தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அமைச்சியல், தூது குறள் 688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு

 

குறள் 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

துணைமை - உதவி; பிரிவின்மை; ஆற்றல்.

துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

இம் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு.

மூன்றின் - மூன்று - இரண்டுக்கு மேல் அடுத்துள்ளஎண்

வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

உரைப்பான் - உரை-த்தல் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

முழுப்பொருள் 
1) தூய்மை - கலங்கமற்ற உள்ளத்து தூய்மை / நேர்மை. அதாவது பிறர் ஆசை காட்டும் பொருள், போகம் போன்றவற்றில் நாட்டம் செல்லாதவனாக இருக்க வேண்டும். தனது அரசுக்கும் நாட்டிற்கும் நேர்மையாக / விசுவாசமாக இருத்தல் வேண்டும்.

2) துணைமை - ஆற்றல். தூதிற்கு தேவையான நட்புறவாடும் பண்பு இருத்தல் வேண்டும். பகையோரிடத்தும் உள்ள நல்லோர் துணையினை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3) துணிவுடைமை - பிற நாட்டு மன்னரை, அமைச்சர்களை, பகைவர்களை அஞ்சாது தான் கூறுவதை தெளிவோடு சொல்லும் ம்ன உறுதி வேண்டும்.

மேற்சொன்ன மூன்று பண்புகளும் உண்மையை (குறியவற்றை) மட்டும் தூதாக சென்று உரைக்கும் முறையை / நெறியை / ஒழுக்கத்தை பின்பற்றும் தூதானின் பண்புகளாகும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன'¢ ஒடுவின் பொருட்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்.


மு.வரதராசனார் உரை
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

சாலமன் பாப்பையா உரை
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain