எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
எந் - எந்த 

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

கொன்றார்க்கும் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்

உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில்; உய்தல்

உண்டாம் - உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில்; உய்தல்

இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

செய்ந்நன்றி  -  cey-n-naṉṟi   n. id. +.1. Act of benevolence; உபகாரம் செய்ந்நன்றிகொன்ற மகற்கு (குறள், 110). 2. Gratitude; நன்றியறிவு  

கொன்ற - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்

மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

மகற்கு - மறந்தவருக்கு

முழுப்பொருள்
எத்தனை  பெரிய அறங்களை அழித்தாலும், அதில் இருந்து தப்பிக்க ஏதேனும் ஒரு வழி  இருக்கும். ஆனால் ஒருவன் நமக்கு செய்த உதவியை மறந்தோம் என்றால் அந்த பாவத்தில் இருந்து தப்புவதற்கு  எந்த வழியும் இல்லை. ஏனெனில் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பதை இங்கு நினைவில் கொள்க. மற்ற அறங்களை நன்மைகளை கொல்வதற்கு சூழ்நிலை, சந்தர்ப்பம் என்று ஆயிரம் காரணங்களையும் சப்பைகட்டுகளையும் கூறலாம். ஆனால் செய்ந்நன்றி கொல்வதற்கு அப்படியெல்லாம் கூறமுடியாது. ஒருவேலை கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.

இதன் மூலம் வள்ளுவர் பாவங்களில் எல்லாம் கொடிய பவம், செய்ந்நன்றி மறப்பது என உரைக்கிறார். 

ஒப்புமை
“...........செய்ந்நன்றி
கொன்றாரிற் குற்றம் உடைத்து” (நாலடி 111)

“செய்ந்நன்றி கொல்லன்மின்” (சிலப்.30:191)
“நன்றியை மறந்திடும் நயமில் நாவினோன்
என்றிவர் உறுநர் கென்ன தாகவே” (கம்ப.பள்ளியடை 104)

“நன்றி கொன்றரு நட்பினை நாரறுத்து” (கம்ப.கிட்கிந்தை 3)

“உய்திர் போலும் உதவிகொன் றீர் என” (கம்ப.கிட்கிந்தை 28)

”உய்யநிற் கபய மென்றா னுயிரைத் தன் னுயிரி னோம்பாக்
கையனு மொருவன் செய்த வுதவியிற் கருத்தி லோனும்
மையற நெறியி னோக்கி மாமறை நெறியி னின்ற
மெய்யினைப் பொய்யென் றானும் மீள்கிலா நரகில் வீழ்வார்” (கம்ப.விபீடணன் 117)

“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்குய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ” (புறநா 34:1-7)

“ஒற்கத்துள் உதவியார்க் குதவாதான் மற்றவன்
எச்சத்து ளாயினும்ஃ தெறியாது விடாதேகாண்” (கலி.149:6-7)

“சிதைவகல் காதற்றாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப்
பதவியந் தணரை ஆவைப் பாலரைப் பாவை மாரை
வதைபுரி குநர்க்கு முண்டாம் மாற்றலாம் ஆற்றல் மாயா
உதவி கொன்றார்க் கென் றேனும் ஒழிக்கலாம் உபாய முண்டோ” (கம்ப.கிட்கிந்தை 62)

“நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க் குய்வில தென்னும்
குன்றா வாய்மை” (கல்லாடம் 4)

பரிமேலழகர் உரை
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

மு.வரதராசனார் உரை
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: எ நன்று கொன்றாற்கும் உய்வு உண்டாம் - எத்தகைய (சிறந்த) அறத்தைக் கெடுத்தவனுக்கும் உய்வாயில் உண்டாம்; செய் நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - (தனக்குப் பிறர்) செய்த நன்றியை மறந்த மனிதனுக்கு உய்வாயில் இல்லை.

அகலம்: உய்வாயில் - கழுவாய். ‘உய்வாயில்’ என்பதனை வட நூலார் ‘பிராயச்சித்தம்’ என்பர். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘எந்நன்றி’. ‘நன்று’ என்னும் பாடத்தைக் கொண்டதற் குரிய காரணத்தை ‘நயனீன்று’ என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்தில் காண்க.

கருத்து: செய்ந் நன்றியை மறந்தோன் அப் பாவப் பயனை அனுபவித்தே தீர வேண்டும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நன்றி மறந்தவனை உலகம் மன்னிக்காது.

Thirukkural - Management - Helping Others
There may be redemption, freedom or way out, even if we forget the good things done to us by others. But, there is no redemption for a person who forgets the timely help rendered by others. Ingratitude is a sin. Kural 110 ensures that being grateful is the best of all the virtues.

All other sins may be redeemed,
Except ingratitude

Every individual has two predominant needs. Those needs are universal. One is to be needed by someone else and two is to get one's need fulfilled. While practicing, 'Helping Others' remember these two universal needs.

No comments:

Post a Comment