தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், கூடாநட்பு குறள் 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
குறள் 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]
பொருள்
தொழுத - தொழுதல் - வணங்கல்
கையுள்ளும் - கைக்குள்ளும்
படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.
ஒடுங்கும் - ஒடுங்குதல் - அடங்குதல்; குறைதல்; சுருங்குதல்; குவிதல்; சோர்தல்; கீழ்ப்படிதல்; பதுங்கல்; ஒதுங்குதல்; ஒளிமங்குதல்.
ஒன்னார் - பகைவர்
அழுத - அழுதல் - அழு - aẕu I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.
கண்ணீரும் - கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்
அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்
அனைய - அத்தன்மையான; ஒத்த. -
முழுப்பொருள்
பகைவர் இரு கைக்கூப்பி தொழும் பொழுது உயிரக்கொல்லும் ஆயுதம் அடங்கி ஒடுங்கி அக்கைகளுக்குள்ளே இருக்கக்கூடும். பகைவர் வணங்குகையில் கூட நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். பூவுக்குள்ளும் பூநாகம் இருக்கும் என்பதை நினைவில் கொள்க.
அதுப்போல சில கூடா நட்புகளின் / உறவுகளின் கண்ணீர் சிந்தும் அழுகைக்குள்ளும் நம்மை அழிக்கக்கூடிய ஒரு ஆயுதம் ஒரு தந்திரம் ஒரு திட்டம் ஓரு சூழ்ச்சி இருக்கக்கூடும் என்றென்பதை நினைவில் கொள்க. அத்தையோரிடம் இருந்து (மனதளவிலாவது) விலகி நிற்க. அவர்களை நம்ப வேண்டாம்.
இன்றைய காலங்களில் குறிப்பாக சில உறவுகளிடம் இது அதிகமாய் இருக்கக்கூடும். தன்னை நியாயமாக காட்டிக்கொள்ள தன்மீது தவறே இல்லை, அடுத்தவர்மீது தான் தவறு, தன்மீது வீண்பழி சுமத்துகிறார் என்றெல்லாம் அழுவர். சிலர் சில (நிதி) உபாயங்கள் பெறவேண்டி தான் செய்த தவறு எல்லாவற்றையும் அறியாமையால் செய்துவிட்டேன் என்றும், தன்னை மன்னித்துவிடு என்றும், எனக்கு உன்னைவிட்டால் வேறு யாருமில்லை என்றும் அழுகை சிந்தி நம்மை நம்பவைப்பர். ஆனால் கூர்ந்து நோக்கினால் அவர்கள் செய்கையில் ஒருவித மாற்றமும் இருக்காது எனதை அறியலாம். ஆதலால் அவர்களை எச்சரிக்கையுடன் எதிர்கொள்க.
புறநானூற்று (10:1) வரியொன்று “வழிபடுவோரை வல்லறிதியே”, அதாவது, “வழிபட்டு நிற்போரின் உண்மை நிறத்தை விரைந்து அறிவாய்” என்று சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் பாடியது. சீவக சிந்தாமணிப் பாடல் இக்குறளின் கருத்தையே, இவ்வாறு கூறுகிறது.
“தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே” (சீவக.1891)
பகைவுறவோர் தொழுத தம் கையிலும், மயிர் நெருங்கிய முடியிலும், ஒழுக அழுத கண்ணீரிலும், அணிகலன்களிலும், கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; அதனை ஆராய்ந்து, அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி, யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக, அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர், என்பதே இப்பாடல் சொல்லுவது.
மேலும்: அஷோக் உரை
காந்தியின் வாழ்வும் குறளும் (நன்றி பா ல சு ந் த ரி)
Part 1 (From Kural 826)
அண்ணனின் நண்பருடன் இளமை பருவத்தில் மகாத்மாவுக்கு நட்பு ஏற்பட்டது. அவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்று அன்னையும் - அண்ணியும் - மனைவியும் எச்சரித்தனர். இருந்தும் அவருடைய வார்த்தை ஜாலத்தில் மயங்கிய காந்தி அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்தார்.
மாமிசம் சாப்பிட வேண்டும்; அப்போதுதான் உடல் வலிமை ஏற்படும். அதன் பின்னரே அந்நியரை எதிர்க்க முடியும் என்பது அவரது வாதம். கூடவே அவர்கள் மாமிசம் சாப்பிடுவதால்தான் பலசாலிகளாக நம்மை அடக்கி ஆள்கிறார்கள். நமது ஆசிரியர்களில் பலர் ரகசியமாக மாமிசம் சாப்பிடுகிறார்கள். உன் அண்ணனும் சாப்பிடுவார் என்று வலை வீச, அவர் விரித்த வலையில் வசமாக சிக்கிக் கொண்டார் காந்தி.
இருப்பினும் இறைச்சி அவருக்கு ரசிக்கவில்லை, ருசிக்கவில்லை. எனவே இறைச்சி கலந்த பலவேறு தின்பண்டங்களை செய்து தந்து அசத்தினார் நண்பர். அவைகளை ரசித்துச் சாப்பிட்டார் காந்தி. இது நான்கு அல்லது ஆறு முறையே நடந்தது. அம்மா சாப்பிடக் கூப்பிட்டால் வயிறு சரியில்லை என்று பொய் கூறும் போது கூசிப் போய்விடுவார். எனவே தாய் தந்தையர் உயிரோடு இருக்கும் வரை புலால் உண்பதில்லை என்று உறுதி செய்து கொண்டார்.
இதில் ஏற்பட்ட கடனை சமாளிக்க அண்ணன் அணிந்து இருந்த தங்கப் காப்பில் சிறிது வெட்டி எடுத்து விற்றுக் கடன் சரி செய்யப்பட்டது. இருந்தாலும் வயிற்றுக்குள் ஆடு கத்துவது போல் ஒரு பிரமை. தாய் தந்தையிடம் பொய் கூறியதுகூட அவரைத் தூங்காமல் துரத்தியது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்.
ஓர் ஆண்டில் ஆறு முறைதான் இந்த புலால் விருந்து உண்டார். அதன்பின் வாழ்நாளில் என்றுமே அதைத் தொடவில்லை. பின்னாளில் சைவ உணவு சங்கங்களில் உறுப்பினர் ஆகி சைவ உணவு பற்றிப் பல ஆய்வுகள் செய்து நண்பர்களுக்கு அதை எடுத்துரைக்கும் பழக்கத்தை மேற்கொண்டார்.
எனவே தான் வள்ளுவர் கூறுகிறார்
இவ்வளவு நடந்தும் அந்த நண்பரை காந்தியால் விலக்க முடியவில்லை. அவருடைய நடவடிக்கை கஸ்தூரிபாய்க்கு அறவே பிடிக்கவில்லை. எச்சரித்தார் இந்த நட்பு வேண்டாம் என்று. மனைவி தன்னைக் கட்டுபடுத்துவதா? என்ற ஆணாதிக்கம் தலைதூக்க இன்னும் அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் காந்தி.
ஆனால் அவர் அன்னையும், அண்ணியும் அதையே வற்புறுத்த அவர் கூறிய சால்சாப்பு: அவருடைய தீய குணங்களை திருத்தி நல்வழிப் படுத்தவே நான் நெருங்கிப் பழகுகிறேன். இதை இருவரும் நம்பி விட்டனர். தீயவர்களை திருத்த முற்படும்போது அவர்களிடம் நெருங்கிப் பழகுவது தவறு, தள்ளி இருந்தே திருத்த வேண்டும் என்பதைப் பட்டுத் தெளிந்தார்.
புலால் வேண்டாம் என்று மறுத்தவரை புகை பிடிக்க பழக்கினார். காசு இன்மையால் வேலைக்காரன் பணத்தைத் திருட வேண்டிய நிலை. அடுத்து விலைமகளிடமும் அறிமுகப்படுத்தினார் நண்பர். இருப்பினும் காந்தி அவளை நாடாமல் விலகி நின்றார். அவனுடைய கேவலமான ஏச்சுக்களையும் பொறுத்துக் கொண்டார்.
அடுத்து ஒரு மூலிகைச்செடியில் ஓட்டை போட்டு புகைக்கலாம் என்று முடிவு செய்து அதையும் செயல்படுத்திப் பார்த்தனர். அடுத்து உறவினர் ஒருவர் புகைத்துத் தூக்கி எறிந்த எச்சில் பீடிகளைப் புகைப்பதுவரை இந்த நட்புகொண்டு சென்றது. பின்னேரே உணர்ந்தார், தனக்கும் மனைவிக்கும் ஏற்படும் சண்டைகளுக்குக் காரணமே நண்பர்தான் என்று புரிந்தது.
அவர் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட நேர்ந்ததும் சின்ன சின்ன விஷயங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கி அதற்குக் கண் காது மூக்கி வைத்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது நண்பரே என்று கடைசி நேரத்தில் உணர்ந்தார். பெற்றோரின் அறிவுரைக்குப் பிறகே புலாலும், புகைப்பதும் என்று அவற்றைத் தள்ளி வைத்தார். ஆனால் அவர்கள் மறைவுக்குப் பின்னரும் அதனை நாடவில்லை.
நண்பர் பற்றி முன்னரே எச்சரிக்கை செய்த மனைவியின் தொலை நோக்கு புரிந்தது. கணவன் என்பவன் ஆட்டிப் படைப்பவன் அல்ல. அன்பால் அரவணைப்பவன் என்று உணரத் தலைப்பட்டார். மனைவி அடிமையில்லை சகதோழி; தனக்கு உள்ள அத்தனை உரிமைகளும் அவளுக்கும் உண்டு என்பதை சற்றேத் தாமதமாக உணர்ந்தார்.
இந்த தாமதத்திற்குக் காரணம்; அவருடைய கூடா நட்பு! இதைத்தான் வள்ளுவர் கூறிகிறார்:
பரிமேலழகர் உரை
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¤யற்க'' என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.
மு.வரதராசனார் உரை
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
சாலமன் பாப்பையா உரை
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.
Join the conversation