பார்கள்

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை

கோடியும் - கோடி எண்ணங்கள்

அல்ல - அது மட்டும் அல்ல

பல - ஒன்றுக்குமேற்பட்டவை

முழுப்பொருள்
இவ்வுடலும் உயிரும் இணைந்திருப்பது உறுதியற்றது, எந்நேரம் வேண்டுமானாலும் பிரிந்துவிடும் என்பது வாழ்வின் நிலையாமை.

ஆதலால் ஒரு நொடியில் கோடிக்கும் மேலான எண்ணங்களையும் சிந்தனைகளையும் தன் மனதில் ஓட கொண்டு இருக்கும் மனிதர்கள் ஒரு பொழுதும் இவ்வாழ்வின் நிலையாமை அறியமாட்டார்கள் அதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். 

அதாவது வாழ்வின் நிலையாமையை அறிந்தவர்கள் கீழ்காணும் எண்ண ஓட்டங்களில் தங்களை சிக்கீக்கொள்ள மாட்டார்கள். 

இங்கே எண்ணங்கள் என்று திருவள்ளுவர் சொல்வது : 

1) தாம் பல்வேறு வகையிற் செல்வம் ஈட்டுவதும்
2) அச்செல்வத்தைக் கொண்டு வளமனைகள் கட்டுவதும் 
3) அவற்றின் அமைப்புவடிவுகளை எண்ணி வகுப்பதும் 
4) நன்செய் புன்செய்கள் வாங்குவதும் 
5) அவை வாங்கவேண்டிய இடங்களையும் அவற்றில் விளைவிக்கும் பயிர்களையும் அவற்றிற்கு அமர்த்த வேண்டிய வினையாட்களையும் பற்றித் தீர்மானிப்பதும் 
6) மேன்மேலும்தம் வருவாயைப் பெருக்கும் வழிகளை வகுப்பதும்
7) ஐம்புல இன்பங் களையும் நுகர்வதும்
8) அறத்திற்கும் புகழுக்கும் செய்ய வேண்டியவற்றைக் கருதுவதும்
9) மெய்காவற்கும் குற்றேவற்கும் மல்லரையும் மழவரையும் அமர்த்துவதும்
10) விரையூர்திகளில் ஊர்வதும், பல்வேறு நாடுகளையும் நகரங்களையுஞ் சென்று காண்பதும்
11) தம் மக்களை உயர்நிலைக் கல்வி கற்கவைப்பதும்
12) அவரை உயர்ந்த பதவிகதளில் அமர்த்துவதும்
13) அவருக்குச் சிறந்த குடும்பத்துப் பெண்களை மணஞ் செய்துவைப்பதும்
14) தம் பேரப்பிள்ளைகளைக் கண்டு களிப்பதும் அவருக்குச் செய்யவேண்டிய வற்றைச் செய்வதும்,
15) பிறவுமாம் (இன்னும் பல)

அத மட்டுமின்றி நூல்கள் பல கற்றாலும் அதன் நெறிப்படி நடக்காமல் மேற்ச்சொன்ன சிந்தனைகளில் வாழும் மனிதர்கள் வாழ்வின் நிலையாமையை ஒருபொழுதும் சிந்திக்க மாட்டார்கள் உணரமாட்டார்கள்.

குறிப்பாக சாப்பிடும் பொழுதும், பயணம் செய்யும் ஒழுதும் ஓயாமல் செல்பேசியில் பேசிக்கொண்டிருப்போருக்கும் இக்குறள் மிகவும் அவசியம்.

உதாரணமாக: 
எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. புத்தர் சாத்துக்க்குடி பழம் தன்னை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வதாக. அதாவது ஒரு முதலில் இப்பழம் தன்னை நான் உண்ண போகிறேன் என்று நினைப்பாராம். பிறகு அதல் தோலை மேதுவாக உரிப்பாரம். உரிக்கும் பொழுது வரும் நறுமணத்தை நன்க்கு நுகர்வாராம். பின்பு அதை நன்கு மென்று உண்ணுவாராம். அதாவது தான் செய்யும் செயலில் மட்டுமே கவனும் இருக்குமாம். மற்றபடி பழம் உரிக்கும் பொழுது வேறு நினைவுகளில் சிக்கிக்கொள்ள மாட்டாராம். பழம் உரித்துக்கொண்ட அரட்டை அடிக்க மாட்டாராம். அதாவது அந்த நோடியில் வாழ்வது. 

மேலும்: அஷோக்

ஒப்புமை
”யாரிவார்
சாநாளும் வாழ்நாளும்” (சம்பந்தர் சாய்க்காடு 3)

பரிமேலழகர் உரை
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலை தெளியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார்.

விளக்கம்
(இழிவு சிறப்புஉம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று. பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும்அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனான் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனி, 'கருதுப' என்பதனை அஃறினைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.) ---


ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு நொடிப் பொழுதேனும் தம் உடம்போடு கூடியிருத்தலை உறுதியாக அறியவியலாத மந்தர்; கோடியும் அல்ல பல கருதுப - கோடிமட்டுமன்று அதற்கு மேலும் பல எண்ணங் கொள்வர்.

'பொழுதும்' இழிவு சிறப்பும்மை. இறைவனருள் பெற்ற ஒரோ வொருவரன்றி ஏனையோர் தம் வாழ்நாளெல்லையை அறிய மாட்டாமையின், 'ஒரு பொழுதும் வாழ்வதறியார்' என்றார். கருதுங் கோடியின் மிக்க பல எண்ணங்களாவன: தாம் பல்வேறு வகையிற் செல்வம் ஈட்டுவதும், அச்செல்வத்தைக் கொண்டு வளமனைகள் கட்டுவதும், அவற்றின் அமைப்புவடிவுகளை எண்ணி வகுப்பதும், நன்செய் புன்செய்கள் வாங்குவதும், அவை வாங்கவேண்டிய இடங்களையும் அவற்றில் விளைவிக்கும் பயிர்களையும் அவற்றிற்கு அமர்த்த வேண்டிய வினையாட்களையும் பற்றித் தீர்மானிப்பதும், மேன்மேலும்தம் வருவாயைப் பெருக்கும் வழிகளை வகுப்பதும், ஐம்புல இன்பங் களையும் நுகர்வதும், அறத்திற்கும் புகழுக்கும் செய்ய வேண்டியவற்றைக் கருதுவதும், மெய்காவற்கும் குற்றேவற்கும் மல்லரையும் மழவரையும் அமர்த்துவதும், விரையூர்திகளில் ஊர்வதும், பல்வேறு நாடுகளையும் நகரங்களையுஞ் சென்று காண்பதும், தம் மக்களை உயர்நிலைக் கல்வி கற்கவைப்பதும், அவரை உயர்ந்த பதவிகதளில் அமர்த்துவதும், அவருக்குச் சிறந்த குடும்பத்துப் பெண்களை மணஞ் செய்துவைப்பதும், தம் பேரப்பிள்ளைகளைக் கண்டு களிப்பதும் அவருக்குச் செய்யவேண்டிய வற்றைச் செய்வதும், பிறவுமாம். இதனாலேயே.

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன

என்றார் ஒளவையார்.

பொருள்: ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப - (தாம்) ஒரு பொழுதும் வாழ்தலை அறியாதார் எண்ணுவன, கோடியும் அல்ல பல - கோடியும் அல்ல (அவற்றிற்கு மேலும்) பல (எண்ணங்கள்).

அகலம்: ‘எண்பது கோடிநினைந் தெண்ணுவன’ என்றார் ஒளவையார். ஒருபொழுதும் வாழ்வத றியார் (தம் வாழ்நாள்களைக்) கோடியும் அல்ல (அதற்கு மேலும்) பல என்று கருதுவர் என்றும், ஒரு பொழுதும் வாழ்வதறியார் கோடியு மன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினைப்பர் என்றும் உரைப்பார் சிலர்.

கருத்து: ஒரு பொழுதும் உடம்போடு கூடி உயிர் வாழ்தல் உறுதி இல்லை.

மணக்குடவர் உரை
ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாராயிருந்தும், தமது வாழ்நாளை கோடியுமல்ல, பலவாகக் கருதுவர் உலகத்தார். மேல் ஒருநாளுளனானவன் பிற்றை ஞான்று செத்தானென்றார் ஈண்டு ஒருபொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார்.

மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

சாலமன் பாப்பையா உரை
உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.

ஒரு ஜென் கதை (நன்றி: காலத்தின் கட்டளை)
ஓட்டல் கடை வைத்திருந்த ஓர் செல்வந்தர் நீண்ட நாட்களாக நல்லதோர் குரு தமக்கு அமைய வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் எங்கும் தேடி அலைய நேரமும் இல்லை. நல்ல வியாபாரம் வேறு. ஓட்டலுக்கு வருவோரை ஒவ்வொருவராக கவனிக்கலானார். திடீர் என்று ஒருநாள் தனது ஓட்டலுக்கு வந்த ஒரு பெரியவரின் காலில் விழுந்து,"ஐயா, நான் நீண்டநாட்களாக தேடிக் கொண்டிருந்த குரு நீங்கள்தான். என்னை தங்கள் மாணவனாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார் பணிவுடன்.ஓட்டலில் வேலை செய்வபர்களுக்கு ஆச்சரியம். தன்னுடைய முதலாளியிடம் சென்று," முதலாளி, எப்படி அவர்தான் நல்ல குரு என்று கண்டுபிடித்தீர்கள்? " கேட்டார்கள்.அதற்கு அந்த ஓட்டல் அதிபர், " ஓட்டலுக்கு நிறையபேர் வருகிறார்கள். அவர் தேநீர் அருந்தும் விதத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். தேநீர் அருந்திக் கொண்டே செல்போனில் பேசுவதும், அங்கும் இங்கும் பார்ப்பதும் அல்லது பத்திரிக்கை படிப்பதுமாக இருந்ததைதான் இதுவரை கண்டு வந்தேன். ஆனால் இவரோ தேநீரை நிதானித்து இரசித்து குடித்துக் கொண்டிருந்தார். இவரே என் குரு என்று முடிவு செய்தேன்" என்றார்.ஒரு நாளில் சுமார் 60,000 - 80,000 எண்ணங்கள் நம் மனதில் தோன்றுவதாக கூறுகிறார்கள். சுமாராக ஒரு நொடிக்கு ஓர் எண்ணம் என்று கணக்கு வருகிறது. இப்படி அலைபாயும் மனத்தை கட்டுக்குள் கொண்டுவந்து 'இங்கே, இப்போது வாழ்' என்பதைத்தான் ஞானிகள் சொல்லி வந்துள்ளார்கள்.அப்படி வாழாதவர்களை திருவள்ளுவர்...ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. [ நிலையாமை 34 : 7]வள்ளுவனுக்கு என்ன கிண்டல் பாருங்கள்!. ஒரு பொழுதில் வாழத் தெரியாமல் அலைபாயும் நம்மிடம் கோடி(ஒன்றல்ல, பல) எண்ணங்கள் என்கிறார்

மேலும் (நன்றி: தினமணி)
செல்வத்தைப் பிறர்க்கு உவந்து கொடுக்காமல் யாமே துய்ப்போம் என்று எண்ணித் தாமும் துய்க்கத் தவறியவர் வாழ்நாளே இவ்வுலகில் பலவாகும் என்கிறார் நக்கீரனார். புலவரின் இக்கூற்றுக்குப் பொருந்துவதாய் பின்வரும் குறட்பா அமைகிறது.


 ""ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
 கோடியும் அல்ல பல'' 

மேலும் (நன்றி: ஆத்திகம்)
மேல சொன்னமாரி, நாளைக்கு இருப்போமான்றதே தெரியாத... நாளைக்கு இன்னா நாளைக்கு?... அடுத்த நொடி நாம இருப்போமான்றதே நிச்சயமில்லாத நமக்கு மனசுல மட்டும் பாரு! கோடிக்கோடியா நெனைப்பு இருந்துகினு இருக்கும்! அத்தைப் பண்ணலாமா? இத்தை நிறுத்தலாமா? அப்படீன்னு! இன்னமோ போ!

1 comment: