நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

 

குறள் 1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
நினைத்திருந்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நோக்கினும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

காயும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்

அனைத்தும் - எல்லாம்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி.

உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

நோக்கினீர் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
அவள் என்னுடன் ஊடிக்கொண்டு இருக்கையில் எதற்கடா வம்பு? அவளை சமாதானம் செய்தால், பிறரையும் இப்படித்தானே சமாதானம் செய்வாய் என்று மறுபடியும் என்னிடம் ஊடுவாள். அதற்குபதிலாக அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். வாயை அடக்கினேன். ஆனால் இந்தமுறை அவளை நினைத்து அவளை அங்கம் அங்கமாக நோக்கி அவள் அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன். இதைக் கண்ட அவள், வேறு யாரை நினைத்து அல்லது கற்பனை செய்து என் அங்கங்களை ரசிக்கிறாய் என்று மறுபடியும் ஊடுகிறாள்.  குற்றம் கண்டுபிடித்தே (மனதில் இடமும்) பெயர் வாங்கும் காதல்தலைவிகள்.

பி.கு: ஒருமுறை என் மனைவி சில பல மயிர் இழைகளை சுருட்டாக (curly hair) அலங்காரம் செய்துக்கொண்டாள். நன்றாக இருக்கிறதே என்றேன். உங்களுக்கு தான் சுருட்டை முடிப் பெண்களை பிடிக்குமே என்றாள். அதனால் தான் செய்துக்கொண்டேன். அப்படியா என்றேன்? ஆம், ரித்திகா சிங், (திரு திரு துறு துறு) ரூபா மஞ்சரி, நித்யா மேனன், கங்கணா ரானட் போன்ற கதாநாயகிகளை உங்களுக்கு பிடிக்குமே. அதனால் என்ன? அவர்களுக்கெல்லாம் சுருட்டை முடி. என் சுருட்டை முடி அவர்களை நியாபகம் படுத்தியதா என்றாள்? அடுப்புல ஏதோ கருக்குற வாசனை அடிக்கிறது என்று அங்கிருந்து தப்பித்தேன். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்; அனைததும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி. ('யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்', என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி'? என்றாள். 'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும். இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.

சாலமன் பாப்பையா உரை
என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.

No comments:

Post a Comment