நட்டார்போல் நல்லவை சொல்லினும்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், கூடாநட்பு, குறள் 826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.
குறள் 826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
நட்டார்- நண்பர்; உறவினர்.
நட்டார்போல் - நண்பர் போல
நல்லவை - நல்ல அறிவுரைகள், நல்ல கருத்துக்கள், நல்ல வார்த்தைகள்
சொல்லினும் - கூறினாலும்
ஒட்டார்  - பகைவர்
சொல் - சொற்கள்
ஒல்லை - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு.
உணரப்படும் - உணர்ந்துவிடுவோம்

முழுப்பொருள்
நாம் அன்றாடம் நிறைய நபர்களுடன் பழகுகிறோம். சிலர் நல்லுணர்வுடன் பழகுவர். சிலர் தீய எண்ணங்களுடன் பழகுவர். ஆதலால் நாம் யாருடன் பழகுகிறோம் அவர்கள் எத்தகையவர் என்று அறிவது முக்கியம். போலி மனிதர்களை போலி நட்பு பாராட்டுபவர்களை களைவது முக்கியமாகும்.

நம்மிடம் இத்தகையவர்கள் நண்பர் போல பேசுவார்கள், நமக்கு நல்ல அறிவுரைகள் சொல்லுவார்கள் நம் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். ஆனால் வஞ்சத்தினை தன் மனதில் வைத்துக்கொள்வார்கள். இவர்கள் பகைவர் என்று நமக்கு மிக விரைவாகவே அவர்களின் சொற்கள் மூலமாகவும், அவர்களின் செயல்கள் மூலமாகவும், அவர்களின் நடவடிக்கை மூலமாகவும், அவர்களின் உடல் மொழி மூலமாகவும், அல்லது பிறர் மூலமாகவோ நாம்  தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் கூடியவற்றைச் சொன்னாரேனும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் நன்மை பயவாமை விரைந்து அறியப்படும்.

எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது (Concession). கூடா நட்பினர் சொல்லளவில் நல்லவற்றையே சொல்வராதலின், எதிர்மறைப் பொருள் விளைவையே தழுவும். ஒல்லையுணரப்படுதலாவது நல்லவை தீயவையாக விரைந்து வெளிப்படல்.

மணக்குடவர் உரை
உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும் பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்..

மு.வரதராசனார் உரை:
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை
நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain