குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

 

குறள் 758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.

ஏறி - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

யானைப் - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம்

போர் - சண்டை; மல்யுத்தம்; இகல்; செறிந்துபொருந்துகை; குவியல்; சாணி; கதிர்வைக்கோல்களின்படப்பு; சதயநாள்; மரப்பொந்து

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
அற்றால் - தன்மை / போன்று 

கண்டற்றால் -   காணுவது போலாம் (அதனால் தமக்கு பயமும், வருத்தமுமில்லை)

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

கைத்து - கையிலுள்ளபொருள்; பொன்; செல்வம்; வெறுப்பு.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

உண்டாகச் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

செய்வான் -செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
செல்வம் தனை எப்படிச் செலவு செய்யக்கூடாது என்பதனை கூறுகிறார் திருவள்ளுவர்::
தன் கையில் சிறிது காசு / செல்வம் இருக்கிறது என்பதற்காக நாம் நினைத்தையெல்லாம் செய்யக்கூடாது. உதாரணமாக யானைகள் போரிடுவதை தரைதளத்தில் இருந்து கண்டாலும் ஒரே சண்டை தான் சற்று மேலே அமர்ந்து கண்டாலும் ஒரே சண்டை தான். 

ஆனால் தன் கையில் காசு இருப்பதற்காக செல்வத்தை செலவு செய்து (உதாரணமாக பல்லக்கில் இருவரை தூக்கிக்கொண்டு செல்ல செலவாகும் அல்லவா) ஒரு குன்றின் மேல் ஏறி யானைப் போரை காணுவதால் என்ன பயன்/இலாபம்? ஒன்றுமில்லை. செல்வம் விரையம் ஆனது தான் மிச்சம். மேலும் குன்றில் மேல் ஏறி பார்ப்பதால் அந்த யானைப்போரை முழுவதுமாக ரசிக்கவும் முடியாது. தரையில் சற்று அருகில் பாதுகாப்பாக இருந்து பார்த்தால் தான் அதன் போரை ரசிக்க முடியும். செலவு செய்து குன்றின் மேல் ஏறி பார்ப்பது வெற்று ஆணவித்தின் அறிவிப்பே. ஆதலால் செல்வத்தை அவசியமற்றதற்கு செலவு செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

எனக்கு ஒரு உதாரணம் நியாபகத்திற்கு வருகிறது. ஒரு (அமர்ந்துக்கொண்டு பாடும்) பாட்டுக் கச்சேரியை எங்கு அமர்ந்து பார்க்கலாம் என்று எனது வயலின் ஆசிரியரை கேட்டேன். அவர் சொன்ன பதில் “அன்று எல்லாம் வெட்டவெளியில் கச்சேரி நடக்கும். ஒலி பெருக்கிகள் இருக்காது. ஆதலால் முன்னர் அமர்ந்து கேட்டால் தான் நன்றாக கேட்கும். ஆனால் இன்றோ மைக் (ஒலி பெருக்கி) எல்லாம் இருக்கிறது, ஒரு சிறு அவையில் தான் கச்சேரியை கேட்கப்போகிறாய். அதனை எங்கு அமர்ந்து கெட்டாலும் ஒரே இசை தான். ஒரே அளவு ஒலி தான். அதற்கு ஏன் முன்வரிசையில் உட்கார அதிக செலவு செய்ய வேண்டும்? அதற்கெல்லாம் செலவு செய்யாதே.பின் வரிசை இருக்கையில் உட்கார்ந்து கேட்டாலே போதும். ஆனால் இதுவே ஒரு நடன நிகழ்ச்சியாக இருந்தாலோ அல்லது நாடக நிகழ்ச்சியாக இருந்தாலோ அதனை அருகில் இருந்து பார்க்கவே நன்றாக இருக்கும் (குறிப்பாக பாவனைகளை பார்க்க வேண்டும் என்றால்). ஆதலால் அவசியமெனில் மட்டும் செலவு செய்” 

இன்றைய நாட்களில் ஒரு இரண்டு மணிநேர சினிமாவை அதிக காசுகொடுத்து சொகுசு இருக்கையில் (recliner seat) பார்ப்பவர்களே நியாபகத்திற்கு வருகிறார்கள். 

ஒரு சொலவாடை உண்டு “துடைப்பகட்டைக்கு பட்டு குஞ்சம் கேக்குதா?” (அல்லது வெளக்கமாத்து-கட்டைக்கி-பட்டுக்குஞ்சம்-கேட்டுசாம்?)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். ('கைத்து உண்டாக ஒன்று செய்வான' எனக் கூட்டுக. 'ஒன்று'என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம்.குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம்.).

மணக்குடவர் உரை
குன்றின்மேல் ஏறியிருந்து யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும். தன் கையகத்து எய்திய பொருளுண்டாக ஒரு வினையை யெடுத்துக் கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை. இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினைசெய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது.

மு.வரதராசனார் உரை
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

2 comments:

  1. Super your explanations are very very useful .I always read your text when I am try to understand thirukkural. Thank you so much

    ReplyDelete