இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்


குறள் 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
 
பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.

விழையான் - விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல்

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

என்பான் - என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன்.

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை

உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

இலன் -  இல்லை என்று

முழுப்பொருள்
புலன்களுக்கு வரும் இன்பதை விரும்பாதவன் இன்பங்கள் மேல் நாட்டம் இல்லாதவன். அவன் துன்பங்களை இயல்பென நினைப்பான். அத்தகையவனை துன்பங்கள் வருத்த முடியாது. ஆதலால் அவனுக்கு துன்பம் இல்லை. 

இன்பங்களை விழைகிறவன் இன்பத்தின் ருசியை அறிந்தவன், அதற்கு பழக்கபட்டவன். இன்பத்தில் சுகமாய் திளைத்திருப்பான். ஆதலால் துன்பங்களை விரும்பமாட்டான். இன்பம் மெய்யானது இல்லை. இன்பம் நிலையானது இல்லை. ஆதலால் இன்பதை விழையாதே. துன்பமே நிலையானது. அதுவே இயல்பு என்று நினைத்தால் துன்பம் உன்னை வருத்தாது. 

உனக்கு துன்பம் வேண்டாமா? துன்பமே இயல்பென நினைத்து இன்பதை விழையாதே. இன்பத்தை விழைந்தால் துன்பம் உன்னை வருத்தும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

ஏழைகள் பலர் எத்தகைய வறுமையிலும் சோர்வுற்று இருப்பதில்லை ஏனெனில் அவர்கள் துன்பத்தை இயல்பென கருதியவர்கள். ஆனால் வசதிப்பெற்றவர்கள் அவர்களுக்கு ஒரு வசதி இல்லையென்றால் துன்பப்படுவர் வருத்தப்படுவர். 

"இடுக்கண் உற்ற மனிதனுக்கு இன்பம் அளிப்பது உழைப்பே" என்பதை அறிக.

”துன்பம் இல்லாத நிலையே சக்தி”. துன்பம் இல்லை என்றால் சோர்வில்லாமல் சக்தியுடன் வினையாற்றலாம். வினையாற்றினால் பலன் உண்டு.

வேண்டும் வேண்டாமை என்று இல்லை என்றால் இன்பம் வேண்டாம் துன்பம் வேண்டாம் என்று வேண்டாம்  என்ற சமநிலை கொண்டோர்க்கும் என்றும் துன்பம் இல்லை என்றும் குறள் 4-க்கு பொருள் கொள்ளலாம். 

மற்றொரு தொன்மொழியாம் தேவநாகரியில் “ஸ்திதப் ப்ரக்ஞன்” என்னும் சொல், இன்பமும் துன்பம் இரண்டையும் ஒன்றெனவே எண்ணும் திட சித்தத்தினரைக் குறிக்கும். அத்தகையவர்களைப் பற்றியதே இக்குறள். ஆதி சங்கரர் எழுதிய பஜகோவிந்தத் துதியில் 

“சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி” 

என்னும் பாடல் இங்கே நினைவு கூறத் தக்கது. நல்ல ஆன்றோர், சான்றோர்களின் சேர்க்கையினால், வாழ்வின் தத்துவங்களில் உள்ள ஐயங்கள் முற்றிலும் நீங்கும்; ஐயங்கள் நீங்கினால் ஆசைகளும், பற்றுகளும் நீங்கும்; ஆசைகளும், அதனாம் வரும் பற்றுகளும் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம். இத்தகைய யோகநிலையினருக்கு, இன்ப துன்பங்கள் என்ற பாகுபாடுகள் ஏதுமில்லை.

ஒப்புமை
“இன்பம்ம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்கை” (சுந்தரர். எதிகொள்பாடி. 8.)
“அல்லலும் உள இன்பம் அணுகலும் உளவன்றோ” (கம்ப. வனம்புகு. 27)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.).

மணக்குடவர் உரை
இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

சாலமன் பாப்பையா உரை
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

No comments:

Post a Comment