இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

குறள் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இன்சொல் - இனிமையான சொல்

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

ஈன்றல் - ஈனல்; உண்டாதல்

காண்பான் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

எவன்கொலோ - எதனைக் கருதி?

வன்சொல் - கடுஞ்சொல்; மிலேச்சமொழி.

வழங்குவது - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல். 

முழுப்பொருள்
இக்குறளில் நம்முடைய அனுபவத்தின் மூலமே நமக்கு பாடம் கற்பிக்கிறார் திருவள்ளுவர். 

பிறர் தன்னிடம் வந்து இனிமையான சொற்களை பேசினால் நன்றாக உணருகிறான். அவன் அவனுடைய சமநிலையை இழக்கமாட்டான். அதுவே இன்சொல்லின் சிறப்பு.  அதுவே பிறர் நம்மிடம் கடுமையான சொற்களை பேசினால் நமக்கு சினம் வருகிறது. சமநிலை இழக்கிறோம். ஆதலால் வன்சொல்லின் கேட்டையும் இன்சொல்லின் சிறப்பையும் உணர்ந்தவன் ஏன் பிறரிடம் பயனபயக்காதா வன்சொல்லை பயன்படுத்துகிறான் ? என்று திருவள்ளுவர் கேட்கிறார். இன்சொல்லின் இனிமையை அறிந்த நீ வன்சொல்லை பயன்படுத்தாத என்று சொல்லாமல் சொல்கிறார்.

கபிலரின் இன்னா நாற்பது “அறமனத்தார் கூறுங் கடுமொழியின்னா” என்கிறது.  அறமனத்தோர் கூறுகின்ற கடுமையான மொழியானது துன்பத்தைத்தரும் என்கிறார் கபிலர்.   அறமொழியினராக இருப்பின், வன்மொழி பேசுதல் இராது. அப்படிஅவர்களே வருந்தி பேசும்போது, அது பிறர்க்கும் ஊறு விளவித்து, அவர்களுக்கே கூட மனவருத்தம் என்கிற துன்பத்தைத் தந்துவிடும். சங்க நீதிநெறி நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை “நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை” என்றும் “கல்லா ஒருவர்க்கு தம்வாயிற் சொற்கூற்றம்”, “வைததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை” என்கிறது.

வன்மொழி பேசுபவர்கள் நல்ல நட்புகளை இழப்பர். கல்லாத ஒருவருக்குத் தான் அவர் வாய்ச்சொல் மரணதேவனாக முடியும் என்பதால், வன்மொழியாளர்கள் கல்லாதவர்க்கே ஒப்பாவர் என்றும் உணர்த்தப்படுகிறது.  தவிர, ஒருவரை வன்மொழி பேசுவதால், அதுவே நமக்கும் வந்து சேரும். ஆனால் இன்மொழியால் வணங்குபவர்க்கு, எல்லோருமே சுற்றமாகி விடுவர். மேலும், இன்சொல், வன்சொல் இவற்றின் பயன்களையும் கீழ்கண்டவாறு சுருங்கச் சொல்கிறது.

“இன்சொலான் ஆகும் கிழமை, இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் – மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்”   

”புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின் றுண்ர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ” (பழமொதி 277)

மேலும்: ஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

சாலமன் பாப்பையா உரை
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உன் செவி விரும்புவதையே உலகும் விரும்பும்.

Thirukkural - Management - Communication - Pleasant Speech
Everyone would have experienced the benefit of pleasant speech. Everyone knows the merits of sweet and pleasant words. Everyone expects others to use pleasant words when others speak to them. Despite that, everyone uses harsh and unpleasant  words when they speak to others. Kural99 questions this practice because this practice is illogical.

How can one pleased with sweet words oneself
Use harsh words to others?

That sort of practice would have been a surprise to Valluvar. Hence, he questions, “Why should we 
resort to painful words?”

No comments:

Post a Comment