குறள் 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]
பொருள்
முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.
இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.
முயக்கிடைத் - தழுவுகையில் ஊடாக
தண் - குளிர்ச்சி; அருள்.
வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை.
போழ - போழ்-தல் - pōl- 4 v. intr. [K. pōḻ.] 1.To be cleft, split; to gape; பிளவுபடுதல். (திவ்.இயற். திருவிருத். 87.) 2. To be disunited; பிரிவுபடுதல். (W.)--tr. 1. To split, cleave open;பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப(பதிற்றுப். 19, 2). 2. To pass through, crossover; ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர்கலவர் (நான்மணி. 18). 3. To dispel; to destroy;அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 2118).
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்
உற்ற - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்
பெரு - பெருமை
பெரு - பெரிய- பெரிதான; மூத்த; இன்றியமையாத.
மழைக் - மழை - மேகத்தினின்றுபொழியும்நீர்; நீருண்டமேகம்; காண்க:மழைக்கால்; நீர்; கருமை; குளிர்ச்சி; மிகுதி.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் கூடியிருந்த சமயங்களில், இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு (முயங்கி) இருந்தனர். அப்படி முயங்கி இருக்கையில் நடுவே ஒரு கணம் அவர்களுக்கு நடுவே ஒரு இடைவெளி விழ அதில் குளிர்க்காற்று உட்புகுந்து இருவரையும் சற்று பிரித்ததாம். இன்பம் சுவைக்கும் பொழுது அறிவு மயங்கிய அந்நிலையில் அந்த பிரிவை விரும்பாத பேதை தலைவியின் பெருமை வாய்ந்த குளுமையான கண்கள் பசலைநோய் உற்றன. அதாவது முயங்குதுலக்கு இடையே உள்ள சிறு பிளவையும் விரும்பாதவள் தலைவி. அச்சிறு பிரிவிற்கே காதல் நோய் வந்தது. அப்படி இருக்கையில், தலைவனை பிரிந்து இவ்வளவு காலம் வாடும் தலைவியும் அவளது கண்களும் என்னவாயினவோ?
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே” (நற் 3:12)
“நெய்தல் உண்கண் பைதல் கூர” (நற் 113:7)
“கண்ணுந் தோளுந் தண்ணுறுங் கதுப்பும்
பழநலம் இழந்து பசலை பாய” (நற் 219:1-2)
“பசலை யார்ந்தன குவளையங் கண்ணே” (குறுந் 13:5)
“பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே” (ஐங்குறு 16)
”உண்கண் பசப்ப தெவன் கொல் அன்னாய்” (ஐங்குறு 21)
”ஏதி லார்க்குப் பசந்தவென் கண்ணே (ஐங்குறு 34)
”கயலெனக் கருதிய உண்கண்
பயலைக் கொல்கா ஆகுதல் பெறினே” (ஐங்குறு 36)
”நயந்தோ ருண்கண் பயந்துபனி மல்க” (ஐங்குறு 37)
”பசப்பணிந் தனவான் மகிழ்நவென் கண்ணே” (ஐங்குறு 45)
”என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே” (ஐங்குறு 169)
”பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ” (ஐங்குறு 170)
”பயந்தன மாதோநீ நயந்தோள் கண்ணே” (ஐங்குறு 264)
”பனிமலர் நெடுங்கண் பசலை பாய்” (ஐங்குறு 477)
”கொன்றைப் பூவிற் பசந்த உண்கண்” (ஐங்குறு 500)
“பல்லிதழ் மலருண்கண் பசப்ப” (கலித் 45:11)
“பொன்னெனப் பசந்தகண்” (கலித் 77:12)
“பைதல வாகிப் பசக்குவ மன்னோஎன்
நெய்தல் மலரன்ன கண்” (கலி 142:22-3)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? (தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி).
மணக்குடவர் உரை
யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.
மு.வரதராசனார் உரை
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.
சாலமன் பாப்பையா உரை
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.
No comments:
Post a Comment