thirukkural meaning விளக்கம் பொருட்பால், அமைச்சியல், தூது குறள் 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
குறள் 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
[பொருட்பால், அமைச்சியல், தூது]
பொருள்
தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.
துணைமை - உதவி; பிரிவின்மை; ஆற்றல்.
துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
இம் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு.
மூன்றின் - மூன்று - இரண்டுக்கு மேல் அடுத்துள்ளஎண்
வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.
வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு
உரைப்பான் - உரை-த்தல் - urai- v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
முழுப்பொருள்
1) தூய்மை - கலங்கமற்ற உள்ளத்து தூய்மை / நேர்மை. அதாவது பிறர் ஆசை காட்டும் பொருள், போகம் போன்றவற்றில் நாட்டம் செல்லாதவனாக இருக்க வேண்டும். தனது அரசுக்கும் நாட்டிற்கும் நேர்மையாக / விசுவாசமாக இருத்தல் வேண்டும்.
2) துணைமை - ஆற்றல். தூதிற்கு தேவையான நட்புறவாடும் பண்பு இருத்தல் வேண்டும். பகையோரிடத்தும் உள்ள நல்லோர் துணையினை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3) துணிவுடைமை - பிற நாட்டு மன்னரை, அமைச்சர்களை, பகைவர்களை அஞ்சாது தான் கூறுவதை தெளிவோடு சொல்லும் ம்ன உறுதி வேண்டும்.
மேற்சொன்ன மூன்று பண்புகளும் உண்மையை (குறியவற்றை) மட்டும் தூதாக சென்று உரைக்கும் முறையை / நெறியை / ஒழுக்கத்தை பின்பற்றும் தூதானின் பண்புகளாகும்.
பரிமேலழகர் உரை
வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன'¢ ஒடுவின் பொருட்கண் வந்தது.).
மணக்குடவர் உரை
தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்.
மு.வரதராசனார் உரை
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
சாலமன் பாப்பையா உரை
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.
காந்தியின் வாழ்வும் குறளும் (நன்றி: பா ல சு ந் த ரி)
தாதா அப்துல்லா சேத்துக்கும், அவரது உறவினரும் ஊர்க்காரருமான தயாப் சேத்துக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு. இதற்கு தாதா சேத்துக்கு உதவியாளராக காந்தி. வழக்கை வெற்றி பெறச் செய்ய விவரங்களே முக்கியத் தேவை. அந்த விவரங்கள் அனைத்தும் தாதா சேத்துக்கு சாதகமாக இருந்தது. எனவே அவருக்குதான் வெற்றி கிட்டும். தயா சேத் 40000 ஆயிரம் பவுன் திருப்பித் தர வேண்டும் என்பதை தாதா சேத்தின் கோரிகை. வழக்கு நீண்ட நாட்களாக நடந்து வந்தது. இனியும் நடக்கும். எப்போது முடியும் என்று தெரியாத நிலை. இந்த நிலை நீடித்தால் இரு தரப்புமே சங்கடங்களை அனுபவிக்க நேரும்.
இதுபற்றி நமது தமிழ் சினிமாவில் விவரமாகக் காணலாம். ஆரம்பத்தில் வக்கீல் கால்நடையாக வருவார். வாதியும், பிரதிவாதியும், காரில் வருவார்கள். கடைசியில் வக்கீல் காரில் வருவார். வாதியும் பிரதிவாதியும் கால்நடையாக! இதுவேதான் தென் ஆப்பரிக்காவிலும் நடந்தது.
வியாபாரத்தைக் கவனிக்க முடியாமல் வழக்கிலேயே இருவரும் முடங்கிக் கிடந்தனர். அத்துடன் வக்கீல் பீஸ். உடும்பு வேண்டாம் கையை விட்டால்போதும் என்ற நிலை. இருந்தாலும் “ஈகோ” காரணமாக விடாப்படியாக வழக்கை நடத்திக் கொண்டு இருந்தனர் இருவரும்!
எனவே காந்தி கூறினார்.
இருவரும் சமாதானமாகிப் போய்விடுங்கள். ஒரு நல்ல நடுவரை ஏற்பாடு செய்து நீங்கள் இருவருமே தீர்வு காணலாம் என்று அறிவுறுத்த இருவருமே அதனை ஏற்றார்கள். இருவரிடமும் காந்தி மாறி மாறி தூது சென்றார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது! இருவருமே சமரசத்திற்கு ஒப்புக் கொண்டனர். தயாப் சேத் அப்துல்லா சேத்துக்கு 37000 பவுனும், செலவுத் தொகையும் அளிக்க வேண்டும் என்று தீர்வானது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்.
அவ்வளவு பெரிய தொகையை தயாப் சேத்தால் உடனடியாக செலுத்த முடியாது. அத்துடன் அவர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் “இன்ஸால்வெண்ட்டாகி” விடுவதைவிட இறப்பது மேல் என்பதே அவர்களின் கொள்கை.
எனவே தவணைமுறையில் பட்ட கடனைத் திருப்பித்தர காந்தி ஏற்பாடு செய்தார். அதை அப்துல்லா சேத்தும் ஏற்றுக் கொண்டார். இரு தரப்பு பகையையும் மாற்றி, சுமூக உறவு ஏற்பட வழி கண்டார். ஆரம்பத்தில் இந்த சமரசம் எடுபடாது என்று கூறியவர்களும் வியந்தனர்.
இந்த அதிசயத்தை நடத்திய அற்புதரைக் கண்டு அதிசயித்தனர். இந்த மனிதருக்கு அப்படி என்ன தனித்திறமை! என்று யோசித்தனர். காந்தி வாதாடி வென்றதை விட சமரசம் பேசி மனதில் நின்றதே அதிகம். சமரச தூதுவர் என்றே அவரைக் கூறலாம். இப்படி தூது செல்ல என்ன தனித்திறமை வேண்டும் என்று வள்ளுவனையே கேட்போமா? இதோ அவனுடைய பதில்:
குறள் 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
Join the conversation