அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

 

குறள் 757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

ஈன் - ஈன்(னு)-தல் - īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97).  

குழவி - கைக்குழந்தை; ஒருசார்விலங்கின்இளமைப்பெயர்; புல், மரம்முதலியஓரறிவுயிரின்இளமைப்பெயர்; அம்மிகல்லுரல்களில்அரைக்கும்கல்; பெருமை.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

செல்வச் - செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு

செவிலியால் - செவிலி - வளர்ப்புத்தாய்; முன்பிறந்தவள்

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
அன்பே ஒருவருக்கு தாய் எனலாம். அன்பே ஆதார சக்தி. அன்பு ஈன்றெடுத்த கைக்குழந்தையே அருள் அதாவது கருணை. பிற உயிர்கள் மேல் அன்பிருந்தால் தான் அருள் பிறக்க முடியும். அருள் என்ற கைக்குழந்தையை வளர்த்தெடுத்து ஆளாக்க வல்லது பொருட்செல்வமே. ஆதலால் பொருட்செல்வம் என்பது செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்). வளர்ந்த அருளின் ஆற்றலால் பலருக்கு நன்கு உதவ முடியும். செல்வம் நிலையில்லாதது எனினும் செல்வத்தை முற்றிலும் நிராகரிக்காமல் அதன் அவசியத்தை அதன் வலிமையை கூறுயுள்ளார் திருவள்ளுவர். 

பொருள் இல்லை என்றால் நாம் ஒருவித கையறு நிலையில் பிறருக்கு உதவ முடியாம இருப்போம். ஆதலால் பொருள் அக்கையிறு நிலையை அறுத்து ஒருவித நிதி விடுதலையை தருகிறது. தர்சார்பு கொடுக்கிறது.

பொருள் இருப்போர்க்கே அறம் செய்தல் ஏதுவாகும் என்பதைச் சொல்லும் குறள். அரசானாலும், குடிமக்களானாலும், பொருள் ஈட்டுவதால் மட்டுமே, அவர்களின் அன்பின் காரணமாக வருங் கருணையால் பிறர்க்கு நன்மை செய்ய இயலும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“அருளொடும் அன்பொடும்” (குறள் 755)
“அருளும் அன்பும் நீக்கி’ (குறுந் 20:1)
“...........உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே” (இன்னிலை 13)

பரிமேலழகர் உரை
அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும். (தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி, பொருளென்று சொல்லப்படும் செல்வத்தை யுடைய செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம். இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

No comments:

Post a Comment