அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

 

குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
அறிது - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல்

அறியாமை  - அறியாத்தன்மை; மடமை

கண்டு - கற்கண்டு; நூற்பந்து; கண்டங்கத்தரி; கட்டி; கழலைக்கட்டி; ஓர்அணிகலஉரு; அக்கி; வயல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால் -  தன்மை அறிந்து

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

செறி - நெருக்கம்

தோறும் தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல்

சேயிழை - cēy-iḻai   n. செம்-மை + இழை Woman, as wearing beautiful ornaments;[அழகு திருந்திய அணியுடையாள்] பெண் சேயிழைகணவ (பதிற்றுப். 88, 36).  cēyiẕai   s. Splendid ornaments, நல் லணி. 2. A richly adorned lady, one of the fair sex, பெண். (p.) See இழை. சேயிழைமார்--சேயிழையார். s. The ornamented fair.

மாட்டு - அகன்றுகிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியு மாற்றாற் கொண்டு கூட்டிய சொல் முடிவு கொள்ளும் முறை; அடி; சொல்.

முழுப்பொருள்
நூல்கள் பலவற்றை ஆழமாக கற்கும் தோறும் நாம் அறிந்துக்கொள்வது எல்லாம் நமது அறியாமையை. அதுவும் ஏற்கனவே வாசித்த புத்தகத்தை மறுபடியும் வாசிக்கும் பொழுது நமக்கு புதிது புதிதாக ஒன்று தெரிந்துக்கொண்டே இருக்கிறது. அப்பொழுதும் நாம் அறிவது நமது அறியாமையை. புதியவற்றை நாம் கற்கும் பொழுதும் நாம் நமது அறியாமையை தான் அறிகிறோம். ஏனெனில் இவையெல்லாம் முன்பே அங்கு தான் இருக்கின்றன. நாம் ஒன்றும் புதிதாய் கண்டுப்பிடிக்கவில்லை. அதுவும் புதிதாக தோன்றவில்லை. ஆனால் ஆழமாக படிக்கும் பொழுதே புதிதாய் நாம் அறிகிறோம். நுனிப்புல் மேய்தால் ஒன்றும் அறிந்துக்கொள்ள மாட்டோம்.

ஒவ்வொரு முறையும் நூல்கள் கற்கும் பொழுது எப்படி அறியாமையை அறிந்துக்கொள்கிறோமோ அதுப்போல அழகிய நகைகளை (புற அணிகலன்களான தங்க நகை முத்து வைரம் போன்ற மணிநகைகளும் மற்றும் அக நகைகளான கண், அழகிய பல்வரிசை நிறைந்த வாய், புன்னகை) அணிந்துள்ள காதலியுடன் (பிரிந்தப்பின்) நெருங்கி கூடும் பொழுதும் பெறும் இன்பம் ஆகும். ஒவ்வொரு முறைக் கூடும் பொழுதும் புதியதோர் இன்பதை அறிகிறேன் அவளிடம். ஆனால் அதுவும் அகத்தால் ஆழமாக நினைத்து கூடும் பொழுது மட்டுமே அறிய முடியும் என்று நூல்களுடன் ஒப்பிட்டு குறிப்புணர்த்துகிறார் திருவள்ளுவர்.

அறிதோறும் அறியாமையைக் காண்பது பற்றிய பழமொழிப் (332) பாடலொன்று:

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

ஓர் இன்பத்தை அடையும் பொழுது அங்ஙனம் அடையாது நின்ற நாளுக்கு வருந்துதல், சோம்பலின்றி அறியாதவனாக மதித்து ஆராயவே இந்த அறிவு தோன்றும். அது தோன்றுமாதலால் மேலும் மேலும் கற்றலான ஊக்கம் பிறக்கும். அதனான் மிகுந்த இன்பம் பெறலாம். சிறந்த பொருள்களை அறியும் அருமை நோக்கியே ஆசிரியர் ‘உற்று ஒன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேல்‘ என அறிவதன் அருமைக் கூறப்படுகிறது,

திருக்கோவையார் (9) பாடலொன்று மேலும் வெளிச்சமாகவே, கீழ்வருமாறு கூறும்

உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச் சிற்றம் பலத்தொருத்தன் 
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோன்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே.

மேலும்: அஷோக் உரை

ஆனால் நம்மைச்சுற்றி எழுதப்படும் கவிதைகளில் மிகப்பெரும்பாலானவை மிகமிக எளிமையான அன்றாட உணர்வுகளால் ஆனவை. உறவும் பிரிவுமென, அறிதலும் மயக்குமென இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை திரும்ப நமக்கே சொல்பவை. அறிந்தவற்றை அவற்றில் கண்டுகொண்டு, ஆம் நானுமறிவேன் என்று சொல்வதையே இங்கே எளிய கவிதைவாசகர் கவிதையனுபவமென அடைந்துகொண்டிருக்கிறார்கள். உச்சங்கள் என எழும் கணங்களை அடையும் கவிதைகள் அரிதாகிக்கொண்டிருக்கின்றன. மெய்மைநாட்டத்தையும் மெய்மையைத் துறத்தலையும், அறிதலையும் அறிதலின்மையில் அமைதலையும் முன்வைக்கும் ’சற்றே ஆழ்ந்த’ கவிதைகளை எப்போதோதான் வாசிக்க இயல்கிறது.

ஏனென்றால் வாசகர் அறிவை அல்ல, கவிஞனிடமிருந்து தங்கள் அறிதலுக்கொரு சான்றை விரும்புகிறார்கள். அறிந்ததை அறிவதென்பது அறிவல்ல, பலசமயம் அது அறிந்தவற்றைக் கொண்டு கவசங்கள் செய்து அறிதலை தடுத்துக்கொள்ளும் முயற்சிதான். எந்த இலக்கியப்படைப்பும் நாம் சற்றுமறியாத ஒன்றைச் சொல்லப்போவதில்லை. நாம் அறிந்த துளியை பெருக்கி மலையென நிற்கச்செய்வதே இலக்கியத்தின் வழி. நம் புறம் அறிந்தவற்றில் இருந்து நம்மை நம் அகமறிந்தவற்றை நோக்கி படைப்புகள் கொண்டுசெல்கின்றன. அவற்றை உணரும் கூருணர்வு கொண்ட வாசகர் சிலரே எச்சூழலிலும் இருக்க இயலும். ஆகவே பெருவாரியானவர்கள் விரும்புவது ஒருபோதும் கவிதையென ஆவதில்லை. கவிதை ஒரு சூழலின் பொதுரசனையின் எல்லைக்கு நீடுதொலைவு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வழிகாட்டி விண்மீன்.

இன்றுவரையிலான மானுட வாழ்க்கை காட்டுவதொன்றே. அறிதொறும் அறியாமை கண்டு அறியமுடியாமையின் இரும்பாலான தொடுவானில் சென்று தலையறைந்து விழுந்து மடிபவர்கள்தான் அறிவுதேடுபவர்கள். நான் முழுமையை அறிய விழையவில்லை, அனைத்துக்கும் விடை தேடவில்லை. என் கைகள் ஆற்றும் செயலை மட்டும் அறிய விரும்புகிறேன். ஏனென்றால் நான் எனக்கு பொறுப்பேற்றுக்கொள்ள விழைகிறேன். அடுமனையில் சமைப்பவன் தான் இடும்பொருட்களில் எது நஞ்சென்றாவது அறிந்திருக்கவேண்டும் அல்லவா?

“அறியாமையால் சூழப்பட்டுள்ளது அறிவு. கருவை கருவறைக்குருதி என. அறிவு அறியாமையையே உடலெனக்கொண்டு எழுகிறது. அறியாமை அதன் ஊர்தி. சென்றடைவதுவரை உடனிருப்பது” என்றார் இளைய யாதவர். 


பரிமேலழகர் உரை
(புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.) அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச்செறிய இவள்மாட்டுக் காதல். (களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்'என்றார். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.).

மணக்குடவர் உரை
யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும், இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை. காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று.

மு.வரதராசனார் உரை
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment