பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

குறள் 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி.

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

மரீஇயவனைப்  - பழகியவனை

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

தீப் - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

பிணி  - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை.

தீண்டல் - தீண்டுதல்; பிறப்புஇறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும்தீட்டு; மாதவிடாய்; வயல்.

அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

முழுப்பொருள்
எக்காலமும் தன்னுடைய உணவை பிறருக்கும் பகுத்துண்டு வாழ்கிறவனுக்கு பசி என்னும் கொடிய (நரக) நோய் தீண்டுவது மிக மிக அரிது. ஏனெனில் பிறர் பசியை போக்கினவனுக்கு பசி (அதாவது வறுமை) எடுக்கும் நிலை வராது அப்படி ஒரு வேலை வந்தாலும் அவன் பசியை வேறு ஒருவர் (இறைவன்) போக்குவார். 

தீப்பிணி என்றது, தீயவையைத் தரக்கூடிய நோய் என்பதனால் மட்டுமல்ல. நோய் தனிமனிதனை அழிப்பது, சில நேரங்களில் சேர்ந்தவரையும் அழிக்கும் தொற்று நோய். பலசமயங்களில் சமூகத்தையே அழிக்கக்கூடிய  தீமையைப் பரப்பும் நோய் . எப்படி என்பதை சென்ற குறளுக்கான விளக்கத்திலேயே சொல்லப்பட்டது. பசியென்பது பத்தையும் பறக்கச்செய்து, களவு, பொய் போன்ற  மனம், மற்றும் ஒழுக்கக்கேட்டை விளைவிக்கும் நோய் .

பகுத்துண்ணலைப் பற்றி, “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” (குறள் 322) என்றும், “தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்” (குறள் 1107) என்றும் கூறுகிறார். நாலடியார் (271) “நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்” என்று கூறுகிறது. இன்னா நாற்பது பாடலொன்றில், “பாத்துணலில்லார் உழைச்சென்று உணலின்னா” என்கிறது

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பாத்து ஊண் மரீஇயவனை - எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை. இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

No comments:

Post a Comment